Published:Updated:

``ஒரு டான்ஸ் மாஸ்டரா என்னோட ஆதங்கம் இது ரெண்டும்தான்!'' - லலிதா ஷோபி

லலிதா ஷோபி
லலிதா ஷோபி

நடன இயக்குநர் லலிதா ஷோபி பேட்டி!

கோலிவுட்டில் மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடன இயக்குநர்கள் ஷோபி - லலிதா ஷோபி ஜோடியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வருடம் வெளியான 'வெறித்தனம்' பாடலுக்கு வெறித்தனமாக நடன இயக்கம் செய்து அசரடித்திருப்பார்கள். எப்போதும் பம்பரம்போல் சுழன்றுத் திரியும் இவர்களை இந்த லாக்டெளன் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது. லலிதா ஷோபியிடம் பேசினேன்.

ஒரு நடிகருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறதுக்கு முன்னாடி உங்களை எப்படி தயார்படுத்திக்குவீங்க?

"ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு மேனரிஸம் இருக்கும். அவங்களுடைய ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பாங்கன்னு அவங்க பார்வையில இருந்து யோசிச்சு, அவங்க மேனரிஸத்தை கெடுத்திடாமல் மூவ்மென்ட் கொடுக்கணும். புதுசா ஒரு ஆர்டிஸ்டுக்கு கோரியோ பண்ணப்போறோம்னா, அவங்களுடைய வொர்க் என்ன, அவங்க மேனரிஸம் எப்படினு அவங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு ஸ்பாட்டுக்குப் போகணும். அது அவங்களுக்கும் சங்கடத்தைக் கொடுக்காமல் இருக்கும். நமக்கும் அவங்களைக் கையாள ஈஸியா இருக்கும். அறிமுக ஹீரோவுக்கு கோரியோ பண்ணும்போது இயக்குநர்கிட்ட அவரைப் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போவோம். ரெண்டு மூவ்மென்ட் சொல்லிக்கொடுத்தவுடன் அவர் ப்ராக்டீஸ் பண்றதை பார்த்தாலே அவங்களுக்கு என்ன வருது, வரலைனு தெரிஞ்சுடும். அதுக்கு தகுந்த மாதிரி பிளான் பண்ணிக்குவோம். அவங்களுக்கு சில மூவ்மென்ட் வரலைனா, கொஞ்சம் ஸ்ட்ரஸாகிடுவாங்க. அவங்களை கூல் பண்ணி கம்ஃபோர்ட் ஜோன்ல வெச்சுக்கணும். இதெல்லாம்கூட நடன இயக்குநருடைய வேலைதான்."

உங்களுக்கு ஷூட்டிங் இல்லாத சமயத்துல உங்க கணவருடைய ஷூட்டிங்க்கு போயிடுவீங்களாமே!

லலிதா ஷோபி - ஷோபி
லலிதா ஷோபி - ஷோபி

"இந்தத் துறையில நிறைய கனவுகளோட வாழ்ந்துட்டு இருக்கேன். அதுக்கு அப்டேட்டாகிட்டே இருக்கணும். சில நேரங்கள்ல அவரே என்னை கூட்டிட்டுப் போவார். சில நேரங்கள்ல நானே வர்றேன்னு சொல்லுவேன். அப்படிப்போகும்போது அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்குவேன்."

மான்டேஜ் பாடல்ல நடன இயக்குநருடைய பங்கு எப்படிப்பட்டது?

"மான்டேஜ் பாடலுக்கு கோரியோகிராஃப் பண்றதுதான் ரொம்ப ரொம்ப சிரமம். 500 டான்ஸரை வெச்சுக்கூட ஈஸியா வொர்க் பண்ணிடலாம். மான்டேஜ் எடுக்கிறவங்க இயக்குநர் அளவுக்கு சிந்திச்சால்தான் எடுக்க முடியும். கதை, இந்தப் பாடலுக்கான சூழல், அதுல நடிக்கிறவங்களுடைய கேரக்டர் என்னனு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு எடுக்கணும். நிறைய படங்கள்ல மான்டேஜ் பாடலுக்கு கோரியோ பண்ற மாஸ்டர்களுக்கு சரியான மரியாதை இல்லைனு எனக்குப் பெரிய வருத்தம் இருக்கு. அப்படி நான் பண்ண 'தாரமே தாரமே' மான்டேஜ் பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது."

உங்க மகள் ஷமந்தகமனி அஸ்விகா எப்படி இருக்காங்க?

மகளுடன் லலிதா ஷோபி - ஷோபி
மகளுடன் லலிதா ஷோபி - ஷோபி

"அவங்களுக்கு நாலரை வயசுதான் ஆகுது. ரொம்ப நல்லாயிருக்காங்க. இப்போ அம்மா அப்பா ரெண்டு பேருமே அவங்கக்கூடவே இருக்காங்கன்னு நினைச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஷோபி வீட்டில் இருக்கிறதே ரொம்ப அதிசயம்தான். அப்போ நான் குழந்தையைப் பார்த்துக்குவேன். எனக்கும் ஷூட்டிங் இருந்தால் என் அம்மா, ஷோபியுடைய அம்மா ரெண்டு பேரும் அவளைப் பார்த்துக்குவாங்க. எத்தனை நாள் நான் இருக்க மாட்டேனோ அவங்களுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் ரெடி பண்ணி கொடுத்துட்டுதான் ஷூட்டிங் போவேன்."

உங்களுடைய வேலை என்னனு அவங்களுக்குத் தெரியுமா?

"நல்லாவே தெரியும். அப்பா - அம்மா என்ன பண்றாங்கன்னு கேட்டா 'டான்ஸ் டைரக்டர்'னு சொல்லுவாங்க. சில நேரங்கள்ல ஸ்பாட்டுக்கு வந்து அங்க நாங்க என்ன பண்றோம்னு கவனிப்பாங்க. அதனால, எங்க வேலை என்னனு புரியும். நாங்க வொர்க் பண்ண பாடல்கள் டிவியில வரும்போது 'இது அப்பா வேலை செஞ்ச பாடல், அம்மா வேலை செஞ்ச பாடல்'னு ஒருமுறை சொல்லிட்டா அதை மறக்காமல் ஞாபகத்துல வெச்சுக்கிட்டு, அடுத்த முறை அந்தப் பாடல் டிவியில வரும்போது சேனலை மாத்தாமல் அப்பா பாட்டு, அம்மா பாட்டுனு சொல்லிக்கிட்டே பார்ப்பாங்க."

உங்களுடைய 10 வயசுல அப்பாவை இழந்துட்டீங்க. இப்போ ஷோபியோட ஏதாவது சில நடவடிக்கைகள் உங்க அப்பாவை ஞாபகப்படுத்துதா?

மகளுடன் லலிதா ஷோபி
மகளுடன் லலிதா ஷோபி

"நீங்க கேட்கும்போதே என் கண் கலங்குது. என் கணவருக்கும் மகளுக்கும் இருக்கிற நெருக்கத்தை பார்த்தால் என் அப்பா இன்னும் கொஞ்ச வருஷம் என்கூட இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்னு தோணும். அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். அந்த ஏக்கம் எனக்கு வந்திடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருப்பார் ஷோபி. அதனால, என் குழந்தையைப் பார்த்துக்கிற மாதிரியே என்னையும் நல்லா பார்த்துக்கிறார். என் அப்பா ரொம்ப ஸ்கிரிக்ட். ஆனா, என் மகளும் ஷோபியும் ரொம்ப ஃபிரெண்ட்லி."

நடனத்தைத் தாண்டி உங்க கணவர்கிட்ட நீங்க ரொம்ப ரசிக்கிற விஷயம் என்ன?

