Published:Updated:

`` `வடசென்னை' அன்பைவிட `மாரி'யாக நடிக்கத்தான் கஷ்டப்பட்டேன்..!'' - தனுஷ்

தனுஷ்
தனுஷ்

அண்மையில் நடந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர்கள் பயிற்சி பட்டறைக்கு தனுஷ் வருகையளித்து பேசியதிலிருந்து...

நூற்றாண்டை நெருங்கும் விகடன் பாரம்பர்யத்தின் பெருமைமிகு தடங்களில் ஒன்று, ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்.’ ஒவ்வோராண்டும் பத்திரிகைப் பணிக்காகப் பட்டை தீட்டப்படும் பயிற்சி முகாம், இந்த ஆண்டும் மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தனுஷ், மாணவர்களோடு கலந்துரையாடினார். அதன் தொகுப்பு இதோ...

தனுஷ்
தனுஷ்

காதலில் ஜெயித்து வாழ்க்கையில் சாதித்தவர்களைவிட காதலில் தோல்வியடைந்து வாழ்க்கையில் சாதித்தவர்கள் அதிகம். இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

"வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கும் காதலில் ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமே இல்லை. எதை நோக்கிப் போகணும்கிற தெளிவு இருக்கணும். நமக்குனு ஒரு இலக்கு இருக்கும். அதுக்காகக் கடினமா உழைச்சாலே அதிர்ஷ்டம் நம்மளைத் தேடி வரும். அதிர்ஷ்டமும் தேவைதான். வெற்றி ஒரு சிலருக்கு சீக்கிரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தாமதமா கிடைக்கும். பொறுமையா நம்பிக்கையா துரத்திக்கிட்டே இருந்தா சாதிக்கலாம்."

பாட்ஷா படத்தை ரீமேக் பண்ணா யார் நடிக்கணும்னு நினைக்கிறீங்க? நீங்க ரீமேக் பண்ணா நடிக்கணும்னு ஆசைப்படுகிற படம்?

dhanush
dhanush
"சில படங்களை ரீமேக் பண்ணாம இருக்குறது நல்லது; பாட்ஷா அப்படிப்பட்ட படம். எனக்கு நெற்றிக்கண், தில்லுமுல்லு இரண்டுமே ஸ்கிரிப்ட் வந்தா ஃபியூச்சர்ல பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்."

நீங்க எப்போ சூப்பர் வில்லனா நடிப்பீங்க?

"வில்லன்தான் அந்தப் படத்தோட ஹீரோனா எப்ப வேணும்னாலும் ரெடிதான்."

ஆரம்ப காலகட்டத்தில் ரொம்ப விமர்சிக்கப்பட்டீங்க. ஒரு ஸ்பார்க் கிளம்பின மொமண்ட் எது?

’’ஒவ்வொரு தடவையும் படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் கைதட்டுவாங்க இல்லையா, அதுக்கு எதுவுமே நிகராகாது. அதுக்காக எந்த அவமானத்தையும் சந்திக்கலாம். என்னோட ஸ்பார்க், மோட்டிவேஷன் எல்லாம் என் ரசிகர்களோட கைத்தட்டல்தான்."

Dhanush
Dhanush
'வடசென்னை' அன்புவாக நடிச்சதைவிட 'மாரி'யாக நடிக்கதான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
தனுஷ்

ஃபிட்டா இருக்க எந்த மாதிரி உணவுகளை எடுத்துகுறீங்க?

"நான், வெஜிடேரியன். அம்மா என்ன சமைக்கிறாங்களோ அதுதான் பிடிக்கும். டயட் மெயின்டையின் பண்றதுதான் ஃபிட்ன்னு நினைக்கிறாங்க. அது தப்பு. சரியான உணவுகளை நல்லா சாப்பிடணும், வொர்க் அவுட் பண்ணணும். அவ்ளோதான்."

நடிக்கிற கதாபாத்திரங்களுடன் எப்படி ஒன்றிபோய் நடிக்கிறீங்க?

"கதையைத் தேர்வு செய்யும்போது திரைக்கதை, கேரக்டர், ரிலேட்டிவிட்டி மூன்றையும் பார்ப்பேன். என்னால எவ்ளோ தூரம் அதோடு ரிலேட் பண்ணிக்க முடியுதுனு பார்ப்பேன். எவ்ளோ ரிலேட் பண்றனோ அவ்ளோ நடிப்பேன்."

தயாரிப்பாளராக, கமர்ஷியல் படம் அல்லது 'கன்டன்ட் பேஸ்' படம் எதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீங்க?

"எனக்கு அந்தக் கதை எவ்ளோ பிடிச்சிருக்கு என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். 'மாரி' போன்ற கமர்ஷியல் படம் பண்றதும் சாதாரணம் இல்லை. அந்த கேரக்டர் பண்றது ரொம்ப கஷ்டம். 'வடசென்னை' அன்புவாக நடிச்சதைவிட 'மாரி'யாக நடிக்கத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். எதுக்கும் எதுவும் சளைச்சது இல்ல."

மாரி செல்வராஜ் படத்தின் வேலைகள் எப்படிப் போகுது?

"ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சுது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்."

தனுஷ்
தனுஷ்

தனுஷ் நடிகராக, பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குநராகப் பன்முகங்கள் கொண்டவர். இதெல்லாம் பண்ணலாம்னு எப்படி நம்பிக்கை வந்துச்சு?

"இது வரும், அது வரும்னு பண்றது இல்ல. எது புடிக்குதோ அதை எந்தத் தயக்கமும் இல்லாம உண்மையா பண்றேன்."

சமீபத்தில் உங்களை மிகவும் பாதித்த விஷயம் என்ன?

"என்னுடைய ரசிகர் ஒருவர் விபத்துல இறந்துட்டாரு. அதைக் கேள்விப்பட்டப்போ ரொம்ப கஷ்டமா இருந்தது. சமீபத்துல என்னை ரொம்ப கலங்கடிச்ச நிகழ்வு அது."

உங்களோட பசங்க என்ன ஆகணும்னு நினைக்கிறீங்க? வாரிசுகள் நடிக்க வர்றாங்க; சாமானியன் நடிக்கிறது கஷ்டமா இருக்கு. இதைப் பற்றி உங்க கருத்து என்ன?

"என் பசங்க என்ன ஆகணும்கிறதை அவங்கதான் முடிவு பண்ணணும். எல்லாமே கஷ்டம்தான். எல்லா தொழிலும் கஷ்டம்தான். எங்க பக்கத்துலயே குழந்தைங்க இருக்குறதாலயே, அவங்க அதுக்குள்ள வரணும்னு நினைக்கிறாங்க. எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்தவங்களும் ஜெயிச்சிருக்காங்க. சினிமா துறைக்குள் வருவது எளிது. ஆனால், நிலைப்பது கடினம். திறமை இருந்தா யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம்."

தனுஷ்
தனுஷ்

ஏழ்மை - பணம், வெற்றி - தோல்வி எல்லாம் பாத்துட்டீங்க. இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

"எல்லாருடைய வாழ்க்கையிலும் சாதாரண விஷயம் இது. தவிர்க்க முடியாதது."

Dhanush
Dhanush

தமிழ், இந்தி, பிரெஞ்சுனு மூணு இண்டஸ்ட்ரில வேலை பாத்துருக்கீங்க. எது ஹெல்தியா இருக்குனு நினைக்கிறீங்க?

"உலகம் முழுக்க சினிமா ஒரே மாதிரியாதான் இருக்குனு நினைக்கிறேன். நான் யோசிக்கிற மொழியில் நடிக்கும்போதுதான் கம்பர்டபிளா, மகிழ்ச்சியாக இருக்கு. அதனாலதான் மற்ற மொழியில் ரொம்ப கம்மியா நடிக்கிறேன்."

அம்மா சமைச்சதுல ரொம்ப புடிச்ச சாப்பாடு?

"அவங்க செய்யுற மொச்ச பயிர் குழம்பு ரொம்பப் பிடிக்கும்."

அடுத்த கட்டுரைக்கு