Published:Updated:

தனுஷுக்கு ஏன் போயஸ் கார்டனில் வீடு பார்த்தார் ரஜினி?!

ரஜினி - தனுஷ்
ரஜினி - தனுஷ்

போயஸ் கார்டனில் ஒரு கிரவுண்டின் விலை 25 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இங்கே 25 கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்க ஆள் இருந்தாலும் இடம் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும், தமிழ் சினிமாவின் இந்தத்தலைமுறையின் மிக முக்கிய நடிகருமான தனுஷ் சென்னையின் விலை உயர்ந்த பகுதியான போயஸ் கார்டனில் வீடுகட்டி குடியேறயிருக்கிறார். அதற்கான பூமி பூஜை இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது.

சென்னையில் பெரும்பணக்காரர்கள் அதிகம் வசிக்கும்பகுதி போயஸ் கார்டன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டால் போயஸ் கார்டன் எந்நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள்ளாகவே இருந்தது. தற்போது இங்கே ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய விவிஐபிக்கள், தொழிலதிபர்கள் எனப்பலரும் வசித்துவருகிறார்கள். போட் கிளப் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகள்தான் சென்னையிலேயே ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகம் கொண்ட பகுதிகள்.

போயஸ் கார்டனில் ஒரு கிரவுண்டின் விலை 25 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இங்கே 25 கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்க ஆள் இருந்தாலும் இடம் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. இங்கே நிலமோ, ஃப்ளாட்டோ வாங்கவேண்டும் என்றால் முன்கூட்டியே புக்கிங் செய்து டோக்கன் வாங்கவேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் சில பல ஆண்டுகள் கழித்து யாராவது அந்தப்பகுதியில் வீடோ, நிலமோ விற்றால்தான் இன்னொருவரால் வாங்கமுடியும்.

தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் - ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் பல நூறு வீடுகள் சூழ்ந்த ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் வசித்துவந்தார். வீடு ஒன்பதாவது மாடியில் இருந்தது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பள்ளியில் இருந்து அழைத்துவந்து இந்த வீட்டில் டிராப் செய்வது ரஜினியின் வழக்கம். அதோடு அடிக்கடி இங்கே குழந்தைகளைப் பார்ப்பதற்காக ரஜினி போவார். கேட்டட் கம்யூனிட்டி என்பதால் ரஜினியைப் பார்த்ததும் அங்கே கூட்டம் கூடிவிடும். லிஃப்ட்டிலும் பலர் இருப்பார்கள். இதுதொடர்ந்து ரஜினி மற்றும் தனுஷ் குடும்பத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவந்தது. இதனால் மகளையும், மருமகனையும் தன் வீட்டின் அருகிலேயே கொண்டுவர இடம்பார்த்துக்கொண்டிருந்த ரஜினிக்கு சமீபத்தில்தான் போயஸ் கார்டனில் இடம் கிடைத்திருக்கிறது.

ரஜினி வீட்டுக்கு எதிர் தெருவில் இந்த இடம் இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று கிரவுண்ட் நிலம் இது. இந்த தீபாவளிக்குள் இங்கு வீடு கட்டும் பணிகள் முடிவடைந்து தனுஷ் குடும்பத்தோடு குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு