Published:Updated:

GVM பாடல்களில் சூரியகாந்தி, உப்பளம், ஊஞ்சல்... அனைத்துக்கும் அர்த்தம் இருக்கு! - #HBDGautham

ராஜேஷும் ரீனாவும்
ராஜேஷும் ரீனாவும்

இசை, வார்த்தைகள் தோற்றுவிடும் இடங்களில்கூட அதைப் பேசிவிடக்கூடியது. அதன் வீச்சு அறிந்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலரில் மிக முக்கியமானவர், கௌதம் வாசுதேவ் மேனன். அவர், தன் படங்களில் இடம்பெறும் பாடல்களைப் படமாக்கும் முறைகுறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இசை, வார்த்தைகள் தோற்றுவிடும் இடங்களில்கூட அதைப் பேசிவிடக்கூடியது. அதன் வீச்சு அறிந்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலரில் மிக முக்கியமானவர், கௌதம் வாசுதேவ் மேனன். அவர், தன் படங்களில் இடம்பெறும் பாடல்களைப் படமாக்கும் முறை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.

`மறுவார்த்தை பேசாதே' மற்றும் `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை'
`மறுவார்த்தை பேசாதே' மற்றும் `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை'

பாடல்களைப் படமாக்குவதில் கௌதமிடம் புலப்படும் மேதமையைப் பல பாடல்களின் வழி அறியலாம். அவற்றில் முதல் இரண்டு `வாரணம் ஆயிரம்' படத்தின் `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' மற்றும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் `மறுவார்த்தை பேசாதே'. இரண்டுமே, காதலெனும் உணர்வை மூலக்கூறாகக்கொண்டு பின்னப்பட்டவை என்றாலும், அந்தக் காதலின் நிலை முற்றிலும் வேறுபடுகிறது. முதலாவது, முதன்முறையாக காதல் மலர்ந்துகொண்டிருக்கும் தருணத்தை, அதன் அவசரத்தை, மர்மத்தைப் பாடுகிறது. இரண்டாவது, முன்பு மலர்ந்து, உதிர்ந்த காதல் மீண்டும் மலரும் தருணத்தை, அதன் கனத்தை, கண்ணீரைப் பாடுகிறது.

நாயகன், தான் இதுவரை வாழ்ந்த வாழ்வை மனதினுள் புகுந்து மறுவாசிப்பு செய்துகொண்டிருக்கும் நேரத்தில், இந்தத் தருணங்கள் வெறும் தருணங்களாகவும், வெறும் கனவுகளாகவும் அல்லது தருணங்களே கனவுகளாகவும் அவன் முன்னால் விரிகின்றன. இரண்டு பாடல்களும் இதைத்தான் விவரிக்கின்றன. `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை'யில் சூர்யா, மேக்னாவை கைகளில் ஏந்திக்கொண்டு நடப்பதும், `மறுவார்த்தை பேசாதே' -யில் ரகு, லேகாவை கைகளில் ஏந்திக்கொண்டு நடப்பதும், செயல் ஒன்றுதான். ஆனால், உணர்ச்சி வேறு வேறு!

கிடாருடன் சூர்யா
கிடாருடன் சூர்யா

மேக்னாவை முதன்முறையாக ரயிலில் வைத்து பார்க்கிறான் சூர்யா. பார்த்ததும் காதல். அவன் அம்மாவை முதன்முறையாகப் பார்த்தபோது, அவன் அப்பாவுக்கு எப்படியிருந்தது என்பதை உணர்ந்து தெளிகிறான். இது காதலேதான் என உறுதிகொள்கிறான். அந்தக் காதல், கிட்டாரிஸ்டான அவனுக்கு புது இசையைத் தருகிறது. அதுதான், `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடல். அழகான ஒரு மேடையில், தன்னந்தனி ஆளாக தன் கிட்டாரை மீட்டி, அந்த ரம்மியமான இசையையும் அதன் வழியாகத் தன் காதலையும் எல்லோருக்கும் சொல்ல, அவன் பெரும் ஆசைகொள்வதை காட்சிகளாக நமக்கு கடத்துகிறார். தொடர்ந்து, "அன்னைக்கு ஒரு கனவு. இன்னைக்கு வரைக்கும் ஞாபகம் இருக்கு டாடி" என கனவுக்குள் நுழைகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூரியகாந்தி மலர்களுக்கு நடுவில், கொட்டிக்கிடக்கும் வென்பனிகளுக்கு நடுவில், தண்டவாளத்தில் ரயில் நின்றுகொண்டிருக்கும் காட்சிகள் எல்லாம் பருவ, வானிலை மாற்றங்கள் எல்லாம் கடந்து, அவன் காதல் இந்த ரயிலோடு பயணிக்கிறது என்பதற்கான `சர்ரியலிச' காட்சியமைப்பு. "என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்" எனும் வரிகளும், மேக்னாவை தன் வீட்டுக்கு அழைத்து வருவதும், சூர்யாவின் கனவில் வருவதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் படத்திலேயே இருக்கிறது. "தெருவுல நின்னு பொண்ணுங்களோட பேசுறதைப் பார்த்தேன். அது வேண்டாம். உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு. அவங்களை வீட்டுக்கு கூட்டிவந்து உட்காரவெச்சு பேசு" என்று சூர்யாவின் அப்பா கிருஷ்ணன் சொல்லியிருப்பார்.

