சினிமா
பேட்டிகள்
Published:Updated:

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
டிக்கிலோனா - சினிமா விமர்சனம்

யுவனின் பின்னணி இசை படத்தை விறுவிறுவென நகர்த்திச் செல்கிறது.

கால இயந்திரம் ஒரு சாமானியன் கையில் கிடைத்தால் நடக்கும் களேபரங்களே இந்த டிக்கிலோனாவின் சாராம்சம்.

2027-ல் மின்வாரியத்தில் லைன்மேனாகப் பணியாற்றும் சந்தானத்திடம், பழுதுபார்க்கச் செல்லுமிடத்தில் ஒரு கால இயந்திரம் மாட்டுகிறது. கடந்தகாலத்திற்குச் சென்று தான் செய்த ஒரு பிழையைச் சரிசெய்ய நினைக்கிறார். 2020-க்குப் பயணமாகித் தன் கல்யாணத்தை அப்போதைய சந்தானத்திடம் பேசி நிறுத்தி அவரை 2027-க்கு அனுப்பி வைக்கிறார். 2020 வெர்ஷனும் எதிர்காலத்தில் கொஞ்ச நாள் வாழ்ந்துவிட்டு ‘நீ நிறுத்துனது சரிதான்’ என ஒப்புக்கொள்கிறார். இந்த இடமாற்றத்தின் விளைவுகளை காமெடி என்கிற பெயரில் படமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

சந்தானம்தான் படத்தின் பிரதான பலமும் பலவீனமும். மூன்று வெர்ஷன்களில் வந்து வெரைட்டி காட்டி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஆனால் இன்னமும் உடற்கேலியையே காமெடி என நினைத்துத் திரும்பத் திரும்பச் செய்வது எரிச்சலூட்டுகிறது. அனகா, ஷிரின் என இரண்டு ஹீரோயின்கள். வழக்கமான சந்தானம் படம்போலவே இதிலும் ஹீரோவைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவ்வளவுதான். காமெடிக்கென ஆனந்தராஜ், முனீஸ்காந்த், யோகிபாபு, ராஜேந்திரன் எனப் பலர் இருந்தாலும் கடைசியாக வந்து ஸ்கோர் செய்யும் மாறனே அதிகம் சிரிக்க வைக்கிறார்.

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்

யுவனின் பின்னணி இசை படத்தை விறுவிறுவென நகர்த்திச் செல்கிறது. ‘வெச்சாலும்’ பாடல் கிட்டத்தட்ட அதேவகையான காட்சியமைப்புகளில் வந்திருந்தாலும் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது. அர்வியின் ஒளிப்பதிவு ஓகே ரகம். முன்பின்னே நகரும் கதையில் சட்டெனப் புரியும்வகையில் எளிமையாகக் கதை கோத்திருக்கிறார் எடிட்டர் ஜோமின்.

‘வாங்குன பொருள் சரியில்லனா வித்தவனைத்தானே கேக்கணும்’ என, தன் திருமண வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது, ‘அறுத்துகிட்டு சுத்துற ஒவ்வொரு பொண்ணு பின்னாடியும் இப்படி ஒரு அப்பன்தான் இருக்கான்’ எனப் பெண்ணின் அப்பாவைத் தாக்குவது, ‘உனக்கு ஏத்த மாதிரி வாழ்றது சுதந்திரமில்ல, மத்தவங்க ஏத்துக்குற மாதிரி வாழணும்’ என ஆடைத்தேர்வு குறித்துப் பாடமெடுப்பது என இயக்குநர் கார்த்திக் யோகி டைம் மெஷினில் ஏறி கற்காலத்திற்கே சென்று இதையெல்லாம் எழுதியிருப்பார் போல. இன்னும் எவ்ளோ காலம்தான் ‘பெண்கள்தான் ஏமாற்றுக்காரர்கள்’ என்று அபத்தமாகச் சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை.

டிக்கிலோனா - சினிமா விமர்சனம்

காலத்தில் முன்பின் நகரும் கதைக்கு ‘டிக்கிலோனா’ என யோசித்துப் பெயர் வைத்தது சரி. ஆனால் இந்த ‘டிக்கிலோனா’ சமூகத்தையே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும் பிற்போக்கு இயந்திரமாக இருப்பதுதான் மாபெரும் குறை.