Published:Updated:

`புட்டபொம்மா' வார்னர், `மியூசிக்கல் ட்ரீட்' அனிருத், `அப்டேட்' அஜித்... - சோஷியல் மீடியா டாக்ஸ்

அல்லு அர்ஜுன் #சோஷியல் மீடியா ரவுண்டப்!
அல்லு அர்ஜுன் #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர்செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்ட போனி கபூர், தங்கள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் படங்கள் குறித்து எந்தவிதமான அப்டேட்டுகளோ, புரமோஷன்களோ நிலைமை சரியாகும் வரை வெளியிடாது எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத்துடன் அஜித் இணைந்திருக்கும் படம் ’வலிமை’.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், அஜித் பிறந்தநாளுக்கு படக்குழு தரப்பிலிருந்து ’வலிமை’ தொடர்பான அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். இந்த நிலையில், போனிகபூர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழலை மனதில்கொண்டே, தனது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என நடிகர் அஜித் தரப்பிலிருந்து சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

லாக்டௌன் சூழலால், கடந்த ஒரு மாதமாக திரைக்கு வரவிருந்த பல படங்கள் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில், பல பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும். லாக்டௌன் தளர்வுக்குப் பிறகும் திரையரங்குகளுக்கு மக்கள் வர சில மாதங்கள் ஆகும் என்ற நிலையில், பல சிறிய பட்ஜெட் படங்கள் நேரடியாக OTT-ல் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இதற்கு, திரைப்பட உரிமையாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், பல நாள்களாக ஃபைனான்ஸ் பிரச்னையினால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டிருந்த ‘ஆர்.கே. நகர்’ திரைப்படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. வைபவ், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான, இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தியேட்டர் உரிமையாளர் சர்ச்சையால் கடந்த ஆண்டு நேரடியாக OTT-ல் வெளியாகி, இந்தப் படம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டௌன் சூழலில் சினிமா ஷூட்டிங் எல்லாம் கேன்சல் ஆகியிருக்க, பல பிரபலங்களும் சோஷியல் மீடியாவில் பிஸியாக உள்ளனர். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, தங்களுக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்வது என அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

அந்த வகையில், பல ஹிட் பாடல்களை இன்று லைவில் பாடி தனது ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட் தரவிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத். இந்தியாவின் பல முன்னணி யூடியூபர்கள் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.

சமீபத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம், ‘அலா வைகுந்தபுரமலூ’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘புட்ட பொம்மா’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி அதன் இசையும், நடனமும் டிரெண்டிங்கில் இருந்தது. பலரும் இந்தப் பாடலுக்கு டிக்டாக் செய்து பதிவேற்றினர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் ’புட்ட பொம்மா’ பாடலுக்கு டிக்டாக் செய்து வெளியிட, மீண்டும் வைரல் லிஸ்ட்டில் வந்திருக்கிறது பாடல். இதற்கு, படத்தின் இசையமைப்பாளர் தமன், ‘இந்த லாக்டௌன் சூழலில், எனது பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகியிருப்பது மகிழ்ச்சி’ என வார்னரின் டிக்டாக் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தமன்.

அடுத்த கட்டுரைக்கு