சூர்யாவும் மேக்னாவும்
சூர்யாவும் மேக்னாவும்
``சிறந்த இயக்குநர்னா முதலிடம் கெளதம்தான்... ஏன்னா?'' - கவிஞர் தாமரை #HBDGautham

கனவின் முதல் காட்சியே மேக்னா தன் தோழிகளுடன் நடந்துவருவதுதான். காரணம், சூர்யா தன் பால்ய காலத்துக் காதலியான ஆர்த்தியை, அவள் தோழிகளுடனே வைத்துப் பார்த்திருப்பான். நிஜத்தில், நண்பர்களுடன் சேர்ந்து டாப் அடிக்கும் அண்ணா நகர் டவர் முன்பு நடனமாடுவதுபோன்றும் கனவில் காட்சிகள் வரும். டெல்லி, மும்பை என வெவ்வேறு இடங்களுக்கு மனம் பயணம் செய்யும். `நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் உதிராதே' எனும் வரியின்போது, மேக்னாவுக்கு பூக்களைத் தருவான் சூர்யா. மேக்னா, அவன் காதலை ஏற்றுக்கொள்ளும் காட்சியில், அங்கிருக்கும் பூக்களைத்தான் பறித்துத்தருவான். `அனல் மேலே பனித்துளி' பாடலிலும், காஷ்மீரியச் சிறுவர்களிடமிருந்து பூக்கள் வாங்கி ப்ரியாவிடம் கொடுப்பான். இப்படி சூர்யாவின் நினைவுக் குறிப்புகளையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி, அழகான காட்சிகளை அமைத்திருப்பார் கௌதம் மேனன்.

`மறுவார்த்தை பேசாதே' பாடலில், பிரிவின் அடையாளமாக ப்ரோக்கன் ப்ரிட்ஜ், கண்ணீரை உவமையாகக்கொண்ட நீர்நிலைக்கு மத்தியில் அமைக்கப்பட்ட மூங்கில் மேடை, கண்ணீரின் உப்பைக் குறிக்கும் உப்பளங்கள் என நிலங்களின் மூலமே அதன் உணர்வை முழுதாய்க் கடத்தியிருப்பார். `அலர் நீ, அகிலம் நீ' எனும் வரியின்போது, லேகாவிடம் மலர்கள் கொடுப்பான் ரகு. அதைப் பெற்றுக்கொள்ளும் லேகா, பெரும் நந்தவனத்திற்குள் நுழைவதுபோன்ற காட்சி வரும். முழுக்க இருண்மையாக இருக்கும் பாடல், அங்கு மட்டும் வெளிச்சத்திற்கு மாறும். அதற்குக் காரணம், 'நான் இருக்கிறேன் உன்னை இமைபோல் காக்க. நீதான் என் மொத்த உலகமும்' என லேகாவுக்கு ரகு நம்பிக்கை தருவதே. பிறகு, மொத்தப் பாடலும் இருளிலிருந்து விடியலுக்கு மாறும். அது, ரகு அந்த இருண்மையிலிருந்து மீண்டு வந்துவிட்டான் என்பதற்கான குறியீடு.

லேகாவும் ரகுவும்
லேகாவும் ரகுவும்

இந்த இரண்டு பாடல்களிலுமே, நாயகிக்கு நாயகன் மலர் கொடுப்பது, அவளைக் கைகளில் ஏந்திச்செல்வது, அவள் பாதத்தில் சரணாகதி அடைவது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால், மேற்சொன்னதுபோல் செயல் ஒன்றுதான் என்றாலும் உணர்வுகள் வேறு. மேக்னாவை சூர்யா தன் கைகளில் தூக்கிச்செல்வது, சூர்யாவின் உலகத்திற்குள் மேக்னாவை அழைத்துச்செல்வது என்றும், லேகாவை ரகு தன் கைகளில் தூக்கிச்செல்வது, அத்தனை பிரச்னைகளிலிருந்தும் லேகாவை காப்பாற்றிச்செல்வது என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. இதுபோன்று வேறு சில பாடல்களிலும் நம்மை ஆச்சர்யப்படுத்தியிருப்பார் கௌதம் மேனன்.

