Published:Updated:

``ஸ்ருதிக்கு இன்னொரு முகம் இருக்கு; அது இன்னும் கோலிவுட்டுக்குத் தெரியல!'' - பத்ரி வெங்கடேஷ்

ஸ்ருதி, பத்ரி வெங்கடேஷ்
ஸ்ருதி, பத்ரி வெங்கடேஷ்

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேட்டி!

`பாணா காத்தாடி', `செம போத ஆகாதே' ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது `பிளான் பண்ணி பண்ணணும்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். சினிமா தவிர, சில டிவி ஷோக்களையும் அவ்வப்போது இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்தும் டிவி அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ஈ.வி.பி விபத்தும் பின்விளைவுகளும்... `இந்தியன் 2' ஸ்டேடஸ் அப்டேட்!

முதல் படம் லவ், ரெண்டாவது படம் த்ரில்லர், இப்போ மூணாவது படத்துல என்ன ஜானரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க?

"எதுவும் இல்லை. `பிளான் பண்ணி பண்ணணும்' முழுக்க முழுக்க ஜாலியான படம். நான் தனிப்பட்ட முறையில ரொம்ப ஜாலியா இருக்கணும்கிற ஜோன்ல இருக்கேன். அதனால இந்தப் படமும் அதே ஜோன்லதான் இருக்கும். சிம்பிளா சொன்னா, இது ஒரு பாப்கார்ன் என்டர்டெயினர். தியேட்டருக்குள்ள வந்ததிலிருந்து தியேட்டரைவிட்டு போகுறவரைக்கும் மக்களை சிரிக்க வைக்கணும்னு பிளான் பண்ணி பண்ணதுதான் `பிளான் பண்ணி பண்ணணும்'. இது தமிழ் சினிமாவைத் திருப்பிப் போடுற படமெல்லாம் இல்லை. ஜாலியான என்டர்டெயினர். அவ்ளோதான்."

ரியோ - ரம்யா நம்பீசன் தவிர வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?

பிளான் பண்ணி பண்ணணும்
பிளான் பண்ணி பண்ணணும்

"படத்துல நடிச்சிருக்கிற எல்லோரும் தேர்ந்த நடிகர்கள்தான். படத்துடைய முதல் பாதி முழுக்க காருக்குள்ளதான் நடக்கும். ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை இவங்கதான் படத்துல முக்கியமான கேரக்டர்கள். ஸ்பாட்டுக்கு வந்த ஒருசில நாள்களிலேயே இவங்களுக்குள்ள வேவ் லென்த் செட்டாகி எப்பவும் ஜாலி மோட்லயே இருப்பாங்க. அது படத்துக்குப் பெரிய ப்ளஸ்ஸா அமைஞ்சிடுச்சு. படத்துல ஒரு டிராவல் இருக்கும். அந்த டிராவல்ல நிறைய கேரக்டர்கள் வந்துபோகும். சந்தானபாரதி சார் இயக்கின `குணா' எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். போன படத்துலயே அவர் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிடுச்சு. அதனால இந்தப் படத்துல அவரைக் கமிட் பண்ணி முதல் ஷாட்டே சந்தானபாரதி சாருக்குதான். எம்.எஸ்.பாஸ்கர் சாருடைய பெரிய ரசிகன் நான். அவரும் இந்தப் படத்துல இருக்கார். ரேகா, முனீஷ்காந்த், `ஆடுகளம்' நரேன்னு மொத்தம் 18 நடிகர்கள் இருக்காங்க. இந்தப் படத்துல பால சரவணனுடைய பங்கு ரொம்பப் பெருசு. ரியோவும் பாலசரவணனும் ஃபிரெண்ட்ஸ். வழக்கமான எல்லா கமர்ஷியல் படங்கள்லயும் ஹீரோ கதையில ஃபிரெண்ட் இருப்பார். ஆனா, இதுல ஃபிரெண்ட் கதையில ஹீரோ இருப்பார். அதுதான் வித்தியாசம். அப்போ பால சரவணனுடைய கேரக்டர் எப்படிப்பட்டதுன்னு யோசிச்சுக்கோங்க."

யுவன் ஷங்கர் ராஜா?

