Published:Updated:

`8 வருஷம் கழிச்சு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!'- மீண்டும் தனுஷ் - செல்வராகவன் காம்போ

'என்.ஜி.கே’ படத்திற்குப் பிறகு செல்வராகவன், தனது தம்பி தனுஷை வைத்து படம் இயக்கப்போகிறார் எனத் தகவல்கள் வந்தன. அதை உறுதி செய்யும் விதமாக, தற்போது அந்தப் படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தனுஷ் - செல்வராகவன்
தனுஷ் - செல்வராகவன்

’மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து தனுஷும் செல்வராகவனும் மீண்டும் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்களை கமிட் செய்திருக்கும் தனுஷ், இந்த காம்போவின் முதல் படமான `அசுரன்’ படத்தை இந்த வாரம் ரிலீஸ் செய்யவிருக்கிறார். 2-வது படமாக உருவாக உள்ள மாரி செல்வராஜின் படத்துக்குத்  தற்போது லண்டனில் பாடல் பதிவு தொடங்கியிருக்கிறது. இந்த காம்போவின் 3-வது படம்தான் தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம்.

இந்தப் படத்துக்கு இவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாதான் கமிட்டாகியிருப்பார் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, படத்திற்கு ஷான் ரோல்டன்தான் இசையமைக்கிறாராம்.

தனுஷ் - ஷான் ரோல்டன்
தனுஷ் - ஷான் ரோல்டன்

இந்தப் படத்தின் கம்போஸிங் ஆரம்பித்து, இரண்டு பாடல்களை ரெக்கார்டு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. தனுஷ் - ஷான் ரோல்டன் காம்போவில் ஏற்கெனவே ’ப.பாண்டி’, ’வேலையில்லா பட்டதாரி - 2’ படங்கள் வந்திருந்தாலும், தனுஷ் - செல்வராகவன் காம்போவுக்கு ஷான் ரோல்டன் புதுவரவே. தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருப்பதால், அவர் சென்னை வந்ததும் மாரி செல்வராஜ் மற்றும் செல்வராகவன் படம் திருநெல்வேலியில் ஆரம்பிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.