Published:Updated:

`சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல சேனல்’ - பரபரக்கும் `தர்பார்’ அப்டேட்ஸ்

`காப்பான்' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார். அப்போது, `இதுவரைக்கும் வெளிவந்த ரஜினிகாந்த் படங்கள்லயே இப்படி ஒரு படம் வந்திருக்கவே கூடாதுன்னு `தர்பார்' படத்துக்காக பயங்கரமா உழைச்சுக்கிட்டிருக்கார்' என்று முருகதாஸைப் பாராட்டினார், ரஜினி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ( தர்பார் )

வழக்கமாக ரஜினி படங்களின் படப்பிடிப்பு, சென்னையில்தான் நடக்கும். மும்பையில் உள்ள தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட `காலா' படத்தின் படப்பிடிப்பே பெரும்பாலும் சென்னையில்தான் நடந்தது. ஈவிபி ஸ்டூடியோவில் தாராவியை அப்படியே ஜெராக்ஸ் செய்ததுபோல் ராமலிங்கம் செட் போட, `காலா' படப்பிடிப்பை நடத்தி முடித்தார், ரஞ்சித்.

இப்போது `தர்பார்' படத்தின் மூலக்கதையும் மும்பையில் நடப்பதுபோல் உருவாக்கியிருக்கிறார், முருகதாஸ். இதுவரை ஒரு காட்சிகூட சென்னையில் படமாக்கவில்லை. முழுக்க முழுக்க மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இடையில் மும்பை வெள்ளத்தில் மிதந்தபோது `தர்பார்' படப்பிடிப்பு நின்றுபோய் சென்னைக்குத் திரும்பினார், ரஜினி. சமீபத்தில் ராஜஸ்தான் ஜெய்பூரில் நடந்த `தர்பார்' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்தார்.

Rajinikanth
Rajinikanth
Darbar

நடுவில், பெங்களூரில்உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்குவாட்டைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து உடனே மும்பைக்குப் பறந்தார், ரஜினி. `தர்பார்' படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில், அதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனத்துக்கு விற்றுவிட்டது, லைக்கா. ஏற்கெனவே லைக்கா நிறுவனத்தில் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த `2.0' திரைப்படம் உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது. விரைவில் சீனாவிலும் ரிலீஸாக இருக்கிறது. தற்போது ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் `தர்பார்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிகிடக்கிறது. `2.0' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, `தர்பார்' படத்திற்கும் கிடைக்கும் என நினைத்து இம்முடிவை எடுத்திருக்கிறது, லைக்கா நிறுவனம்.