"அவருக்கு அந்த விஷயம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருப்பார். அவருக்குள்ள இருக்கிற குழந்தைத்தனத்தை ரொம்ப ரசிப்பேன். குழந்தை மாதிரி Little Hearts பிஸ்கட்டை அப்படி விரும்பி சாப்பிடுவார். அப்புறம், நம்ம மத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியிடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருப்பார். இதெல்லாம் அவர்கிட்ட நான் ரசிக்கிற விஷயங்கள்."

இசையமைப்பாளர் கொடுக்கிற பாடலுக்குதான் நீங்க டான்ஸ் சொல்லிக்கொடுக்கிறீங்க. அப்போ இசையமைப்பாளர் - நடன இயக்குநருக்கான நெருக்கம் எப்படி இருக்கும்?

லலிதா ஷோபி - ஷோபி
லலிதா ஷோபி - ஷோபி

"இன்னும் நெருக்கமா இருக்கணும்னு நினைக்கிறேன். பாடல் ரெடியான பிறகுதான், டான்ஸ் மாஸ்டர்கிட்ட வரும். அவங்க கொடுக்கிற பாடலுக்குதான் நாங்க நடன இயக்கம் பண்றோம். ஆனா, இசையமைப்பாளர்களும் நடன இயக்குநர்களும் சந்திச்சுக்கிறதே அரிதா இருக்கேனு எனக்கு வருத்தம் இருக்கு. இன்னொரு ஆதங்கமும் இருக்கு, அதையும் சொல்லிடுறேன். பெரும்பாலான படங்களுடைய போஸ்டர்ல நடன இயக்குநருடைய பெயரை போடுறதில்லை. யூடியூப்ல அந்த பாடலை அப்லோட் பண்ணும்போதும் கீழே பெரும்பாலான இடங்கள்ல நடன இயக்குநர் பெயர் இருக்காது. எங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்குது. வளர்ந்து வரும் நடன இயக்குநர்களுக்கும் அந்த அங்கீகாரம் கிடைக்கணும். எல்லோருக்குமே தயவு செய்து கிரெடிட்ஸ் கொடுங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரா என்னோட ஆதங்கம் இது ரெண்டும்தான்!"

நீங்க பேக் டான்ஸரா வொர்க் பண்ண பாடல்களை டிவியில பார்க்கும்போது பழைய நினைவுகள் பத்தி பேசிக்குவீங்களா?

லலிதா ஷோபி
லலிதா ஷோபி

"அப்படி டிவியில நாங்க குரூப் டான்ஸரா ஆடின பாடல்களை பார்க்கும்போது அப்போ நடந்த ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடல்கள்ல வர மூவ்மென்ட் எல்லாம் மறுபடியும் ஆடிப் பார்ப்போம்."

குரூப் டான்ஸரா இருந்தபோது இந்த ஆர்டிஸ்டுக்கு நம்ம ஒருநாள் டான்ஸ் கோரியோ பண்ணணும்னு நினைச்சது யார்?

"அப்படி நினைச்ச நிறைய பேருக்கு மாஸ்டரா இருந்து டான்ஸ் கோரியோ பண்ணிட்டேன். ஆனா, மாதுரி தீக்‌ஷித் மேடமுக்கு டான்ஸ் கோரியோ பண்ணணும்னு ரொம்ப ஆசை."

மோகன் ஹீரோவான கதை; சுஹாசினி நடிகையான கதை; மகேந்திரனின் `நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுவாரஸ்யங்கள்!

டைரக்‌ஷன் ஐடியா இருக்கா?

"ரெண்டு பேருக்குமே இந்த ஐடியா இருக்கு. இந்த லாக்டெளன்ல கதைகள் எழுதுக்கிட்டு இருக்கோம். குழந்தையோடு இருக்கிற நேரம் போக மற்ற நேரங்கள்ல கதை, இயக்கம் பத்திதான் உரையாடல் இருக்கும்."

அடுத்த கட்டுரைக்கு