Published:Updated:

``பிரபாகரனை நல்லாவே தெரியும்... துல்கர் மனநிலை என்னன்னா?!'' - `வரனே அவஷ்யமுண்டு' இயக்குநர்

வரனே அவஷ்யமுண்டு
வரனே அவஷ்யமுண்டு

துல்கர் சல்மான் தயாரித்து நடித்திருக்கும் படம் 'வரனே அவஷ்யமுண்டு' (Varane Avashyamund). மலையாளத்தில் ரிலீஸான இப்படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட காட்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் அனுப் சத்யனிடம் பேசினேன்.

'' 'வரனே அவஷ்யமுண்டு' படத்துல தமிழ் பேசக்கூடிய பெரும்பாலான கேரக்டர்கள் நடிச்சிருக்காங்க. மதம், மொழி, சாதி இதையெல்லாம் கடந்து, மக்கள் ஒவ்வொருத்தவங்க கூடவும் தங்களை எப்படி கனெக்ட் பண்ணிக்குறாங்கனு இந்தப் படத்துல சொல்லியிருந்தோம். தமிழ் ஆடியன்ஸூக்கும் படத்தோட சப்ஜெக்ட் பிடிச்சிருந்தது. இது எங்க டீமுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கு'' எனப் பாசிட்டிவாக ஆரம்பித்தார் இயக்குநர் அனுப் சத்யன்.

`காயம்பட்ட அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!'-சர்ச்சை காட்சிக்கு துல்கர் சல்மான் விளக்கம்

''ஆனா, படத்துல வரக்கூடிய செல்லப் பிராணியான நாய்க்கு, 'பிரபாகரன்'னு பெயர் வெச்சிருந்தது சரியா... பெயர் வைக்கும்போது இதுபத்தி யோசிக்கலையா?''

அனுப் சத்யன்
அனுப் சத்யன்

தமிழ்நாட்ல முதல்ல இந்தப் படம் தியேட்டர்லதான் ரிலீஸ் ஆச்சு. அப்போ நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. நிறைய தமிழ் ஃபிரெண்ட்ஸ் எனக்கு போன் 'பண்ணி படம் நல்லாயிருக்குடா. ரொம்ப ரசிச்சுப் பார்த்தோம்'னு சொன்னாங்க. ஆனா,  படத்தோட நெட்ஃபிளிக்ஸ் ரிலீஸூக்குப் பிறகு, படத்துல வர்ற குறிப்பிட்ட காட்சி குறித்த நெகட்டிவ் கமென்ட்ஸ் ஆன்லைன்ல பரவி வைரலாச்சு. குறிப்பா பிரபாகரன் என்கிற பெயர். பிரபாகரன்ற பேர் மலையாளத்துல ரொம்ப பொதுவான பெயர். கேரளால நடுத்தர வயதுக்காரர்கள் பலருக்கு இந்தப் பெயர் இருக்கும். இதே பெயர்ல என்னோட சொந்தக்காரங்ககூட இருக்காங்க. மலையாளத்துல இந்தப் பெயரை வெச்சு ரொம்ப ஃபேமஸான மீம்ஸ்கூட இருக்கு. எந்த உள்நோக்கத்தோடவும் பிரபாகரன் பெயரை நாங்க இந்தப் படத்துல பயன்படுத்தலை. இதுதான் உண்மை.

மலையாளப் படங்கள் பார்க்குற தமிழ் ரசிகர்கள் அதிகம். இப்படியிருக்கும் சூழல்ல பிரபாகரனுக்கு தமிழ் ரசிகர்கள் எந்தளவுக்கு மரியாதை கொடுப்பாங்கனு நீங்க யோசிக்கலையா? இல்ல உங்களுக்கு பிரபாகரனைப் பற்றி தெரியாதா?

வரனே அவஷ்யமுண்டு
வரனே அவஷ்யமுண்டு

பிரபாகரன் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அதிகமாவே நான் இலங்கைக்குப் பயணம் செஞ்சிருக்கேன். இதுக்குக் காரணம்கூட இருக்கு. ஸ்கூல் படிச்சப்போ எழுத்தாளர் அனிதா பிரதாப் எழுதுன  'Island of Blood' புக்கைப் படிச்சிருக்கேன். அப்போ இருந்தே இலங்கை மேல பெரிய ஆர்வம் உண்டு. கடந்த வருஷம்கூட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுன்னு தமிழர் பகுதிகளுக்குப் போயிட்டு வந்தேன். போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திச்சுப் பேசுனேன். அவங்களோட வாழ்க்கையைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அங்கே இருந்த காலத்துல, பிரபாகரன் பற்றி நிறைய விஷயங்களைக் கேட்டேன். அவரோட மரபுகள் மற்றும் தாக்கத்தை அனுபவிச்சேன். அங்கே எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. இப்பகூட அவங்களோட நேரம் கிடைக்கறப்போ பேசுவேன். நீங்க முடியாத பசுமையான நினைவுகளை, இலங்கை எனக்கு கொடுத்திருக்கு. அந்த ஊர்மேல நிறைய மரியாதை வெச்சிருக்கேன்.

படத்துல வர்ற நாய், ஹீரோவை அன்பானவனா மாத்தியிருக்கும். ஞாபகம் இருக்குற மாதிரியான பெயரை, சுரேஷ் கோபி நாய்க்கு வெச்சிருக்க மாட்டார். அப்போ சின்ன பையன் ஒருத்தன்கிட்ட பேசிட்டிருக்குறப்போ, இந்தப் பெயர் ஞாபகம் வந்து அதை நாய்க்கு வைப்பார். மலையாள சினிமாவுல நிறைய ஹீரோ, வில்லன், காமெடியனுக்கு இந்தப் பெயரை வெச்சிருக்காங்க. இந்தப் பெயரை கேட்டாலே, அங்கே ஃபேமஸான மீம்ஸ் எல்லாருக்கும் ஞாபகம் வரும். எனக்கு குறிப்பிட்ட காட்சியை எழுதுறப்போ, இந்த மீம்ஸ்தான் ஞாபகம் வந்தது. அதனாலதான் இந்தப் பெயரை வெச்சேன். தமிழ்ல ஆடியன்ஸ் படம் பார்க்குறப்போ, இந்தப் பெயரை வேலுப்பிள்ளை பிரபாகரன்கூட தொடர்புபடுத்திப் பார்ப்பாங்கனு நினைக்கல. இதுக்காக நானும் வருத்தப்படுறேன். தவிர, பிரபாகரன் பற்றி என்னோட படத்துல எந்தக் காட்சியும் இல்லை. இப்போ வர்ற நெகட்டிவ் கமென்ட்ஸ், என்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கு. துல்கரோட மனநிலையும் அதான். நானும் துல்கரும் இதைப் பற்றிய சரியான புரிதலை, தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சி செய்றோம்.

சென்னையில் ஷூட்டிங் நடந்தப்போ, தமிழ்நாட்டு மக்கள் பற்றி துல்கர் சல்மான் எதுவும் சொன்னாரா?

வரனே அவஷ்யமுண்டு
வரனே அவஷ்யமுண்டு
`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction?

துல்கருக்கு சென்னை ரொம்பப் பிடிக்கும். நிறைய முறை இதைச் சொல்லியிருக்கார். அவர் இங்கே வளர்ந்தவரும்கூட. அவர் தமிழ் மக்களை ரொம்ப நேசிக்குற மனிதர். இந்தப் படத்துல வேலை பார்த்த பெரும்பாலான டெக்னீஷியன்ஸ்கூட சென்னையைச் சேர்ந்தவங்கதான்.

மலையாள படம் முழுவதையும், சென்னையில் ஷூட் பண்ணுன அனுபவம் எப்படியிருந்தது?

வரனே அவஷ்யமுண்டு
வரனே அவஷ்யமுண்டு

ரொம்ப நல்லாயிருந்தது. இங்கே ஷூட் பண்ணுனப்போ நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. சொல்லப்போனா, ஷூட்டிங் நடந்த நாள்களை எங்க டீம் ரொம்ப மிஸ் பண்ணிட்டு இருக்கோம்னுகூட சொல்லலாம். படம் முழுக்க சென்னைலதான் ஷூட் பண்ணனும்னு ரொம்பவே ஆசைப்பட்டு எடுத்தோம். தமிழ்நாட்டு கலாசாரம் நிறைய பிடிக்கும். இது என்னோட செகண்ட் ஹோம் மாதிரி. ஏன்னா, விப்ரோ கம்பெனியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா சென்னைலதான் வேலை பார்த்தேன். இதனால நிறைய ஃபிரெண்ட்ஸ் எனக்கு இங்கே இருக்காங்க. நான் ரசிச்ச அழகான சென்னையை, கேரளா ஆடியன்ஸூக்கு காட்டத்தான், படத்தை இங்கேயே ஷூட் பண்ணேன்'' என்கிறார் அனுப் சத்யன்.

அடுத்த கட்டுரைக்கு