Published:Updated:

``ஈரம் -2 வரும்... ஆனால்..?'' - இயக்குநர் அறிவழகன் #10YearsOfEeram

Director Arivazhagan ( என்.கார்த்திக் )

"'ஈரம்' கதையை ஒன்லைன் சொல்லி, கதையா கொடுத்து, முழு ஸ்கிரிப்டா கொடுத்து, டிரெய்லர் எடுத்து, படத்துல இருக்கிற ரெண்டு சீன் எடுத்து, இதை எல்லாம் தாண்டிதான் அந்தக் கதையை ஷங்கர் சார் தயாரிச்சார்!" - இயக்குநர் அறிவழகன்

``ஈரம் -2 வரும்... ஆனால்..?'' - இயக்குநர் அறிவழகன் #10YearsOfEeram

"'ஈரம்' கதையை ஒன்லைன் சொல்லி, கதையா கொடுத்து, முழு ஸ்கிரிப்டா கொடுத்து, டிரெய்லர் எடுத்து, படத்துல இருக்கிற ரெண்டு சீன் எடுத்து, இதை எல்லாம் தாண்டிதான் அந்தக் கதையை ஷங்கர் சார் தயாரிச்சார்!" - இயக்குநர் அறிவழகன்

Published:Updated:
Director Arivazhagan ( என்.கார்த்திக் )

"இயக்குநராகணும்னு சினிமாவுக்கு வர்றவங்க எல்லோருக்கும் அவங்க பெயரை திரையில பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்படிதான் எனக்கும் இருந்தது. எத்தனையோ ஜாம்பவான்களுடைய பெயர்கள் வந்த எங்க ஊர் தியேட்டர்ல என் பெயரை முதல்முறையா பார்த்தவுடன் ரொம்ப எமோஷனலாகிட்டேன்" - தன்னுடைய முதல் படம் `ஈரம்' வெளியாகி பத்து வருடம் நிறைவடைந்ததையொட்டி அதன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் அறிவழகன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'ஈரம்' கதையைத் தயாரிப்பாளர் ஷங்கர்கிட்ட சொல்லும்போது எப்படி இருந்தது... கதை கேட்டுட்டு என்ன சொன்னார்?

"ஒருநாள் ஷங்கர் சார்கிட்ட ரெண்டு கதையுடைய ஒன்லைன் சொன்னேன். அதுல அவருக்கு `ஈரம்' கதை பிடிச்சிருந்தது. அதை 'முழுமையா எழுதிட்டு வா'னு சொன்னார். ஒரு மாசம் கழிச்சு அவர்கிட்ட கதை சொல்லப் போனேன். அவர் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. பெரிய இயக்குநர், என்னுடைய குருநாதர். அதனால எங்க நான் சொதப்பினாலும் அவர் கண்டுபிடிச்சிடுவார்னு தெரியும். அதனால ரொம்ப கவனமா தயார் பண்ணிட்டு போய் நாலு மணி நேரம் கதை சொன்னேன். அதைக் கேட்டுட்டு, `இதை பவுன்டட் ஸ்கிரிப்டா பண்ணிட்டு வா'னு சொன்னார். நானும் கதையா இருந்ததை படத்துக்கான ஸ்கிரிப்டா மாத்திட்டு கொண்டுபோய் கொடுத்துட்டு வந்துட்டேன். அதை அவர் முழுமையா படிச்சு, எக்ஸாம் பேப்பரை திருத்துற மாதிரி பேனாவுல திருத்தியிருந்தார். அதுல சில இடங்கள்ல 'Good', சில இடங்கள்ல 'Very Good'னு போட்டிருந்தார். 'கதை நல்லாயிருக்கு. நிறைய பேர் தோத்துப்போற இடம் அந்தக் கதையைக் காட்சியாக்கும்போதுதான். அதனால, இந்தக் கதையில இருக்கிற ஏதாவது ரெண்டு சீனை எடுத்துக்காட்டு. நானே அதுக்கான செலவை ஏத்துக்குறேன்"னு சொன்னார்."

"ஆதி - அஞ்சலி ஜோடியை வெச்சு ஷங்கர் சார் சொன்ன மாதிரி ரெண்டு சீனை எடுத்துக்கிட்டு, அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுனு வாக்கியத்துல சொல்லி அவருக்கு போட்டு காட்டினேன். அதைப் பார்த்துட்டு உடனே அட்வான்ஸ் கொடுத்துட்டார் ஷங்கர் சார்!"
இயக்குநர் அறிவழகன்

ஆதி, சிந்து மேனன், நந்தா, சரண்யா மோகன்தான் உங்களுடைய முதல் சாய்ஸா இருந்ததா?

Eeram
Eeram

"இது டூயல் ஹீரோ சப்ஜெக்ட் மாதிரிதான். எந்த கேரக்டருக்கு பெரிய ஹீரோ நடிச்சாலும் மக்களுடைய கவனம் அந்த நடிகர் மேலதான் இருக்கும்னு புது ஹீரோ வெச்சு போயிடலாம்னு தோணுச்சு. ஷங்கர் சாரும் அதேதான் சொன்னார். அப்படிதான் நடிகர்களை தேர்ந்தெடுத்தோம். 'மிருகம்' படம் முடிச்சுட்டு, ஆதி ஏதோ ஒரு விழாவுல உட்கார்ந்திருந்த மாதிரி ஒரு போட்டோ பார்த்தேன். போலீஸ் கேரக்டருக்கு அவர் சரியா இருக்கும்னு தோணுச்சு. அப்போ இருந்த நிறைய ஹீரோயின்கள்கிட்ட பேசினோம். ஆனா அவங்க 'கூட யார் நடிக்கிறாங்க? சம்பளம் எவ்வளவு?'னு இதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுனால அவங்களை படத்துக்குள்ள கொண்டு வரலை. அதுக்குப் பிறகுதான், சிந்து மேனன் படத்துக்குள்ள வந்தாங்க. நான் டைரக்‌ஷன் படிச்சுட்டு இருந்த சமயத்துல நந்தா ஆக்டிங் படிச்சுட்டு இருந்தார். அப்படித்தான் பழக்கம். தவிர, எந்த இமேஜும் இல்லாத ஒரு நடிகர் தேவைப்பட்டது. அதனால நந்தாவை நடிக்க வெச்சேன். தங்கச்சி கேரக்டருக்கு சரண்யா மோகன்தான் என் முதல் சாய்ஸ்!"

உங்களுடைய குருநாதர் தயாரிப்பாளராகவும் இருக்கிறதுனால முதல் படம் எளிதா அமைஞ்சுடுச்சா?

"அவருக்கு பிடிச்ச வித்தியாசமான கதைகளைதான் அவர் தயாரிக்கிறார். அப்படி பார்த்தால், வெளியே இருந்து வந்த சிம்புதேவன் படத்தையும் ஷங்கர் சார்தான் தயாரிச்சார். அவருடைய உதவி இயக்குநர்களுக்கு முன்னுரிமை அப்படியெல்லாம் இல்லை. அவருடைய உதவி இயக்குநரா இருந்ததுனால அவரைச் சந்திச்சு கதை சொல்றது சீக்கிரமா நடந்திடும். ஆனா, அவருக்கு கதை பிடிச்சு, அதை நம்பி, அவர் ஓகே சொல்றது ஈஸியா நடந்திடாது. 'ஈரம்' கதையை ஒன்லைன் சொல்லி, கதையா கொடுத்து, முழு ஸ்கிரிப்டா கொடுத்து, டிரெய்லர் எடுத்து, படத்துல இருக்கிற ரெண்டு சீன் எடுத்து, இதை எல்லாம் தாண்டிதான் அந்தக் கதையை ஷங்கர் சார் தயாரிச்சார்!"

"வாழ்க்கையில் எல்லாமே செகண்ட் ஹேண்ட்தான்டா"ங்கிற ஒரு வசனம்தான் படத்துக்குள்ள கூட்டிட்டு போகும். இந்த ஐடியா எப்படி வந்தது?

Eeram
Eeram

"எல்லோரும் காதலை கடந்துதான் வந்திருப்போம். திருமண வாழ்க்கைக்குள்ள வந்த பிறகு, சந்தேகம்ங்கிற ஒரு விஷயம் வந்திடுது. அதை குறிப்பிடத்தான், 'என்னதான் இருந்தாலும் என் ரம்யா'னு ஆதி சொல்ற மாதிரி டயலாக் எழுதினேன். ஆனா, எல்லாத்துக்கும் சந்தேகப்பட்டு வார்த்தைகளால் நோகடிப்பவர் நந்தா. அப்போ அவருடைய நண்பர் சொல்ற இந்த வசனம்தான் படத்துக்குள்ள மக்களை கூட்டிட்டுப் போகும். இந்தக் கதை எழுதும்போது எனக்கு கல்யாணமாகலை. 'வாழ்க்கையில் எல்லாமே செகண்ட் ஹேண்ட்தான்டா... மனைவி உட்பட'னு எழுதியிருந்தேன். அதை ஷங்கர் சார் படிச்சுட்டு, 'இப்படி சொல்றது ரொம்ப தப்பா இருக்கும். அதனால, 'வாழ்க்கையில் எல்லாமே செகண்ட் ஹேண்ட்தான்டா. அது மனைவியாகூட இருக்கலாம்'னு மாத்தினார்."

ஹாரர் படத்திற்குத் தண்ணீரைப் பயன்படுத்தியது ஏன்?

"கேமரா, இசை, ஒளிப்பதிவுனு எல்லாத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து டெக்னிக்கலா ஒரு படம் பண்ணணும்னு நினைச்சேன். அதுக்கு ஹாரர்தான் சரி. வழக்கமா ஹாரர் படங்கள்ல காட்டப்படுற எந்த விஷயங்களும் இதுல இருக்கக் கூடாதுனு நினைச்சு கதை எழுதினேன். அதேபோல ஹாரர் படத்தை எமோஷனலா சொல்லணும்னு நினைச்சேன். உதவி இயக்குநரா இருக்கும்போது நான் தங்கியிருந்த ரூமுக்குப் பக்கத்துல இருக்கிறவங்க பைப்பைத் திறந்துவிட்டுட்டு ஆபீஸ் போயிடுவங்க. அப்போ, அதுல தண்ணீர் நிறைஞ்சு வந்து வாசல் படியில சொட்டிக்கிட்டு இருக்கும். இதே மாதிரி பலமுறை நடந்திருக்கு. இதைப் பார்த்துட்டுத்தான் தண்ணீரை வெச்சு படம் பண்ணணும்னு நினைச்சேன்."

'ஈரம்' படத்துக்குக் கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு என்ன?

Eeram
Eeram

"படத்துடைய எடிட்டிங் போய்க்கிட்டு இருந்தப்போ சில காட்சிகள் பார்த்துட்டு, 'பின்னிட்ட'னு ஷங்கர் சார் நைட் 11 மணிக்கு போன் பண்ணி பாராட்டினார். அப்புறம், ரஜினி சார் படம் பார்த்துட்டு என்கிட்ட பேசினார். இந்த ரெண்டு பாராட்டும் என் வாழ்நாள்ல மறக்க முடியாதது"

நயன்தாராவுக்கு கதை சொல்லியிருக்கிறதா கேள்விப்பட்டோம். அந்தப் படம் என்னாச்சு?

Nayanthara
Nayanthara

"இந்தக் கதையே அவங்களுக்காக எழுதினதுதான். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படம். அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. பெரிய பட்ஜெட்னால பெரிய தயாரிப்பாளர் இருந்தா சரியா இருக்கும்னு நினைச்சேன். அவங்களும் அதைதான் நினைச்சாங்க. ஆனா, அப்படி அமைய தாமதமாகிடுச்சு. இதற்கிடையில அவங்களுக்கு வேற படங்கள் வந்துடுச்சு. நிச்சயமா அந்தக் கதையை அவங்களை வெச்சு எடுப்பேன். என்னால வேற ஹீரோயினை இந்தக் கதைக்கு நினைச்சுப்பார்க்க முடியலை. அதனாலதான் அவங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் அந்த ஸ்கிரிப்ட் வெயிட்டிங்!"

த்ரில்லர் ஜானர்லயே படம் பண்றோமேனு நினைச்சதில்லையா?

Eeram
Eeram

"'குற்றம் 23' படத்துக்குப் பிறகு. ஒரு லவ் சப்ஜெக்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா இப்போ எந்த ஹீரோவும் காதல் கதையில நடிக்க விரும்புவதில்லை. எல்லோரும் ஆக்‌ஷன் த்ரில்லர்தான் கேட்குறாங்க. பிசினஸ், மார்க்கெட், சம்பளம்னு எல்லாமே ஆக்‌ஷன் படங்களுக்குத்தான் இருக்கு. ஆனா, மக்கள் மனசுல இடம் பிடிக்க காதல் கதையில நடிக்கிறதுதான் அடித்தளம். விஜய் சார் ஆரம்பத்துல பல படங்கள் காதல் கதையில நடிச்சுதான் மக்கள் மனசுல இடம்பிடிச்சார். அப்புறம்தான் 'திருமலை' படம் மூலமா ஆக்‌ஷன் ஹீரோவா வந்தார். ஆனா, இப்போ ஹீரோ, தயாரிப்பாளர் எல்லோரும் எடுத்தவுடனே ஆக்‌ஷன் சப்ஜெக்ட் இருக்கானுதான் கேட்குறாங்க!"

சோஷியல் மீடியா அப்போ இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்குமேனு நினைக்கிறீங்களா?

"மக்கள் நல்ல படத்தை கொண்டாட தவறினதில்லை. 'ஈரம்' வெளியானபோது நான் எதிர்ப்பார்க்காத வரவேற்பு கிடைச்சது. ஆனா, இப்போ இருக்கிற மாதிரி அப்போ சோஷியல் மீடியா இருந்திருந்தால் இன்னும் அதுக்கான வரவேற்பு அதிகமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்."

'ஈரம் 2' வர வாய்ப்பிருக்கா?

'''ஈரம்' படம் வெளியாகி பத்து வருஷம் கழிச்சி ஹாரர் படம்தான் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். 'ஈரம் 2' படத்துக்கான கதை ரெடியா இருக்கு. ஆனா, 'ஈரம்- 2' எடுத்தால் அது ஷங்கர் சார் புரொடக்‌ஷன்லதான் இருக்கும்."