Published:Updated:

"எம்.ஜி.ஆர் கட்சியில் பி.ஜே.பி நுழைவது அயோக்கியத்தனம்!" - வெடிக்கும் அமீர்

அமீர்
அமீர்

வி.இசட் துரை இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்திருக்கும் 'நாற்காலி' படத்தின் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' பாடலை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட கடம்பூர் ராஜூ அமைச்சர் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக இயக்குநர் அமீரிடம் பேசினேன்.

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' பாடலை எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டுமென உங்களுக்கு ஏன் தோன்றியது?

"எம்.ஜி.ஆர் பாடலான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' பாடலை தமிழக முதலமைச்சர் வெளியிட்டா நல்லாயிருக்கும்னு முடிவு பண்ணது தயாரிப்பாளர். இதுக்கு முதலமைச்சரும் சம்மதம் சொல்லியிருந்தார். வெறுமென ஒரு சினிமா பாடலை முதலமைச்சர் இல்லத்தில் வெளியிட வாய்ப்பு கிடையாது. ஆனா, எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள்னு ஓகே சொல்லியிருப்பார்னு நினைக்குறேன். பாட்டைக் கேட்டுட்டு, 'ரொம்ப நல்லாயிருக்கு... எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையை இவ்வளவு சுருக்கமா மூணு நிமிஷத்துல யாருமே சொல்லிட முடியாதுனு' சொன்னார். இந்தப் பெருமை பாடலாசிரியர் பா.விஜய்யைதான் சேரும்.

படத்துல எம்.ஜி.ஆர் பாட்டு இருக்கணும்னு ஆசைப்பட்டது கேட்டது நான். என்னுடைய சின்ன வயசுல இருந்தே எம்.ஜி.ஆர் மேல பெரிய பிரமிப்பு இருக்கு. மதுரையில எங்க வீட்டுக்குப் பக்கத்துல அண்ணா சிலை இருக்கும். இந்தியாவின் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்தாலும் இந்தச் சிலைக்கு மாலை போட்டுட்டுதான் போவாங்க. இந்தச் சிலைக்கு எம்.ஜி.ஆர் மாலை போட வந்தப்போ அவருடைய கையைப் பிடிச்சிட்டு நின்னிருக்கேன். அப்போ எனக்கு நாலு வயசுதான். என்னோட 14 வயசு வரைக்கும் அவரைப் பார்த்துட்டு இருந்தேன். இதுமட்டுமல்லாம தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. இதை இறையருள்னுதான் சொல்லுவேன். 'மக்கள் திலகம்', 'புரட்சி தமிழன்'னு எது சொன்னாலும் அவர்தான் ஞாபகத்துக்கு வருவார். அவருக்குப் பின்னாடி இன்னைக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யானு எத்தனையோ பேர் வந்துட்டாலும் அவர் இன்னும் சூப்பர் ஸ்டாராதான் பார்க்கப்படுறார். இதனால்தான், 'நாற்காலி' படத்துல எம்.ஜி.ஆரின் ரசிகனாக மற்றும் எம்.ஜி.ஆர் மக்கள் மன்றத்தை நிர்வகிக்குற ஒருத்தனா நடிக்க சம்மதிச்சேன்."

பாடலாசிரியர் பா.விஜய்யை இந்தப் பாட்டுக்கு அணுகியது ஏன்?

'நாற்காலி' படத்தில்...
'நாற்காலி' படத்தில்...

"இந்தப் பாட்டோட சிறப்பான விஷயம்னு நான் பார்க்குறது பாடல் வரிகள் எழுதின பா.விஜய்யைத்தான். கலைஞருடன் மிக நெருக்கமா இருந்தவர் பா.விஜய். எப்பவும் எதிர் எதிர் முகாம்களில் இருக்குறவங்களுக்குதான் மற்றவருடைய பலம் நல்லா தெரியும். 'நீங்க கலைஞருடைய காம்பவுன்ட்ல இருந்தாலும் எம்.ஜி.ஆர் பற்றி நல்லா தெரிஞ்சு வெச்சிருப்பீங்க'னு விஜய்கிட்ட சொன்னேன். இதை பா.விஜய்யும் ஒத்துக்கிட்டார். இந்தப் பார்வை ரொம்ப நல்ல பார்வைனு சொன்னார்."

இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு இந்தப் பாடலை ரீ-கிரியேட் பண்றது சவாலான விஷயமா இருந்திருக்குமே?

எடப்பாடி பழனிசாமி பாடலை வெளியிட்டபோது...
எடப்பாடி பழனிசாமி பாடலை வெளியிட்டபோது...

"கண்டிப்பா... ஏற்கெனவே வித்யாசாகர் படத்துக்கு ஓப்பனிங் பாடல் ஒன்றை போட்டுட்டார். ரெக்கார்டிங், ஷூட்டிங்லாம்கூட முடிஞ்சிருச்சு. இதுக்கு பிறகு, 'சார், இது ஒரு கமர்ஷியல் சட்டையர் படம். அதனால ஓப்பனிங் பாடல் வேணும்'னேன். 'ஏற்கெனவே ஓப்பனிங் பாட்டு முடிஞ்சிருச்சே'னார். அப்போ, 'கதாநாயகன் எம்.ஜி.ஆர் விசுவாசி, அவர் பாசறையில் நிர்வாகியா இருக்கார். இதனால, எம்.ஜி.ஆரின் பிறந்தநாளைக்கு வாழ்த்து சொல்வதற்காக எம்.ஜி.ஆர் போல் தோற்றம் கொண்டவர்களுடன் ஹீரோ சேர்ந்து பாடல் பாடுனா எப்படியிருக்கும்'னு கேட்டேன். 'ஐடியா ரொம்ப நல்லாயிருக்கு'னு சொன்னார். 'சார், இந்தப் பாட்டை ட்ரெண்டியா பண்ண வேண்டாம். பாட்டோட சவுண்ட் கேட்டாலே எம்.ஜி.ஆர் ஞாபகம் வரணும்'னேன். அதே மாதிரி, எம்.எஸ்.வி சார் எந்த மாதிரியான சவுண்ட் யூஸ் பண்ணுவாரோ அதே மூடுக்குக் கொண்டு போயிட்டார் வித்யாசாகர்."

பொதுமேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஆளும் அ.தி.மு.க அரசை விமர்சித்தவர் நீங்கள்... உங்களின் பாடலை வெளியிட முதலமைச்சரை அணுகியதன் காரணம்?

'நாற்காலி'
'நாற்காலி'

"நானொரு துறை சார்ந்த தொழிலில் இருக்கேன். தயாரிப்பாளர் இதுக்கு முதலீடு செஞ்சிருக்குற படத்துல நடிக்குறேன். அவர்தான் முதலமைச்சர் வெளியிட்டா நல்லாயிருக்கும்னு விரும்பினார். இந்த சூழல்ல, 'நான் வர மாட்டேங்க. எனக்கு விருப்பமில்ல'னு நான் சொல்றது ஏற்புடையது இல்ல. என்னோட கருத்துல எப்போவும் உறுதியா இருக்கேன். இதுல இருந்து மாறவே மாட்டேன். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு போனப்போ முதலமைச்சருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துட்டுதான் வந்தேன். பார்த்து பேசுனப்போ முதலமைச்சர், 'படம் வெற்றி பெற வாழ்த்துகள்'னு சொன்னார். 'உங்க அன்புக்கு ரொம்ப நன்றிணே'ன்னு சொல்லிட்டு வந்தேன்.

ஆமா, வயதில் மூத்தவரை அண்ணானு சொல்றதுதான் பழக்கம். அம்மா ஜெயலலிதாவை 'மேடம்'னு கூப்பிட்டேன். ஸ்டாலினை எங்கேயாவது சந்திக்கும் போதுகூட, 'உங்க உடல்நிலை எப்படியிருக்கு அண்ணே'னுதான் கேட்பேன். கமல்ஹாசன், சகாயம், திருமா... எல்லாரையும் அண்ணானுதான் கூப்பிட்டுதான் பழக்கம். நல்லகண்ணுவை ஐயானு பாசமா கூப்பிடுவேன்."

தேர்தல் களத்தில் இப்போது போட்டியிடும் பெரும்பாலனவர்கள் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பிரசாரம் செய்வதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

"ஒரு தலைவராவும் திரைப்பட நடிகராவும் பொதுவெளியில் எம்.ஜி.ஆர் இப்பவும் பாசிட்டிவ் இமேஜோடுதான் இருக்கிறார். அரசியலில் அவர் மேலயும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருந்தன. இது எல்லாருடைய காலத்திலும் இருந்திருக்கு. இதை யாராலும் மறக்க முடியாது. இதெல்லாம் தாண்டி பல தலைமுறைகள் தாண்டி இன்னமும் பாசிட்டிவ் எனர்ஜி தரும் பிம்பமா அவர் இருக்கார். மக்களுக்கு நெருக்கமான ஆட்சி பண்ணியிருக்கார். என்னோட பார்வையில் மக்களுக்கு நெருக்கமானவரா காமராஜரையும் சொல்லுவேன். அவரைப் போல் மக்களை உண்மையா நேசிச்சவங்க யாருமில்லை.

இதனால, இன்னைக்கு அரசியலுக்கு வரவங்க எம்.ஜி.ஆருடைய பெயரைப் பயன்படுத்துறாங்கனா பயன்படுத்தட்டும். பயன்படுத்தறதுக்கான வாய்ப்பு, சூழல் இங்கே இருக்கு. ஆனா, இப்போ அவர் யாருக்குச் சொந்தம்னு ஒரு கேள்வி எழுது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க, அவரின் தொண்டர்களின் கட்சி. முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், தொண்டர்கள் வளர்த்த கட்சி. இதை நேற்று வந்த யாரும் சொந்த கொண்டாட முடியாது. இந்தக் கட்சிக்குள் பி.ஜே.பி போன்ற பிற கட்சிகள் நுழைய நினைப்பது பெரிய அயோக்கியத்தனம். எம்.ஜி.ஆர் என்பவர் எல்லாருக்கும் சொந்தம். பொதுவானவர். ஏன்னா, எம்.ஜி.ஆர்-ரைப் பிடித்தவர்கள் தி.மு.க-வில் பல லட்சம் பேர் இருக்காங்க. ஏன்னா, தி.மு.க. வளர்ந்ததில் அவருக்கும் பங்கிருக்கு. இதனால், இப்பவும் தி.மு.க-வில் இருக்கக் கூடிய அதிகாரிகள், மந்திரிகள்னு பலரும் எம்.ஜி.ஆரின் ரசிகரா இருந்து வந்தவர்கள்தான். இவரின் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தவர்கள்தான். விஜயகாந்த்தையும் கறுப்பு எம்.ஜி.ஆர்னுதான் சொன்னாங்க. அதை அவரும் விரும்புனார். சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ்னு எல்லாருமே எம்.ஜி.ஆர் பிம்பத்தோடு பார்க்கப்பட்டவங்கதானே! இதனால், எம்.ஜி.ஆர் பொதுவான மனிதரா எல்லார் மனதிலும் எப்பவும் இருக்கதான் செய்வார். இதனால் அவருடைய பெயரைப் பயன்படுத்தவும் செய்வாங்க. இதை நாம பெருமையாதான் எடுத்துக்கணும்."

அடுத்த கட்டுரைக்கு