Published:Updated:

யோதகா... லா பொங்கல்... மறுவார்த்தை பேசாதே... `தர்புகா' சிவா எனும் ஜிப்ஸி இசைஞன்! #HBDDarbukaSiva

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா ( #HBDDarbukaSiva )

தமிழ் இசையுலகின் நம்பிக்கை இளைஞனுக்கு இன்று பிறந்தநாள். அவர் பெயரைச் சொல்வதைவிட, மிஸ்டர் எக்ஸ் என்றால் இன்னும் பரிச்சயம். #HBDDarbukaSiva #'தர்புகா' சிவா

தமிழ் இசையுலகின் நம்பிக்கை இளைஞனுக்கு இன்று பிறந்தநாள். அவர் பெயரைச் சொல்வதைவிட, மிஸ்டர் எக்ஸ் என்றால் இன்னும் பரிச்சயம்.

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா

அவரே `எனை நோக்கி பாயும் தோட்டா' எனும் ஒற்றைப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திய அற்புதக் கலைஞன் `தர்புகா' சிவா! இன்று பலரது ப்ளே லிஸ்டிலும் தன் பெயர் பதித்திருக்கும் இவரின் இசைப்பயணம், இன்ஸ்பிரேஷனான பயணம்.

சட்டிமேளங்களின் அதிர்வையும், கால்பந்து உண்டாக்கும் வியர்வையும் கொண்ட கொண்டாட்ட வடசென்னைவாசி சிவா. தனது 17-வது வயதில் பேஸிக் டிரம் கிட் ஒன்றை வாங்கி, சுயமாக இசையைக் கற்றுக்கொண்டார். அதிலிருந்து ஒரு வருடத்திலேயே, கொல்கத்தா இசைக் கலைஞர் போனி சக்ரபோர்தியின் `ஒய்கோதான்' பேண்டில் இணைந்தார்.

இந்த பேண்ட்தான் `தர்புகா' சிவாவின் இசை ரசனையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. ஒய்கோதான் பேண்டின் இசை சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள வேண்டி, கடைசி செமஸ்டர் தேர்வையே மொத்தமாய் உதறித்தள்ளினார் சிவா. 20 வயதில் இளைஞனுக்குக் கிளர்ந்தெழுந்த அந்த அசாத்திய நம்பிக்கைதான், அதற்கான பலனை இன்று ருசித்துக்கொண்டிருக்கிறது.

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா

முதலில் டிரம்மராகவே தன் பயணத்தைத் தொடங்கியவருக்கு, தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்கத் தாளக்கருவிகளின் மீது ஆர்வம் தொற்றியது. லத்தீன் இசை கேசட்களும், போனி சக்ரபோர்தியின் வழிகாட்டுதலும் சிவாவின் ஆர்வத்துக்குச் சரியான தீனி போட, தர்புகா, ஜெம்பே, உது போன்ற கருவிகளை இசைக்கத் தொடங்கினார். இத்தனை கருவிகள் அவருக்கு வாசிக்கத் தெரிந்திருந்தும், தர்புகா எனும் பெயர் மட்டும் அவரோடு ஒட்டிக்கொண்டதற்குப் பின்னால் சிறு சுவாரஸ்யக் கதை இருக்கிறது.

2003-ம் தனது தோழியும், இசைக் கலைஞருமாகிய தன்வி ஷாவுடன் இணைந்து `ஸாரா' எனும் இசைக்குழுவைத் தொடங்கினார் சிவா. அமெரிக்க, ஆப்பிரிக்க மற்றும் கியூபன் இசைகளை சென்னையின் மேடைகளுக்கு நாடுகடத்தியதன் மூலம் இசை ஆர்வலர்கள் மத்தியில் மெல்லமாகப் பிரபலமடையத் தொடங்கியது ஸாரா. பிறகு, 2005-ல் தொடங்கிய `யோதகா'தான், அவரை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் சென்றது. தற்போதைய பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப், பின்னணிப் பாடகியான சுபிக்‌ஷா மற்றும் `தர்புகா' சிவா மூவரும்தான் யோதகாவின் முன்னணிப் போர் வீரர்கள்.

யோதகாவின் இசை ஆல்பத்தை, தனது ஃபோட்டான் மியூசிக் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். தர்புகா சிவா - கௌதம் மேனன் இடையேயான நீண்ட நெடிய பந்தத்தின் தொடக்கப்புள்ளி இதுதான். ஜாஸ், பாப், ஃப்யூஷன், கர்னாடிக், லத்தீன் அமெரிக்கன், எகிப்திய, அரேபிய இசைகளைக் கலந்த இவர்களது காக்டெயில் இசை அப்போது சென்னை மியூசிக் சீனில் செம ஹிட்!

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா

2007-ல் ரேடியோ துறைக்குள் நுழைந்தார். ரேடியோ மிர்ச்சி சேனலில் தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியில் அமர்ந்தவர், அங்கு ஏற்கெனவே `மிர்ச்சி' சிவா இருந்ததால் தன் பெயரை `தர்புகா' சிவா என்றே மாற்றாமல் வைத்துக்கொண்டார். சிவாவின் கலாய் பேச்சுகளுக்கும், ஒன்-லைன் கவுன்டர்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இன்னொரு புறம் `நாட்டுப்புற பீட்' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தன் இசை ஆர்வத்தையும் உயிர்ப்போடு வைத்திருந்தார். இப்படி ரேடியோ ஜாக்கியாக, ரேடியோக்களின் வழியாக சில ரசிகர்களைக் கவர்ந்தவர், பல ரசிகர்களைக் கவர்ந்தது `ராஜதந்திரம்' படத்தின் மூலம். ஆர்ஜே தர்புகா சிவாவின் சேட்டைகள், ஆஸ்டின் டி கோஸ்டா கதாபாத்திரத்திற்கு வலுவாக உதவ, தரமான அறிமுகம் கிடைத்தது அவருக்கு.

அதன்பிறகு, தனது நண்பர் பிரசாத் முருகேசன் இயக்கிய `கிடாரி' படத்திற்கு இசையமைத்தார் தர்புகா சிவா. பிரசாத், `ராஜதந்திரம்' படத்தில் எக்ஸ்கிக்யூட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியவர். யாருமே எதிர்பார்க்கவில்லை, அவரிடமிருந்து அப்படியொரு ஆல்பத்தை. ஒரே மெட்டை ரொமான்டிக்காகவும் மாஸாகவும் ஜாலியாகவும் போட்டு ஆச்சர்யப்படுத்தினார். அந்தோனிதாசனுடன் இணைந்து `லா பொங்கல்' காலத்தை மீட்டுருவாக்கம் செய்தார். புதிதாக இருந்தது `கிடாரி'யின் சத்தங்கள்.

'கிடாரி'
'கிடாரி'

அதைத் தொடர்ந்து `பலே வெள்ளையதேவா' படத்திற்கு இசையமைத்தார். படமும் சரி, பாடல்களும் சரி பெரிதாய்ப் பேசப்படவில்லை. இந்த நேரத்தில்தான் `எனை நோக்கி பாயும் தோட்டா' பற்றிய பேச்சுகள் வருகிறது. `மறுவார்த்தை பேசாதே' பாடலும் வெளியாகிறது. பாடலைக் கேட்டவர்கள் அந்த `மிஸ்டர்.எக்ஸ்', `ஏ.ஆர்.ரஹ்மானா இருக்குமோ, யுவனாக இருக்குமோ இல்லை... ஹாரிஸாக இருக்குமோ' எனக் குழம்பிப்போனார்கள். இந்த மூவரில் யார் பெயரைச் சொல்லியிருந்தாலும், நம்பியும் இருப்பார்கள். அப்படியொரு தரமான இசை அது.

அதைத் தொடர்ந்து `விசிறி' பாடல், ஐரீஷ் ஃபோக் பாணியில். `யாருய்யா அந்த மிஸ்டர்.எக்ஸ், எனக்கே அவரைப் பார்க்கணும் போலிருக்கே' என குஷியானார்கள். பின்னர் அந்த அறிவிப்பு வந்தது, `தர்புகா சிவாதான் அந்த மிஸ்டர்.எக்ஸ்' என்று. யாருக்கும் ஒன்று புரியவில்லை. அண்டர்டாக்ஸின் அடிகள் எல்லாம் அவ்வளவும் சீக்கிரம் தாங்கிக்கொள்ள முடியாது இல்லையா. அப்படியோர் அதிர்ச்சி. சொல்லப்போனால், இன்ப அதிர்ச்சி!

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா

படம் வெளியாக தாமதமானபோதும், அந்தத் தாமதமான நேரங்களில் படத்தையும் ரசிகனையும் ஒன்றாகப் பிடித்து வைத்திருந்தது அதன் பாடல்கள்தான். இதுவே, ஒரு இசையமைப்பாளராக அவரின் மிகப்பெரிய வெற்றி!

பர்சனலாக தர்புகா சிவா ஒரு ஜிப்ஸி. இசைக்கருவிகளுடன் எங்கேயாவது பயணம் போவது, நாடோடி வாழ்க்கை வாழ்வது என ஒரு வட்டத்துக்குள் சிக்காத மனிதன். போன், இணையம் என எதுவும் இல்லாத வெறும் இசையுடன் மட்டுமே வாழ விரும்பும் இசைஞன் தர்புகா சிவா. '‘எனக்கும் ஒரே வேலையைச் செஞ்சுட்டே இருந்தா அதில் இருக்கும் ஆர்வம் குறைஞ்சு, போர் அடிக்க ஆரம்பிச்சுடும். அதனால், எனக்கு ஒரு விஷயம் புதுசா பிடிக்க ஆரம்பிச்சுடுச்சுனா, உடனே அதைக் கத்துக்க ஆரம்பிச்சுடுவேன். அப்படித்தான் இந்த ஆர்.ஜே, இசை, நடிப்பு எல்லாமே. எதற்கும் நான் தனியா பயிற்சி வகுப்புகள் போகலை, கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு பார்த்து சூட்சுமத்தைக் கண்டுபிடிச்சுக் கத்துகிட்டதுதான்" எனச் சொல்வார் தர்புகா சிவா.

'தர்புகா' சிவா
'தர்புகா' சிவா

இன்று இசையமைப்பாளராக நம்மைக் கிறங்கடித்த அவரிடமிருந்து நாளை இன்னோர் இசை ஆல்பம்தான் வரும் என்பதில் நிச்சயம் இல்லை. அதையும் தாண்டி வேறொன்றை நிகழ்த்தினாலும் நிகழ்த்துவார். அதுதான் `தர்புகா' சிவா! என்ன, அவர் என்ன நிகழ்த்தினாலும், அவர் பெயரைப் போலவே இசைக்கும் அவருக்குமான பந்தம் காலத்துக்கும் மாறாது. பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா (எ) தர்புகா சிவா!

அடுத்த கட்டுரைக்கு