சினிமா
தொடர்கள்
Published:Updated:

தேஜாவு - சினிமா விமர்சனம்

தேஜாவு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேஜாவு - சினிமா விமர்சனம்

இளம் காவல்துறை அதிகாரி ரோல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு அருள்நிதி பெயரை டிக் செய்துவிடலாம் போல. அப்படியே பொருந்திப்போகிறார்

`எங்கெங்கு காணினும் த்ரில்லர்' எனச் சொல்லப்படும் இந்த சீசனில் வெளியாகியிருக்கும் மற்றுமொரு முயற்சி இந்த ‘தேஜாவு.'

எழுத்தாளரான அச்சுயுத் குமாருக்கு ஒரு வினோத சிக்கல். அவர் கதையில் எழுதும் குற்றச்சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலும் அப்படியே நடக்கத் தொடங்குகின்றன. ‘இது தற்செயலானது அல்ல' எனக் கருதும் அவர் போலீஸிடம் புகார் செய்கிறார். ‘போதையில் உளறுகிறார்' எனத் தொடக்கத்தில் அவரை அலட்சியமாக எடுத்துக்கொள்கிறது காவல்துறை. ஒருகட்டத்தில் டி.ஜி.பி மதுபாலாவின் மகளே அச்சுயுத் குமார் கதையில் வருவதுபோல காணாமல்போக, உஷாராகிறது காவல்துறை. ‘இது எப்படி சாத்தியம்?' என விசாரிக்கத் தொடங்குகிறார் போலீஸ் அதிகாரியான அருள்நிதி. அந்த விசாரணையில் தெரியவரும் உண்மைகளும், அதைத் தொடர்ந்து நிகழும் திருப்பங்களும்தான் கதை.

தேஜாவு - சினிமா விமர்சனம்

இளம் காவல்துறை அதிகாரி ரோல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு அருள்நிதி பெயரை டிக் செய்துவிடலாம் போல. அப்படியே பொருந்திப்போகிறார். ஆனால், வசன உச்சரிப்பின்போது எப்போதும் இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொள்வது ஏன்? ஸ்மிருதி வெங்கட், மரியா வின்சென்ட் என இரு பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை.

மதுபாலா சில இடங்களில் மிரட்டல் அதிகாரி. சில இடங்களில் அலட்டல் மிகைநடிப்பு. அச்சுயுத் குமார் எழுத்தாளர் வேடத்திற்குக் கச்சிதம். காதல், தாய்ப்பாசம் என எதற்கும் நேரம் செலவழித்திடாத கதையின் ஒரே குட்டி ஆறுதல், காளி வெங்கட்டின் காமெடி வசனங்கள்.

முதல் பாதியின் திரைக்கதையும் சரி, அதற்குப் பக்கபலமாய் ஒலிக்கும் ஜிப்ரானின் பின்னணி இசையும் சரி, தேவையான பரபரப்பை நமக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அடுத்த பாதியில் இரண்டுமே தொய்வடைந்து அலைபாய்கின்றன.

தேஜாவு - சினிமா விமர்சனம்

பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு வழக்கமான டெம்ப்ளேட். கோர்வையாகவே இல்லாமல் துண்டாடப்பட்டிருக்கும் அருள் சித்தார்த்தின் எடிட்டிங் கதைப் போக்கைக் குலைக்கிறது.

‘அடுத்தது என்ன?' என நம் மூளைக்கு வேலை கொடுக்கும் கதைக்களம்தான். ஓரளவிற்கு யூகிக்க முடியாதபடிதான் முதல் பாதி முழுக்க படத்தைக் கொண்டுபோகிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். ஆனால் இரண்டாம்பாதியில் மிக எளிதாய்க் கணித்துவிடக்கூடிய காட்சியமைப்புகள். மேலும் நம்ப முடியாத ட்விஸ்ட்டுகளைக் கொடுத்துத் திணறவைத்திருக்கிறார், லாஜிக் குறைபாடுகள் வேறு!

வித்தியாச ஒன்லைனைப் பிடித்த மாதிரியே முழுத்திரைக்கதைக்கும் மெனக்கெட்டிருந்தால் ‘தேஜாவு' மறக்க முடியாத அனுபவமாகியிருக்கும்.