போயஸ் கார்டனில் புது வீடு... லாஸ் ஏஞ்சலீஸில் THE GRAY MAN ஷூட்டிங்... தனுஷ் பிளான் என்ன?
தனுஷ் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் லாஸ் ஏஞ்சலீஸிலேயே தங்கியிருந்து இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். மே மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் நடிகராகவும் மாறிவிட்ட தனுஷ் இன்று அதிகாலை லாஸ் ஏஞ்சலீஸ் பறந்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில், 'அவெஞ்ஜர்ஸ் எண்டு கேம்' படத்தை இயக்கிய ஜோ மற்றும் அந்தோணி ரூஸோ இயக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் லாஸ் ஏஞ்சலீஸில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் தனுஷ்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக தனுஷ் உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் நடிப்பு பயிற்சிகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதன்பிறகுதான் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தனுஷ் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் லாஸ் ஏஞ்சலீஸிலேயே தங்கியிருந்து இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். மே மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 'கர்ணன்' படத்தை முழுமையாக முடித்துகொடுத்துவிட்ட தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் முதல் ஷெட்யூலையும் முடித்துவிட்டார். செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஹாலிவுட்டில் இருந்து திரும்பியதும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனுஷ், தற்போது போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டுக்கு எதிரில் இருக்கும் தெருவில் இடம் வாங்கியிருக்கிறார். இங்கு வீடுகட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா என குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தாண்டு தீபாவளிக்குள் தனுஷ் குடும்பத்துடன் புது வீட்டுக்குள் குடியேறுவார் என்கிறார்கள்.