Published:Updated:

"விஜய் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் எத்தனைபேர் தெரியுமா?!" - #HBDVijay

தாட்சாயணி

இன்றைய தலைமுறை ஹீரோக்களில் அதிக அளவில் உதவி இயக்குநர்களுக்கு இயக்குநராகும் வாய்ப்பை வழங்கியவர், விஜய் மட்டும்தான்.

பொதுவாக கதையை மட்டுமே நம்பி நடித்து வருபவர், விஜய். கதை பிடிக்காததால் அவரால் நிராகரிக்கப்பட்ட பிரபல இயக்குநர்கள் ஏராளம். தனக்கேற்ற கதை யாரிடமிருந்து வருகிறது எந்த நிலையில் இருப்பவரிடமிருந்து வருகிறது என ஆராயாதவர், விஜய். அதனாலேயே அவரால், ‘முருகா’ என்ற தோல்விப்படம் தந்துவிட்டு ‘வேலாயுதம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்த நேசனுக்கு ‘ஜில்லா’ என்ற மிகப்பெரிய வாய்ப்பை வழங்க முடிந்தது.

இன்றைய தலைமுறை ஹீரோக்களில் அதிக அளவில் உதவி இயக்குநர்களுக்கு இயக்குநராகும் வாய்ப்பை வழங்கியவர், விஜய் மட்டும்தான். இப்படி விஜய் மூலமாக இயக்குநரானவர்களைப் பற்றிய அலசல் இதோ.

Love Today

பாலசேகரன் - லவ் டுடே

பெரிதாக யாரிடமும் உதவி இயக்குநராகக்கூட வேலை பார்த்திடாத பாலசேகரன் சொன்ன ‘லவ் டுடே’ கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துப்போனது. படம் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே சிலர் இயக்குநரின் திறமையைக் குறித்து கேள்வியெழுப்பி, படத்தை நிறுத்திவிட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், விஜய் பாலசேகரனையும், அவரது கதையையும் முழுதாக நம்பி தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்தார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் ‘லவ் டுடே’ ரீமேக் ஆனது.

பாலசேகரன் அதன்பிறகு ‘துள்ளித் திரிந்த காலம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், சில தெலுங்குப் படங்களையும் இயக்கிப் பெயர் பெற்றார்.

Ninaithen Vanthai

கே.செல்வபாரதி - நினைத்தேன் வந்தாய்

‘முறைமாமன்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ போன்ற சுந்தர்.சி படங்களுக்கும், ‘மூவேந்தர்’, ‘வி.ஐ.பி’ போன்ற படங்களுக்கும் வசனம் எழுதிக்கொண்டிருந்தவர், செல்வபாரதி. அவரை ‘நினைத்தேன் வந்தாய்’ படம் மூலம் இயக்குநராக்கியது விஜய்தான். ஒரு வசனகர்த்தா எப்படி கமர்ஷியல் படத்தை இயக்கி முடிக்க முடியுமெனப் பலர் சந்தேகத்தைக் கிளப்பியபோதும், விஜய் அந்த முடிவில் உறுதியாகவே இருந்தார். படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்தக் கூட்டணி தொடர்ந்து, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ ஆகிய படங்களைத் தந்தது. இதில் ‘பிரியமானவளே’ மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

Priyamudan

வின்சென்ட் செல்வா - ப்ரியமுடன்

இயக்குநர் வின்சென்ட் செல்வா சற்றே திக்கிப் பேசக்கூடியவர். இதனால், அவரால் ஒரு கதையை விவரமாகச் சொல்லவராது. அப்படிப்பட்டவர் சொன்ன 'Anti Hero' கதையைக் கேட்டு விஜய் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆனார். எஸ்.ஏ.சி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், விஜய் பிடிவாதமாக இருந்து அந்தப் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் ‘ப்ரியமுடன்’. விஜய் முதன்முதலாக இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலிலும், நெகட்டிவ் க்ளைமாக்ஸிலும் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்கும் ஆனது. ‘ப்ரியமுடன்’ ஷூட்டிங்கின்போது விஜய்க்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் அவரது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. அதன் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்தபோதுதான் விஜய், சங்கீதாவைச் சந்தித்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள்.

வின்சென்ட் செல்வா தொடர்ந்து ‘இரணியன்’, ‘ஜித்தன்’ போன்ற படங்களையும் விஜய் நடிப்பில் ‘யூத் ’படத்தையும் இயக்கினார். மேலும் மிஷ்கின், எஸ்.பி.ஜனநாதன் இருவரும் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களே!.

Thullatha Manamum Thullum

எழில் - துள்ளாத மனமும் துள்ளும்

இயக்குநர் பார்த்திபன் உள்பட பலரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எழில் வடிவேலுவையும், ஊர்வசியையும் ஹீரோ ஹீரோயினாக மனதில் வைத்து ‘ருக்குமணிக்காக’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினார். இந்தக் கதைதான் ஆர்.பி.செளத்ரி மூலம் விஜய்க்கு வந்து, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படமாக ஆனது. இந்தப் படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இயக்குநர் எழிலும் ஓவர் நைட்டில் ஸ்டார் இயக்குநரானார். தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாமல் பெங்காலி, ஒடியா, போஜ்புரி என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ரீமேக்காகி அனைத்திலும் வெற்றி பெற்றது.

விஜய் – எழில் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்றாலும், எழில் இன்றுவரை அஜீத், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இயக்குநர்கள் கரு.பழனியப்பன், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் எழிலிடம் தொழில் கற்றவர்கள்.

Thamizhan

மஜீத் - தமிழன்

பரபரப்பான ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற, விஜய் எத்தனித்துக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது கதாசிரியரும் எஸ்.ஏ.சியின் உதவியாளருமான மஜீத் சொன்ன ‘தமிழன்’ கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போய் நடித்தார். இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லையென்றாலும், பின்னாளில் விஜய் ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக மிளிர இந்தப் படமும், ‘பகவதி’ படமும் அடித்தளமிட்டது. ‘தமிழன்’ படம் மூலமாகத்தான் உலக அழகியான ப்ரியங்கா சோப்ரா முதன்முதலாகத் திரையில் தோன்றினார். இசையமைப்பாளர் இமானுக்கும், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்துக்கும் இந்தப் படம்தான் முதல் வாய்ப்பு.

மஜீத் தொடர்ந்து படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் சதா நடிப்பில் வெளியான ‘டார்ச்லைட்’ படம் இவர் இயக்கியதே!.

Thirumalai

ரமணா - திருமலை

‘ரன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதைப்போலவே காதலும், வீரமும் கலந்த ஒரு ஆக்ஷன் படமொன்றில் நடிக்க விரும்பினார், விஜய். அதற்கான கதை, அப்போது இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்த ரமணாவிடம் இருந்தது. அந்தக் கதைதான் விஜய்யின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. படம் வெளியானது மாபெரும் ஹிட்டானது. அதுவரை விஜய் ஆக்ஷன் கலந்த படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ‘பகவதி’ போன்ற முழுநீள ஆக்ஷன் படமாக நடித்த படங்களும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அந்நிலையில், ரமணாவின் ‘திருமலை’ விஜய்யை ஒரு பக்கா மாஸ் ஹீரோவாக மாற்றியமைத்தது. இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விஜய்யை அடையாளம் காட்டியது, ‘திருமலை’தான். தொடர்ந்து இயக்குநர் ரமணா ‘சுள்ளான்’, ‘ஆதி’ போன்ற படங்களை இயக்கிப் பரபரப்பான இயக்குநராக வலம் வந்தார்.

Madura

ஆர்.மாதேஷ் - மதுர

இயக்குநர் ஷங்கரின் உதவியாளரும் ‘முதல்வன்’, ‘சாக்லேட்’ போன்ற படங்களைத் தயாரித்தவருமான ஆர்.மாதேஷை ‘மதுர’ படம் மூலம் இயக்குநராக்கினார் விஜய். பிரமாண்டமாகத் தயாராகி வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், வணிகரீதியாக மிகப்பெரிய லாபத்தைச் சம்பாதித்தது. ஆர்.மாதேஷ் பிறகு ‘அரசாங்கம்’, ‘மிரட்டல்’, ‘மோகினி’ போன்ற படங்களை இயக்கினார்.

Thiruppachi

பேரரசு - திருப்பாச்சி

இயக்குநர் ராம.நாராயணன் மற்றும் மகாராஜனிடம் உதவி இயக்குநராக இருந்த பேரரசுவை விஜய் தேர்ந்தெடுத்து நடித்த படம்தான், ‘திருப்பாச்சி’. தங்கை சென்டிமென்ட் பின்னணியில் ஆக்ஷன் பேக்கேஜாக அமைந்த ‘திருப்பாச்சி’, அதுவரையிருந்த அனைத்து வசூல் ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கியது. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் ஆன இப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பேரரசுவின் ஆக்ஷன் மீட்டரைப் புரிந்துகொண்ட விஜய், ‘திருப்பாச்சி’ வெளியாவதற்குள்ளேயே அவரது அடுத்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அந்தப் படம்தான், ‘சிவகாசி’. விஜய்யைத் தொடர்ந்து அஜீத், விஜயகாந்த், அர்ஜூன் எனத் தமிழின் பல ஆக்ஷன் ஹீரோக்களை இயக்கிப் பரபரப்பாகப் பேசப்பட்டார், இயக்குநர் பேரரசு.

Sachein

ஜான் மகேந்திரன் - சச்சின்

இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரனைத் தமிழில் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், விஜய்தான். அவர் தந்த ‘சச்சின்' விஜய் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், வசூல்ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்துவந்த விஜய்யை, ஜான் மகேந்திரன் இந்தப் படத்தில் பழைய விஜய்யாகக் காட்டியிருந்தார். தொடர்ந்து ஜான் அதிக அளவில் படங்களை இயக்கவில்லையென்றாலும் ‘காஷ்மோரா’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிப் பரபரப்பாக இயங்கிவருகிறார்.

Azhagiya Thamizh Magan

பரதன் - அழகிய தமிழ்மகன்

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போன்ற தரணியின் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்த பரதனை ‘அழகிய தமிழ்மகன்’ மூலம் இயக்குநராக்கினார், விஜய். முதல்முறையாக விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படம் தோல்விப் படமென்றாலும், இப்படத்தின் இயக்குநர் பரதன் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு சொன்ன ‘பைரவா’ கதை விஜய்க்கு பிடித்துப்போக மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார், விஜய். பரதன் தற்போது தொடர்ந்து படங்களை இயக்கியும் ‘வீரம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியும் இயங்கிவருகிறார்.

Vettaikaran

பாபு சிவன் - வேட்டைக்காரன்

பரதனைப் போலவே, ‘குருவி’ படத்துக்கு வசனகர்த்தாவும் தரணியின் உதவியாளருமான பாபு சிவனை ‘வேட்டைக்காரன்’ படம் மூலம் இயக்குநராக்கினார், விஜய். தொடர் தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்த விஜய்க்கு ‘வேட்டைக்காரன்’ கம்பேக் கொடுத்தது. 2009-ல் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெயரையும் பெற்றது.

Puthiya Geethai

மேலும் சிலர்...

இவர்களைப் போலவே, ஜானகி சௌந்தர் (ராஜாவின் பார்வையிலே), ரங்கந்தான் (கோயம்புத்தூர் மாப்பிள்ளை), எம்.ஆர் (வசந்த வாசல்), மனோஜ் கியான் (என்றென்றும் காதல்), பி.ஏ.அருண் பிரசாத் (பத்ரி), கே.பி.ஜெகன் (புதிய கீதை) என அவர் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர்களின் பட்டியல் இன்னும் நீள்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், விஜய் இதுவரை நடித்திருக்கும் 63 படங்களில் அறிமுக இயக்குநர்களின் படங்களும் அவர்களுடன் தான் மீண்டும் மீண்டும் இணைந்த படங்கள் மட்டுமே பாதியளவு இருக்கும்.

இன்று விஜய் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும், அவருக்கான கதையுடன் ஒரு உதவி இயக்குநர் சென்றாரென்றால் அதில் அவர் நடிக்கும் வாய்ப்பு பெருமளவு இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!

அடுத்த கட்டுரைக்கு