"என்னுடைய எல்லா படங்கள்லேயும் யுவன் இருப்பார். அவரும் என்னை ஏத்துக்கிறார். எங்களுக்குள்ள அப்படியொரு நட்பு இருக்கு. இந்தப் படத்துக்காக ரொம்பக் குறைவான நேரத்துல ஐந்து பாடல்கள் கம்போஸ் பண்ணிக் கொடுத்திருக்கார். ஒரு க்ளப் சாங், ஒரு ஃபோக் சாங், ஒரு மெலோடி, என்னை மாதிரி யுவன் வெறியர்களுக்கான சாங், ஒரு டூயட்னு ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம். அவருடைய இசை இந்தப் படத்துடைய தூண். நிரஞ்சன் பாரதி நாலு பாடலும் அருண்ராஜா ஒரு பாட்டும் எழுதியிருக்காங்க."

ஷார்ட் பிலிம்னா என்னன்னு வெளியே தெரியாத காலத்துல நீங்க தேசிய விருது வாங்கியிருக்கீங்க. இப்போ ஷார்ட் பிலிம் தாக்கம் குறைஞ்சு ஆன்லைன் தளங்களின் தாக்கம் அதிகமாகியிருக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?

பிளான் பண்ணி பண்ணணும்
பிளான் பண்ணி பண்ணணும்

"தளங்கள் மாறிட்டேதான் இருக்கும். பாட்டி வடை சுட்ட கதைதான். ஆனா, அதை எங்க சொல்றோம், எப்படிச் சொல்றோம்கிறது ரொம்ப முக்கியம். பெரிய ஸ்க்ரீனுக்கும் டிவிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. டிவிக்கும் மொபைலுக்கும் வித்தியாசம் இருக்கு. இதுக்கு அடுத்து வர்ற தலைமுறை பசங்க வேற மாதிரி வருவாங்க. இந்தத் தலைமுறை இயக்குநர்களுடைய பிலிம் மேக்கிங் டெக்னிக்கை நம்ம பார்த்து பொறாமைப்படலாம், சூப்பரா பண்றனு கைத்தட்டலாம். அவ்வளவுதான். அவங்களுக்கு நம்ம எதையும் சொல்லித் தர வேண்டியதில்லை. லோகேஷ் கனகராஜுடைய மாமனார் செளந்தர் எனக்கு ரொம்பப் பழக்கம். சினிமாவுல எனக்கு காட்ஃபாதர். விஜயகாந்த் சார்கிட்ட எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா இருந்தார். ஒருநாள், `பேங்க் வேலையை விட்டுட்டு மாப்ள சினிமா பண்றேன்னு சொல்றார்'னு சொன்னார். அப்புறம் `மாநகரம்' பார்த்துட்டு, லோகேஷ்கிட்ட, `எங்க சினிமா கத்துக்கிட்ட'னு கேட்டேன். லோகேஷ் இன்றைய தலைமுறை. அப்போ இனி வரும் தலைமுறை நிச்சயமா சூப்பரான பிலிம் மேக்கராதான் இருப்பாங்க."

சினிமா, ரியாலிட்டி ஷோனு ரொம்ப பிஸியா இருக்கீங்களே!

"சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி டிவியில ரொம்ப பிஸியா இயங்கிகிட்டு இருந்தேன். தமிழ்நாட்டின் முதல் ரியாலிட்டி ஷோ சன் டிவிக்காக `நாளைய நட்சத்திரம்' பண்ணேன். முதல் காமெடி ரியாலிட்டி ஷோ `கிங் க்வீன் ஜாக்'னு விஜய் டிவிக்காகப் பண்ணேன். இதற்கிடையில ஈவென்ட்ஸ், விளம்பரப் படங்கள்னு ஓடிக்கிட்டே இருந்தேன். அப்புறம் `பாணா காத்தாடி' முடிச்ச பிறகு, மறுபடியும் டிவி, டாக்குமென்ட்ரி, விளம்பரங்கள், ஈவென்ட்ஸ்னு போயிட்டேன். இது எல்லாமே விஷூவல் மீடியாதானே? அதனால ஏன் இடைவெளிவிட்டு படம் பண்றீங்கனு சொல்ல முடியாது. இப்போ திடீர்னு ரெண்டு வருஷமா டிவி பக்கமே போகலை. அந்த டிசைன் நம்ம கையிலயே இல்லை. நம்ம என்ன பண்ணாலும் நம்மளை நம்பி காசு போடுறவங்க நஷ்டமாகக் கூடாது. அதைப் `பிளான் பண்ணி பண்ணணும்' அவ்வளவுதான்."

பத்ரி வெங்கடேஷ்
பத்ரி வெங்கடேஷ்
``ஜுவாலா கட்டா கூட நல்ல புரிதல் இருக்கு... ஆனா?!" - விஷ்ணு விஷால் #VikatanExclusive

ஸ்ருதி ஹாசனை வெச்சு `ஹலோ சகோ' ஷோ இயக்கின அனுபவம்?

ஸ்ருதிஹாசன் - பத்ரி வெங்கடேஷ்
ஸ்ருதிஹாசன் - பத்ரி வெங்கடேஷ்

"நான் கமல் சாரோட அதிதீவிர ரசிகன். எனக்கு சினிமானான்லே அவர்தான். அவரோட பொண்ணை இயக்கினது எனக்கு சந்தோஷம். ஸ்ருதி செம டெடிகேஷனோட வேலை பார்ப்பார். சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்து, ஸ்பாட்ல நான் என்ன பண்ணணும்னு பார்த்துட்டு இருப்பாங்க. அவங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் அதைக் கேட்டுத் தெரிஞ்சிகிட்டு சூப்பரா பண்ணிடுவாங்க. ரொம்ப சின்ஸியர். ஒவ்வொரு ஷோவுக்கும் வந்த ரெண்டு கெஸ்ட்டுக்கும் இவங்க பர்சனலா எதாவது கிஃப்ட் பண்ணுவாங்க. ஸ்ருதியோட இன்னொரு முகம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் தெரியலை. `இவ்ளோ தன்னடக்கமா இருக்கக் கூடாது'னு அவங்ககிட்டயே சொல்லியிருக்கேன். என்கிட்ட ரெண்டு மூணு கதை சொன்னாங்க. சூப்பரா இருந்தது. அவங்க இயக்குநரானா நிச்சயமா படம் வேற லெவல்ல இருக்கும். அவங்களை இயக்குநரா மாறச் சொல்லி ஊக்குவிக்கிற நபர்கள்ல நானும் ஒருவன். சீக்கிரமே அது நடக்கும்."

அடுத்து?

"ஹாரர் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். `பாணா காத்தாடி' பண்றதுக்கு முன்னாடி `உயிர்'னு ஒரு ஹாரர் கதையை ஷார்ட் பிலிமா இயக்கினேன். அதுல நானும் ஸ்வர்ணமால்யாவும் நடிச்சோம். எனக்கு சத்யஜோதி தியாகராஜன் சார் ரொம்ப வருஷமா பழக்கம். ஒருநாள் நானும் அவரும் காரைக்குடி போய்க்கிட்டிருந்தோம். அப்போ சும்மா ஒரு கதை சொல்லச் சொல்லி கேட்டார். நான் இந்தக் கதையைச் சொன்னவுடன் அவருக்குப் பிடிச்சுப்போய், அதை அவங்க பேனர்ல பண்ணச்சொல்லி அட்வான்ஸ் கொடுத்தார். ஆனா, அதைப் பண்ண முடியாமபோய் அந்தத் தயாரிப்புல `பாணா காத்தாடி' பண்ணேன். எப்போ அவர் என்னைப் பார்த்தாலும் `அந்த ஹாரர் படத்தை எப்போ எடுக்கப்போற'னு கேட்பார். இந்தப் படத்துடைய தயாரிப்பாளரும் எனக்கு அந்தக் கதைக்குதான் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனா, அது `பிளான் பண்ணி பண்ணணும்' படமா மாறிடுச்சு. அதனால அடுத்த படமா அந்த ஹாரர் கதையைப் பண்ணணும்னு ஆசை இருக்கு. வட சென்னையை மையமா வெச்சு இன்னொரு கதையும் இருக்கு. எதுன்னு பார்க்கலாம்."

அடுத்த கட்டுரைக்கு