Published:Updated:

``25 கோடி செலவு... இயக்குநர் நானே படம் நல்லாயில்லைன்னு சொல்றேன்... அன்பழகன் ரியாக்‌ஷன்?!'' - அமீர்

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

அமீர் இயக்கிய 'ஆதி பகவன்' படத்தின் தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன். தன் தயாரிப்பாளர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அமீர்.

"ஒரு அரசியல்வாதி மற்றும் எம்.எல்.ஏ-வா அன்பழகனைத் தெரியும். 2006 -11 தி.மு.க ஆட்சியில இருந்தப்போ அன்பழகன் எம்.எல்.ஏ பதவில இல்ல. 2010-ம் வருஷம் `யோகி' படம் முடிச்சிட்டு `ஜெயம்' ரவியை வெச்சு படம் பண்ணலாம்னு ஒரு தயாரிப்பாளர்கிட்ட அட்வான்ஸ் வாங்கியிருந்தேன். அப்போ, அன்பழகன் என்னை வெச்சு ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்படுறார்னு நண்பர் ஒருத்தர் சொன்னார். அப்போதைய சூழல்ல இவர்கூட சேர்ந்து வேலை பார்க்க எனக்கு தயக்கம் இருந்தது. எப்படி இதை தவிர்க்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அன்பழகனை நேர்ல பார்த்து நம்ம எண்ணத்தை சொல்லிடலாம்னு அவரை பார்க்கப் போனேன்.

``ரிலீஸுக்கு ரெடியா இருந்த என் படத்தைத்   திருடிட்டாங்க!''- `பாலக்காட்டு மாதவன்' இயக்குநர் சந்திரமோகன்

போறப்போகூட ஓர் அரசியல்வாதியைத்தான் பார்க்கப் போறோம்னு பெருசா டிரெஸ் பண்ணிக்கிட்டு போகல. ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டு அப்படியே டி-சர்ட் - டிராக் போட்டுட்டே போயிட்டேன். அப்போ, வெங்கட்ராமன் தெருவுல அவரோட ஆபீஸ் இருந்தது. உள்ளே போனவுடனே ரொம்ப மரியாதையா, `வாங்க சார்'னு எந்திருச்சு நின்னு வரவேற்றார். நான் எதுவும் பேசாம அமைதியா இருந்தேன். `ஒரு படம் தயாரிக்கலாம்'னு இருக்கேன்னு சொன்னார். `சரிங்க யோசிச்சு சொல்றேன்'னு சொல்லிட்டு அமைதியா இருந்தேன். `ஒண்ணும் அவசரம் இல்ல சார்... யோசிச்சு பொறுமையா சொல்லுங்க'னு சொன்னார். அவர் என்னை சார்னு மரியாதையா பேசினார்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்த நேரத்துல சினிமா பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டார். அரசியல்வாதியா இருக்குற ஒருத்தர் எந்த பந்தாவும் இல்லாம அணுகுன விதம் எனக்குப் பிடிச்சிருந்தது. தவிர, சினிமா பற்றி நிறைய தகவல்களை அவர் தெரிஞ்சி வெச்சிருந்தது அவர் மேல ஒரு ஈர்ப்பை எனக்கு ஏற்படுத்துச்சு. வீட்டுக்கு வந்ததுக்குப் பிறகு, யோசிச்சுப் பார்த்தேன். ரெண்டாவது முறை அவரைப் பார்த்தப்போ, `படம் பண்ணலாம் அண்ணே'னு சொன்னேன். இப்போதான் முதல் முறையா அண்ணேன்னு சொன்னேன். எங்க ரெண்டு பேருக்குமான நட்பு `ஆதிபகவன்' படம் எடுத்து முடிஞ்சதுக்குப் பிறகும்கூட ரொம்ப நெருக்கமா இருந்தது. போன் பண்ணிட்டு, `நான் வரட்டுமா'னு கேட்பார். `நான் வரேன் அண்ணே'னு சொல்லுவேன். இல்ல நானே வரேன்னு சொல்லிட்டு என் ஆபிஸுக்கு வந்து பேசிட்டுப் போவார். அடிக்கடி போன்ல பேசிக்குவோம்.

ஜெ.அன்பழகன், ஆதி பகவன் டீம்
ஜெ.அன்பழகன், ஆதி பகவன் டீம்

லாக்டெளன் நேரத்துல மதுரைல இருந்தேன். அன்பழகன் அண்ணனின் உடல்நிலையைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் சென்னைக்கே வந்தேன். அவர் மகன் ராஜா அன்பழகன்கிட்ட அண்ணனைப் பற்றி விசாரிச்சுக்கிட்டே இருந்தேன். `எங்களாலக் கூட அப்பாவைப் பார்க்க முடியலை'னு சொன்னார். `தளபதி ஸ்டாலின் ஹாஸ்பிட்டல் வந்தப்போகூட அப்பாவை பார்க்க விடல'னு சொன்னார். தொடர்ந்து விசாரிச்சிட்டு இருந்தப்போ மூணாவதுநாள் கொஞ்சம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்குனு சொன்னாங்க. நிம்மதியா இருந்தது. ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. அதுவும் பிறந்தநாள் அன்னைக்கே இறந்துட்டார்.

அன்பழகன் அண்ணன் கே.எஸ்.ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும்கூட. இருந்தும் எனக்கு கமர்ஷியல் படங்களைவிட உங்களை மாதிரியான ஆட்கள் பண்ற படங்கள்தான் பிடிக்கும்னு சொல்லுவார். எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து சினிமா இயங்குன விதம் பற்றி சொல்லுவார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடங்குனது பற்றி பேசுவார். `கமர்ஷியல் படம் எடுத்து பணம் சம்பாதிக்குறது என் நோக்கமல்ல. நல்ல படம் எடுக்கணும்'னு சொல்லுவார். என்கிட்ட கதை கேட்டப்போ ரெண்டு கதையைச் சொன்னேன். அவர்தான் `ஆதிபகவன்' கதையை செலக்ட் பண்ணார். `அண்ணே, இது பழைய ஸ்டைல் கதைண்ணே. டபுள் ரோல் சப்ஜெக்ட் ஸ்க்ரிப்ட், இதுல என்னயிருக்கு'னு கேட்டேன். நிறைய எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி டபுள் ரோல் படங்கள் பார்த்திருக்கேன். இருந்தாலும் நீங்க சொன்ன டூயல் ரோல்ல சுவாரஸ்யமான எலிமென்ட்ஸ் இருக்கு. ரெண்டுமே நெகட்டிவ் சாயல்ல இருக்குற பாத்திரங்கள். நீங்க படம் இயக்குறப்போ வேறொரு வடிவம் கிடைக்கும்'னு சொன்னார்.

மோகன்லால், நிவின், ஃபகத், துல்கர்... பீரியட் படங்களில் மலையாள ஹீரோக்கள் நடிப்பது ஏன்?

படம் ரெடியானதுக்குப் பிறகு நானும், அண்ணாவும், இன்ஜினீயர் சிவானு ஒருத்தரும் ஸ்டூடியோவுல படம் பார்த்தோம். `என்ன டைரக்டர் சார்'னு என்னைக் கேட்டார். `எனக்கு பெருசா சுவாரஸ்யமா இல்ல அண்ணே'னு சொன்னேன். `நான் கதை சொன்னவிதமும், எடுத்த விதமும் நல்லாயிருந்திருக்கலாம். ஆனா, படமா எடுத்து பார்க்குறப்போ முழுமையடையாத ஃபீல் இருக்கு'னு சொல்லிட்டேன். இன்ஜினீயர் சிவா ஷாக் ஆயிட்டார். 25 கோடி ரூபாய்ல எடுத்த படத்தை இப்படி சொல்லிட்டாரேனு என்னை ஆச்சர்யமா சிவா பார்த்தார். ஆனா, அன்பழகன், `உங்களை மாதிரி டைரக்டர்ஸ் இப்படித்தான் சொல்லுவீங்க. எனக்குப் படம் பிடிச்சிருக்கு வாங்க'னு சொல்லி கூட்டிட்டுப் போயிட்டார். அவ்வளவு எளிமையா இதைக் கடந்து, ஏற்றுக்கொண்டதைப் பார்த்து வியந்தேன். இதுக்குப் பிறகு `புறம்போக்கு' படத்தை ஜீவா மற்றும் ஜெயம்ரவி வைத்து தயாரிக்குறதா இருந்தார். சில காரணங்களால் தள்ளிப் போயிருச்சு.

லாக்டெளன் காலத்துல நிறைய சர்வீஸ் பண்ணிட்டு இருந்தார். மாஸ்க் போட்டுக்கிட்டு எல்லா இடத்துலயும் பணி செஞ்சிட்டு இருந்தார். ரொம்ப சாதாரணமா இருப்பார். அவரோட பேச்சுல எவ்வளவு உண்மைத்தன்மை இருக்குனு அவரோட பாடி லாங்குவேஜ் பார்த்தாலே தெரியும். பாலிஷா பேச மாட்டார். நியூஸ் சேனல் பார்த்துட்டு கண்ணம்மா பேட்டைக்குப் போயிட்டேன். அங்கே, அவருக்கு நெருக்கமானவங்க நிறைய பேர் இருந்தாங்க. தள்ளுமுள்ளு ஏற்படுறளவுக்கு கூட்டம். நான் போனப்போ மயானத்தை லாக் பண்ணிட்டாங்க. அதனால, அவரோட முகத்தை கடைசியாக பார்க்க முடியாம போயிருச்சு.

ஜெ.அன்பழகன், ஆதி பகவன் டீம்
ஜெ.அன்பழகன், ஆதி பகவன் டீம்

டாக்டர் சேதுவின் மரணம் நிகழ்ந்தப்போ மதுரையில இருந்ததுனால என்னால வரமுடியல. ஆனா, அவரை லாக்டெளன் தொடங்குறதுக்கு சில நாள்கள் முன்னாடி பார்த்தேன். அக்கறையா நிறைய விஷயங்கள் சொன்னார். என்கூட எடுத்துக்கிட்ட போட்டோவை ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணியிருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மதுரைக்கு நான் போயிட்டேன். அவரை நேர்ல பார்க்கல. ஆனா, அவர் இறந்துட்டார்னு செய்தி வந்தவுடனே அதிர்ச்சியாகிட்டேன். கடவுள் எதற்காக நல்லவங்களை இப்படி சோதிக்குறார்னு எனக்குள்ள கேள்வி கேட்டுக்கிட்டேன். இப்போ, அன்பழகன் அண்ணனின் மரணம் எனக்குப் பெரிய சோகத்தை கொடுத்திருச்சு. அவரது இறப்பு பற்றி நிறைய மக்கள் பேசுறது, தொலைக்காட்சில செய்திகள் வந்துகொண்டே இருப்பது எல்லாமே அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பலனை அடைந்து விட்டார்னு நம்பிக்கை கொடுத்திருக்கு'' என்று தன் நினைவுகளைப் பகிர்ந்தார் இயக்குநர் அமீர்.

அடுத்த கட்டுரைக்கு