Published:Updated:

`` `மாஸ்டர்’ ஷூட்டிங் ஸ்பாட் மேட்ச்ல விஜய் சார் அடிச்ச ஸ்கோர்?!" - ஹுமை சந்த்

டான்ஸர் ஹுமை சந்த்
டான்ஸர் ஹுமை சந்த்

டான்ஸராகவும் பல பாடல்களுக்கு உதவி நடன இயக்குநராகவும் இருக்கிறார் ஹுமை. அவரது சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை அவரிடம் பேசினோம்.

டான்ஸர் ஹுமை சந்த். இவரைப் பல பாடல்களில் ஹீரோவுக்குப் பின்னால் நடனமாடும்போது பார்த்திருப்பீர்கள். டான்ஸராகவும் பல பாடல்களுக்கு உதவி நடன இயக்குநராகவும் இருக்கிறார். ஹுமையின் சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை அவரிடம் பேசினோம்.

ஹுமை சந்த்
ஹுமை சந்த்

``அப்பா - அம்மா ரெண்டு பேருமே சினிமாவுல டான்ஸரா இருந்தவங்க. அதுனால, எனக்கும் சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன். நான் 10-வதுல ஃபெயிலானதும் என் அப்பாகிட்ட, `நானும் சினிமாவுல டான்ஸராகுறேன்’னு சொன்னேன். என் அப்பா செமயா திட்டினார். `சினிமால டான்ஸ் ஆடணும்னா எவ்வளவு கஷ்டப்படணும்னு தெரியுமா. நிறைய அவமானங்களைத் தாண்டி வரணும். அதெல்லாம் நீ சமாளிக்க மாட்ட. இப்போ நீ ஃபெயிலான என்ன. மறுபடியும் எக்ஸாம் எழுது. பாஸாகி மேல மேல படி’னு சொன்னார். `சரி, நான் அட்டம்ப்ட் எழுதுறேன். ஆனா, என்னை டான்ஸ் கிளாஸில் சேர்த்து விடுங்க’னு சொன்னேன். ஆனா, நான் டான்ஸ் மேல மட்டும்தான் கவனம் செலுத்தினேன். ராபர்ட் மாஸ்டர் என் அப்பாவுக்கு ரொம்பப் பழக்கமா இருந்தனால, அவரோட கிளாஸில்தான் என்னைச் சேர்த்துவிட்டார். ராபர்ட் மாஸ்டரும் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டார். காசுகூட வாங்காம டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். நான் நல்லா டான்ஸ் பண்றேன்னு என் அப்பாகிட்ட ராபர்ட் மாஸ்டர் சொன்னதுக்கு அப்புறம்தான் என்னை யூனியனுக்குக் கூப்பிட்டுப் போய், எங்க அப்பா டான்ஸர் கார்ட் வாங்கிக் கொடுத்தார். அப்ப இருந்து இப்ப வரைக்கும் சினிமால டான்ஸ் பண்ணிகிட்டு இருக்கேன்’’ என ஆரம்பித்தார் ஹுமை சந்த்.

டான்ஸ் ஆடின முதல் படம் ஞாபகம் இருக்கா?

``யூனியன்ல கார்ட் வாங்கினதுக்கு அப்புறம் ஷோபி மாஸ்டரோட கோரியோகிராபிலதான் டான்ஸ் ஆடினேன். பவன் கல்யாண் சார் நடிச்ச `ஜல்சா’ங்கிற தெலுங்கு படத்தில் முதன்முதல்ல டான்ஸ் ஆடினேன். முதல் வாய்ப்பே பெரிய நடிகரோட படமா கிடைச்சதுல செம சந்தோஷம். அடுத்து கல்யாண் மாஸ்டர்கிட்ட பல படங்களில் வேலைபார்த்திருக்கேன். அந்தச் சமயத்தில்தான் டான்ஸர் சதாமோட பழக்கம் கிடைச்சது. சதாம் அப்போ தினேஷ் மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணிகிட்டு இருந்தாலும், அப்ப அப்ப கல்யாண் மாஸ்டர்கிட்டயும் வொர்க் பண்ண வருவார். அப்படி வரும்போது என்கிட்ட, `நீங்களும் தினேஷ் மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ண வாங்க. அங்க ஒரு குரூப்பே இருக்கு. ஜாலியா வொர்க் பண்ணலாம்’னு சொல்லி, என்னையும் தினேஷ் மாஸ்டர்கிட்ட கூப்பிட்டுப் போனார்."

இவன் வேற மாதிரி
இவன் வேற மாதிரி

``தினேஷ் மாஸ்டர்கிட்ட போனதுக்கு அப்புறம்தான், நாங்க ஒரு குரூப்பா எல்லாப் பாடல்களிலும் தொடர்ந்து ஆட ஆரம்பிச்சோம். பல பாடல்களில் எங்களைப் பார்த்துட்டு ஆடியன்ஸ் நோட் பண்ண ஆரம்பிச்சாங்க. நாங்களும் போட்டிபோட்டு ஆட ஆரம்பிச்சோம். எங்களை வெச்சு ஒவ்வொரு பாட்டுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை தினேஷ் மாஸ்டர் பண்ணிகிட்டே இருப்பார். எல்லாமே வொர்க்அவுட் ஆகும். அப்படித்தான் `இவன் வேற மாதிரி’ படத்தோட `லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்...’, `தலைவா’ படத்தோட `வாங்கண்ணா வணக்கங்கண்ணா...’, `ஆரம்பம்’ படத்தோட ஓப்பனிங் பாட்டுனு பலப் பாடல்களில் நாங்க வெளில தெரிய ஆரம்பிச்சோம். தினேஷ் மாஸ்டரை ஒரு படத்துக்குக் கமிட் பண்ணும்போதே, `அந்தப் பசங்களைக் கூப்பிட்டு வந்துடுங்க’னு சொல்வாங்க. தமிழ் மாதிரியே தெலுங்கு பாடல்களுக்கும் நாங்க ஆடியிருக்கோம். அங்கேயும் நல்ல ரீச் கிடைச்சது. இதெல்லாம் நடக்கும்னு நாங்க நினைக்கவே இல்லை. இதுக்கெல்லாம் தினேஷ் மாஸ்டருக்குத்தான் நன்றி சொல்லணும்.’’

விஜய், அஜித்னு பெரிய ஹீரோக்களுடன் டான்ஸ் ஆடிய அனுபவம் எப்படி இருந்தது?

அஜித்
அஜித்

``அஜித் சாரோட பிஹேவியரைப் பார்த்துதான் அவருக்கு நான் ரசிகனானேன். `ஆரம்பம்’ படத்தோட ஷூட்டிங்கிலதான் அவரோட பழக வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தோட ஷூட்டிங் தமிழ்நாட்டுல நடந்திருந்தா, அவரோட நெருங்கிப் பழகுற வாய்ப்பு கிடைச்சிருக்காது. ஏன்னா, இங்க அவரைப் பார்க்க ரசிகர்கள் கூடியிருப்பாங்க . வெளி மாநிலத்துல ஷூட்டிங் நடந்தனால, ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதுக்கு அப்புறமும் எங்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பார். தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் கை கொடுத்து, குட் மார்னிங் சொல்வார். அவர் எல்லாருக்கும் சமமான மரியாதை கொடுக்குறது, எனக்கு ரொம்பவே பிடிக்கும்."

விஜய்
விஜய்

``சின்ன வயசுல இருந்தே விஜய் சாரோட டான்ஸுக்கு நான் பெரிய ரசிகன். அவரோட டான்ஸ் ஆடணும்னு ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன். `அழகிய தமிழ்மகன்’ படம்தான் அவரோடு நான் டான்ஸ் ஆடின முதல் படம். அந்தப் படத்தோட ஷூட் அப்ப எனக்கு மலேரியா வந்துடுச்சு. இருந்தாலும் பரவாயில்லைன்னு அந்த ஷூட்டிங்குக்குப் போனேன். அதுக்கப்புறம் `தலைவா’, `கத்தி’னு தொடர்ந்து பல பாடல்கள் ஆடியிருக்கேன். அவர்கூட ஷூட்டிங் நடக்கும்போது, அவர் என்ன பண்ணிகிட்டு இருக்கார்னு நோட் பண்ணிகிட்டே இருப்பேன். ஆன் ஸ்கீரினில் அவர் பண்ற ஸ்டைலைவிட, ஆஃப் ஸ்கீரினில் அவர் பண்ற ஸ்டைலைப் பார்க்கணும்னுதான் ஆசைப்படுவேன். இப்போ `மாஸ்டர்’ படத்துல நான் அசிஸ்டென்ட் கோரியோகிராபரா வொர்க் பண்ணும்போதும், அவரோட ஸ்டைலைப் பார்த்து மெய்ம்மறந்து நின்னுகிட்டு இருந்தேன்.’’

டான்ஸராக இருந்த நீங்க, எப்போ உதவி நடன இயக்குநரானீங்க?

``ஷோபி மாஸ்டர்கிட்டதான் அசிஸ்டென்ட் கோரியோகிராபரா ஸ்டார்ட் பண்ணேன். அப்ப `அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக சதீஸ் மாஸ்டருக்கு அசிஸ்டென்ட் தேவைப்படுதுனு சொன்னாங்க. அப்போ நான் போனேன். அந்தப் படம் ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிகளிலும் ஷூட் பண்ணிகிட்டு இருந்தாங்க. அப்ப சிம்பு சாருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க ஏற்கெனவே சதீஸ் மாஸ்டர்கிட்ட ஒரு அசிஸ்டென்ட் இருந்தார். என்னை நாக சைதன்யா சாருக்கு சொல்லிக் கொடுக்குறதுக்காகக் கூப்பிட்டாங்க. நான் அப்ப பண்ண வொர்க்கைப் பார்த்துட்டு, தொடர்ந்து அவரோட வொர்க் பண்ணச் சொன்னார். சதீஸ் மாஸ்டர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகக்கூடியவர். செம ஜாலியா இருப்பார். அவரோட வொர்க் பண்ற அனுபவமே சூப்பரா இருக்கும்.’’

`மாஸ்டர்’ படத்தில் வொர்க் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?

``என்னை மாதிரியே சதீஸ் மாஸ்டரும் விஜய் சாரோட பயங்கரமான ரசிகர். `விஜய் சாரோடு ஒரு படத்திலாவது வொர்க் பண்ணிடணும்’னு ரொம்ப நாளா வெயிட் பன்ணிகிட்டு இருந்தார். அந்த ஆசை `மாஸ்டர்’ படம் மூலமா நிறைவேறிடுச்சு. `மாஸ்டர்’ படத்துல ஒரு மாண்டேஜ் பாட்டுக்குதான் நாங்க வொர்க் பண்ணோம். அந்தப் பாட்டை ஷூட் பண்ண மூணு நாளும் நான் செமயா என்ஜாய் பண்ணினேன். சதீஸ் மாஸ்டர் என்கிட்ட இதுதான் ஐடியானு சொல்லிடுவார். அதை நான் விஜய் சார்கிட்ட சொல்வேன். அதை அவர் டேக்ல பண்ணும்போது, வேற லெவல்ல பண்ணுவார். இது மாண்டேஜ் சாங்கா இருந்தனால, அவருக்கு டான்ஸ் சொல்லித்தர முடியாம போயிடுச்சு. அது இனிமேல் வர படங்களில் நடக்கணும்னு ஆசைப்படுறேன்."

Master விஜய்
Master விஜய்

``ஒவ்வொரு நாள் ஷூட் முடிஞ்சதும் சாயங்காலம் எல்லாரும் கிரிக்கெட் விளையாடுவாங்க. அப்ப விஜய் சார் என்கிட்ட பேசின மொமென்ட்டை என்னால மறக்கவே முடியாது. அப்படி ஒரு நாள் எல்லாரும் கிரிக்கெட் விளையாடும்போது, நான் விளையாடாம கொஞ்சம் தூரம் தள்ளி நின்னேன். விஜய் சாரோட டீம்தான் முதல்ல பேட்டிங் பண்ணுச்சு. அப்ப அவர் என் பக்கத்துல வந்து நின்னார். `என்னடா... இவ்வளவு வேகமா பந்து போடுறாங்க. அடுத்து நம்மளையும் பேட்டிங் பண்ணச் சொல்லுவாங்களே. போகலாமா, வேணாமா’னு என்கிட்ட கேட்டார். `சார்... போய் பேட்டிங் பண்ணுங்க சார்’னு சொன்னேன். அவரும் செமயா பேட்டிங் பண்ணார். ரெண்டு சிக்ஸ் அடிச்சார். அடுத்து அவர் டீம் பெளலிங் போடும்போதும், என் பக்கத்துல வந்து நின்னுகிட்டார். `இந்தப் பக்கம்தான்டா எவனுமே அடிக்க மாட்றான். நான் இங்கேயே நின்னுக்குறேன்’னு சொன்னார். அவர் இப்படி ஃப்ரீயா என்கிட்ட பேசுவார்னு நான் நினைக்கவே இல்லை. இந்த மொமென்ட்டை என் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்.’’

டான்ஸர், உதவி நடன இயக்குநர் எப்போ நடன இயக்குநராவீங்க?

``எனக்கு கோரியோகிராபரா ஆகணும்கிறதைவிட நடிகராகணும்னுதான் ஆசையா இருக்கு. தமிழ்ல ஹீரோவா ஒரு படம் கமிட்டாகி அது பாதியிலேயே ட்ராப் ஆகிடுச்சு. அடுத்து தெலுங்குல ரெண்டு படம் ஹீரோவா பண்ணியிருக்கேன். அது ரெண்டும் இன்னும் ரிலீஸாகலை. அதுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்போ அசிஸ்டென்ட் கோரியோகிராபரா கமல் சாரோட `இந்தியன் - 2’, விக்ரம் சாரோட `கோப்ரா’, சிவகார்த்திகேயன் நடிக்கிற `அயலான்’, அதர்வா நடிக்கிற `தள்ளிப் போகாதே’னு சில படங்கள் போயிட்டு இருக்கு. அடுத்து, கோரியோகிராபா ஆகுறேனா இல்லை நடிகர் ஆகுறேனா... போகப்போகத்தான் தெரியும்.’’

அடுத்த கட்டுரைக்கு