Published:Updated:

"உயரமா இருந்தால்தான் கோரியோகிராபராக முடியுமா?" - `பாவக் கதைகள்' ஜாஃபர் ஆதங்கம்

ஜாஃபர்

நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' எனும் ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய பகுதியில் நரிக்குட்டியாக நடித்த ஜாஃபர் பேட்டி.

Published:Updated:

"உயரமா இருந்தால்தான் கோரியோகிராபராக முடியுமா?" - `பாவக் கதைகள்' ஜாஃபர் ஆதங்கம்

நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' எனும் ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் இயக்கிய பகுதியில் நரிக்குட்டியாக நடித்த ஜாஃபர் பேட்டி.

ஜாஃபர்

2012ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய 16 வயது சிறுவன் இந்த ஜாஃபர் சாதிக். அந்த நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் இவரை பாராட்டாமல் இருந்ததில்லை. அந்த சீசனின் இளம் போட்டியாளர் இவர்தான். தற்போது இவருக்கு 24 வயதாகிறது. சினிமாவில் கோரியோகிராபராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவருக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவும் நடனம்தான். நடன உலகிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இவர், நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் விக்னேஷ் சிவன் போர்ஷனில் 'நரிக்குட்டி' எனும் கேரக்டரில் நடித்து தூள் கிளப்பியிருக்கிறார். டான்ஸ், நடிப்பு என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், ஜாஃபர்.

நடனக் கலைஞரா உங்களுக்கு நிறைய பாராட்டுகள் வந்திருக்கும். ஒரு நடிகரா உங்களுக்கு கிடைக்கிற பாராட்டுகள் எப்படி இருக்கு?

"அதை எப்படி எடுத்துக்கிறதுனு எனக்கு தெரியலை. ஏன்னா, அந்த ஜோன்ல என்னை வெச்சு நான் பார்த்ததில்லை. எனக்கு கோரியோகிராபர் ஆகணும்னுதான் கனவு. ஆனா, எனக்கு நடிக்க வாய்ப்பு வந்து, அதுல நான் நடிச்சதுக்கு நல்ல கமென்ட்ஸ் வர்றதை பார்க்கும்போது ரொம்ப புதுசா இருக்கு. பர்ஃபாமென்ஸ் நல்லாயிருக்குனுதான் எல்லாரும் சொல்றாங்க. எனக்கு டான்ஸ் ஆடும்போது எல்லோரும் சொல்ற கமென்ட், 'டான்ஸ் சூப்பரா இருக்கு. ஆனா, பர்ஃபாமென்ஸ் இருக்கமாட்டிங்குது. ஃபீல் பண்ணி ஆடு'னு சொல்வாங்க. இப்போ பர்ஃபாமென்ஸ் நல்லாயிருக்குனு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு"

உங்களை எப்படி விக்னேஷ் சிவன் அந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தார்?

ஜாஃபர்
ஜாஃபர்

"ஒருநாள் விக்கி அண்ணாவுடைய அசிஸ்டென்ட் ஒருத்தர் எனக்கு கால் பண்ணி, இந்த மாதிரி ஒரு படத்துக்கு நடிக்கணும். ஆடிஷன் வாங்கன்னு சொன்னார். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி என் டான்ஸ் வீடியோவை விக்கி அண்ணா ரீட்வீட் பண்ணிருக்கார். டான்ஸ் சம்பந்தமான கதை போல, அதுக்குதான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சு போனேன். ஆனா, அங்க வேறயா இருந்தது. ஆடிஷன் முடிஞ்சு ரெண்டு நாள்ல போன் வந்தது. அப்போ போனபோது 'சமநிலை' வசனம் கொடுத்தார். பெரிய வசனம். கொஞ்ச நேரம் தனியா ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்து எப்படியோ பேசி முடிச்சுட்டேன். 'ஓகேடா மத்ததை ஷூட்டிங்ல பார்த்துக்கலாம். உன் கெட்டப்பை மாத்திக்கலாமா?'னு கேட்டார். 'என்ன வேணாலும் பண்ணிக்கோங்க'னு சொல்லிட்டு வந்தேன். அப்புறம், நேரா ஷூட்டிங்க்குப் போயிட்டேன். ஸ்பாட்லயும் எனக்கான சுதந்திரத்தை கொடுத்தாங்க. என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. எனக்கு வந்ததை பண்ணிட்டு வந்தேன் அவ்ளோதான்!"

அஞ்சலி, கல்கி கூட நடிச்ச அனுபவம் ?

"இவங்க எல்லாம் படத்துல இருக்காங்கன்னு ஷூட்டிங் அன்னிக்குதான் தெரியும். நெட்ஃபிளிக்ஸ்ல ரிலீஸாகுற படம்னு மட்டும்தான் தெரியும். நான் நெட்ஃபிளிக்ஸ் எல்லாம் பார்க்கவேமாட்டேன். அதனால, நான் ரொம்ப அசால்டா இருந்தேன். என் ஃப்ரண்ட்ஸ்தான் 'டேய் நெட்ஃபிளிக்ஸ்னா என்னனு தெரியுமா? அது உலகம் முழுக்க போய் சேர்ற பிளாட்ஃபார்ம். தைரியமா போய் நடி'னு உற்சாகப்படுத்தினாங்க. அன்னிக்கு காலையில அஞ்சலி வர்றாங்கன்னு தெரியும். அப்புறம், 'கல்கி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. காஸ்ட்யூம் ரெடி பண்ணுங்க'னு பரபரப்பா பேசிட்டு இருந்தாங்க. யார் இந்த கல்கினு கூகுள்ல பார்த்தேன். அப்புறம்தான், 'ஓ இவங்க பேருதான் கல்கியானு தெரிஞ்சது. அவங்க படங்களை பார்த்திருக்கேன். ஆனா, பெயர் தெரியலை. விக்கி அண்ணா என்னைக் கூப்பிட்டு அஞ்சலிக்கும் கல்கிக்கும் அறிமுகப்படுத்தி வெச்சாங்க. கல்கி அக்கா தமிழ்ல பேசினதும் ஷாக்கிங்கா இருந்தது. அப்புறம்தான், அவங்க பாண்டிச்சேரினு சொன்னாங்க. 'பயப்படாம நடி. நல்லா பண்ற. தைரியமா ஜாலியா பண்ணு'னு சொன்னாங்க!"

உங்களுக்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் குரல் கொடுத்திருந்தார். அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

ஜாஃபர்
ஜாஃபர்

"எனக்கு டீசர்ல பார்க்கும்போது சிரிப்பா இருந்தது. பசங்க எல்லோரும் அவருடைய குரல் சூப்பரா செட்டாகியிருக்குனு சொன்னாங்க. ரெண்டாவது சீன்ல இருந்து அந்தக் குரலுக்கு செட்டாகிட்டேன். தேனி ஈஸ்வர் சார் 'உங்க டான்ஸ் பார்த்திருக்கேன் ஜாஃபர்'னு சொல்லி பேசினார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்கு கேமரானாலே பயம். கேமராவை ஒரு நிமிஷம் பார்க்க சொன்னா என்னால முடியாது. ஆனா, அவர் எனக்கு நிறைய டெக்னிக்ஸ் எல்லாம் சொல்லிக்கொடுத்தார். அதெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்தது. நரிக்குட்டி கேரக்டர் இந்தளவுக்கு ரசிக்கப்படுதுனா அதுக்கு அவருடைய குரல் ரொம்ப ரொம்ப முக்கியம்."

விக்னேஷ் சிவன் நடிக்கிறதுக்கு என்னென்ன டிப்ஸ் கொடுத்தார்?

"உன் கேரக்டர் பெயர் நரிக்குட்டி. நரித்தனம் பண்ணுவ. ஒரு ஃப்ராடு. உன்னை வெச்சுதான் எல்லாமே நடக்கும். ஆனா, நீ ரொம்ப அமைதியாவும் நக்கலாவும் இருக்கணும்னு சொன்னார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், இந்தி வெப் சீரிஸ் இதுல இருக்கிற சில கதாபாத்திரங்களை ரெஃபரென்ஸா எடுத்துக்க சொன்னார்."

கெட்டவார்த்தை பேசி நடிக்க தயக்கமா இருந்ததா?

'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் ஜாஃபர்
'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் ஜாஃபர்

"ஒரு கேரக்டர் இது பண்ணணும்னா பண்ணிதான் ஆகணும். அதுதான் தேவை. நான் கோரியோகிராப் பண்ணும்போது நான் சொல்ற ஸ்டெப்பை மாத்திக்கலாமானு யாராவது கேட்டா எனக்கு பிடிக்காது. இது பண்ணா நல்லாயிருக்கும்னு நான் ஒண்ணு யோசிச்சிருக்கேன். அதை பண்ணிட்டு சொல்லணும். அதை பண்ணாமலே இது பண்ணா நல்லாயிருக்காதுனு சொன்னா பிடிக்காது. அது மாதிரிதானே டைரக்டருக்கும் இருக்கும். ஆரம்பத்துல சொன்ன மாதிரி என்னை முழுமையா கொடுத்துட்டேன். அதனால, அந்த தயக்கமெல்லாம் இல்லை."

'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' முடிஞ்சதிலிருந்து இப்போ வரை உங்க கரியர் எப்படி போயிட்டு இருக்கு?

"அந்த ஷோ பண்ணும்போது எனக்கு வயசு 16. எனக்கு கோரியோகிராபர் ஆகணும்னு ஆசை, கனவு எல்லாம். ஆனா, எனக்கு அதுக்கு என்ன வழினு எல்லாம் தெரியாது. அவ்வளவு ஏன் அப்போ எனக்கு கோரியோகிராபர்னே சொல்ல தெரியாது. கொரியர்கிராபர்னுதான் சொல்லிட்டு இருந்தேன். அந்த ஷோ முடிஞ்சு எட்டு வருஷமாகிடுச்சு. இன்னும் சொல்ற மாதிரி ஒண்ணும் பண்ணலை. ஆனா, நிறைய கத்துக்கிட்டேன். எவ்வளவோ போராட்டம். ஆனா, எனக்கு இது வேண்டாம்னு நினைக்க தோணலை. எவ்ளோ நாளானாலும் பரவாயில்லை. நான் காத்திருந்து அந்த இடத்துக்கு போறேன். 2014ல சென்னை வந்தேன். இப்போ வரை போராடிட்டு இருக்கேன். ஜெயிக்குற வரை போராடுவேன். எனக்கு எப்போ எல்லாம் அப்செட்டாகுதோ அப்போ எல்லாம் என் டான்ஸ் வீடியோவை போட்டு பார்ப்பேன். அப்போ கேட்குற கைத்தட்டல்தான் எனக்கான எனர்ஜி."

கோரியோகிராபராக நீங்க எடுக்கிற முயற்சிகள் எப்படி போயிட்டிருக்கு?

ஜாஃபர்
ஜாஃபர்

"நிறைய தடைகள் இருக்கு. நான் டான்ஸ் ஆடுறேன். சில ஆல்பம் பாடல்களுக்கு கோரியோ பண்ணிருக்கேன். இதெல்லாம் இருந்தா ஈஸியா என்னால படத்துக்கு கோரியோகிராபி பண்ணிட முடியாது. அதுக்குனு சில விதிமுறைகள் இருக்குனு சொல்றாங்க. நாலு வருஷம் பேக் டான்சரா இருக்கணும். ரெண்டு வருஷம் அசிஸ்டென்ட் கோரியோகிராபரா இருக்கணும். அப்புறம்தான், கோரியோகிராபராக முடியும்னு சொல்றாங்க. நிறைய பேர் பயமுறுத்துறாங்க. பேக் டான்சரா ஹீரோ பின்னாடி ஆடணும்னா உயரம் முக்கியம்னு சொல்றாங்க. அதுக்குனு ஆடிஷன் இருக்கு. அதுல 200 பேர் கலந்துக்கிறாங்கன்னா 15 பேரை தேர்ந்தெடுப்பாங்க. உயரம் குறைவா இருக்கிறதனால குரூப்ல தனியா தெரிவோம்னு என்னை பயன்படுத்தமாட்டாங்க. எப்போவாவது தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்துவாங்க. அதனாலதான் பேக் டான்சராகி கோரியோகிராபராகணும்னு நினைக்கலை. இதனாலதான், அந்த வழி மேல பெரிய வருத்தம் இருக்கு. சின்ன வயசுல இருந்து எல்லாமே டான்ஸ்தான்னு நினைச்சு கஷ்டப்பட்டு இங்க வந்தேன். இங்க வந்த பிறகுதான், எனக்கு இந்த மாதிரி ஒரு செக் இருக்குனு தெரியவந்தது. ரொம்ப கஷ்டமா இருந்தது. நமக்கு இங்க பாதை இல்லை. அதனால, நானே உருவாக்கலாம்னு நினைச்சு உழைச்சுக்கிட்டு இருக்கேன். உயரமா இருந்தால்தான் கோரியோகிராபராக முடியுங்கிற விஷயத்தை மாத்துனா நல்லாயிருக்கும். எல்லோரையும் சப்போர்ட் பண்ணுங்க!"