இந்திய சினிமாக்களில் பாடல்களின் பங்கு மிகப்பெரியது. வெறும் 3 நிமிடப் பாடல்கள், 3 மணி நேரப் படங்களை வெற்றிப்படமாக மாற்றியிருக்கின்றன. நடிகர்களை ரசிகர்களுடன் மனதளவில் இணைத்திருக்கின்றன. அவரவர் தனிப்பட்ட வாழ்வில் சில உணர்ச்சிமிக்க தருணங்களின் அடையாளமாகவும், வாழ்க்கையின் பக்கங்களில் ஒட்டப்பட்ட சுட்டிகளாகவும் நினைவலைகளில் மிதந்துக்கொண்டிருக்கின்றன. இதில் ஓப்பனிங் சாங் எனப்படுகிற பாடல்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. கதையை நகர்த்துவதோ, உணர்வுகளைக் கடத்துவதோ அதன் நோக்கமன்று. அதன் நோக்கமெல்லாம் அந்த நடிகரின் நாயகப் பிம்பத்தைக் கட்டமைப்பது மட்டுமே.

`கில்லி' படத்தின் ஓப்பனிங் பாடலில், ``பொழப்ப பார்த்து முன்னேறுடா, பொழுது போனா கிடைக்காதுடா'' என்கிற வரிகள் வரும். இது அத்தனை அரியர்கள் வைத்திருக்கும் சரவண வேலு சொல்லும் அறிவுரையல்ல, ரசிகர்களுக்கு விஜய் சொல்லும் அறிவுரை.
தமிழ் சினிமாக்களில் மாஸான ஓப்பனிங் பாடல் என்பது ஒருவித அந்தஸ்து, வளர்ச்சி, கூடுதல் தகுதி எனப் பார்க்கப்படுகிறது. அதற்கென எழுதப்படாத சில விதிமுறைகளும் உண்டு. ஒவ்வொரு ஓப்பனிங் பாடலும், அந்த நடிகர்கள் தன் ரசிகர்களுக்குச் சொல்லவரும் செய்திகளைத் தாங்கி வரும் கடிதங்கள். அந்த நடிகரின் நிகழ்காலத்து எண்ணங்கள், கடந்தகாலத்து சாதனைகள் எதிர்காலக் கனவுகள் என எல்லாவற்றையும் கடத்துவது அதுதான். திரையில் வரும் ஓப்பனிங் பாடல் ஒவ்வொன்றும், திரைக்கு வெளியில் அந்த நடிகனின் நாயகப் பிம்பத்தைக் கட்டமைக்கின்றது. ஆக, இந்த ஓப்பனிங் பாடல்களை உற்று நோக்குவதன் மூலம், ஒரு நடிகரின் இன்றைய இடம், நாளைய இலக்கு என எல்லாவற்றையும் புரிந்துகொள்ளமுடியும்

அப்படி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் ஓப்பனிங் பாடல்களை உற்றுநோக்கியதில் சில விஷயங்கள் புலப்பட்டன. `நாளைய தீர்ப்பு' படத்திலிருந்து நாயகனாக விஜய்யின் பயணம் தொடங்குகிறது. அறிமுகப் படத்திலேயே ஆங்ரி யங் மேன் பாணியிலான ஒரு பாத்திரம். படம் மட்டும் எதிர்பார்த்திருந்த வெற்றியை எட்டியிருந்தால், விஜய்யின் 5-வது படத்திலேயே மாஸான ஒரு ஓப்பனிங் சாங் வந்திருக்கக்கூடும். அது நடக்காமல் போனதால், அதற்கு 6 ஆண்டுக்காலம் தாமதம் ஆகிறது. ஆங்ரி யங் மேன் பிம்பத்திலிருந்து விலகி, லவ்வர் பாய் பிம்பத்துக்குள் சென்றார். அதில் சில காலங்கள் பயணித்து, `பத்ரி', `பகவதி', மூலம் ஆக்ஷன் ஹீரோ பிம்பத்துக்குள் நுழைந்து, `திருமலை'யில் முழுப் பரிணாமம் அடைந்தார். அந்தப் படத்தின் ``தாம் தக்க'' பாடல்தான் விஜய்க்கு, சர்வ லட்சணங்களும் பொருந்திவந்த முதல் மாஸ் ஓப்பனிங் பாடல்.
அதற்கு முன்பும் ``அக்குதே அக்குதே'', ``கிங் ஆஃப் சென்னை'' போன்ற பாடல்கள் வந்திருந்தன. ஆனால், அவை அந்த எழுதப்படாத விதிமுறைகளுக்குள் இதன் அளவிற்குத் துல்லியமாக அடங்கவில்லை. புது கெட்டப், புதுவிதமான நடன அமைப்பு, வாழ்க்கைத் தத்துவங்கள், உத்வேக வார்த்தைகள் என `திருமலை'யின் பாடல் வேறொன்றாய் வந்திருந்தது. விஜய் மாஸ் ஹீரோவானார். அவரின் ஓப்பனிங் பாடல்களும் மாஸ் ஹீரோ பாடல்களாக மாறியது. அதில் அந்தக் கதாபாத்திரங்கள் மறைந்து விஜய் மட்டுமே தெரிய ஆரம்பித்தார். `திருமலை'யில் தொடங்கி `பிகில்' வரையில் எடுத்துக்கொண்டால், அதற்குள்ளும் அடுத்தடுத்த நகர்வுகளை விஜய் நகர்த்தியிருப்பது தெரியும்.

விஜய்யின் எல்லாப் பாடல்களும், `உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும்' என்கிற உணர்வுகளை பிரதானமாக கடத்தி வந்திருக்கின்றன. `நாம் நம் கடமையைச் செய்வோம். கடுமையாக உழைப்போம். அதற்கான பலனை இறைவன் கொடுப்பான்' எனும் தொணியில்தான் பெரும்பாலான பாடல்கள் விஜய்யிடம் இருந்து வந்தன. ஆரம்பகாலங்களில் நிறைய அவமானங்களைச் சந்தித்து, தன் உழைப்பினால் மீண்டெழுந்து வந்தவர் என்கிற பிம்பமே, உழைப்பின் மகத்துவத்தை மீண்டும் மீண்டும் பாடவைத்தது. `திருமலை'க்கு முன்பு வந்த பாடல்கள் எல்லாம் காதல், நட்பு, மாணவர் சக்தி, இளைஞர்கள் கூட்டம் என `இளைய தளபதி' எனும் பிம்பத்திற்கான இளமைத் துள்ளல் நிறைந்த பாடல்களாகவே உருவாகின. ரசிகர்களைத் திரட்ட அது உதவின. பிறகுதான், திரட்டிய ரசிகர்களை ஒருங்கிணைப்பதும், தலைவன்-ரசிகன் உறவை பலப்படுத்தும் பாடல்களாகவும் அவை மாறின.
``நீ இல்ல... நான் இல்ல... நாமுன்னு மாத்து'' என `திருமலை'யிலும், ''உன்ன யாரோ பெத்திருக்க, என்ன யாரோ பெத்திருக்க. ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா'' என `திருப்பாச்சி'யிலும், ``உனக்குள்ளே என்னை விதைப்பேன், எனக்குள்ளே உன்னை வளர்ப்பேன். உனைப்போல என்னை நினைப்பேன். உனக்கென்று என்னை தந்தேன்'' என `சுறா'விலும், ``நியூம் நானும் ஒண்ணா, சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா'' என `சிவகாசி' பாடலிலும் வரிகள் இடம்பெற்றிருக்கும். `வேலாயுதம்' படத்திலோ `சொன்னா புரியாது சொல்லுக்குள்ளே அடங்காது. நீங்கெல்லாம் என் மேல வெச்ச பாசம். ஒண்ணா பொறந்தாலும் இதுபோல இருக்காது நான் உங்கமேல வெச்ச நேசம்'' என்றார்.

``அழகிய தமிழ் மகன்'', ``ஆளப்போறான் தமிழன்'', ``தமிழ் பசங்க'', ``பிறந்தேன் தாய்க்கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில்'' எனத் தமிழ், தமிழின உணர்வுகளை விஜய்யின் பாடல்களின் அதிகம் காணமுடியும். இந்த அடையாளமே தனது அசுர பலமென நினைக்கிறார் அவர். அதேபோல், `புலி' என்ற பெயரிலேயே படம் நடித்தது தொடங்கி, விடுதலைப்புலிகள் பற்றிய குறியீடுகளை அவர்கள் பாடல்கள் சிலவற்றில் காணலாம். கார்ல் மார்க்ஸ், பெரியார், பாரதி, அண்ணா, எம்.ஜி.ஆர் எனப் பல தலைவர்களின் ரெஃபரென்ஸ்களும் அவர் பாடலில் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. `மின்சார கண்ணா' படத்தின் `ஓ அங்கிள்' பாடலும், `சுறா'வின் `வெற்றிக் கொடி ஏத்து' பாடலும் அப்படியே எம்.ஜி.ஆர் பாணியிலான ஓப்பனிங் பாடலே.
``பள்ளிக்கூட புள்ள போல சாதி பார்க்காம சேர்ந்திருப்போம்', ``தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து'', ``சாதி இல்லை என்பவனே நல்லசாமி'' என சாதிக்கு எதிரான கருத்துகளை விஜய்யின் பாடல்களில் காணமுடியும். கபிலனின் வரிகள், விஜய்யின் பாடல்களில் மட்டும் இன்னும் பொறி பறக்கும்.

முதலில் ரசிகர்களைத் திரட்டி, பிறகு திரட்டியவர்களை ஒரு இயக்கமாக ஒருங்கிணைத்து விட்ட விஜய்யின் அடுத்த நகர்வும் இப்போது வெளிப்பட ஆரம்பித்துவிட்டன.
``நானும் நீயும் முயன்றால் சுத்தமாகும் நம்முடைய நாடு,
பூனைக்கொரு மணியைக் கட்டிப்பார்க்க நம்மைவிட்டால் யாரு.
புதுபாதை போட்டு வைப்போம், பொய்மைக்கு வேட்டு வைப்போம்''
எனப் பட்டென போட்டுடைத்த வரிகள் ஒரு பக்கம் என்றால், `தலைவா' படத்தில் `தளபதி தளபதி' பாடல் எல்லாம், விஜய்யின் அரசியல் வருகைக்கான ஓப்பன் ஸ்டேட்மென்ட். அதேபோல், முன் எப்போதும் இல்லாதது அளவுக்கு விஜய் எனும் ஆளுமை மீதான தனிநபர் துதிகளை இப்போது காணமுடிகிறது.
``அல்லு சில்லு செதரு'', ``வாத்தி கம்மிங் ஒத்து'', ``அவன் வரவரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு, சிண்டு தொகுறுது'' என இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்தான் என்கிற செய்தியை வரிகளாக தண்டோரா அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது எல்லாம் விட, முன்பு வந்த விஜய் பாடல்களில் மற்ற தலைவர்களைப் பற்றிய ரெஃபரென்ஸ்கள் அதிகம் இடம்பெறும். இப்போது, விஜய்யின் ஓப்பனிங் பாடலில் விஜய்யின் ரெஃபரென்ஸ் மட்டும்தான் இடம்பெறுகிறது. தான் ஒரு தலைவனாக உயர்ந்துவிட்டதாக, ரசிகர்களிடம் அவர் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டார்.

சினிமா ஏரியாவில் கில்லியாகிவிட்ட விஜய்யின் அடுத்த பயணம் அரசியல் ஏரியாதான்... அவரின் பாடல்கள் அதைத்தான் சொல்கின்றன.