Published:Updated:

`நியாயமில்லாத புறக்கணிப்புகள்தான் வருத்தத்தை தருது!' - சாந்தி மாஸ்டர் ஷேரிங்ஸ் #StopExploitingWomen

சாந்தி மாஸ்டர்

சினிமா நடன இயக்குநராக, பல வெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சாந்தி. `மெட்டி ஒலி' சீரியல் டைட்டில் பாடல் பெரும் புகழைக் கொடுத்தது. இந்த வளர்ச்சிக்குப் பின்னால், இவர் எதிர்கொண்ட அடுக்கடுக்கான பணியிடப் பாகுபாடுகள், பலரும் அறியாத, அதேசமயம் பலதுறைப் பெண்களும் இன்றும் எதிர்கொள்பவை.

`நியாயமில்லாத புறக்கணிப்புகள்தான் வருத்தத்தை தருது!' - சாந்தி மாஸ்டர் ஷேரிங்ஸ் #StopExploitingWomen

சினிமா நடன இயக்குநராக, பல வெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சாந்தி. `மெட்டி ஒலி' சீரியல் டைட்டில் பாடல் பெரும் புகழைக் கொடுத்தது. இந்த வளர்ச்சிக்குப் பின்னால், இவர் எதிர்கொண்ட அடுக்கடுக்கான பணியிடப் பாகுபாடுகள், பலரும் அறியாத, அதேசமயம் பலதுறைப் பெண்களும் இன்றும் எதிர்கொள்பவை.

Published:Updated:
சாந்தி மாஸ்டர்

பெண்களுக்கான வாழ்த்துச் செய்திகள் உலகெங்கும் குவியத் தொடங்கியுள்ளன. காரணம், மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம் என்பதால். `இந்தத் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்?' என்ற காரணம் அறிந்து, அதற்கு எல்லா விதத்திலும் நியாயம் சேர்த்தால்தானே, ஒருநாள் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொண்டாட்டத்துக்கான முழுமையான பலனை அறுவடை செய்ய முடியும்?

மகளிர் தினம்
மகளிர் தினம்

வீடு, பணியிடம் என எல்லாத் தளங்களிலும் ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும், ஊதியத்திலும் உரிமைகளிலும் பெண்களுக்குக் காலங்காலமாக அநீதி இழைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதை எதிர்த்து, தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக, பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி, 1910-ல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். அந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சியாளர் கிளாரா ஜெட்கின், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா போன்ற சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு, பெண்களின் உரிமைகளைப் பேச ஆண்டுதோறும் ஒரு தினத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறை உலகெங்கும் பிரகடனமானது. அப்படி ஆரம்பமானதுதான் மகளிர் தினம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களைப் போற்றுவது மட்டுமன்றி, அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் `மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. இதற்கான நோக்கம் ஓரளவாவது முழுமையடைந்துள்ளதா என்றால், இல்லை என்பதே யதார்த்தம்! பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல், பாலின பேதம், செய்யும் வேலைக்கான ஊதியம் மற்றும் அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்காதது போன்ற வேற்றுமைகள், வீட்டில் தொடங்கி, பெண்கள் கால் வைக்கும் எல்லா திசைகளிலும் புற்றீசல்போல அணிவகுக்கின்றன. உரக்கப் பேச வேண்டிய இந்த அநீதிக்காக, #StopExploitingWomen என்ற ஹேஷ்டேகில் இந்த ஆண்டு மகளிர் தினக் கொண்டாட்டத்துக்கான சிறப்பு முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது அவள் விகடன். அதன் ஒரு பகுதியாக, சினிமா நடன இயக்குநர் சாந்தியிடம் பேசினோம்.

சாந்தி மாஸ்டர்
சாந்தி மாஸ்டர்
`உருகுதே மருகுதே', `சூரத்தேங்காய் அட்றா அட்றா, `மியாவ் மியாவ் பூனை', `அம்புலி மாமா அம்புலி மாமா', `கிளியே கிளியே கிளியக்கா' உட்பட பல வெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்தவருக்கு, `மெட்டி ஒலி' சீரியல் டைட்டில் பாடல் பெரும் புகழைக் கொடுத்தது. இந்த வளர்ச்சிக்குப் பின்னால், இவர் எதிர்கொண்ட அடுக்கடுக்கான பணியிடப் பாகுபாடுகள், பலரும் அறியாத, அதேசமயம் பலதுறைப் பெண்களும் இன்றும் எதிர்கொள்பவை.

``பால்யத்துலயே டான்ஸ்ல எனக்கு அதிக ஆர்வம். அதுக்காக கிளாஸ் போனப்போதான் சினிமா வாய்ப்பு கிடைச்சது. `கிழக்கு வாசல்’ படத்துல `தடுக்கித் தடுக்கி வரும்’ பாட்டுல என்னை குரூப் டான்ஸரா அறிமுகப்படுத்தினார் பாபு மாஸ்டர். என் அம்மா சிங்கிள் பேரன்ட். குடும்ப வறுமை விரட்டுச்சு. அதனால, 13 வயசுல முழுநேரமா சினிமாவுல வேலைக்குச் சேர்ந்தேன். அந்த 1990-கள்ல டான்ஸ் யூனியன்ல உறுப்பினரா கார்டு வாங்குறது அவ்ளோ சுலபமில்லாத பெரிய புராசஸ். தனித்தனியே ஒன்பது டான்ஸ் மாஸ்டர்கள்கிட்ட டான்ஸ் ஆடிக்காட்டி, அவங்க செலக்ட் செஞ்சாதான் உறுப்பினருக்கான கார்டு கிடைக்கும். என் விருப்பப்படி ஒன்பது மாஸ்டர்கள் வீட்டுக்கும் போய் டான்ஸ் ஆடிக்காட்டினேன். அப்போ பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்த ஒருத்தர், பல மணி நேரம் என்னை அவர் வீட்டு வாசல்ல காத்திருக்க வெச்சதுடன், பத்து முறை ஆடிக்காட்ட சொல்லித்தான் என்னை செலக்ட் செஞ்சார்.

குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

ஒருவழியா கார்டு வாங்கினதும், நல்லா வேலை செஞ்சு பெயர் எடுக்கணும்னு வைராக்கியமா இருந்தேன். ஆனா, அது நிறைவேற அடுக்கடுக்கான சோதனைகளை எதிர்கொண்டேன். அப்போ ரொம்ப ஒல்லியா இருந்தேன். உயரமும் அதிகம். இது ரெண்டும் எனக்கு மைனஸா அமைஞ்சது. என் டான்ஸைப் பார்த்து முடிவெடுக்காம, என்னுடைய தோற்றத்தை ஒப்பிட்டு மாஸ்டர்கள் பலரும் வாய்ப்பு கொடுக்க மறுத்தாங்க. பலர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி வாய்ப்பு கேட்டேன். ஒல்லியான தோற்றத்தை ஓரளவுக்கு மறைக்கணும்னு, ஒரு பேன்ட்டுக்கு மேல அடுத்தடுத்து ரெண்டு பேன்ட்டுகளைப் போட்டு டான்ஸ் ஆடினேன். ரிகர்சல்ல என்னை முதல் வரிசையில நிற்க வெச்சாலும், ஷூட் பண்ணும்போது கடைசி வரிசைக்குத் துரத்திடுவாங்க. அதுக்காகவே, நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டேன்.

முன்னணி ஹீரோ ஒருத்தரோட இந்திப் பட பாடல் ஷூட்டிங். குரூப் டான்ஸரா இருந்த என்னைப் பார்த்து, அந்தப் பாடலை கோரியோகிராபி செஞ்ச மாஸ்டர், `ரெண்டு கைகள், ரெண்டு கால்கள் இருக்கிற டான்ஸர்தான் தேவை. நாலு கைகள் இருக்கிற இந்தப் பொண்ணைக் கூப்பிடலை’னு பொதுவெளியில அவமானப்படுத்தினதோடு, `துணி மாட்டுற ஹேங்கர்’னு அடிக்கடி என்னைக் கிண்டல் செஞ்சார். அதுமாதிரியான பேச்சுக்குப் பெரிசா ரியாக்ட் பண்ணினா, அரைகுறை வாய்ப்புகளும் கிடைக்காதுனு மத்தவங்க முன்னாடி சிரிச்ச மாதிரி காட்டிகிட்டு, தனியா போய் அழுவேன். உழைப்பையும் கொடுத்து இப்படியான அவமானங்களைச் சகிச்சுக்க வேண்டியதா இருக்கே, ஸ்கிரீன் முன்னாடி தெரிய முடியலையேனு மனசுல ஆதங்கம் நிரம்பியிருந்தாலும், நினைச்சதை அடையுற வரைக்கும் முயற்சியை கைவிடக் கூடாதுங்கிறதை அந்தப் புறக்கணிப்புகள்தான் எனக்குக் கத்துக்கொடுத்துச்சு.

சாந்தி மாஸ்டர்
சாந்தி மாஸ்டர்

மனசைக் காயப்படுத்துற மாதிரி எத்தனையோ பேச்சுகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டதுகூட பரவாயில்ல. அடிகூட வாங்கியிருக்கேன்! ஒரு பாடல் ஷூட்டிங்ல டான்ஸர்கள் முகத்துல பவுடர் விழுற மாதிரி ஒரு ஷாட். கண்ணுல விழுந்திடுமோன்னு, பவுடர் என் மேல படும்போது தெரியாத்தனமா கீழ உட்கார்ந்துட்டேன். என்னால ரெண்டாவது டேக் எடுக்க வேண்டியதா போச்சு. அதனால, கோபத்துல அந்தப் பாடலோட மாஸ்டர், எல்லோர் முன்னிலையிலயும் `பளார்’னு என் கன்னத்துல அறைவிட்டாங்க. அழுகையை என்னால கட்டுப்படுத்த ரொம்ப நேரமாச்சு. `மோதிரக்கையால கொட்டு வாங்கிட்டே...’னு சக டான்ஸர்கள் என்னைச் சாந்தப்படுத்தினாங்க.

பொறுமையை இழக்காம, வேலையைச் சரியா செஞ்சதால, 15 வயசுலயே அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டரா ஆனேன். சுசித்ரா மாஸ்டர்தான் அந்த வாய்ப்பைக் கொடுத்தார். அதேபோல, `நீ நல்லா டான்ஸ் ஆடுறியே’னு என்னை முதல் வரிசையில ஆட வெச்சார் பிரபுதேவா சார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகள்லயும் பல்வேறு டான்ஸ்மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டன்ட்டா வேலை செஞ்சேன். மாஸ்டர்கள் இல்லாத நேரம், அவங்க சார்பா நானே கோரியோகிராபி செஞ்சிருக்கேன். நான் வடிவமைச்ச நடன அசைவுகள் நல்லாயிருக்குனு, என் உழைப்புக்கான பாராட்டுகள் அந்த மாஸ்டர்களுக்குப் போகும். பாடல் ஷூட் முடிஞ்சதும், அதன் எடிட்டிங் வேலை நடக்கும்போது சம்பந்தப்பட்ட மாஸ்டரும் உடன் இருக்கணும். அந்த மாஸ்டர்கள் சார்பா எடிட்டிங் வேலையிலயும் பலமுறை உட்கார்ந்திருக்கேன். அதுக்கான பெயரும் அங்கீகாரமும் எனக்குக் கிடைக்காம போயிருக்கு. அதுக்காகவெல்லாம் பெரிசா வருத்தப்படாம, உருப்படியா ஒரு வேலையைக் கத்துக்க வாய்ப்பு கிடைச்சதேனு கடந்து போயிடுவேன்” – தன் குருநாதர்களை விட்டுக்கொடுக்காத சிஷ்யையாக சாந்தி பேசினாலும், உழைப்புக்கான பலன் கிடைக்காத ஆதங்கம் அவர் உள்ளத்தில் பொதிந்திருப்பதை உணர முடிகிறது.

சாந்தி மாஸ்டர்
சாந்தி மாஸ்டர்

இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கிய `ஆய்த எழுத்து’ படத்தில் `ஜன கன மன' பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை சாந்திக்குக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகும், போராட்டங்கள் ஓயாமல் இவரைத் துரத்தியிருக்கின்றன.

``அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டரா இருந்தப்போ, பீக்லேருந்த நிறைய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். அப்போ, `நீங்க மாஸ்டரா ஆனதும் நான் உங்களுக்கு சான்ஸ் தர்றேன்’னு சொன்னவங்க, நான் மாஸ்டரான பிறகு, என்னைக் கண்டுக்கவேயில்லை. அவங்கள்ல பலர்கிட்டயும் நேர்ல போய் கூச்சம் பார்க்காம வாய்ப்பு கேட்டேன். ஸ்டூடியோ வாசல்ல நாள் முழுக்க என்னைக் காக்க வெச்சார் சிரஞ்சீவி சார். ஆனாலும், வருத்தப்படாம அவர் வெளிய வரும்போது பேசினேன். `நீங்க மாஸ்டரா வொர்க் பண்ணிட்டு, அந்தப் பாடல்களோட சி.டி-யைக் கொண்டு வாங்க’ன்னார். `எனக்கு, சிரஞ்சீவிக்கு சாங் பண்ற அளவுக்குத் தைரியம் இருக்கு. சாந்திக்கு சாங் கொடுக்கிற தைரியம் இருந்தா எனக்கு வாய்ப்பு கொடுங்க’ன்னு நேரடியாவே கேட்டேன். ஆனா, அவர் வாய்ப்பே தரலை!

நடிகர் அரவிந்த்சாமியுடன்...
நடிகர் அரவிந்த்சாமியுடன்...

நாகார்ஜுனா சாருடனும் ரவிதேஜா சாருடனும் எனக்கு நெடுங்கால பழக்கம் உண்டு. அவங்ககிட்டயும் நேர்ல வாய்ப்பு கேட்டேன். ஆனா, பலன் கிடைக்கலை! இதேபோல, பழகின பந்தத்துல, தமிழ் சினிமா உச்ச நடிகர் ஒருத்தரின் வீட்டு வாசல்ல சான்ஸ் கேட்கலாம்னு மணிக்கணக்கா காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினேன். இப்படிப் பல அனுபவங்களை அடுக்கிட்டே போகலாம். ஒருகட்டத்துல மனதளவுல ரொம்பவே உடைஞ்சுபோய், வாய்ப்பு தேடி அலையுறதை நிறுத்திட்டேன். அதுக்கப்புறமா, ஹிட் பாடல்கள் பலவற்றுக்கும் நான் கோரியோகிராபி செஞ்சதெல்லாம், டைரக்டர்ஸ் என்மேல நம்பிக்கை வெச்சு கொடுத்த வாய்ப்புகள்தான்.

இப்ப வரைக்கும் ரொம்பவே சாமானிய குடும்பம்தான் என்னுடையது. சினிமா குடும்பப் பின்னணியும், பார்ட்டிகள்ல கலந்துகிட்டு சினிமா வட்டாரத்தினருடன் நட்பு பாராட்டுற பழக்கமும் எனக்கில்லை. தொடர் வாய்ப்புகள் கிடைக்காம போனதுக்கு இதுவும்கூட காரணமா இருக்கலாம். இந்த நிலையில, கல்யாணமாகி, முதல் குழந்தையைக் கவனிக்க சினிமாவுல சில காலம் பிரேக் எடுத்தேன். பிறகு, வாய்ப்பு தேடிகிட்டிருந்தப்போ, ரெண்டாவது முறை கர்ப்பமானேன். சினிமாவுக்காக, அந்தக் கருவைக் கலைக்க நினைச்சேன். ஆனா, குடும்பத்தினர் ஒத்துக்கலை. சில வருஷங்கள் பிரேக் எடுத்துட்டு மறுபடியும் ஆக்ட்டிவ்வா வேலை செய்யத் தயாரானப்போ, சினிமா உலகம் ரொம்பவே மாறிடுச்சு. போட்டிகளும் அதிகமாகிடுச்சு" ஆதங்கத்தைப் படபடவென கொட்டுபவர், 500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

``எதிர்பார்க்காத வகையில சின்னத்திரையில நடிப்புக்கான வாய்ப்புகள் கிடைச்சது. டான்ஸ் மாஸ்டரா இருந்தப்போ பாமர மக்கள்கிட்ட எனக்குக் கிடைக்காத அங்கீகாரம், நடிப்பு மூலமா இப்போ கிடைக்குது. சில படங்களுக்கு கோரியோகிராபி செஞ்சுகிட்டிருக்கேன். ஆனாலும், டான்ஸ் மாஸ்டரா நினைச்ச உயரத்துக்குப் போக முடியாத ஏக்கம் எனக்குள் நிரம்பிக் கிடக்குது. திறமை இல்லாம வாய்ப்பு மறுக்கப்பட்டாகூட ஏத்துக்கலாம். ஆனா, நியாயமில்லாத காரணங்களால புறக்கணிக்கப்படுறதுதான் வருத்தத்தைத் தருது. ஆனா, இதுமாதிரியான சிக்கல்களை அவ்ளோ சீக்கிரமெல்லாம் சரிபண்ணிட முடியாது. இதுமாதிரியான உழைப்புச் சுரண்டல், பாலின பேதமெல்லாம் பெண்களுக்கு அதிகமா நிகழ்ந்தாலும், ஆண்களுக்கும் இதுமாதிரியான பிரச்னைகள் இருக்குது. பாலின பாகுபாடில்லாம, உழைப்புக்கான உரிமை எல்லோருக்கும் சரியா கிடைக்கிறதுதான் சமூக நீதி. அது சாத்தியாகுறவரை, என்ன தடங்கல் வந்தாலும், நாம செய்ய வேண்டிய வேலையை நம்பிக்கையிழக்காம எப்போதும் செஞ்சுகிட்டே இருக்கணும். நமக்கான அடையாளம் எப்போதாச்சும், எந்த ரூபத்துலயாச்சும் கிடைச்சே தீரும்" என்று தீர்க்கமான குரலில் முடித்தார் சாந்தி.