Published:Updated:

“என் இனிய தயாரிப்பாளர்களே...”

கடிதம் எழுதிய பாரதிராஜா... கதறும் தயாரிப்பாளர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

‘என் இனிய தமிழ் மக்களே...’ என்ற கரகர குரலால் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. இப்போது, ‘என் இனிய தயாரிப்பாளர்களே...’ என்று தொடங்கும் வரிகளால் கடிதம் எழுதி, தமிழ்த் திரையுலகத் தயாரிப்பாளர்களைக் கதற வைத்திருக்கிறார்!

‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் அவர் ஆரம்பித்திருக்கும் புதிய சங்கத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு எனக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ‘ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்டுவரும் சூழலில், அதை உடைக்கும் வகையில் இப்படியொரு புதிய சங்கம் தேவை இல்லை’ என்பதே எதிர்ப்பாளர் களின் கருத்து.

‘கொரோனா ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் திரையுலகைச் செயல்படவைக்க இன்னொரு சங்கம் அவசியம். பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாயநிலை, கேள்விக்குறி யாகும் எதிர்காலம் என எல்லாவற்றுக்கும் பதில் தேடும் முயற்சி இது’ என்று புதிய சங்கத்துக்கான அவசியம் குறித்துக் காரணம் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர்கள் சிலர், “தயாரிப்பாளர் சங்கத்தில் 1,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும், தற்போது படம் எடுப்பவர்கள் நூறு பேருக்கும் குறைவானவர்களே. இவர்களும்கூட கொரோனா காலகட்டத்தில், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடிவருகிறார்கள்.

இந்தச் சூழலில், தொழிலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைச் செய்யாமல் அன்னதானம், ஓய்வூதியம் என்று தயாரிப்பாளர் சங்கத்தையே முடக்கிவிட்டார்கள். சங்கத்திலிருக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகப் படம் தயாரித்தவர்களும் அல்ல. யாரோ ஒருவர் வெளியிலிருந்து ஃபைனான்ஸ் செய்ய... 10 லட்சம், 20 லட்சம் பணத்தை மட்டும் போட்டுவிட்டு, ‘நானும் தயாரிப்பாளர்’ என்று வலம்வருகிறார்கள். இவர்கள்தான் தற்போது சங்கத்தையே செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள், ‘தங்களுக்கென ஆதரவாளர்கள் வேண்டும்’ என்பதற்காகவே இவர்களை உறுப்பினர்களாக்கி வைத்திருக்கின்றனர். சங்க வளர்ச்சிக்காக அக்கறையுடன் யாராவது பேசினால், அவர்களை அவமரியாதையாகப் பேசி தடை ஏற்படுத்துவதுதான் இந்தத் ‘திடீர் தயாரிப்பாளர்’களின் வேலை.

கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், ராம நாராயணன் ஆகியோர் சங்கத் தலைவர்களாக இருந்தவரையில், சங்கம் கட்டுக்கோப்புடன் இருந்தது. பாரம்பர்யமாகத் திரைப்படங்களை எடுத்துவந்த பெரும் நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டன. சில பெரிய தயாரிப்பாளர்களும் துறையைவிட்டே ஒதுங்கிவிட்டனர். ரியல் எஸ்டேட் பிசினஸ்காரர்களும், கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் இன்றைக்குத் தயாரிப்பாளர் சங்கத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றனர்’’ என்று குமுறுகிறார்கள்.

‘புதிய சங்கம் வேண்டாம்’ என்று சொல்லும் சில சீனியர் தயாரிப்பாளர்கள், “பாரதிராஜா எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட விருக்கிறது. எனவே, அவர் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். அப்படிச் செய்தால், தேர்தலின்றி அவரையே தலைவராகத் தேர்ந்தெடுக்கவும் நாங்கள் தயார்” என்றவர்கள், வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

பாரதிராஜா
பாரதிராஜா

‘‘ஏற்கெனவே படம் எடுத்து நஷ்டமடைந்த சிலரே தற்போது பாரதிராஜாவைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள்தான் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிக்க புதிய சங்கம், பதவி என அவரைத் தவறாக வழிநடத்து கிறார்கள். கடந்த வருடம்வரை பொறுப்பிலிருந்தவர்கள் விதைநெல்லை எடுத்து சோறாக்கிய கதையாக, அறக்கட்டளைப் பணத்தை யெல்லாம் வாரியிறைத்தார்கள். அதனால் கோர்ட், வழக்கு என்றாகி, கடைசியில் சங்க நிர்வாகம் அரசுக் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தனி அதிகாரிதான் கடந்த ஒரு வருடமாக சங்க நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். அந்த அதிகாரிக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவில்தான் பாரதிராஜாவும் உறுப்பினராக இருக்கிறார். ஆனால், அவரே சங்கத்தைக் குறை கூறுவது, அவர் சார்ந்திருக்கும் குழுவையும் அரசையுமே குறை கூறுவதுபோல் ஆகிவிடாதா?

தியேட்டர் எப்போது திறக்கப்படும், ரசிகர்களின் வரவேற்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. இந்த நிலையில், புதிதாகச் சங்கம் ஆரம்பித்தால் மட்டும் எப்படிச் செயல்பட முடியும்? வீடு, நகையை விற்று படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். ‘நாங்கள் புதிதாகச் சங்கம் ஆரம்பிக்கிறோம்’ என்று பிரிந்து சென்றால், அது நியாயம்தானா?’’ என்று கேள்வி கேட்கிறார்கள்.

பாரதிராஜாவை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். நம் அழைப்பு ஏற்கப்படவில்லை. நாம் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை. பாரதிராஜாவின் தரப்பில் பேசியவர்களோ, ‘‘இந்த விஷயத்தில் நாங்கள் எந்தக் கருத்து கூறினாலும், அது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிவிடும். விரைவில் பாரதிராஜாவே தெளிவான விளக்கத்தைத் தெரிவிப்பார்’’ என்று சொன்னார்கள்.

டிக்... டிக்... டிக்... நாமும் காத்திருப்போம்!

பிக்ஸல் பீஸ்: தமிழகத்தில் கால்பதிக்கத் துடிக்கும் பி.ஜே.பி, தமிழ்த் திரையுலகின்மீதும் ஆழமாகக் கண்பதித்திருக்கிறது. எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் கடந்த சில பல மாதங்களாகவே இந்த விஷயத்தில் காய்கள் நகர்த்திக் கொண்டிருப்பதாகப் பேச்சிருக்கிறது. ‘‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பற்ற வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தீ, அதன் முதற்கட்டமாகக்கூட இருக்கலாம். அடுத்தடுத்து, தமிழகத்தின் பெரிய திரை, சின்னத்திரை ஆகியவை சார்ந்து இயங்கிவரும் அனைத்து சங்கங்களிலும்கூட இந்தத் தீ பற்றக்கூடும்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு