Published:Updated:

`நயன்தாராவுடன் நட்பு, ரஜினியுடன் `பாபா' மெமரீஸ், ஆக்டிங் வேண்டாமே..!' - தீபா வெங்கட் ஷேரிங்ஸ்

நயன்தாராவுக்கு `ராஜா ராணி' முதல் `அண்ணாத்த' வரையிலும் குரல் கொடுத்து, அவரின் தோழியாகவும் இருக்கிறார் தீபா வெங்கட். `உடன்பிறப்பே' படத்தில் ஜோதிகாவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்திய டப்பிங் பணிகள் குறித்து தீபாவிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபா வெங்கட்... சின்னத்திரையில் பரிச்சய முகம்; வெள்ளித்திரையில் பிரபலமான குரலுக்குச் சொந்தக்காரர். `ஊர்ல தேன்மொழி கனிமொழினு' நையாண்டியாகப் பேசிய நயன்தாராவுக்கு `ராஜா ராணி' முதல் `அண்ணாத்த' வரையிலும் குரல் கொடுத்து, அவரின் தோழியாகவும் இருப்பவர். கோலிவுட் முன்னணி நடிகைகள் பலருக்கும் குரல் கொடுத்து முன்னணி டப்பிங் கலைஞராக இருப்பவர், `உடன்பிறப்பே' படத்தில் ஜோதிகாவுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் டிரெய்லரில், தீபாவின் குரல் அழுத்தமாக ஒலித்தது. சமீபத்திய டப்பிங் பணிகள் குறித்து தீபாவிடம் பேசினோம். அவரின் குரல் வாயிலாக, நயன்தாரா முதல் டாப்ஸிவரை கோலிவுட் நாயகிகள் பலரும் நம் கண்முன் வந்து செல்வது போன்ற உணர்வு.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

``ஜோதிகா மேடத்துக்கு `123' படத்துலதான் முதன்முறையா டப்பிங் பேசினேன். அதுக்கப்புறமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, `செக்க சிவந்த வானம்'ல மறுபடியும் அவங்களுக்கு குரல் கொடுத்தேன். திடீர்னு ஒருநாள் எனக்கு போன் செஞ்சவங்க, `உங்க குரலும், டப்பிங் பேசின விதமும் நல்லாயிருந்துச்சு'ன்னு பாராட்டினாங்க. `நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்' மொமென்ட் அது. அப்போ ஆரம்பிச்சது எங்களோட நட்பு. `ராட்சசி' படத்துல ஜோதிகா மேம் டப்பிங் பேசிட்டாங்க. அந்தப் படத்துல போல்டான டயலாக்ஸ் அதிகமா இருக்கும். அதனால, டப்பிங் ஆர்டிஸ்ட் யாராச்சும் குரல் கொடுத்தா இன்னும் சிறப்பா இருக்கும் என நினைச்சவங்க, என்னை அணுகினாங்க.

அந்தப் படத்துல அவங்க பேசின டயலாக்ஸ் நல்லா வரணும்னு, டப்பிங் விஷயங்கள் பத்தி ரொம்பவே அக்கறையா என்கிட்ட பேசினாங்க. `தம்பி' படத்துலயும் அவங்களே ஆவலுடன் டப்பிங் பேசியிருந்தாங்க. அந்தப் படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நான் குரல் கொடுத்தா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. அதுக்காக நான் டப்பிங் பேச போனப்போ, ஜோ மேமும் அங்க வந்திருந்தாங்க. வேலை விஷயமா நிறைய விஷயங்களைப் பேசினோம்" என்பவர், `உடன்பிறப்பே' படத்தில் ஜோதிகாவின் சால்ட் அண்டு பெப்பர் லுக் தோற்றத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

`` `உடன்பிறப்பே'ல குரல் கொடுக்க, ஜோ மேம்தான் என்னை சிபாரிசு செஞ்சிருக்காங்க. நயன்தாராவுக்கும் ஜோ மேமுக்கும் டப்பிங் கொடுக்கும் முன்பு, அந்தப் பட வேலைகள் பத்தி அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசிடுவேன். அந்த வகையில ஜோ மேம்கிட்ட பேசினப்போ, `எமோஷனல் சீன்ஸ் அதிகம் இருக்கும். கொஞ்சம் பார்த்துப் பேசிடுங்க'ன்னு சொன்னாங்க. `உடன்பிறப்பே' படத்தோட கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம். அந்த ஸ்லாங்ல எனக்குப் பேசத் தெரியாது. அதனால, அந்தப் படத்தோட டைரக்டர் சரவணன் சார் உட்பட படக்குழுவினர் சிலர் எனக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் நேரத்துக்கு முன்பே இந்தப் படத்துக்கான டப்பிங் வேலைகளை முடிச்சுட்டேன். இதுவரைக்கும் நாம பார்க்காத கிராமத்துப் பெண் ரோல்ல நடிச்சிருக்காங்க ஜோ மேம். அவங்களோட நடுத்தர வயசு தோற்றம் எனக்கு செம சர்ப்ரைஸா இருந்துச்சு. அந்தப் படத்தோட டப்பிங் வேலைகளை முடிச்ச பிறகு, அந்த அனுபவத்துடன், `படம் எப்படி இருந்துச்சு?'ன்னு ஒப்பீனியன் கேட்பாங்க. `உங்க ரோல் என் கண் முன்னாடியே நிக்குது'ன்னு மனசுலேருந்து ஃபீட்பேக் கொடுத்தேன்." - கலகலவென சிரித்தபடியே குரல் வழியே ஜோதிகாவுக்கு விடைகொடுத்தவர், `அண்ணாத்த' நினைவுகளுடன் நயன்தாராவை வரவேற்று, அவரே பேசுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

``நயன்தாராவுக்கும் எனக்குமான அன்பு ரொம்பவே ஸ்பெஷல். டப்பிங் முடிச்சுட்டு வந்த பிறகு, `படம் எப்படி இருந்துச்சு?'ன்னு நயன்தாராவும் தவறாம கேட்பாங்க. அவங்க ரொம்பவே புரொஃபஷனலான நபர். வேலை விஷயத்துல ரொம்பவே அக்கறையுடன் இருப்பாங்க. அதுக்கு ஓர் உதாரணத்தைச் சொல்லியே ஆகணும். டப்பிங் வேலைகள் நடக்கும்போது, நாங்க யாருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, சம்பந்தப்பட்ட அந்தக் கலைஞர்கள் நேர்ல வர்றது அரிதுதான். அடுத்த பட வேலை, தனிப்பட்ட வேலைனு அவங்க வராததுக்கு நியாயமான காரணமும் இருக்கும். ஆனாலும், இந்த விஷயத்துல நயன்தாரா கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் இருப்பாங்க.

`அறம்' படத்துக்கும், `நெற்றிக்கண்' படத்துக்கும் நான் டப்பிங் கொடுக்கும்போது நயன்தாராவும் அங்க வந்திருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் நிறைய ஆலோசனைகள் செஞ்சோம். நாம குரல் வழியே உயிர் கொடுக்குற சம்பந்தப்பட்ட கலைஞரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செஞ்சு, அவங்க முகத்துல பாசிட்டிவ்வான ரியாக்‌ஷனைப் பார்க்குறது நிறைவான அனுபவம். `ராஜா ராணி' படத்துக்கு அப்புறமா எங்க நட்பு ஹெல்தியா கூடிட்டே போகுது. வேலை விஷயங்கள் தவிர, நட்பின் அடிப்படையில சில பர்சனல் விஷயங்களையும் ஷேர் பண்ணுவாங்க.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

`அண்ணாத்த'ல டப்பிங் கொடுத்தப்போ, சந்தோஷத்துல கொஞ்சம் ஸ்ட்ரக் ஆனேன். நான் ரஜினி சாரின் பெரிய ரசிகை. ரஜினி சாரும் நயன்தாராவும் இணைஞ்சு தோன்றும் காட்சிகள்ல ரெண்டு பேர்ல யாரைப் பார்க்குறதுனு புரியாம சிரமப்பட்டேன். ஒரு ரசிகையா என்னை மறந்து படத்தைப் பார்த்துகிட்டிருந்ததால, `எனக்கு டப்பிங் பேச சிரமமா இருக்கு'ன்னு டைரக்டர் சிவா சார்கிட்ட சொன்னேன். ரஜினி சாருடன் `பாபா' படத்துல நடிச்சது ஸ்வீட் மெமரீஸ். ரொம்பவே ஃபிரெண்ட்லியா பழகினார். அந்த நினைவெல்லாம், `அண்ணாத்த'ல டப்பிங் பேசும்போது அடிக்கடி வந்து போச்சு. இதேபோல, `விஸ்வாசம்'ல டப்பிங் பேசும்போது என்னை மறந்து அஜித் சாரை ரசிச்சுப் பார்த்துகிட்டிருந்தேன். அப்பவும் டப்பிங் பேச கொஞ்சம் சிரமப்பட்டேன்" என்று க்யூட்டாகச் சிரிப்பவர், டப்பிங் வாய்ப்புகளுக்காகத் தனது குரலையும் மனதையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

