Published:Updated:

``பேட்டிங், பெளலிங்... எதில் விஜய் கில்லி?!" டெல்லி கிரிக்கெட் கமென்ட்ரி கொடுக்கும் சதாம்

டான்ஸர் சதாம்
News
டான்ஸர் சதாம்

சினிமாக்களில் சத்தம் இல்லாமல் இயங்கும் சைலன்ட் ஹீரோக்களைப் பற்றிய சீரிஸ்தான் இது. பல பாடல்களில் ஹீரோக்களுக்குப் பக்கத்தில் ஆடும் சதாமை எல்லோரும் கவனித்திருப்போம். அவர்தான் இந்தத் தொடரில் என் முதல் செலிபிரிட்டி!

தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஹீரோக்களுக்கு நடனக் காட்சிகள் அமைக்கும் ஷோபி, தினேஷ், கல்யாண் என டான்ஸ் மாஸ்டர்ஸ் பலரும், ராஜூ சுந்தரம், பிரபுதேவா கோரியோகிராஃப் செய்த பாடல்களில் குரூப் டான்ஸர்களாக ஆடியவர்கள்தான். தற்போது, இவர்களுக்கு அடுத்த செட் தயாராகி வருகிறது. அவர்களில் முக்கியமானவர் சதாம். விஜய், அஜித் என எல்லோருடனும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் சதாமை சந்தித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``சேலம்தான் என் சொந்த ஊர். ப்ளஸ் டூ-ல ஃபெயில் ஆகி ஊர்ல சும்மா சுத்திட்டு இருந்தேன். என் சித்தப்பா சினிமால குரூப் டான்ஸர். `சும்மா சுத்தி லைஃபை வேஸ்ட் பண்ணாதே'னு அவர்தான் என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்தார். ஒரு டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்துவிட்டு, டான்ஸ் யூனியன்ல கார்டு எடுத்துக்கொடுத்தார். டான்ஸ் யூனியன்ல கார்டு வாங்குறது, அவ்வளவு ஈசி இல்லைங்க. நிறைய பேர் யூனியன்ல சேர, அப்ளை பண்ணியிருப்பாங்க. அப்படி அப்ளை பண்ணினவங்க எல்லாரையும் ஒரு நாள் வரச்சொல்லி, ஆடிஷன் பண்ணுவாங்க. அதுல நல்லா ஆடினாதான் செலக்ட் பண்ணுவாங்க. நான் ஆடிஷன் போனப்போ, மொத்தம் 400 பேர் ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. அதுல இருந்து 50 பேரை செலக்ட் பண்ணாங்க. அதுல நானும் ஒருத்தன். செலக்ட் பண்ணதுக்கு அப்புறம், 3 லட்சம் ரூபாய் கட்டினாத்தான் கார்டு கொடுப்பாங்க. எங்க வீட்டுல காசுக்கேட்டா, `டேய், நீ வேலைக்கு போய் காசு கொடுப்பனு பார்த்தா, வேலைக்கு போறதுக்கு முன்னாடியே 3 லட்சம் கேக்குறீயே’னு சொன்னாங்க. `கார்டு எடுத்தால்தான் வேலை கிடைக்கும். கொஞ்ச நாள்ல அந்தக் காசை சம்பாதிச்சிடலாம்’னு சொன்னதுக்கு அப்பறம், கடன் வாங்கிப் பணம் கொடுத்தாங்க. இப்படித்தான் நான் குரூப் டான்ஸரானேன்’’ எனத் தன் முன்கதையைச் சொன்னார் சதாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முதல் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?"

Dancer Sadham
Dancer Sadham

``நான் 2008-ல கார்டு வாங்கினேன். யூனியன்ல கார்டு வாங்கி 3 நாள் கழிச்சு, `இன்னைக்கு உங்களுக்கு ஷூட்டிங் இருக்கு, யூனியனுக்கு வந்துருங்க’னு சொன்னாங்க. என்ன படம், யார் ஹீரோனு எதுவுமே சொல்லலை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனப்பதான் தெரியும், அது ரஜினி சாரோட படம். `குசேலன்’ படத்தோட `போக்கிரி ராஜா’ பாட்டோட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்ச. லாரன்ஸ் மாஸ்டர்தான் கோரியோகிராஃபர். முதல் படமே ரஜினி சார் படம், லாரன்ஸ் மாஸ்டர் கோரியோகிராஃபினு செம குஷியாகிட்டேன். புது பையனா இருந்ததனால, கடைசி வரிசையில் நின்னு ஆட வெச்சாங்க. இப்படிப் பல படங்கள்ல கடைசி வரிசையில் ஆடி, அப்படியே ஒவ்வொரு வரிசையா முன்னாடி வந்து, இப்போ ஹீரோவுக்குப் பக்கத்தில் நின்னு ஆடிட்டு இருக்கேன்.’’

``எந்தப் பாடலில் இருந்து முதல் வரிசைக்கு வந்தீங்க?"

Venam machaan venam song
Venam machaan venam song

``தினேஷ் மாஸ்டர் எப்போ அவரோட ஃபாஸ்ட் டான்ஸ் ஃபார்மேட்ல இருந்து சிம்பிள் டான்ஸ் ஃபார்மேட்டுக்கு மாறினாரோ, அப்போ இருந்து எங்க டீம்ல இருந்த குரூப் டான்ஸர்களை மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க. `ஜில்லா விட்டு ஜில்லா வந்த’, `வேணாம் மச்சான் வேணாம்’, `கொஞ்சும் கிளி பாட வெச்சா’, `ஊதா கலரு ரிப்பன் பாட்டு’னு அடுத்தடுத்து நாங்க ஒரே டீம் எல்லா பாட்டுக்கும் ஆடிட்டு இருந்தோம். `ஊதா கலரு ரிப்பன்’ பாட்டெல்லாம் செமையா ஹிட்டானதுக்கு அப்பறம், நிறைய பேர் என்னைப் பார்த்ததும், `ப்ரோ நீங்கதான எல்லா பாட்டுலேயும் குரூப் டான்ஸ் ஆடுவீங்க’னு கேட்டுட்டு, செல்ஃபி எடுத்துப்பாங்க.’’ 

``பெரிய ஹீரோக்களோட டான்ஸ் ஆடும்போது, அவங்க எந்தளவுக்கு உங்களோடு பழகுவாங்க?"

``எந்த ஹீரோவா இருந்தாலும், முதல் நாள் ஷூட்டிங்கில் கொஞ்சம் கம்மியாத்தான் பேசுவாங்க. அந்தப் பாட்டோட ஷூட் முடியுற அன்னைக்கு, க்ளோஸ் ஆகிடுவாங்க. அடுத்தபடம் பண்ணும்போது, சகஜமாப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. விஜய் சாரோடு `வேட்டைக்காரன்’ படத்துலதான் ஃபர்ஸ்ட் டைம் வொர்க் பண்ண ஆரம்பிச்சோம். அந்தப் படத்துல இருந்து இப்ப `தளபதி 64' வரைக்கும் நிறைய படங்களில் ஆடியிருக்கோம். முதல் படம் வொர்க் பண்ணும்போது, அதிகமா பேச மாட்டார். அடுத்தடுத்தப் படங்களில், `வாங்க நண்பா, எப்படி இருக்கீங்க’னு பேச ஆரம்பிச்சிட்டார். எதாவது ஒரு ஸ்டெப்பில் அவருக்கு சந்தேகம் இருந்தால், `நண்பா, அதை எப்படி பண்ணணும், கொஞ்சம் பண்ணிக்காட்டுங்க’னு கேட்பார். பொதுவாவே, விஜய் சார் ரிகர்சல் பண்ண மாட்டார். நாங்க ஆடுறதைப் பார்ப்பார். லைட்டா ஒரு டைம் எல்லா ஸ்டெப்ஸையும் போட்டுப் பார்ப்பார். உடனே டேக்தான். டேக்னு சொன்னதும் எப்படித்தான் அவர்கிட்டயிருந்து அப்படி ஒரு எனர்ஜி வெளிய வரும்னு தெரியாது. பல முறை ஒரே டேக்கில் ஓகே பண்ணிட்டுப் போயிடுவார்.

விஜய்
விஜய்

தளபதி 64 ஷூட்ல மறக்கமுடியாத ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்தப் பாட்டோட ஷூட்டிங் டெல்லில 6 நாள் போச்சு. அதுதான் அந்தப் படத்தோட இன்ட்ரோ பாட்டுனு நினைக்கிறேன். கிட்டத்தட்ட 300 டான்ஸர்ஸ் அந்தப் பாட்ல ஆடினோம். பயங்கரமான ஃபோக் பாட்டு. டெல்லில பயங்கரமா டஸ்ட் இருந்தனால, ஷூட்டிங்ல சில தடங்கல்கள் இருந்துச்சு. ஒருநாள் காலைல எல்லோரும் ஸ்பாட்டுக்கு வந்துட்டோம். டஸ்ட் குறையும்னு வெயிட் பண்ணோம். ஆனால், குறையவே இல்லை. மதியத்துக்கு மேல எல்லாரையும் கிளம்பச் சொல்லிட்டாங்க. `தினேஷ் மாஸ்டரோட டான்ஸர்ஸ் 10 பேரு மட்டும் இருங்க’னு சொன்னதால நாங்க வெயிட் பண்ணோம். திடீர்னு விஜய் சார் வந்து, `வாங்க நண்பா, கிரிக்கெட் விளையாடலாம்’னு சொன்னார். எங்களுக்கு பயங்கர ஷாக். மொத்தம் 2 மேட்ச் விளையாடினோம். முதல் மேட்ச் விளையாடும்போது, கொஞ்சம் கூச்சப்பட்டுட்டேத்தான் விளையாடினார். ரெண்டாவது மேட்ச்ல குஷியாகிட்டார். அவர் பெளலிங் போட்டு ஒரு விக்கெட் எடுத்ததும், செமையா என்ஜாய் பண்ண ஆரம்பிச்சார். பௌலிங் செமய்யா பண்றார். ஒரு பெரிய ஹீரோங்கிற எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகினார். லைஃப்ல மறக்கமுடியாத சம்பவம் இது.

ஆரம்பம்
ஆரம்பம்

அஜித் சாரோடு ஒரு படத்தில்தான் வொர்க் பண்ணியிருக்கோம். ஆனால், அந்த ஒரே படம் எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் கொடுத்திருக்கு. `ஆரம்பம்’ படத்தோட இன்ட்ரோ பாட்டுக்காக நார்த் இந்தியால ஷூட் நடந்துச்சு. அப்போ பயங்கர வெயில். காலைல இருந்து 12 மணி வரைக்கும் ஷூட் நடக்கும். அப்புறம் பிரேக் விட்டுட்டு 3 மணிக்கு மேலதான் ஷூட் எடுப்பாங்க. அப்படி ஒரு நாள் பிரேக் விட்டுட்டு ஷூட் ஆரம்பிக்கும்போது, நாங்க எல்லாரும் சாப்பாட்டைப் பற்றிப் பேசிட்டு இருந்தோம். உடனே அஜித் சார், `சாப்பாடு சரியில்லையா’னு கேட்டார். `ஆமா சார். நார்த் இந்தியா சாப்பாடு செட்டாகலை. நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடணும்போல இருக்கு’னு சொன்னோம். அன்னைக்கு நைட்டே ஒரு பெரிய ஹோட்டல்ல இருந்து, எங்க எல்லாருக்கும் நம்ம ஊர் சாப்பாடு ஆர்டர் பண்ணி வர வெச்சிட்டார். அவரே எங்க எல்லாருக்கும் சாப்பாடுப் பரிமாறினார்.

அஜித் சார் எப்போதுமே பிரியாணி சமைச்சுத் தருவார்னு கேள்விப்பட்டிருக்கோம். நாங்க இருந்த ஸ்பாட்டில் சமைக்க ஏதுவா இல்லைனு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்னு நினைக்கிறேன். இல்லைன்னா, அன்னைக்கு அவர் கையாலேயே பிரியாணி கிடைச்சிருக்கும்.

ஊதா கலரு ரிப்பன்
ஊதா கலரு ரிப்பன்

சிவகார்த்திகேயன் அண்ணாவோடு வொர்க் பண்ற அனுபவமும் ரொம்ப நல்லா இருக்கும். `ஊதா கலரு ரிப்பன்’ பாட்டப்போ ஒரு சம்பவம் நடந்துச்சு. அதில் இருந்துதான் சிவா அண்ணா எங்க எல்லோருக்கும் செம க்ளோஸ் ஆனார். அந்தப் பாட்டுல ஒரு ஷாட்டுக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவை, தலைகீழா கட்டி இறக்குனாங்க. அப்போ நாங்க சுத்தி ஆடணும். அவரை கயிறு கட்டி இறக்கும்போது, திடீர்னு கயிறு கட்டாகிருச்சு. நாங்க டக்குனு அவரை பிடிச்சிட்டோம். இல்லைனா, அவரோட தலை தரையில் அடிச்சிருக்கும். சிவா அண்ணா, `என் உயிரையே காப்பாத்திட்டீங்க ப்ரோ’னு சொன்னார். அந்தப் பாட்டோட ஷூட் முடிஞ்சு நாங்க கிளம்பும்போது, எங்க எல்லாருக்கும் ஒரு கிப்ஃட் வாங்கிக் கொடுத்தார். அதுக்கப்புறம் அவரோடு நிறைய படங்களில் வேலை பார்த்துட்டோம். ரொம்ப நட்பா இருப்பார்.’’

``10 வருஷத்துக்கும் மேல குரூப் டான்ஸரா இருக்கீங்க. உங்களோட அடுத்த பிளான் என்ன?"

``கோரியோகிராஃபராகணும், நடிகராகணும்னு ரெண்டு ஆசை இருக்கு. நிச்சயம் அடுத்தடுத்த வருஷத்துல இதெல்லாம் நடந்திடும்னு நினைக்கிறேன்.’’