Published:Updated:

``அந்த ஆட்டோ சீன்... ஒவ்வொரு விஜய் ரசிகரும் கொண்டாடணும்!’’ தேவதர்ஷினியின்`பிகில்’ சீக்ரெட்

Bigil vijay
Bigil vijay

`அந்த செகண்ட்ல அந்த ஆட்டோ டிரைவர் முகத்தைப் பார்க்கணுமே, வாழ்நாள்ல பெரிய சாதனையை நிகழ்த்திட்ட மாதிரி ஒரு பரவசம். உண்மையிலேயே நெகிழ வச்சிடுச்சு இந்தச் சம்பவம்.’

''டிரெய்லர்ல 'குட் மார்னிங் கோச்'னு வரிசையா விஜய்க்கு வணக்கம் வைப்பாங்களே, அந்தப் புள்ளைங்களோட ஒருத்தியா, அந்த வரிசையில என் பொண்ணு நியதியும் இருந்திருக்க வேண்டியது. 'பிகில்' படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல அவளுக்குதான் வாய்ப்பு வந்தது. பத்தாவது பப்ளிக் எக்ஸாம் நெருங்கிட்டிருந்ததால அந்த வாய்ப்பை ஏத்துக்க முடியலை. ஒருபக்கம் 'என்னது விட்டுடவா, விஜய் சார் படம்மா'னு சிணுங்கறா. இன்னொரு பக்கம் எஸ்.எஸ்.எல்.சி பப்ளிக் எக்ஸாம்ங்கிறதும் பயமுறுத்துது. அப்பா, பொண்ணு, நான் மூணு பேருமா கூடிப் பேசி, கடைசியில எக்ஸாமை டிக் செஞ்சோம். அன்னைக்கு ராத்திரி அவ தூங்கவே இல்ல.

Devadarshini
Devadarshini

''விடும்மா, அம்மா கூட அட்லி - விஜய் காம்பினேஷனான 'மெர்சல்'ல கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள வந்துட்டுப் போனேன். அன்னைக்கு, 'அக்கா ஃபீல் ஆகாதீங்க, நிச்சயம் அடுத்த புராஜெக்ட்ல பண்ணலாம்'னு அட்லி சொன்னார். அதேபோல இப்பவும் நம்ம சூழல் அவருக்குப் புரியும். நிச்சயம் அடுத்த படத்துக்கு உன்னைக் கூப்பிடுவார்'னு சொல்லி சமாதானப்படுத்தினேன். 'போம்மா, அப்படீன்னா. 'பிகில்'-க்கு உன்னை கூப்பிட்டிருக்கணுமே'னு, ஒரு செகண்டு நானே பதில் சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கேள்வி கேட்டுட்டா.

அடுத்து நடந்தது ஆச்சர்யம். 'நான் அடிச்ச மணி யாருக்குக் கேட்டுச்சோ இல்லையோ, கேக்கவேண்டியவனுக்கு கேட்டு, அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை'னு ஒரு வடிவேலு காமெடி பார்த்திருப்பீங்களே, அதேதான் நடந்தது. நியதி எங்கிட்ட கேட்டது, காத்து வழியா போச்சா தெரியல. அடுத்த மாசமே 'பிகில்' யூனிட்ல இருந்து எனக்கு ஃபோன்.

அப்புறமென்ன, தளபதிக்கு அக்கா ஆனது மூலமா அவரோட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இன்னைக்கு அக்கா ஆகிட்டேன்.''

- விசில் அடிக்காததுதான் மிச்சம். அத்தனை சந்தோஷம், தேவதர்ஷினியின் வார்த்தைகளில்.

''சரி, விஜய்யின் அக்கா என்பதைத் தாண்டி வேறென்ன 'பிகில்' ஸ்பெஷல்?''

''அக்காவும் தம்பியும் ஆட்டோவுல போற மாதிரி ஒரு சீன். பத்துப் பதினைஞ்சு ஆட்டோவை வரவழைச்சு, அதுல ஒரு ஆட்டோவுல என்னை ஏறி உட்காரச் சொல்லிட்டாங்க. அந்த ஆட்டோ டிரைவருக்கு எந்தப் படத்தோட ஷூட்டிங்னு தெரியலை. 'அக்கா, உங்களோட வேற யாரு வர்றா'ன்னு கேக்கறார்.

'உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்'னு ஒரு பேச்சுக்குக் கேட்டேன். சட்டுனு 'தளபதி ஆளுக்கா நானு'ங்கிறார். 'அதே உங்க தளபதிதான் வர்றார்'னு நானும் அவசரப்பட்டுச் சொல்லிட்டேன். மனுஷன் உடனே பரபரப்பாகிட்டார்.

Devadarshini
Devadarshini

ரிகர்சல் பார்க்க யூனிட் ரெடியானதும் எங்ககிட்ட வந்த அட்லி, ஆட்டோ டிரைவரை இறங்கி ஓரமா நிக்கச் சொல்லிட்டு, ஒரு ஆர்ட்டிஸ்டைக் கூப்பிட்டு ஆட்டோவை எடுக்கச் சொல்றார். பாவமா ஒதுங்கின அந்த டிரைவர் என்னைப் பார்த்தார் பாருங்க, அவ்ளோ கஷ்டமாப் போச்சு. அவரையும் பார்த்துக்கிட்டே, இந்தப் பக்கம் டைரக்டரையும் பார்த்தேன். அப்படியே 'டிரைவர் விஜய் ரசிகர்'னு மெலிசா சொன்னேன். 'அப்படியா'னு கேட்டுட்டு நகர்ந்துட்டார்.

கொஞ்ச நேரத்துல 'டேக்' போக ரெடியாகி, எங்கூட விஜய்யும் வந்து ஆட்டோவுல ஏற, திடீர்னு 'அண்ணே நீங்க இப்படி வாங்க'னு ஆர்ட்டிஸ்டை இறங்கச் சொல்லிட்டு, மறுபடியும் ஆட்டோ டிரைவரைக் கூப்பிட்டு, ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணச் சொன்னார் அட்லி. அந்த செகண்ட்ல அந்த டிரைவர் முகத்தைப் பார்க்கணுமே, வாழ்நாள்ல பெரிய சாதனையை நிகழ்த்திட்ட மாதிரி ஒரு பரவசம். உண்மையிலேயே நெகிழ வச்சிடுச்சு இந்தச் சம்பவம். நிச்சயம் ஒவ்வொரு விஜய் ரசிகரும் இதைக் கொண்டாடணும்'' என்று சிரிக்கிறார்.

'பிகில்' தேவதர்ஷினிக்கு சந்தோஷம் என்றால், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அவரது கணவர் சேத்தன்.

Bigil
Bigil

'அதெப்படி, நீங்க ரெண்டு பேர் மட்டும் அடுத்தடுத்து தளபதிகூட நடிக்கலாம்'னு நியதி எங்ககூட சண்டைக்கு வர்றா. அவளைச் சமாதானப்படுத்துறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுது. சீக்கிரமே அவளோட ஆசையும் நிறைவேறணும். இல்லாட்டி எங்களைப் படுத்திஎடுத்துடுவா' என்கிறார், தேவதர்ஷினி.

`` `பில்லா’ன்னா அஜித் கோட்... `பிகில்’ல என்ன தெரியுமா?!'' - அனுவர்தன் ஷேரிங்ஸ்
அடுத்த கட்டுரைக்கு