சினிமா
Published:Updated:

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

சந்தானம்
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தானம்

- கிருஷ்ணா

”நான் படிச்சது பி.ஏ., பி.எல். சட்டம் படிச்சு முடிச்சுட்டு நான் சினிமாவுக்குப் போறேன்னு சொன்னதும் என் அம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. என் அப்பாவும் கதையெல்லாம் நிறைய எழுதி வெச்சு, பாக்யராஜ் சார்கிட்ட ஒரு படத்தில் உதவி இயக்குநரா இருந்திருக்கார். சினிமாவுல இயக்குநராகணும்னு வரலை. நடிக்கணும்னுதான் வந்தேன். ‘நாளைய இயக்குநர்’ மூணாவது சீசனுடைய சிறந்த நடிகர் விருது கிடைச்சது. அங்க அறிமுகமான நண்பர்கள் சொல்லிதான் நிறைய எழுத ஆரம்பிச்சேன். இப்போ படம் எடுத்திருக்கேன். இதுல எட்டு வருஷ உழைப்பு இருக்கு’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், ‘டிக்கிலோனா’ இயக்குநர் கார்த்திக் யோகி.

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

“ ‘நாளைய இயக்குநர்’ மூணாவது சீசன்ல உள்ள போகணும்னு நினைச்சேன். அப்போ ‘விழா’ பட இயக்குநர் பாரதி பாலாவுடன் அறிமுகமாகி குறும்படங்கள் பண்ண ஆரம்பிச்சோம். அப்போதான் ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ், ‘குரங்கு பொம்மை’ நித்திலன், ‘ஓ மை கடவுளே’ அஷ்வத், ‘மண்டேலா’ மடோன் அஸ்வின், ‘காளிதாஸ்’ செந்தில் எல்லோரும் பழக்கமானாங்க. நாங்க எல்லோரும் ஒரு ஃப்ளாட்ல தங்கிருந்தோம். அப்போ ‘மாநகரம்’ பட ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மூலமா லோகேஷ் கனகராஜ் பழக்கமானான். ‘நான் நாளைய இயக்குநர் மிஸ் பண்ணிட்டேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பான். எல்லோரும் தொடர்ந்து சினிமா பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்தோம். நான் குகனுடன் சேர்ந்து ‘சவாரி’ படத்துல வேலை செஞ்சேன். அதுல நடிக்கவும் செஞ்சேன். அந்தச் சமயத்துலதான் ‘மாநகரம்’ படத்துக்கு வசனம் எழுதச் சொல்லிக் கேட்டான். அந்தப் படத்துக்கு வசனம் எழுதின பிறகு, ‘நீ நடிக்கிறதைவிட நல்லா எழுதுற’ன்னு சொல்லி அதுல ஒரு கேரக்டர் கொடுத்தான், லோகேஷ். அப்புறம், சினீஷுடைய அறிமுகம் கிடைச்சது. ‘பலூன்’ல இணை இயக்குநரா வேலை செஞ்சேன். யோகிபாபுகூட படம் முழுக்க ஒரு கேரக்டர்ல நடிச்சிருந்தேன். ‘சவாரி’, ‘மாநகரம்’ ரிலீஸான பிறகு, நண்பர்கள் எல்லோரும் நான் நல்லா வசனம் எழுதுறேன்னு சொன்னாங்க. ‘பலூன்’ ரிலீஸான பிறகு, ‘நீ ரெண்டு மாட்டை ஓட்டிக்கிட்டிருக்க. ரெண்டும் வெவ்வேற திசையில போய்க்கிட்டிருக்கு. அதனால, வேகம் குறைவா இருக்கு. ஒரு மாட்டை ஓட்டினா வேகமா போகலாம். அது நடிப்பா, டைரக்‌ஷனா, ரைட்டிங்கான்னு முடிவு பண்ணு’ன்னு யோகிபாபு அண்ணன்தான் சொன்னார். அதுக்குப் பிறகுதான், கதை எழுதலாம்னு முடிவு பண்ணி, படம் பண்ணினேன்.’’

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

`` ‘டிக்கிலோனா’ கதை, தலைப்பு எப்படி அமைஞ்சது?’’

‘`இது நண்பனுடைய வாழ்க்கையில நடந்தது. ஒருநாள் சும்மா டைம் மெஷின் கிடைச்சா என்ன பண்ணுவீங்கன்னு பேசிக்கிட்டிருந்தோம். அப்போ என் நண்பன் ஒருத்தன் ‘என் கல்யாணத்தை நிறுத்திடுவேன் மச்சா’ன்னு சொல்லியிருந்தான். அவனைத் தவிர, இன்னும் சிலரும் அதைத்தான் சொன்னாங்க. அதை ஒன் லைனா எடுத்துக்கிட்டு எழுதினதுதான், ‘டிக்கிலோனா.’ நான் கவுண்டமணி சாருடைய பெரிய ரசிகன். ‘ஜென்டில்மேன்’ படத்துல ‘டிக்கிலோனா’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பாங்க. அதுல செந்தில் சார் டிக்கிலோனா டிக்கிலோனான்னு சொல்லிக்கிட்டு ரிவர்ஸ்ல வருவார். அந்த மாதிரி டைம் டிராவல் பண்ணி ரிவர்ஸ்ல போறதுதான் கதை. அதுக்கு இந்தத் தலைப்பு சரியா அமைஞ்சுடுச்சு.’’

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

``சந்தானம்தான் உங்களுடைய முதல் சாய்ஸா? கதை கேட்டுட்டு என்ன சொன்னார்?’’

‘`சந்தானம் சாரை மைண்ட்ல வெச்சுதான் எழுதினேன். கதை சொல்லப் போனபோது, ‘லொள்ளு சபா’ டீமுடன் இருந்தார். நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியுடைய தீவிர ரசிகன். கதை கேட்டுட்டு உடனே ஓகே சொல்லிட்டார். சந்தானம் சார் காமெடில எப்படின்னு தெரியும். இதுல காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய எமோஷனான முகத்தைக் காட்ட ஒரு கேரக்டர் இருக்கு. சூப்பரா பண்ணியிருக்கார். ட்ரிபிள் ஆக்‌ஷன்ல ஒரு கேரக்டர் அவர் ஜோன்ல இருக்கும். இன்னொண்ணு ரொம்ப ஸ்டைலா இருக்கும். இன்னொன்னு எமோஷனா இருக்கும். கதை சொல்லி முடிச்சதும் ‘ரொம்ப நல்லா இருக்கு. மூணு ஆக்‌ஷனை எப்படி விஷுவலா மாத்தப்போற’ன்னு கேட்டாங்க. பாரதின்னு ஒரு ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்ட் இருக்கார். அவர்கிட்ட சொல்லி அதை ஸ்டோரி போர்டா ரெடி பண்ணி அவங்களுக்குக் காட்டினேன். ரொம்ப ஹாப்பி. ட்ரிபிள் ஆக்‌ஷன்கிறதனால எடுக்கிறதும் நிறைய ரிஸ்க் இருந்தது. அதே ரிஸ்க்தான் சந்தானம் சாருக்கும். ஒரு நாளுக்கு 12 - 18 முறை காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் மாத்த வேண்டியதா இருக்கும். அவருடைய சப்போர்ட் மிகப்பெரியது.’’

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

``இந்தப் படத்துக்காக நீங்க மெனக்கெட்டது எந்த விஷயத்துக்காக?’’

‘`ஹீரோயின்களை கமிட் பண்ண ரொம்ப கஷ்டமா இருந்தது. கிட்டத்தட்ட 25 ஹீரோயின்கள்கிட்ட நடிக்கக் கேட்டேன். சந்தானம் சார் படம்னாலே ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க. அவர் காமெடியன்ங்கிற முகத்தை உடைச்சு ஒரு ஹீரோவா வந்துட்டார். அதுக்காக எவ்வளவு இழந்திருக்கார்னு எனக்குத் தெரியும். அவர் காமெடியனா இருக்கும்போது எவ்வளவு புகழ், ஒருநாளுக்கு எவ்வளவு சம்பளம்... அதையெல்லாம் உடைச்சு நான் இதுதான்னு வர்றார்னா அதை நாம என்கரேஜ் பண்ணணும். ஆனா வெளியே இருக்கவங்களுடைய பார்வைதான் அப்படி இருக்குன்னா, சினிமாவுக்குள்ள ஹீரோயின்களுடைய பார்வையும் அப்படித்தான் இருக்கு. இந்தப் படத்துல அனாகா, ஷிரின் அவருக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. நீங்க வேணா பாருங்க, இந்தப் படம்தான், அவங்க கரியர்ல முக்கியமான படமா இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு, சந்தானம் சார்கூட நடிக்க ஹீரோயின்கள் தயங்க மாட்டாங்கன்னு என்னால அழுத்தமா சொல்ல முடியும்.’’

“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”
“சந்தானம் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் யோசிக்கிறாங்க!”

``இளையராஜாவுடைய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவை வெச்சு ரீமிக்ஸ் பண்ணியிருக்கீங்க. அது எப்படி நடந்தது?’’

‘`சினீஷ் மூலமாதான் யுவன் சார் படத்துக்குள்ள வந்தார். எனக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல வர்ற ‘பேர் வெச்சாலும் வைக்காமப் போனாலும்’ பாட்டை இந்தப் படத்துக்கு ரீமிக்ஸ் பண்ணி வைக்கணும்னு தோணுச்சு. என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் பாடலும் கூட. அந்தப் பாட்டை மட்டும்தான் இன்னும் ஷூட் பண்ணலை. நான் ஷெரிஃப் மாஸ்டர்கிட்ட நீங்க ரிகர்சல் பண்ணிடுங்க. நான் பாட்டோட வர்றேன்னு சொல்லிட்டேன். யுவன் சார்கிட்ட சொன்னதும் ‘நீங்க அப்பாகிட்ட சொல்லிடுங்க. நானும் சொல்லிடுறேன்’னு சொன்னார். இளையராஜா சாரைப் பார்க்க நானும் சினீஷும் போனோம். சார்கிட்ட இந்த மாதிரி பயன்படுத்திக்கிறோம்னு கேட்டோம். என்ன சிச்சுவேஷன்னு கேட்டார். இந்த மாதிரி கல்யாணம், ரெண்டு சந்தானம் சுத்திக்கிட்டு இருப்பாங்கன்னு சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டார். உடனே கால்ல விழுந்துட்டோம். இது மறக்கமுடியாத மொமன்ட்.’’