Published:Updated:

``சிரிப்பே வரலைன்னார் தயாரிப்பாளர்... ஆனா, தியேட்டர்ல?!'' #3YearsofMaragathaNanayam

மரகத நாணயம்

2017-ம் ஆண்டு அறிமுகமாகி கவனம் பெற்ற இயக்குநர்களில் ARK சரவனும் ஒருவர். இவர் இயக்கிய `மரகத நாணயம்’ திரைப்படம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கொடுத்தது.

``சிரிப்பே வரலைன்னார் தயாரிப்பாளர்... ஆனா, தியேட்டர்ல?!'' #3YearsofMaragathaNanayam

2017-ம் ஆண்டு அறிமுகமாகி கவனம் பெற்ற இயக்குநர்களில் ARK சரவனும் ஒருவர். இவர் இயக்கிய `மரகத நாணயம்’ திரைப்படம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கொடுத்தது.

Published:Updated:
மரகத நாணயம்

இந்தப் படம் வெளியாகி தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இயக்குநர் ARK சரவனிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மரகத நாணயம்’ படத்தோட ஐடியா எப்படி வந்தது..?

மரகத நாணயம்
மரகத நாணயம்

`` `மரகத நாணயம்’ படத்தோட கதையே நியூஸ் பேப்பர்ல வந்த ஒரு சின்ன செய்தி மூலமாத்தான் தொடங்கிச்சு. ஒரு நாள் பேப்பர்ல இறந்தவரின் உடலை அடக்கம் பண்ணும்போது, அவர் உயிரோட எழுந்திருச்சதா ஒரு நியூஸ் பார்த்தேன். அப்படி எழுந்திருச்சவர், உருவத்தில் அதே ஆளாகவும், கேரக்டரில் வேற ஒரு ஆளாகவும் இருந்தால் எப்படி இருக்கும்னு தோணுச்சு. அப்படி எழுந்து வர்றவருக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தால், அவரோட நண்பர்களையும் வர வச்சானு அந்த ஐடியா பெருசாகப் பெருசாக `மரகத நாணயம்’ படத்தோட கதை ரெடியாச்சு. எல்லாரும் அந்த மரகதக் கல்லை யோசிச்சிட்டுதான் இந்தக் கதையையே எழுதி இருப்பாங்கன்னு நினைப்பாங்க. ஆனால், அந்தக் கல் விஷயத்தையே கடைசியாத்தான் நாங்க சேர்த்தோம்.’’

``தயாரிப்பாளார் கிடைச்சது எப்படி..?"

``ஸ்கிரிப்ட் ரெடியானதும் ஒரு தயாரிப்பு நிறுவனத்துல சொல்லி, படமும் கமிட்டாகியாச்சு. ஆதி சார்கிட்ட கதை சொல்லி அவரும் ஓகே பண்ணிட்டார். ஆனால், அந்தக் கம்பெனியில அப்போ இந்தப் படத்தை பண்ண முடியாம போச்சு. அதுக்கப்புறம், இப்போ சமீபத்தில் காலமான `4ஜி’ பட இயக்குநர் அருண்தான், `ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி’யில `மரகத நாணயம்’ மாதிரி ஒரு கதைதான் கேட்கிறாங்க’ன்னு சொல்லி, என்னை அனுப்பி வெச்சார். அங்க போனா, என்னை மாதிரியே 7, 8 பேர் கதை சொல்றதுக்கு வந்தாங்க. 20 நிமிஷம் மட்டும் கதை கேட்டுட்டு, `உங்க கதை அடுத்த ரவுண்டுக்கு செலெக்ட்டட்’னு ரியாலிட்டி ஷோக்களில் சொல்ற மாதிரி சொன்னாங்க. அடுத்த ரவுண்ட்ல மொத்தம் ஏழு பேரு முழுக்கதையையும் கேட்டாங்க. கதை கேட்டு முடிச்சதும் ஏழு பேரும் கை தட்டுனாங்க. நான் கதை சொன்னப்போதான், `எட்டு தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மு.மாறனும் கதை சொன்னாங்க. `ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி’யோட முதல் படமான `உறுமீன்’ சீரியஸான படமா இருந்ததனால, ரெண்டாவது படமா `மரகத நாணயம்’ மாதிரி காமெடி படமா இருக்கட்டும்னு என் கதையை செலெக்ட் பண்ணாங்க.’’

``ஹீரோ, ஹீரோயினுக்கு முதலில் வேற ஆப்ஷன் வெச்சிருந்தீங்களா..?"

``ஹீரோவா யாரை வெச்சு போகலாம்னு பேசும்போது, ஆதி சாருக்கு ஆல்ரெடி நான் இந்தக் கதையை சொன்ன விஷயத்தை தயாரிப்பாளர் டில்லி பாபு சார்கிட்ட சொன்னேன். ஆதி சாரும் டில்லி பாபு சார்கிட்ட பேசுனார். `எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு சார். உங்களுக்கு ஓகேனா நானே பண்றேன்’னு சொன்னார். ஆனால், முதலில் டில்லி பாபு சார் யோசிச்சார். ஏன்னா, ஆதி சார் ஆக்‌ஷன் ஹீரோ. அவரை வெச்சு காமெடி படம் பண்ண முடியுமானு தயங்கினார். அவரே சில ஹீரோக்கள்கிட்ட கதை சொல்றதுக்காக அனுப்பியும் வெச்சார். ஆனால், அந்த ஹீரோக்களுக்கெல்லாம் கதை பிடிச்சிருந்தது. ஆனால், படத்துல ஹீரோ அளவுக்கு மற்ற சில கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருந்ததுனால, ஹீரோ கேரக்டர் தனியா தெரியாதேனு தயங்குனாங்க. அதனால, படமும் ஆரம்பிக்க லேட்டாகிட்டே போச்சு. அதுக்கப்புறம், `சரி ஆதியை வெச்சே போகலாம்’னு தயாரிப்பாளர் சொல்லிட்டார்.

மரகத நாணயம்
மரகத நாணயம்

ஹீரோ கேரக்டர் மாதிரியே ஹீரோயின் கேரக்டரும் கமிட்டாகுறதுக்கு லேட்டாச்சு. ஏன்னா, ஹீரோயின் கேரக்டருக்கு படம் முழுக்க ஆண் குரல்தான் வரும்கிறதுனால பல பேர் யோசிச்சாங்க. `முண்டாசுப்பட்டி’ படத்துல நான் உதவி இயக்குநரா இருந்தனால நந்திதா நல்ல பழக்கம். அவங்ககிட்டதான் சொல்லி ஓகே பண்ணுனேன். ஆனால், அவங்க இந்தப் படத்தை ஆரம்பிச்ச சமயத்தில் ஒரு கன்னட படத்தில் மாட்டிக்கிட்டாங்க. அவங்களால வர முடியாததனால, வேற வேற ஹீரோயின் தேடும் போது நிக்கி கல்ராணி இந்தக் கேரக்டருக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு. ஆதி சாருக்கு தெலுங்குல மார்கெட் இருக்கிறதுனால படத்தை தெலுங்கிலும் டப் செய்யலாம்னு ப்ளான் பண்ணினோம். அதனால, ஏற்கெனவே ஆதி சாரும் நிக்கி கல்ராணியும் படம் பண்ணியிருந்தனால, இந்த காம்போ சரியா இருக்கும்னு முடிவு பண்ணிட்டோம். இந்தக் கதை எழுதும்போதே `முண்டாசுப்பட்டி’ படத்துல முனிஸ்காந்த்தா நடிச்ச ராமதாஸை மனசுல வெச்சும், ஆனந்த் ராஜ் சாரை மனசுல வெச்சும்தான் அவங்க நடிச்ச கதாபாத்திரத்தை எழுதுனேன். அதனால, அவங்களையே கமிட் பண்ணிட்டோம்.’’

``காளி வெங்கட்டுக்கு `முண்டாசுப்பட்டி’ ராமதாஸோட வாய்ஸ்; ஹீரோயினுக்கு காளி வெங்கட்டோட வாய்ஸ்னு டப்பிங்ல அதகளம் பண்ணியிருப்பீங்க. அந்த ஐடியா எப்படி வந்துச்சு..?"

மரகத நாணயம்
மரகத நாணயம்

``ஒருத்தரோட உடம்புக்குள் பேய் வந்துட்டா, அவரோட குணாதிசியம் மாறும்னு நாம பல படங்களில் பார்த்திருக்கோம். குரலும் பேயா வர்றவங்களோட குரலே இருந்தால் நல்லா இருக்குமேனுதான் அந்த ஐடியா யோசிச்சோம். அதனாலதான், `முண்டாசுப்பட்டி’ ராமதாஸோட குரலை காளி வெங்கட் நடிச்ச கேரக்டருக்கு கொடுத்து, காளி வெங்கட் ஆவி ராம்தாஸுக்கு வர்ற மாதிரி பண்ணியிருந்தோம். அருண்ராஜா மிமிக்ரி ஆர்டிஸ்ட்டா இருந்ததனால, அவரே அவருக்கு வேற வாய்ஸ்ல டப்பிங் கொடுத்தார். ஒரு பெண்ணுக்குள்ள ஆணோட ஆவி வந்தாலும், ஆவியோட குரல் மாறாம இருக்கணும்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். அப்படித்தான், நிக்கி கல்ராணிக்கு காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்தார். அதுலயும் ஒரு சின்ன குழப்பம் வந்திடுச்சு. ஷூட்டிங் எடுக்கும்போது நிக்கி கல்ராணியை கோயம்புத்தூர் ஸ்லாங்குல பேச வெச்சுத்தான் ஷூட் பண்ணினோம். டப்பிங்ல காளி வெங்கட்டும் கோவை ஸ்லாங்ல பேசுனார். ஆனால், அது அந்த கேரக்டருக்கு செட்டே ஆகலை. அபத்தமா இருந்துச்சு. அப்போ ராம்தாஸ் அண்ணாதான், சென்னை ஸ்லாங்ல ட்ரை பண்ணலாம்னு ஐடியா கொடுத்தார். அதுக்கப்பறம் டப்பிங்லதான் நிக்கி கேரக்டர் சென்னை ஸ்லாங் பேசுற மாதிரி மாத்தினோம்.’’

``தெலுங்கு சீனியர் காமெடியன் பிரமானந்தம் எப்படி இந்தப் படத்துக்குள் வந்தார்..?"

பிரமானந்தம்
பிரமானந்தம்

``தெலுங்கிலும் டப் பண்றதுனால அந்த மக்களுக்கு கனெக்ட் ஆகுற மாதிரி சில கேரக்டர் இருக்கலாம்னு ப்ளான் பண்ணினோம். அப்படித்தான், பிரமானந்தம் சார் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சார். ரொம்பவே நல்லா பண்ணிக்கொடுத்தார். பிரமானந்தம் சாருக்கு எம்.எஸ்.பாஸ்கர் சார்தான் டப்பிங் கொடுப்பேன்னு சொன்னார். `அது எப்படி சார்; நீங்களும் இந்தப் படத்தில் நடிச்சிருக்கீங்க. இன்னொரு கேரக்டருக்கும் வாய்ஸ் கொடுத்தா சரியா இருக்குமா’ன்னு பாஸ்கர் சார்கிட்ட கேட்டேன். `நான் பேசுறேன் பாருங்க’ன்னு மூணு மாடுலேஷன்ல பேசினார். அதுல ஒரு மாடுலேஷனை ஓகே பண்ணி, பேச வெச்சோம்.’’

``படம் ரிலீஸானதும் கிடைச்ச பாராட்டுக்களைப் பற்றி சொல்லுங்க..?"

Maragatha Nanayam
Maragatha Nanayam

``படத்தை முடிச்சிட்டு தயாரிப்பாளர்கிட்ட போட்டுக்காட்டும்போது, `சிரிப்பே வரல’ன்னு சொல்லிட்டார். அவரோட நண்பர்கள் சிலருக்கு போட்டுக்காட்டும்போதும், அதே ரியாக்‌ஷன்தான். `சார், கூட்டத்தோடு தியேட்டரில் பார்க்கும்போது வேற அனுபவமா இருக்கும்’னு சொன்னேன். அதே மாதிரி, படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி பத்திரிகையாளர் காட்சி போட்டாங்க. படம் ஆரம்பிச்ச 10-வது நிமிஷத்திலேயே சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பிச்சது. பல இடங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. படம் முடிஞ்சதும் எல்லா பத்திரிகையாளர்களும் பாராட்டிட்டு போனாங்க. அப்போதான் படத்துமேல ஒரு நம்பிக்கையே வந்துச்சு. தியேட்டரில் படம் வந்ததும், அது வேற மாதிரியான அனுபவமா இருந்துச்சு. மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தாங்க.’’

``உங்களோட முதல் படம் ரிலீஸாகி மூணு வருஷம் ஆகியிருக்கு; ரெண்டாவது படத்தோட அப்டேட் இருக்கா..?"

``அதர்வாவை வெச்சு `மின்னல் வீரன்’னு ஒரு படத்தை ஆரம்பிக்கிறதுக்கு ரெடியா இருந்தேன். அது சின்ன பிரச்னையால நடக்காம போயிடுச்சு. இந்த கதையோடு சேர்த்து இந்த மூணு வருஷத்துல மொத்தம் நாலு கதை ரெடி பண்ணிட்டேன். அதுல நாலாவதா நான் எழுதுன கதையைத்தான் இப்போ `சத்யஜோதி’ நிறுவனத்துக்கு சொல்லி ஓகே பண்ணியிருக்கேன். ஃபேன்டஸி கலந்த க்ரைம் த்ரில்லர் கதை. முதல் படம் அளவுக்கு இதில் காமெடி இருக்காது. ஆனா, புதுசா இருக்கும். சீக்கிரமே ஹீரோ யார்னு முடிவு பண்ணிடுவோம். விரைவில் அறிவிப்பு வரும்.’’