சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஸ்டாலினிடம் அனுமதி வாங்கிய டைட்டில் இது! - ‘நெஞ்சுக்கு நீதி’ ரகசியம்

நெஞ்சுக்கு நீதி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நெஞ்சுக்கு நீதி படத்தில்...

படமே சமூகநீதியைத்தான் பேசுது. இதைவிடவும் இந்தப் படத்திற்குப் பொருத்தமான தலைப்பு இருக்க முடியாது.

“‘ஆர்ட்டிக்கிள் 15' எனக்கு ஒரு சினிமாவாக ரொம்பவும் பிடிச்சது. அதையே தமிழில் ரீமேக் செய்ய எனக்கு வாய்ப்பு வரும்போது அதை சந்தோஷமாக ஏத்துக்கிட்டேன். உத்தரப்பிரதேசத்தில் நடந்த விஷயத்தை அப்படியே இங்கே எடுத்திட முடியாது. நம்ம சூழலுக்கு ஏத்தமாதிரி மாத்தணும். இந்தியில் பெரிய விதத்தில் வரவேற்கப்பட்டு, ஹிட் அடிச்ச படம். அந்தக் கருவிற்காகவே எல்லோரும் பாராட்டினாங்க. அப்படி நல்ல விதத்தில் இருந்த கதையை அதன் அமைப்பு கெடாமல் எடுக்க வேண்டியது முக்கியம். அப்படி உருவாக்க 20 இயக்குநர்களுக்கு மேலே எனக்கு உதவியிருக்காங்க. எதை முக்கியமா தவறவிடக்கூடாதுன்னு உரையாடலே நடந்திருக்கு. யுகபாரதி இதில் எனக்கு உறுதுணையா இருந்தார். எல்லாமே சேர்ந்து ‘நெஞ்சுக்கு நீதி' நல்ல சினிமாவாக வெளியே வந்திருக்கு” - உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி
அருண்ராஜா காமராஜ்
அருண்ராஜா காமராஜ்

“உதயநிதி முற்றிலும் புதிதாக உருவெடுக்கிறார்... மோஷன் போஸ்டர் எல்லாம் புது தினுசில்... எப்படியிருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’?”

“அநீதிக்கு எதிரான நீதியின் குரல்தான். அநீதி எங்கே வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எந்த ரூபத்திலும் நடந்துகொண்டேயிருக்கும். அதற்கு நிறைய முகங்கள் உண்டு. அதற்குப் பின்புலங்கள் இருக்கு. ஒவ்வொரு இடத்திலும் சரியான இடத்தில் ஆட்கள் இருந்துகொண்டு தவறான வேலைகள் செய்துகொண்டிருக்காங்க. அந்த மாதிரி பின்புலங்களை எதிர்த்து வருகிற நீதியின் குரல் என்னவாக இருக்கும்? அதுவும் ‘நெஞ்சுக்கு நீதி’யில் இருக்கு. இங்கே எல்லாவற்றுக்கும் சட்டப்படியான தீர்வு ஒண்ணு இருக்கு. அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன சிரமங்கள் எப்படியெல்லாம் வரும் என்பதும், அதை எப்படி உதயநிதி கையாளுகிறார் என்பதும்தான் இதில் முக்கியமான விஷயம். அநீதிக்கு எதிரான நீதியின் குரல்தான் படத்தின் ஒன் லைன். ‘நெஞ்சுக்கு நீதி'யில் அதற்கான விரிவான களமிருக்கு.”

“கவனம் எடுத்துச் செய்யவேண்டிய பாத்திரம். உதயநிதி எப்படிச் செய்திருக்கிறார்?”

“ஓர் இயக்குநர் என்ன நினைக்கிறார்... இந்த ஸ்கிரிப்டுக்கு என்ன தேவை என்ற ஆர்வமும் உழைப்பும் அவர் கிட்டே இருக்கு. நான் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுட்டு அப்படியே செய்கிறார். ஒரு தடவை கேட்டுட்டு அந்த ஷாட்டுக்குத் தேவையானதை மட்டும் செய்வதில்லை, அந்த இயல்பைப் படம் மொத்தத்திற்கும் எடுத்திட்டுப் போகிறார். சில கேரக்டர்களுக்கு என்று ஒரு மூடு செட்டாகும் இல்லையா, அதிலேயே அவர் டிராவல் பண்ணினார். என்கிட்டே ரொம்ப ஈஸியாக இருந்தார். நான் ஈஸியாக இருப்பதற்கும் வழிவகை செய்தார். கொரோனாத் தொற்றில் என் மனைவி இறந்துபோனபோது அவ்வளவு ஆறுதலாக இருந்தார். நோயின் சூழலில் நெருங்க முடியாமல் சொந்தங்கள் இருந்தபோது அவர் வந்திருந்ததெல்லாம் மதிப்பிட முடியாதது. அதற்குப் பிறகு எனக்கு கொரோனா வந்தபோது அதிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்ததில்கூட அவருக்கு நிறைய பங்கிருக்கு.”

நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி

“தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கீங்க?”

“ ‘ஆர்ட்டிக்கிள் 15'-ன் ஜானர், ட்ரீட்மென்ட், மூடு, விஷுவல் எல்லாமே ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லராக இருக்கும். ‘நெஞ்சுக்கு நீதி’யை த்ரில்லரைவிட பொலிட்டிக்கல் டிராமாவாக மாத்தியிருக்கோம்.

காட்சிக்கு காட்சி அப்படியே எடுக்கவில்லை. தமிழ்ச்சூழலுக்கு ஏற்றமாதிரி சில மாற்றங்கள் செய்திருக்கோம். முதன்முதலாக போலீஸ் கெட்டப்பில் உதயநிதி நடிச்சிருக்கார். இந்தப் படம் பேசும் அரசியல், சாதி எதிர்ப்பு, சமூகநீதியைப் பேசும் அரசியல். அது தமிழகத்துக்கு ரொம்பவே நெருக்கமானது என்பதால் உதயநிதிக்குத் தனிப்பட்ட முறையிலேயே ஆர்வம் இருந்தது.”

‘‘நெஞ்சுக்கு நீதி’ - கலைஞர் கருணாநிதியின் சுயசரிதை நூல். உதயநிதி நடிப்பதால்தான் இந்தத் தலைப்பா?”

“படமே சமூகநீதியைத்தான் பேசுது. இதைவிடவும் இந்தப் படத்திற்குப் பொருத்தமான தலைப்பு இருக்க முடியாது. ‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞர் ஐயாவின் சுயசரிதைத் தலைப்பாகவும் மாறிவிடுகிறபோது அது இன்னமும் பொருத்தமாகிவிடுகிறது. உதய்கிட்டே சொன்னதும் ‘இதை அப்பாகிட்டே சொல்லி அனுமதி வாங்கணும்’னு சொல்லிக் கேட்டார். ‘நீங்க பேசுங்க. தலைப்புக்கான சரியான நியாயம் தான் இந்தப் படத்தில் இருக்கே’ன்னு சொன்னேன். முதல்வரும் பச்சைக்கொடி காட்ட, தலைப்பு கிடைத்துவிட்டது. தலைப்புக்கு நியாயம் சேர்க்க என்கூட சேர்ந்து நிறைய பேர் உழைச்சிருக்காங்க. தான்யா ரவிச்சந்திரன் எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்பவும் நன்றாக இருந்தது. யுகபாரதி இதில் உறுதுணையாக இருந்து இரண்டு பாடல்களும் எழுதியிருக்கிறார். நானும் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கேன். ‘கனா'விற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன்தான் கேமரா. ‘ஆர்ட்டிக்கிள் 15’ விஷுவல் போலில்லாமல் வேறுமாதிரி இருக்கும். என் நண்பன் தீபு நைனன் தாமஸ்தான் மியூசிக். ஆன்மாவை இறக்கி வச்சிருக்கான்.”

நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி

“எத்தனையோ போலீஸ் படம் வந்தாச்சு. இதை எப்படி மக்கள் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க...”

“என்னுடைய முதல் படம், விளையாட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் கனவைப் பற்றிப் பேசியது. அதிலும் ஒரு அரசியல் இருக்கும். அதேபோல் இந்தப் படமும் அரசியலை மையப்படுத்திய படமா இருந்தது நல்ல விஷயம். இந்தப் படம் வழக்கமான போலீஸ் படமில்லை. சாதி எவ்வளவு பெரிய அடக்குமுறைக் கருவியாக இருந்து எளிய மனிதர்களின் வாழ்க்கையைச் சிதைக்கிறது என்பதை வீரியத்துடன் சொன்ன படம் ‘ஆர்ட்டிக்கிள் 15.’ அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட ‘ஆர்ட்டிக்கிள் 15’ பிறப்பில் அனைவரும் சமம் என்பதை சட்டத்தின் நீதியாக முன்வைத்தது. ஆனால் அது சமூகம் முழுமைக்குமான நீதியாக மாறவில்லை என்பதுதான் பிரச்னை. நாட்டில் நடக்கிறதைச் சொல்லியிருக்கோம். இதையெல்லாம் எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும்! ‘எதுவுமே நடக்கலை’ன்னு பொத்திவைக்கறதைவிட ‘நம்மைச் சுற்றி இதெல்லாம் நடக்குது’ன்னு அதை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதுதானே சரி. அதுவும் இதில் நடந்திருக்கு.

இன்று வெளிப்படையாக அரசியல் பேசும் படங்கள் தமிழில் வரத்தொடங்கிவிட்டன. அந்தவகையில் ‘நெஞ்சுக்கு நீதி’யும் முக்கியமான அரசியல் படமாக இருக்கும். ஒரு நல்ல படம் செய்த சந்தோஷம் எனக்கும் உதய்க்கும் இருக்கு. மக்களுக்கும் இருக்குமெனின் இது ஒரு வெற்றிப்படம்.”