கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

பவுடர் பூசாத கிராமத்தின் கதை!

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில்

ஒரு ஊரில் நடக்கிற ஒரு விஷயத்தில் அத்தனை மீடியாவும் அந்தக் கிராமத்தையே எட்டிப் பார்க்குது. அது எதனால், ஏன் எப்படின்னு கதை போகும்.

"நம்ம கிராமங்களில் புகுந்து வந்தால் அவ்வளவு விஷயம் கிடைக்குது. சினிமாவா எடுத்தும் தீராது. நிறைய படிச்சிட்டோம் என்பதோ, நிறைய சினிமா எடுத்துட்டோம் என்பதோ விஷயமே இல்லை. எழுதுவதும் படிப்பதும், படம் எடுப்பதும் நமக்குள் ஒரு மாற்றம் நிகழ்த்தணும். என்னோட ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ அப்படித்தான் இருக்கும். நம்மைச் சீண்டிப் பார்த்ததை, அனுபவிச்சு உணர்ந்ததை சினிமாவாக எடுத்தால் நிச்சயம் நல்லாருக்கும்” தீர்க்கமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி.
பவுடர் பூசாத கிராமத்தின் கதை!
பவுடர் பூசாத கிராமத்தின் கதை!

“தலைப்பைப் பார்த்தால் கோபமான ஆளாக இருப்பீங்க போல?”

“கதை நடக்கும் இடம் தொலைக்காட்சிப் பெட்டிகூட வராத குக்கிராமம். அப்படி ஒரு ஊரில் நடக்கிற ஒரு விஷயத்தில் அத்தனை மீடியாவும் அந்தக் கிராமத்தையே எட்டிப் பார்க்குது. அது எதனால், ஏன் எப்படின்னு கதை போகும். நம்ம எல்லோருக்குமே கூட இருக்கிற மனுசங்க, அரசு, அதிகாரிகள்மீது எப்பவும் ஒரு கோபம் இருக்கும். கவனிக்கப்படாமல் இருக்கும்போது இந்தக் கோபம் இன்னும் உச்சத்திற்குப் போகும். இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கிற நம்மை மாதிரி ஆட்களுக்கு நிறைய இயலாமைகளுக்கு மத்தியில் சின்னச் சின்னப் பங்களிப்புக்களைப் பண்ணணும்னு ஒரு நினைவு துரத்திக்கிட்டே இருக்கு. இந்தப் படம் அப்படியொரு பங்களிப்பு. இதில் வருகிற மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன், அப்பத்தா பாட்டி, ரம்யா பாண்டியன் எல்லாம் வேற யாரும் இல்ல... நாமதான்!”

பவுடர் பூசாத கிராமத்தின் கதை!
பவுடர் பூசாத கிராமத்தின் கதை!

“ஜோதிகா, சூர்யா தயாரிப்பில் இந்தப் படம் கிடைத்தது எப்படி?”

“‘சூரரைப்போற்று'வில் உதவி இயக்குநராக இருந்தேன். ராஜசேகர் சார்கிட்ட போன் பண்ணி உங்களைச் சந்திக்கணும்னு சொன்னேன். போன் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னவர் கிட்டே கதையோட பைண்டிங்கைக் கொடுத்து வாய்ப்பு கேட்டேன். ‘ஏழு படம் தயாரிச்சுட்டு இருக்கேன். இந்த நினைப்போட ஆபீஸ் பக்கம் வராதே’ன்னு அனுப்பிச்சிட்டார். உங்க நண்பர் யார்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இரண்டு நாளில் போன் செய்து ‘படிச்சேன், நல்லாருக்கு. நாமே செய்துக்கலாம்’னு சொல்லிட்டார். வேலையை ஆரம்பித்துவிட்டேன். சூர்யா சாரின் சமூக நலன் நமக்குக் குறைந்ததல்ல. அவரும் ஊக்கப்படுத்தியது சந்தோஷம்.”

அரிசில் மூர்த்தி
அரிசில் மூர்த்தி

``ரம்யா பாண்டியன், வாணி போஜன் தவிர்த்து அதிகம் புதுமுகங்கள் இருக்காங்களே?”

“எல்லோரும் புதுமுகமாக இருந்தால் நல்லாருக்கும்னு நெனச்சேன். எனக்கு நல்லா தமிழ் பேசுகிற நடிகைகள் வேணும். நிறைய பேரைப் பார்த்த பிறகு ரம்யா பாண்டியன், வாணி போஜன் இரண்டு பேரும் சரியா வந்தாங்க. 2D ஆபீசில் புரமோஷன் ஹெட் ஆக மாணிக்கம்னு ஒருத்தர் இருக்கார். அவரை வேட்டி, சட்டை, டவுசர் போட்டுப் பார்த்தோம்... அப்படியே ஊர்க்காரர் மாதிரி இருந்தார். இந்தப் படத்தில் இரண்டு காளைகளோடு வளர்த்து உறவாடித் திரிகிற முக்கிய கேரக்டர். கொரோனா காலத்தில் நாலு மாதம் அந்தக் காளைகளோடு பழகி, சொன்னால் கேக்கிற மாதிரி ஆக்கிட்டார். அந்த இரண்டு காளைகளுடன் கதைநாயகனுக்கு இருக்கின்ற உறவும், அது காணாமல் போகும்போது வருகிற இடர்ப்பாடுகளும், நேர்ந்துவிடுகிற மீடியா கவனமும் இறுதிக்காட்சிகளில் பெரும் எழுச்சியாக இருக்கும். பாடகர் கிரிஷ் இதில் இசை அமைப்பாளராகப் பிரவாகமெடுத்திருக்கிறார்.”

பவுடர் பூசாத கிராமத்தின் கதை!
பவுடர் பூசாத கிராமத்தின் கதை!

“அசல் கிராமம் தெரியுதே...”

“அதற்கான பயணம்தான் பெருசு. இப்ப எல்லா ஊரும் மாறிப்போய் நிக்குது. அப்படியொரு வசதியில்லாத கிராமத்தைத் தேடி கடைசியா சிவகங்கை பக்கத்துல பிடிச்சோம். இப்படி படம் எடுக்க வருவாங்கன்னு பார்த்து வச்சது மாதிரியிருக்கு, பவுடர் பூசாத இந்த கிராமம். தலையில் கொதிச்சு இறங்கியிருக்கிற வெயிலை நீங்கள் ஒளிப்பதிவாளர் சுகுமார் வச்ச பிரேமில் பார்க்கலாம். ‘ஒரு பிரேக்கிங் நியூஸின் லைஃப்பே அடுத்த பிரேக்கிங் நியூஸ் வர்ற வரைக்கும்தான்’னு ஒரு டயலாக் படத்தில் வருது. சினிமா இந்த வாழ்க்கையோட சின்னப் பகுதி. ஆனால் அதில் நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுது. நாமளும் அப்படி ஏதாவது செய்யறதுதான் முதல் வேலை. மத்ததெல்லாம் அப்புறம்தான்.”