Published:Updated:

``சமந்தா சினிமால முன்னேற ஒரே காரணம்தான்?!'' - #10YearsOfBaanaKaathadi

'பாணா காத்தாடி'
News
'பாணா காத்தாடி'

சமந்தா, அதர்வா நடித்த 'பாணா காத்தாடி' படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைந்தைத் தொடர்ந்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேட்டி.

2010-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'பாணா காத்தாடி'. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், அதர்வா ஆகியோருக்கு முதல் படம். சமந்தா இதற்குமுன் ஒரு படம் நடித்திருந்தாலும் முதலில் வெளியானது 'பாணா காத்தாடி'தான். தவிர, முரளியின் கடைசிப் படம். இப்படி பல ட்ரிவியாக்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. இந்தப் படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இப்படத்தின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷிடம் பேசினேன்.

இந்தப் படம் ஆரம்பிச்ச கதையைச் சொல்லுங்க?

"10 வருஷம் கழிச்சு இந்தப் படத்தை ஞாபகம் வெச்சிருக்காங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்ல இந்தக் கதைக்கு 'மாஞ்சா'னுதான் பெயர் இருந்தது. அந்தச் சமயத்துல 'மாஞ்சா வேலு'னு ஒரு படம் வந்ததுனால 'பாணா காத்தாடி'னு மாறுச்சு. சத்யஜோதி தியாகராஜன் சார், அவங்க மகன்னு எல்லோரும் காத்தாடி வெறியர்கள்னே சொல்லலாம். அவங்களுக்கு இந்தக் கதை வந்தவுடன், அதை இயக்குறதுக்காக என்னைக் கூப்பிட்டார். அதுக்கு முன்னாடியே, சத்யஜோதி பேனர்ல நான் - அதர்வா - சமந்தா எல்லோரும் வேறொரு படத்துல வொர்க் பண்ண வேண்டியதா இருந்தது. ஆனா, 'பாணா காத்தாடி' மூலமாதான் எல்லாம் நடந்தது."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதர்வா - சமந்தா?

அதர்வா - சமந்தா
அதர்வா - சமந்தா

"நான்தான் அதர்வாவை அறிமுகப்படுத்தினேன்னு எங்கேயும் சொன்னதில்லை. முரளி சார் மகன் அப்படிங்கிறதுனால அதர்வா நடிக்கலை. அவர் இன்ஜினீயரிங் படிச்சிருந்தாலும் அவருக்கு நடிகனாகணும்னு ஆசை இருந்தது. அதுக்காக நிறைய ட்ரெயினிங் போனார். இந்தப் படத்துல அவர் அறிமுகமாகலைனா நிச்சயமா வேற படத்துல அறிமுகமாகிதான் இருப்பார். முரளி சாருடைய மகனா இல்லாமல் இருந்தால்கூட நடிகனாகியிருப்பார். ஏன்னா, அவருக்கு சினிமா பிடிச்சிருக்கு. சமந்தாவுக்கு சினிமா வெறி அதிகம். ஒரு பொண்ணு இந்தளவுக்கு சினிமா மேல இப்படி வெறியா இருந்து பார்த்ததில்லை. எந்தப் படமா இருந்தாலும் முதல் நாளே தியேட்டருக்குப் போய் பார்த்திடுவாங்க. சினிமாவை அப்படிக் காதலிப்பாங்க. அதனாலதான் இந்தளவுக்கு பெரிய இடத்துக்கு முன்னேறி இருக்காங்கனு நினைக்கிறேன். படத்துக்கு ரெண்டு மாசம் வொர்க் ஷாப் பண்ணோம். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே எல்லோருக்கும் எல்லோருடைய டயலாக்கும் தெரியும். அதனால, ஷூட்டிங்ல ரொம்ப ஈஸியா இருந்தது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரசன்னா கேரக்டர் ரொம்ப வித்தியாசமா இருந்ததே?

"ஆரம்பத்துல இந்த கேரக்டர் அந்தக் கதையில இல்லை. இந்தக் கதை என்கிட்ட வந்தவுடன் நான் சேர்த்த விஷயங்கள்தான் பிரசன்னா கேரக்டர். அதுக்கு இன்ஸ்பிரேஷன் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய 'The Road Not Taken'னு ஒரு கவிதை. இரண்டு பாதை இருக்கும்போது அதுல ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து போய்க்கிட்டிருப்போம். திடீர்னு அந்தப் பாதையில போயிருக்கலாமோனு தோணும். எல்லாருடைய வாழ்க்கையிலயும் இது இருக்கும். அண்டர் வேர்ல்டுல இருக்கிற ஒருத்தன்கிட்ட வேலை செய்ற அடியாள் ஒருத்தன் இருப்பான். அவனை அந்த ஏரியாவுல பெரிய ஆளா பார்ப்பாங்க. ஆனா, தெரியாம இதுக்குள்ள வந்துட்டோம், வெளியே போக முடியலைனு அவன் நினைப்பான். அவன் சின்ன பசங்களைப் பார்த்து இவங்களும் நம்மளை மாதிரி ஆகிடக் கூடாதுனு நினைக்கிற மாதிரியான கேரக்டர். இது திரைக்கதையில நல்லா அமைஞ்சது."

பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட். யுவன் ஷங்கர் ராஜா கூட வேலை செஞ்ச அனுபவம்?

பிரசன்னா - அதர்வா
பிரசன்னா - அதர்வா

"இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலமே யுவனுடைய இசைதான். கம்போஸிங்காக கோலாலம்பூருக்குப் போயிருந்தோம். அது ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. அப்போதான் யுவனோட பழக வாய்ப்பு கிடைச்சது. அதற்குப் பிறகு, யுவனும் நானும் நல்ல நெருக்கமாகிட்டோம். அவர் ஒரு ட்யூனைக் கொடுத்துட்டு அவ்ளோதான்னு சொல்ல மாட்டார். வெவ்வேற ட்யூனை கொடுக்கிறேன். உங்களுக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோங்கனு சொல்வார். எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல், 'என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது'தான். நா.முத்துக்குமார் எழுதினது. அப்புறம் வாலி சார் எழுதின 'தாக்குதே கண் தாக்குதே' எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் செம ஜாலியான நபர். இப்போ இருக்கிற காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சூப்பரா எழுதியிருப்பார். அவர் கூட இருக்கும்போது நமக்கு நிறைய நம்பிக்கையைத் தருவார். 'குப்பத்து ராஜா' சினேகன் எழுதியிருப்பார். ஒரு பாடல் கங்கை அமரன் சார் எழுதிக் கொடுத்தார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். அது எல்லாம் யுவன் கூட சேரும்போது வேற மாதிரி ஒரு மேஜிக் நடந்தது. முதல் பட இயக்குநர்னு எல்லாம் நினைக்க மாட்டார். வேலைதான் முக்கியம்."

அதர்வா இறக்கிற மாதிரி க்ளைமாக்ஸ் இருந்தது நிறைய பேருக்கு உடன்பாடில்லாமல் இருந்ததே!

"ஆமா... நீங்க சொல்றது உண்மைதான். நிறைய பேருக்கு அதர்வா இறக்காமல் இருந்திருக்கலாமேனு நினைச்சாங்க. தேவையில்லாமல் அதர்வாவைக் கொன்னுட்டாங்கன்னு திட்டினாங்க. அப்படியான க்ளைமாக்ஸ் வெச்சதுனாலதான் இத்தனை வருஷம் கழிச்சும் அந்தப் படத்தை ஞாபகம் வெச்சிருக்காங்களோனு தோணுது. இப்போ நான் இருக்கிற மைண்ட் செட்ல அந்தப் படத்தை எடுத்திருந்தால் அதர்வாவை இறக்கவிட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். எதுக்கு நெகட்டிவ், பாசிட்டிவா இருக்கட்டுமேனு நினைச்சிருப்பேன்."

முரளிகிட்ட 'இதயம்' ராஜானு கேமியோ ரோல்ல வரணும்னு சொன்னதும் என்ன சொன்னார்?

'பாணா காத்தாடி' படத்தில் முரளி
'பாணா காத்தாடி' படத்தில் முரளி

"இதை முதல்ல தியாகராஜன் சார்கிட்ட சொன்னேன். கண்டிப்பா இது வேணுமானு கேட்டார். ஆமாம்னு சொன்னதும் 'முரளி ஓகேனா எனக்கும் ஓகே'னு சொன்னார். 'சார் இந்த மாதிரி 'இதயம்' படத்துல வர்ற கேரக்டர்ல நீங்க கேமியோ வரணும் சார். கலாய்க்கிற மாதிரிலாம் இருக்காது'னு யோசிச்சுக்கிட்டே சொன்னேன். ஆனா, உடனே 'ஓகே பண்ணலாமே'னு சொல்லிட்டார். ஆனா, அதுதான் அவருடைய கடைசி சீனா அமைஞ்சிடுச்சுனு நினைக்கும்போது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. மகன் ஹீரோவாகிட்டாப்ளனு ரொம்ப சந்தோஷப்பட்டார்."

எடிட்டர் சுரேஷ் அர்ஸ் கூட வொர்க் பண்ணது எப்படியிருந்தது?

"'தளபதி', 'பாம்பே', 'ரோஜா' மாதிரியான படங்கள் பண்ண எடிட்டர். இவருக்கு கதை சொல்லும்போது லைட்டா கண் அசந்துட்டார். எனக்கு ஒரு மாதிரியாகிடுச்சு. நைட் முழுக்க வொர்க் பண்ணியிருப்பார்போல. இது எனக்கு முதல் படம். ஆனா, அவர் இதுல வொர்க் பண்றதுக்கு முன்னாடி 700 படங்கள் பண்ணிட்டார். இப்போ எனக்கு சினிமாவுல அப்பா மாதிரி இருக்கிறது அவர்தான். மிகப்பெரிய உழைப்பாளி. காமெடி, ஆக்‌ஷன், லவ்னு எல்லா சீனையும் ரொம்ப என்ஜாய் பண்ணி வேலை செய்வார். ஓகே ஆகாத டேக்கும் அந்த வெர்ஷன்ல இருக்கும். அதையும் பார்த்து அதுல நல்லா வந்திருக்கிற சின்னச் சின்ன ரியாக்‌ஷன் எல்லாம் எடுத்து பயன்படுத்துவார். அந்த ஜாம்பவானை நாம கொண்டாடலைனு வருத்தம் இருக்கு."

சினிமாவுல உங்க கரியர் ஆரம்பிச்சு 10 வருடங்கள் நிறைவடைந்திருக்குனு நினைக்கும்போது எப்படியிருக்கு?

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்

"10 வருஷத்துல மூன்று படங்கள்தான். ரொம்ப குறைவா இருக்கு. 'பாணா காத்தாடி' வெளியானவுடனே மறுபடியும் அதர்வாவை வெச்சு ஒரு படம் பண்றதா இருந்தது. சில காரணங்களால பண்ண முடியாமல் போயிடுச்சு. அப்புறம், டிவியில ரொம்ப பிஸியாகிட்டேன். இப்போ டிவி வேலைகளை நிறுத்திட்டு படங்கள்ல அதிகம் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். இனி வருஷம் ஒரு படம் என்கிட்ட இருந்து வரும்."