``அதுதானே ஒரு கலைஞரோட முக்கியமான ரோல்?" என்று பொறுப்பாகச் சொல்பவர், ஒருநாளில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே டப்பிங் பேசுவாராம். ``ஏன்னா, தொடர்ச்சியா ஆறு மணி நேரமா, பல மாடுலேஷன்ல குரலுக்கு அதிக வேலை கொடுக்குறோம்ல... அதுக்கப்புறமா குரல்ல சரியான உச்சரிப்பு வராது. அதனால, படத்தையும் கேரக்டரையும் பொறுத்து, ஒவ்வொரு படத்துக்கும் ரெண்டு நாள்லேருந்து வாரக்கணக்குலகூட டப்பிங் பேச வேண்டியது இருக்கும்.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

எங்களுக்குப் பிரதான மூலதனம் குரல்தானே? பொதுவா எல்லோருக்குமே குரலை பாதிக்குற முதல் விஷயம் தண்ணீர்தான். அதனால, வெளியில போகுறப்போல்லாம் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டுபோயிடுவேன். இயல்பாவே நான் ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்ப மாட்டேன். கூல் வாட்டரும் குடிக்க மாட்டேன். எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதுக்கப்புறமா கொஞ்சம் வெந்நீர் குடிப்பேன். குரலும் பாதிப்படையாது. தேவையில்லாத குழப்பங்களுக்கு மனசுல எப்போதுமே இடம் தர மாட்டேன். அதனால, சந்தோஷமோ, சோகமோ... எந்தக் காட்சியா இருந்தாலும், முழு ஈடுபாட்டுடன் என்னால டப்பிங் கொடுக்க முடியும்" என்னும் தீபா, சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டப்பிங் கொடுத்து வருகிறார்.

`மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதா?' என்றதும், படபடவென பதிலளிக்கிறார். ``ஏழாவது படிக்கும்போதே டப்பிங் பேச ஆரம்பிச்சேன். ஆனா, இந்தத் துறைதான் என் எதிர்காலம்னு அப்பல்லாம் நினைச்சதுகூட கிடையாது. `அப்பு' படத்துல தேவயானி மேமுக்கு டப்பிங் கொடுக்குற வாய்ப்பு இயல்பா அமைஞ்சது. புரொஃபஷனலா எனக்கு முதல் படம் அதுதான். அதே நேரத்துல சினிமா, சீரியல்கள்லயும் பிஸியா நடிச்சு கிட்டிருந்தேன். தொடர்ந்து நடிச்சிருந்தா, நிச்சயமா என் டிராக் வேற மாதிரி போயிருக்கக்கூடும். தவிர, ஒரே மாதிரியான கேரக்டர்களே எனக்குத் திரும்பத்திரும்ப அமைஞ்சதால, ஆக்டிங்ல சலிப்பு தட்டிட்டுச்சு. ஆனா, டப்பிங் வேலைகள்ல புதுமையான அனுபவங்கள் நிறையவே கிடைச்சதால, இதையே என் கரியரா ஏத்துகிட்டேன். அந்த முடிவு ரொம்பவே சரின்னு உறுதியா நம்புறேன்.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்

டப்பிங் கொடுக்கப் போகுறப்போ, `இந்தப் படத்துல நல்ல ரோல் இருக்கு. நடிக்கிறீங்களா?'ன்னு சில டைரக்டர்ஸ் கேட்பாங்க. சிரிச்சுகிட்டே மறுப்பு சொல்லிடுவேன். நேரமே இல்லாத அளவுக்கு பிஸியாவும் நான் வேலை செய்யல. ஆனா, இல்லத்தரசியா எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. எனக்கு ரெண்டு மகள்கள். அவங்களோட படிப்பு, ஹெல்த், சின்னச் சின்ன சந்தோஷங்கள்னு அவங்க உலகத்துல நான் எப்போதும் கலந்திருக்க ஆசைப்படுறேன். எல்லா வகையிலும் ஊக்கம் கொடுக்குற கணவர், குடும்பத்தினர் அமைஞ்சது பெரிய ப்ளஸ். ஃபேமிலி, டப்பிங்னு ரெண்டு விஷயங்களுக்கும் இணையான முக்கியத்துவம் கொடுத்து பேலன்ஸ் பண்ணுறேன். இதுக்கு மேல என்னங்க வேணும்?!" - யதார்த்தமான பேச்சில் லைக்ஸ் அள்ளுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு