Published:Updated:

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் புது கூட்டணி... பரபரக்கும் கோலிவுட்!

விஜய் 65 படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் பட்ஜெட் சிக்கல்களால் வெளியேவந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்கிற சஸ்பென்ஸ்தான் கோலிவுட்டில் பலகாலமாக ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் இயக்கிய முருகதாஸே இந்தப் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இது 'துப்பாக்கி-2'வாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அந்தப் படத்தில் இருந்து பட்ஜெட் சிக்கல்களால் விலகினார்.

'மாஸ்டர்' படத்தில்...
'மாஸ்டர்' படத்தில்...

முருகதாஸ் வெளியேற்றத்துக்குப்பிறகு, நிறைய இயக்குநர்களிடமிருந்து கதைகள் கேட்டு வந்தார், நடிகர் விஜய். அதில் 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சனுக்கு ஓகே சொன்னார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில், இயக்குநர் முருகதாஸும் நடிகர் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயனும் 'அயலான்', 'டாக்டர்' ஆகிய இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, வேறு எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை. பல பேரிடம் கதை கேட்டு வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநர் தேசிங் பெரியசாமி, 'டிக்கிலோனா' படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி, அட்லியின் உதவி இயக்குநரான சிபிச்சக்ரவர்த்தி என இவர்கள் மூவர் சொன்ன கதையும் பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்திருக்கிறார். ஆனால், அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் சந்திப்பு கோலிவுட்டில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்

ஏற்கனவே, முருகதாஸ் கதை எழுதி தயாரித்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் இயக்குநர் முருகதாஸுடன் பணிபுரிய வேண்டும் என்பது தனது ஆசையாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இது எல்லாவற்றையும் பார்க்கும்போது, இயக்குநர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விஜய்க்கு சொன்ன அதே கதையாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு