Published:Updated:

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

ஐ.லியோனி, லியோ சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.லியோனி, லியோ சிவகுமார்

பையன் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை உதறினதுல எனக்கு வருத்தமில்ல. ஏன்னா, நான் ஸ்கூல்ல டீச்சரா இருந்த போதுதான் முதல் படம் ‘கங்கா கௌரி’யில் நடிச்சேன்.

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

பையன் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை உதறினதுல எனக்கு வருத்தமில்ல. ஏன்னா, நான் ஸ்கூல்ல டீச்சரா இருந்த போதுதான் முதல் படம் ‘கங்கா கௌரி’யில் நடிச்சேன்.

Published:Updated:
ஐ.லியோனி, லியோ சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.லியோனி, லியோ சிவகுமார்

பட்டின்றப் பேச்சாளர், நடிகர், தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் எனப் பல பொறுப்புகளைக் கொண்டவர் திண்டுக்கல் ஐ.லியோனி. அவரின் மகன் லியோ சிவகுமார், ‘அழகிய கண்ணே’ படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.

மகனை அறிமுகம் செய்துவைத்த லியோனி, ‘‘எங்க வீட்ல இப்ப ரெண்டு நடிகர்கள். ஒருத்தர் ‘கங்கா கௌரி’, ‘ஆலம்பனா’னு நடிச்ச பிரமாதமான ஆக்டர். இன்னொருத்தர் இப்ப ஹீரோவாகிட்டார். ஆனா ஒரு விஷயம், ஒருத்தரை புக் பண்ணினா இன்னொருத்தர் ஃப்ரீயெல்லாம் கிடையாது.’’ - தனது டிரேட்மார்க் சிரிப்பில் கலகலக்கிற லியோனி, ‘`சிவாவுக்கு (மகனை அப்படித்தான் அழைக்கிறார்) ஹீரோவா ‘அழகிய கண்ணே’தான் முதல் படம். ஆனா, நடிகனா இது மூணாவது படம். இதுக்கு முன்னாடி விஜய்சேதுபதியோடு ‘மாமனிதன்’, உதயநிதி சாரோடு ‘கண்ணை நம்பாதே’ன்னு ரெண்டு படங்கள் நடிச்சிருக்கான். இன்னொரு விஷயம், சிவகார்த்திகேயனுக்கு ஜூனியர் இவன்’’ என்ற சஸ்பென்ஸோடு மகன் பக்கம் திரும்பி, ‘‘நீ கன்டினியூ பண்ணு’’ எனக் கோடு போட்டார்.

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

‘‘திருச்சியில சிவகார்த்திகேயன் சார் படிச்ச காலேஜ்லதான் நானும் படிச்சேன். காலேஜ்ல அவர் சீனியர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். சினிமா ஆர்வம் இருந்துச்சு. ஆனாலும் ஒரு நிறுவனத்துல ஏழு வருஷமாக அசிஸ்டென்ட் மேனேஜரா இருந்தேன். ‘அநீதி’ன்னு ஒரு குறும்படம் பண்ணியிருக்கேன். சினிமா மீதான ஆர்வம் அதிகமாக அதிகமாக, வேலையைத் தொடர முடியல. சென்னை வந்தேன். ஆக்ட்டிங் கோர்ஸ், ஜிம்னு நடிகனுக்கான தகுதிகளை வளர்த்துக்கிட்டேன். ஆடிஷன்கள் எங்கே நடந்தாலும் போய் நிற்பேன். அப்படித்தான் சீனுராமசாமி சாரோட ‘கண்ணே கலைமானே’ ஆடிஷனுக்குப் போனேன். அந்த அறிமுகம்தான் அவரோட அடுத்த படம் ‘மாமனிதன்’ல நடிக்கவச்சது. அடுத்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஷூட்டிங் போன போதுதான் ‘கண்ணை நம்பாதே’யில் செலக்ட் ஆனேன். ‘மாமனிதன்’ல சீனுராமசாமி சாரோட தம்பி விஜயகுமார் சார்தான் இணை இயக்குநர். நாங்க நட்பானோம். அவர் கதை ரெடியானதும் என்கிட்ட படிக்கக் கொடுத்தார். அழகான காதலும் ஆக்‌ஷனுமான கதை. எமோஷனலான விஷயங்களும் இருக்கு. கதை பிடிச்சிடுச்சு. ஆனா, தயாரிப்பாளர் கிடைக்கணுமே?!’’ - ஃப்ளோவாகச் சொல்லிக்கொண்டிருக்கும் மகனை ஆர்வமாகப் பார்க்கிறார் லியோனி. தொடர்கிறார் சிவா.

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

‘‘அந்தச் சமயத்துலதான் வீட்ல டி.வி-யில ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவைப் பார்த்துட்டு இருந்தோம். அதுல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சார் பேசிட்டு இருந்தாங்க. நான் விஜய் சாரோட தீவிர ரசிகன்னால பிரிட்டோ சார் பேச்சை ஆர்வமா கேட்டுட்டிருந்தேன். அப்பதான் எங்க அப்பா, ‘சேவியர் பிரிட்டோ என் கிளாஸ்மேட்’னு சொல்லவும் உற்சாகமாகிட்டேன். அப்பாகிட்ட சொல்லி, அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கினோம். கையோடு இயக்குநரையும் அழைச்சிட்டுப் போய் கதையைச் சொன்னோம். பிரிட்டோ சாருக்கும் திருப்தி. ‘நானே தயாரிக்கறேன்’னு சொல்லி என் கையில அட்வான்ஸ் தொகையும் கொடுத்துட்டு, `மாஸ்டர்ல விஜய்க்கு அட்வான்ஸ் கொடுத்ததுக்குப் பிறகு சினிமாவுல உனக்குத்தான் அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். நீயும் சக்சஸ்ஃபுல்லா வரணும்’னு ஆசீர்வதிச்சார். மிகப்பெரிய ஆசீர்வாதமா உணர்ந்தேன். எனக்கு ஜோடியா சஞ்சிதா ஷெட்டி நடிச்சிருக்காங்க. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைச்சிருக்கார். ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் சில்வா ஃபைட்ஸ்னு நல்ல டீம் முதல் படத்துலேயே அமைஞ்சிருக்கு...’’ உடல் சிலிர்த்துச் சொல்கிறார் சிவகுமார்.

‘`பையன் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை உதறினதுல எனக்கு வருத்தமில்ல. ஏன்னா, நான் ஸ்கூல்ல டீச்சரா இருந்த போதுதான் முதல் படம் ‘கங்கா கௌரி’யில் நடிச்சேன். அதன்பிறகு ஷங்கர் சாரே எனக்கு போன் பண்ணி, ‘சிவாஜியில் ஒரு ரோல் இருக்கு, நடிக்குறீங்களா? ஆனா, ஆறு மாசம் நீங்க லீவு போட்டுட்டு வர வேண்டியிருக்கும்’னு கேட்டார். ஸ்கூல்ல லீவு கொடுக்கல. போராடிப் பார்த்தேன். ‘வேலையை வேணா ரிசைன் பண்ணிட்டு நடிக்கப் போங்க’ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு பதிலா பட்டிமன்றம் ராஜா நடிச்சிருந்தார். அதைப்போல சிவா ஆர்வத்துக்கு வேலை தடையா இருக்கிறதா அவன் நினைச்சா, உதறினதுல தப்பில்லைன்னு முழு சப்போர்ட் பண்ணினேன்.

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”
“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

அவனுக்கு நான் ஒரு நடிகராகவும் அப்பாவாகவும் ரெண்டு அட்வைஸ் கொடுத்தேன். ‘எந்த ஒரு வேலையையும் ரசிச்சு செய்... அதுவே உன்னை உயர்த்தும். அதைப்போல, வேலைன்னு வந்துட்டா, எதிரே சீனியர்கள் இருக்காங்க, ஜாம்பவான்கள் இருக்காங்கன்னு மிரளாதே... அவங்களோடு நடிக்கணும்னு பயந்துடாதே... எவ்ளோ சீனியரா இருந்தாலும், அவங்களும் சக நடிகர்கள்னு நினைச்சா மட்டும்தான் உன்னால சிறப்பா பர்ஃபாம் பண்ணமுடியும்னு சொல்லியிருக்கேன்.

“நான் சிவகார்த்திகேயன் ஜூனியர்!”

இது கலைஞர் எனக்குக் கத்துக்கொடுத்த பாடம். ஒருமுறை என் பட்டிமன்றத்துக்கு என் பேச்சைக் கேட்க கலைஞர் வந்திருந்தார். முன்வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். அப்ப அவர் முதல்வர். அந்தச் சமயத்துலதான் கலைஞர் என்னைக் கூப்பிட்டு ‘எதிரே சி.எம் இருக்கார்னு நினைக்காமல் பேசினாதான் உன்னால தயக்கமில்லாமப் பேச முடியும்’னார். கலைஞருக்கு என் பேச்சு ரொம்பப் பிடிக்கும். பட்டிமன்றங்கள்ல என் பேச்சை ரசிச்சுக் கேட்டுட்டு என் கன்னத்துல எனக்கு முத்தம் கொடுத்திருக்கார். இப்படி கலைஞர்கிட்ட மூணு முறை முத்தம் வாங்கியிருக்கேன்” என்று லியோனி சிரிக்க, சிவாவும் அந்தச் சிரிப்பில் இணைந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism