Published:Updated:

``அப்பாவுக்கு நுரையீரல் பாதிச்சிருக்கு" - டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் இளைய மகன் உருக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவமனையில் சிவசங்கர் மாஸ்டர்
மருத்துவமனையில் சிவசங்கர் மாஸ்டர்

இப்ப எல்லாருமே ஐசியூவில்தான் இருக்காங்க. அப்பாவுடைய நுரையீரல் ''ரொம்ப பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. ஒரு நாளைக்கு ரூ. 2.5 லட்சம் செலவாகுது. திரையுலகினர் உதவி கிடைத்தால், மருத்துவ செலவை சமாளிக்க முடியும்.''

தமிழ், தெலுங்கில் நடன இயக்குநராக முத்திரை பதித்தவர் கே.சிவசங்கர். தனுஷின் 'திருடா திருடி'யில் இடம்பெற்ற 'மன்மத ராசா' பாடலின் மூலம் கவனம் பெற்றவர். அஜித்தின் 'வரலாறு', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'தில்லுக்குத் துட்டு-2' ஆகிய படங்களில் நடிகராகவும் கைத்தட்டல் வாங்கியவர். இப்போது கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கர் மட்டுமின்றி அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை அவரது இளைய மகன் அஜய் கிருஷ்ணாதான் உடனிந்து கவனித்து வருதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அஜய்கிருஷ்ணாவிடம் பேசினேன்.

''கடந்த ரெண்டு வருஷமாகவே நாங்க ஹைதராபாத்தில்தான் வசிக்கறோம். சமீபத்துல அப்பா, அம்மா, அண்ணன்னு எல்லாருக்கும் கொரோனா தடுப்பூசி ரெண்டாவது டோஸ் போட்டுக்கிட்டாங்க. அதன்பிறகுதான் காய்ச்சல் குறையாததால், மருத்துவமனையில் பரிசோதனை பண்ணினாங்க. அப்போதுதான் கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இப்ப எல்லாருமே ஐசியூவில்தான் இருக்காங்க.

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்
டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்

அப்பாவுடைய நுரையீரல் ரொம்ப பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. ஆஸ்பிட்டல் செலவு, நாளொன்றுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகுது. திரையுலகினர் உதவி கிடைத்தால், மருத்துவ செலவை சமாளிக்க முடியும். சினிமா நண்பர்கள்கிட்ட இனிமேல்தான் உதவிகள் கேட்க விருக்கிறோம். எல்லோருமே குணமடைந்து சீக்கிரமே வீடு திரும்பணும். உங்க எல்லோருடைய பிரார்த்தனைகளும் அப்பா, அம்மா, அண்ணனைக் காப்பாற்றும்னு நம்பறேன். பிரார்த்தனைதான் கைகொடுக்கும். அப்பா மறுபடியும் பழைய படி நடனம் அமைக்க திரும்பணும். நீங்க கடவுள்கிட்ட வேண்டிக்குங்க..!'' என உடைந்த குரலில் பேசினார்.

நலம் பெற்று வாருங்கள் மாஸ்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு