Published:Updated:

``அயர்ன் பாக்ஸ் வாங்க போன கேப்பில், அத்தை மகளிடம் புரபோஸ் பண்ணிட்டேன்" - இயக்குநர் அதியன் ஆதிரை

அதியன் ஆதிரை
அதியன் ஆதிரை

``இவரை`மாமா'னுதான் சின்ன வயசுல இருந்தே கூப்பிடுவேன். விவரம் தெரியாத வயசுல நிறைய சண்டைகள் நாங்க போட்டிருக்கோம். ரெண்டு பேருடைய வீடும் பக்கத்துலதான் இருந்தது. கிண்டலுக்காக அப்பப்போ `காக்கா'னும் கூப்பிடுவேன். இவர் கோபம் வந்து என்னை மிரட்டலாம் செஞ்சிருக்கார்."

``எங்க ரெண்டு பேருக்கும் இடையிலான அன்பு, அலாதியானது. அதிலேயும், ஆதிரை என் மேலே பேரன்பு வெச்சிருக்காங்க. ஆதிரையின் இயற்பெயர் கோவிந்தம்மாள், என் பெயர் மகேஷ். நானொரு நாத்திகன்ங்கிறதால் பெயரை மாத்திகிட்டோம். திருமண பந்தத்துக்குள் நுழைஞ்சு 15 ஆண்டுகள் ஆகிடுச்சு. ஆனாலும், எங்களுக்கு இடையிலுள்ள காதல் இன்னும் உயிர்ப்போடு வளர்ந்துகிட்டேதான் இருக்கு" எனப் பேசத் தொடங்கினர் இயக்குநர் அதியன் ஆதிரையும், அவரது மனைவி ஆதிரையும். மனைவி மீது கொண்ட பெருங்காதலால், அவர் பெயரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டவர் அதியன்.

ஆதிரையும் அதியனும்
ஆதிரையும் அதியனும்

``பெற்றோர்களால் நிச்சயிக்கபட்ட காதல் திருமணம் எங்களுடையது. என்னுடைய அத்தை மகன்தான் இவர். நான் எட்டாவது படிச்சுட்டு இருந்தப்போ, இவர் கல்லூரி முதலாமாண்டு. அப்போதான் என்கிட்டே இவருடைய காதலைச் சொன்னார்" என இந்தக் காதல் பந்தம் தொடங்கிய தருணம் பற்றி விவரிக்கையில், ஆதிரையின் முகத்தில் அவ்வளவு வெட்கம்.

``சொந்த மாமா பொண்ணுங்கிறதாலே சின்ன வயசுல இருந்தே `மை'யைத் தெரியும். ஆதிரையை `மை'னுதான் கூப்பிடுவேன். வீட்ல இருந்த பெரியவங்களும் அத்தை பையனுக்கும், மாமா பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப்போறதா, எங்க சின்ன வயசுல இருந்தே கிண்டல் அடிச்சிட்டு இருப்பாங்க. அதனால், எங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்ன ஈர்ப்பு, காதல் அப்போதிருந்தே மனசுக்குள் இருந்தது'' என அதியன் முடிக்க ஆதிரை தொடர்கிறார்.

அதியன்
அதியன்

``இவரை`மாமா'னுதான் சின்ன வயசுல இருந்தே கூப்பிடுவேன். விவரம் தெரியாத வயசுல நிறைய சண்டைகள் நாங்க போட்டிருக்கோம். ரெண்டு பேருடைய வீடும் பக்கத்துலதான் இருந்தது. கிண்டலுக்காக `காக்கா'னு கூப்பிடுவேன். மாமாவுக்குக் கோபம் வந்து என்னை மிரட்டலாம் செஞ்சிருக்கார். அதெல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தாக்கூட சிரிப்பா வருது. நான் பெரிய பொண்ணா வளர்ந்து வந்தவுடனே மாமா மேலே இருந்த காதல் இன்னும் கூட ஆரம்பிச்சிருந்தது. ஒருமுறை, அயர்ன் பாக்ஸ் வாங்குறதுக்காக எங்க வீட்டுக்கு மாமா வந்திருந்தார். அப்போ `நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலமா'னு கேட்டார். எனக்கும் மாமா உசுருங்குறனால உடனே சம்மதம் சொல்லிட்டேன்'' என அயர்ன் பாக்ஸ் வாங்க வந்த கேப்பில், அத்தை மகன் செய்த புரபோஸலைச் சொல்லி சிரித்தார் ஆதிரை.

``கிட்டத்தட்ட எட்டு வருஷம் காதலுக்கு அப்புறம்தான் எங்க திருமணம் நடந்தது. இடையில் செஞ்சிக்கோட்டை போய் சுத்திப் பார்த்திருக்கோம். ஊர் திருவிழா நடக்குறப்போ ரெண்டு பேரும் பார்த்துக்குவோம். அப்புறம் எங்க ஊர்ல இருக்குற பொண்ணுக்குக் கல்யாணம் நடந்து வெளியூருக்கு அனுப்பி வைக்குறப்போ ஒரே வண்டியில உட்கார்ந்து போவோம். அப்போ கண்ணாலயே ரெண்டு பேரும் பேசிக்குவோம். மெளன மொழிகள் அதிகமா எங்களுக்குள்ளே நடக்கும்'' என 80'ஸ் கிட்ஸின் காதலை கண் முன்னே கொண்டுவந்தார் அதியன்.

அதியன், ஆதிரை, திலீபன் மற்றும் முகிலன்
அதியன், ஆதிரை, திலீபன் மற்றும் முகிலன்

``எங்க ரெண்டு பேருடைய கேரக்டரும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதனாலேயே, எங்களுக்குள்ளே அதிகமான புரிதல் இருக்கும். சொல்லப்போனால் மாமா போல் நானும், என்னைப் போல் அவரும் சிந்திப்போம். எங்க திருமணம் மாமா ஆசைப்பட்ட மாதிரியே சீர்த்திருத்த திருமணமா நடந்தது'' என ஆதிரை சொன்னதும், ``இராகு காலத்துலதான் திருமணமே பண்ணினோம். பெளத்தமுறைப்படி இரவு நேரத்துல நடந்தது. பெரும்பாலும் வீட்ல இருந்த பெரியவங்க இதுக்கு ரொம்ப யோசிச்சாங்க. `மை' என் மேலே இருந்த அன்பின் காராணமா `மாமா சொன்னா சரியாதான் இருக்கும்'னு என்னை நம்பி வந்தாங்க'' என ஆதிரையின் கையைக் கோத்தார் அதியன்.

``எங்க ஊர் சிறுவாலை, அதிகம் படிக்காத மக்களைக் கொண்டது. இருந்தும் எங்க விருப்பத்துக்கு எல்லோரும் சம்மதம் சொன்னாங்க. எங்க திருமணம் முடிஞ்சு பத்தே மாசத்துல எங்க கையிலே மூத்த பையன் திலீபன் சேகுவாரா இருந்தான். பெரிய வருமானமும் எங்ககிட்டே இல்லை. மாமாவுடைய சிந்தனை எல்லாம் புத்தகம், கவியரங்கம், இலக்கியம்னே இருக்கும். வருமானமே இல்லைனாலும் புத்தகம் வாங்கணும்ங்குறதுதான் அவருடைய குறிக்கோளா இருக்கும். எங்க வாழ்க்கையை நடத்த சின்னச்சின்ன வேலைகளா அத்தனை வேலைகளைப் பார்த்திருக்கார். அனிமேஷன், போட்டோ ஷாப், இரும்புக் கடைனு எத்தனையோ வேலைகள். ஒருநாளுக்கு நூறு ரூபாய் கிடைச்சா பெருசுங்கிற அளவுக்குதான் எங்கள் பொருளாதாரச் சூழல் இருந்தது'' என ஆதிரையின் கண்கள் ஓரத்தில் ஈரமாக, அதியன் தொடர்ந்தார்...

அதியன்
அதியன்

``நிறைய மன உளைச்சலா இருக்கும். மை என்னை முழுசா நம்பினாங்க. எனக்கு இருந்த சினிமாக் கனவு, அவங்களுக்கு நல்லா தெரியும். `சினிமாவுக்கு போங்க'னு சொன்னாங்க. மாசம் 5,000 ரூபாய் சம்பாதிச்சு கொடுத்தால்கூட போதும்னு சொன்னாங்க. அப்போ கலை இயக்குநர் ராமலிங்கம் அண்ணாகிட்ட அனிமேஷன்ல இருந்தேன். அவர் மூலமா, ரஞ்சித் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். இதுக்குப் பிறகுதான் எங்க வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. நாங்க ஜெயிச்சிருவோம்னு நம்பிக்கை வந்தது" என அதியனிடமிருந்து வந்த வார்த்தைகள், ஆதிரைக்கு உற்சாகம் கொடுத்தது.

``பக்கத்து வீட்ல இருக்குறவங்க, மாமா பத்தி, `சும்மா இங்கிட்டு அங்கிட்டுக்கும் அலைஞ்சிட்டிருக்கான். என்ன படம் எடுக்கப் போறான்'னு காது படவே பேசுவாங்க. இவர் படம் எங்க ஊர்ல ரிலீஸானப்போ அவ்வளவு சந்தோஷம் வந்தது எனக்குள்ள. என்னுடைய ரெண்டு பிரசவத்தின் போதுகூட மாமா என்கூட இருந்ததில்லை. வேலையில் இருந்தார். குழந்தை பிறந்ததுக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்'' என்றார் ஆதிரை.

அதியன் - ஆதிரை குடும்பம்
அதியன் - ஆதிரை குடும்பம்
``லவ்வுக்காக மிலிட்டிரியே தாக்குன ஆளுங்கண்ணே நாங்க!" - வடிவேலுவின் காதல் ரவுசு #VikatanOriginals

``எங்க ரெண்டாவது பையன் கரு உருவாகி இருந்த நேரத்துல, அந்த நல்ல விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் நாங்க சொல்லக்கூட இல்லை. ஏன்னா, நெருக்கடியான பொருளாதாரச் சூழல் எங்க வாழ்க்கையில குடியிருந்தது. சினிமானு அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். ஒரு குழந்தையைவே வளர்க்க முடியல. இந்த நேரத்துல ரெண்டாவது குழந்தை உருவாகி இருக்குன்னு ரொம்ப யோசிச்சோம். இருந்தும் எந்த உயிர்க்கும் நம்ம எதிரா இருந்துடக்கூடாதுனு சந்தோஷமா முகிலனைப் பெத்துக்கிட்டோம்'' எனச் சொல்கையில் அதியனின் குரல் உடைந்திருந்தது. வாழ்வை ஏழ்மை இருளுக்குள் இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில், காதல் ஒன்றுதான் நம்பிக்கை எனும் பேரொளி பாய்ச்சியிருக்கிறது. இந்தக் காதலர்களுக்கும் இவர்களது காதலுக்கும், இவர்களைப் போன்றவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள்..!

அடுத்த கட்டுரைக்கு