`மின்னலே' படத்தில், ரீனாவின் பிறந்தநாளென நினைத்து ராஜேஷ் ஒரு பரிசு கொடுப்பார். "இது நீதானே. தனியா வீட்ல உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்கும்போது நீ இப்படித்தானே இருப்பே. கண்ணைமூடிப் பார்த்தேன். இதுதான் தெரிஞ்சது, வாங்கிட்டேன்!" என்று சொல்லி ஒரு பெண்பொம்மையைக் கொடுப்பார். அந்தப் பொம்மை அமர்ந்திருக்கும் அதே சாயலில்தான், `வெண்மதி' பாடலில் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருப்பார், ரீனா. `மின்னலே' படத்தின் ஒரு காட்சியில், ரீனாவும் ராஜேஷும் ஊஞ்சலில் அமர்வார்கள். ரீனா ஒருபக்கம் நோக்கியும், அவளுக்கு அப்படியே நேரெதிராக ராஜேஷும் அமர்ந்திருப்பார்கள். இதே காட்சி, `விசிறி' பாடலிலும் வரும்.

ராஜேஷும் ரீனாவும்
ராஜேஷும் ரீனாவும்

`காக்க காக்க' படத்தில் வரும் `என்னைக் கொஞ்சம் மாற்றி' பாடலும், `அச்சம் என்பது மடமையடா' படத்தில் வரும் `ராசாளி' பாடலும் கிட்டத்தட்ட ஒரே சூழல்தான். `உயிரின் உயிரே' பாடலும், `தள்ளிப்போகாதே' பாடலும் அப்படியே. ஆனால், அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ற இசையை வாங்கியிருப்பார் கௌதம். `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வரும் `ஹோசானா' பாடல், மால்டா எனும் நாட்டில் படமாக்கப்பட்டது. காரணம், தேவாலயங்கள், நீர்நிலைகள், கடல் என கேரளாவின் நில அமைப்போடு பெரும்பங்கு ஒத்துப்போவதுதான். அந்தப் பாடல் முழுக்க, கார்த்தியை நெருங்கி வந்தும் பின் விலகிப்போவதுமாக இருப்பாள் ஜெஸ்ஸி. கடைசியில், ஒரு தேவாலயத்தில் விழா ஒன்று நடந்துகொண்டிருக்க, அவளைத் தேடி அங்கேயே சென்று இன்ப அதிர்ச்சி கொடுப்பான் கார்த்தி. இந்தப் பாடல், ஜெஸ்ஸியைப் பார்த்த அடுத்த கனம் தொடங்கும். ஆனால், படத்தின் பாதிக் கதையை இதிலேயே சொல்லியாயிற்று.

`சர்ப்ரைஸ்' எனும்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. `அலைபாயுதே' படத்தில் வரும் `எவனோ ஒருவன்' பாடல், கௌதம் மேனனுக்கு மிகவும் பிடித்தமான பாடலில் ஒன்று. அதில் கார்த்திக், சக்தியைத் தேடி கேரளா மெடிக்கல் கேம்ப் வரை சென்று அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பான். அப்போது, திரையில் ஒரு மேஜிக் நிகழும். அந்த மேஜிக்கைத் தன் படங்களிலும் மறுஉருவாக்கம் செய்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் கௌதம். `வாரணம் ஆயிரம்' படத்தில் அமெரிக்கா செல்வது, `விடிவி'யில் ஆலப்புழா, `நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் மனப்பாடு, `எனை நோக்கி பாயும் தோட்டா'வில் துருக்கி என நாயகியை நாயகர்கள் சர்ப்ரைஸ் செய்யும் காட்சிகளையும் அவர் படத்தின் பாடல்களில் காணலாம்.

ஜெஸ்ஸியும் கார்த்திக்கும்
ஜெஸ்ஸியும் கார்த்திக்கும்
``தனித் தீவு, தனி நாடுனு அவர் வேற லெவல்; ஆனா இந்த `நித்யா நந்தா' வேற படம்!" - ஆதிக் ரவிசந்திரன்

`உறவுகள் தொடர்கதை' எனும் பாடலும் தனக்குப் பிடித்தமான ஒன்று என்பார் கௌதம். அதில் அந்தப் பாடலைப் பாடுபவன், தீய எண்ணங்களை ஒளித்துக்கொண்டு பாடுவான். அதை கேட்டுக்கொண்டிருக்கும் பெண்ணோ, தான் ஏமாறப்போகிறோம் எனத் தெரியாமலேயே அதை ரசித்துக்கொண்டிருப்பாள். ஆனாலும், அந்தப் பாடல் அவ்வளவு இனிமையானது என குறிப்பிடுவார். `பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் வரும் `உனக்குள் நானே' பாடலும் இப்படித்தான். ஆனால், அவள் ஏமாற்றுக்காரியென அவளைச் சுற்றி ஆடிக்கொண்டிருக்கும் சாத்தான் உருவங்களைக் கொண்டு நமக்கு விளக்கியிருப்பார். மொத்தப் பாடலும், வெங்கடேஷை ஒரு பொறிக்குள் சிக்கவைக்கும் முயற்சியிலேயே படமாக்கி, அதை நமக்கும் கடத்தியிருப்பார்.

இப்படி, பாடல்களைக் காட்சிப்படுத்துவதில் இன்றைய தலைமுறையின் மாஸ்டரான கௌதம் மேனனுக்கு, இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு