Published:Updated:

ஹைதராபாத்தில் இருந்து பைக்கிலேயே சென்னை வந்தாரா அஜித்? - `வலிமை' ஷூட்டிங்கில் நடந்தது என்ன?

வலிமை
வலிமை ( அஜித் )

அஜித், ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்ததாகத் தகவல்கள் கிளம்பியுள்ளன.

கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமுமே வீட்டுக்குள் முடங்கியிருக்கிறது. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்தாலும், பல நிறுவனங்களின் அடுத்தகட்ட நிலை என்னவென்பதே தெரியாமல் குழம்பி நிற்கின்றனர். அதில் சினிமாத்துறையும் ஒன்று. சின்னத்திரை சீரியல்கள், வெள்ளித்திரை படங்களென அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கிப்போயிருக்கின்றன. இதுதான் சமயமென நினைத்த சீரிஸ்களையும், படங்களையும் பார்த்துவருகின்றனர் மக்கள்.

இதற்கு நடுவில், அஜித் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலே வந்ததாகத் தகவல்கள் கிளம்பியுள்ளன. உண்மையிலேயே அப்படி என்ன நடந்தது?

`நேர்கொண்ட பார்வை'யைத் தொடர்ந்து, `வலிமை' படத்தின் மூலம் இரண்டாவது முறை கூட்டணியமைத்திருக்கிறது வினோத் - அஜித் - போனி கபூர் ட்ரையோ. `நேர்கொண்ட பார்வை' படத்திற்கு முன்பே இந்தக் கூட்டணி உறுதியாகியிருந்தது. `பிங்க்' ரீமேக்கைத் தொடர்ந்து, இரண்டாவது படம் சொந்தக் கதையென்பதால் அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு கதையைப் பட்டைத் தீட்டியிருக்கிறார் ஹெச். வினோத். `நேர்கொண்ட பார்வை'யின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த படத்திற்கான பூஜையையும் போட்டுவிட்டது படக்குழு. தவிர, படத்தின் டைட்டிலான `வலிமை'யையும் பூஜை சமயத்திலேயே வெளியிட்டது.

அஜித் - ஹெச்.வினோத்
அஜித் - ஹெச்.வினோத்

முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பித்திருந்தது. இரண்டாவது ஷெட்யூலை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தது படக்குழு. கௌதம் மேனன் இயக்கிய `என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித் இதில் போலீஸாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. படத்தில் அஜித்தின் பெயர் ஈஸ்வர மூர்த்தி. அஜித் படமென்றாலே ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்களுக்கான விருந்து, மாஸான அந்த ஆக்‌ஷன் காட்சிகள்தான். இந்த ஒரு காரணத்தினால்தான் `பிங்க்' படத்தில் இல்லாமலிருந்த இரு சண்டைக் காட்சிகளை `நேர்கொண்ட பார்வை'யில் புகுத்தியிருந்தார்கள். தவிர, தமிழ் ஆடியன்ஸைக் கவரும் விதமாக சில சென்டிமென்ட்டையும் சேர்த்திருந்தார்கள்.

இந்நிலையில், ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் ஆக நடிக்கும் `வலிமை' படத்தில் மட்டும் ஆக்‌ஷனுக்கா குறையிருக்கும்... அதோடு, ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக சில பல கார், பைக் சேஸிங் காட்சிகளெல்லாம்கூட படத்தில் இருக்கின்றனவாம். இதற்காக, பல ரிஸ்க்கான காட்சிகளை அசால்ட்டாக நடித்து வந்திருக்கிறார் அஜித். நடுவில் அந்த ரிஸ்க் கொஞ்சம் மிஸ்ஸாக, எதிர்பாராதவிதமாக ஒரு சின்ன விபத்தைச் சந்தித்திருக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்பியுள்ளார் அஜித். இதெல்லாம் நடந்தது டிசம்பரில். இதனால் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, அஜித் இல்லாமல் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அஜித் ஃபுல் ரெஸ்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள் படக்குழுவைச் சேர்ந்த சிலர்.

அஜித்
அஜித்

சீனா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளில் ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமுமே கதிகலங்கியது. தமிழ்நாட்டை தற்காத்துக்கொள்ளும் முதல் படியாக ஒரு நாள் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, 17 நாள்கள் லாக்டௌன் அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாக, அனைவரும் இருப்பிடம் நோக்கியும், சொந்த ஊர்கள் நோக்கியும் விரைந்தனர். தற்போது இதற்கு ஒரு எண்டு கார்டே இல்லையா என்பதுபோல் லாக்டௌன் விரிவடைந்துகொண்டேபோகிறது.

சினிமாத்துறையும் மெள்ள மெள்ள படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு தாயகம் திரும்பியது. கொரோனா, விபத்து போன்ற எந்த சம்பவங்களும் இல்லாத நிலை இருந்தபோதே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் வந்திருக்கிறார் அஜித். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களால், தற்போது நடந்ததுபோல் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது முற்றிலும் வதந்தியே. விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனாவிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள எல்லோரையும் போல அஜித்தும் க்வாரன்டீனில்தான் இருக்கிறார்.

Ajith
Ajith

ஆக, அஜித் தற்போது எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி வழங்கிவிட்டு, வீட்டிலேயே அவர் பத்திரமாக இருக்கிறார். இந்த கொரோனா பிரச்னைகள் முடிந்த பிறகு, `வலிமை' படத்தின் பணிகள் அதே வலிமையோடு ஆரம்பிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு