அத்தியாயம் 1
Published:Updated:

“பரிசைப் பெறாமல் ஓயமாட்டான் இந்த பாரதிராஜா!

Dirctor Bharathiraja's Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
News
Dirctor Bharathiraja's Exclusive Interview

"இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைக்க பாரதிராஜா சொன்ன ஐடியா!" - பாரதிராஜா!

பிப்ரவரி 20-ம் தேதி.... மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக நாடகத்துறை சார்பில் நடத்தப்பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர் பாரதிராஜா. மாணவர்களோடு ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பாரதிராஜா அளித்த பதில்கள்...!

“இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைப்பதில் தாங்கள் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளதாக வெளியான ஒரு ‘கிசுகிசு’ குறித்து?” 

“நான் கிசுகிசுக்களை நம்புவதில்லை... எந்த ஒரு கலைஞரையும் ‘இந்தக் காரியத்தைச் செய்... இப்படி இரு’ என்று யாரும் வலுக்கட்டாயப்படுத்த முடியாது. வேண்டுமானால், ‘கலை பாதிக்கப்படுகிறது... மீண்டும் இணைந்து செயலாற்றுங்கள்’ என்று நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் தந்தியடியுங்கள்!” 

Dirctor Bharathiraja's Exclusive Interview
Dirctor Bharathiraja's Exclusive Interview

“முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்று ஏதாவது படம் எடுக்கும் திட்டம் உள்ளதா?”

“மாணவர்களுக்குன்னா எப்படி?!... போதிக்கிற மாதிரியா?!.. ‘வீட்டுலதான் அப்பா போதிக்கிறாரு... வகுப்புலதான் வாத்தியாரு போதிக்கிறாரு... நிம்மதியா தியேட்டருக்கு வந்தா, இந்தாளும் அதேதான் செய்யறார்’னு யாரும் வரமாட்டீங்க! அப்படிப் போதிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டது போதும்... ‘என்னுயிர்த் தோழனை'த்தான் சொல்றேன்!”

“ஹாலிவுட் ஸ்டைலைப் பின்பற்றி வரும் பி.சி. ஸ்ரீராமின் லைட்டிங் ட்ரெண்ட் தங்கள் படங்களிலும் இனி வருமா?!”

“என்னுடைய படங்களில் பெரும்பாலும் க்ளோஸ் அப் காட்சிகள்தான் அதிகமிருக்கும். அதாவது, உணர்ச்சிகளை முகபாவங்களிலேயே காட்டிவிடுவது. அப்படிப்பட்ட காட்சிகளில் அம்மாதிரியான லைட்டிங்கை உபயோகித்தால் உங்களுக்கும் புரியாது. அவ்வளவு கஷ்டப்பட்டு முகபாவனை காட்டும் நடிகருக்கும் பெயரில்லாமல் போய்விடும்... ஆனால், இந்த மாதிரி லைட்டிங் தேவைப்படுகிற சப்ஜெக்ட்டாக இருந்தால் நிச்சயம் ஸ்ரீராமைப் பயன்படுத்துவேன்!”

“சாதாரணமாக உங்கள் கதாநாயகிகள் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி என்றபடி 'ஆர்' எழுத்தில்தான் துவங்கும். ஆனால், சென்ற படத்தில் 'எஸ்' (சுகன்யா) ஆக மாறியதன் மர்மம்?”

“என்னமோ நான்தான் அவுங்களுக்கெல்லாம் பெயர் வெச்ச மாதிரி கேக்கறீங்க. முதல் பட ஹீரோயின் ஒருத்தருக்கு 'ஆர்.' ராசியினாலதான் மார்க்கெட் தூக்கிடுச்சுன்னு ஒரு நம்பிக்கை! அடுத்து வந்தவங்களும் ‘ஆர்’லேயே வர்ற மாதிரி பார்த்துக்கிட்டாங்க! ஆனா, சுகன்யா மட்டும் ‘என் பேரே இருக்கட்டும்’னாங்க... அவ்வளவுதான்! மத்தபடி இதுல மர்மமெல்லாம் ஒண்ணும் கிடையாது!”

Dirctor Bharathiraja's Exclusive Interview
Dirctor Bharathiraja's Exclusive Interview

“உங்கள் படத்தில் மட்டும் காட்சியமைப்பும் இசையும் அட்டகாசமாய் இணைந்துபோவது எதனால்? உங்கள் படமென்றால் இளையராஜா ஏதேனும் சிறப்பாய் இசையமைப்பதுண்டோ?

“நாங்கள் இருவரும் ஒரே மண். எனக்கு ஏற்படுகிற சிந்தனைகள்தான் ராஜாவுக்குள்ளும் ஓடும்! ஒரே மாதிரி, இணையான சிந்தனைகள் இருப்பதால் அந்தளவு ஒத்திசைவு ஏற்படுகிறது. மற்றபடி விசேஷமான இசையெல்லாம் எதுவும் கிடையாது.”

“நாங்கள் எந்த மாதிரிப் பெண்களைக் காதலிப்பது?”

“கேட்டுக் காதலிச்சா அதுக்குப் பேர் காதலே இல்லை தம்பி! காதல்ங்கறது உன்னையறியாமல், உன்னை நேசிப்பவளை அறியாமல் உண்டாகும் ஓர் உணர்வு! உடலில்லாமல் உணர்வில்லை... உணர்வில்லாமல் உடலில்லை. அந்த இரண்டு துருவங்களின் சந்திப்பையும் உணர்ந்தவன்தான் காதலிக்க முடியும்!”

“இப்ப நீங்க எடுத்துக்கிட்டு வர்ற ‘நாடோடித் தென்றல்’ சர்வதேச விருது எதையும் பெறுமா?”

“பெறாது! அது ஒரு காலகட்டத்தில் நடந்த சாதாரணக் காதல் கதை... அவ்வளவுதான்! ஆனால், இனிமேல் என் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டு மிகச் சிறப்பான படங்களையே உருவாக்குவது என்று முடிவெடுத்துள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்... உலக அளவில் ஒரு பரிசையாவது பெறாமல் ஓயமாட்டான் இந்த பாரதிராஜா. இதுவே என் லட்சியம்!"

- டி.எஸ். சிவசங்கர்

(01.03.1992 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)