சினிமா
தொடர்கள்
Published:Updated:

“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”

விவேசினி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
விவேசினி படத்தில்...

நான் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா தீவிரமான மத நம்பிக்கையாளர் என்றாலும் தி.மு.க ஆதரவாளரும்கூட.

``இரண்டு நூற்றாண்டுக்கு முன்பே சர்வதேச பகுத்தறிவுச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்ட மரபு தமிழர்களுக்கு உண்டு என்பதை உலகத்திற்குச் சொல்லப்போகும் படமாக ‘விவேசினி’ இருக்கும்’’ - உற்சாகமாகப் பேசத் தொடங்கும் இயக்குநர் பவன் ராஜகோபாலன், கே.வி.ஆனந்திடம் பணிபுரிந்தவர்.

‘‘18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்திப்பாக்கம் வெங்கடாசலம் பகுத்தறிவுச் செயல்பாடுகளில் அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் ஆகியோருக்கு முன்னோடி. லண்டனிலிருந்து வெளியாகும் ‘The Freethinker' இதழின் கருத்துகளால் கவரப்பட்டு தமிழில் நடத்தப்பட்ட ‘தத்துவ விவேசினி' இதழிலும், ஆங்கிலத்தில் வந்த ‘Thinker' இதழிலும் பங்களித்தவர். ‘இந்துமத ஆசார ஆபாச தர்சினி' என்னும் நூலையும் எழுதியவர். லண்டனில் இப்போதும் வெளிவரும் The Freethinker இதழில் தொடர்ந்து எழுதியவரும் National Secular Society அமைப்பைத் தொடங்கியவருமான சார்லஸ் பிராட்லா முக்கியமான பகுத்தறிவுச் சிந்தனையாளர். இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளில் செயல்பட்ட இரண்டு சிந்தனையாளர்களையும் இருவரது தலைமுறையையும் இணைக்கும் கதைதான் ‘விவேசினி.'

“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”

அத்திப்பாக்கம் வெங்கடாசலத்தின் பேரனாக ஜெயராமன் என்னும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். ஒரு காட்டுக்குள் தொடர்ச்சியாக அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. பேய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஜெயராமனின் மகள் சக்தி அந்தக் காட்டுக்குள் செல்கிறார். ஒரு பகுத்தறிவுவாதியால் வளர்க்கப்பட்ட மகள் என்றாலும் அவராலும் விடைகாண முடியாத பல சம்பவங்கள் குழப்புகின்றன. உண்மையில் அந்தக் காட்டுக்குள் நடப்பது என்ன, பகுத்தறிவுக்கு அப்பாலான சக்திகள் உண்டா என்பதற்கான விடைதான் ‘விவேசினி.' ’’

``இப்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது?’’

‘‘நான் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா தீவிரமான மத நம்பிக்கையாளர் என்றாலும் தி.மு.க ஆதரவாளரும்கூட. குறிப்பாக கருணாநிதிமீது அவருக்கு மரியாதையும் பற்றும் அதிகம். ஒருபுறம் வைதீகம், இன்னொருபுறம் தி.மு.க என்ற இரண்டின் தாக்கத்துடனும் வளர்ந்தேன். என்னுடைய வாசிப்பும் தொடர்ச்சியான வாழ்க்கைப்பயணமும் என்னைப் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குக் கொண்டு சென்றது. குறிப்பாக ஆய்வாளர்கள் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன்குறை ஆகியோரின் எழுத்துகள் சினிமா குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் எனக்குள் புதிய பார்வைகளை உருவாக்கின. இன்னொருபுறம் உலக சினிமாக்கள்மீதான ஆர்வம், ஒரு கலைப்படைப்பை எப்படி உருவாக்கவேண்டும் என்ற பார்வையை ஏற்படுத்தியது.

2010-ல் இங்கிலாந்தில் M.A Film Production படித்துத் தமிழகம் திரும்பியபிறகு 2011-லிருந்து தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் இயக்கினேன். ஒரு முழுநீளத் திரைப்படம் இயக்க வேண்டும் என்னும்போது ‘விவேசினி'யைத் திரைப்படமாக்கத் திட்டமிட்டேன்.’’

“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”

``திராவிட இயக்க சினிமாக்கள் முதல் வேலு பிரபாகரன் வரை சினிமாவில் பகுத்தறிவு பேசியதற்கு உதாரணங்கள் உண்டு. இதில் உங்கள் சினிமா எந்த இடத்தில் இருக்கும்?’’

‘‘இந்திய சினிமாக்களில் திராவிட சினிமாக்களுக்கு முக்கிய இடமுண்டு. சீர்திருத்தக் கருத்துகள் சினிமாவில் பிரதிபலித்தது தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும்தான். ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் சிந்தனை சத்யஜித் ரேயின் சினிமாக்களில் எதிரொலித்தது. ஆனால் மேற்கு வங்க சினிமா வெகுமக்களைச் சென்றடையவில்லை. திராவிட இயக்க சினிமாக்களோ தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்தன. ஆனால் இப்போது சினிமாவின் முகம் மாறியிருக்கிறது. வேலு பிரபாகரன், ஜனநாதன் ஆகியோர்மீது தனிப்பட்ட முறையிலும் அவர்களது கருத்துகள்மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால், அவர்களைப் போல் பிரசார சினிமா எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘விவேசினி' எந்த ஒரு பிரசாரத்தையும் உரத்த குரலில் பேசாது. ஆனால் பார்வையாளர்களைச்் சிந்திக்க வைக்கும். இதுதான் ஒரு சினிமாவின் இன்றைய தேவை என்று நினைக்கிறேன்.’’

``நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள்..?’’

‘‘நாசர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சக்தி என்னும் கதையின் நாயகியாக நடித்திருக்கும் காவ்யா, ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். மேகா ராஜன், லண்டனைச் சேர்ந்த வனேஸா ஸ்டீவன்ஸன், பிரிட்டிஷ் நாடகக் கலைஞராகிய கேரி கார்டிஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக சார்லஸ் பிராட்லாவுடன் NSS-ல் இணைந்து பணிபுரிந்த ராபர்ட் ஃபார்டரின் கொள்ளுப்பேரன் பாப் ஃபார்டர் படத்தில் அதே அடையாளத்துடன் தோன்றி நடித்திருக்கிறார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு, ரிஷப நாகேந்திரா இசையமைத்திருக்கிறார். ஆய்வாளர் கஜேந்திரன் என்னுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார். 16 பேர் seed funding மூலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்கள்.’’

``தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்பே லண்டனில் திரையிட்டிருக்கிறீர்களே?’’

‘‘ஆமாம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மை ஈர்த்திருக்கிறது The Freethinker இதழும் சார்லஸ் பிராட்லாவின் சிந்தனைகளும். எனவே National Secular Society உறுப்பினர்களிடம் இந்தத் திரைப்படத்தைத் திரையிட விரும்பினேன். அதற்கான முயற்சியை The Freethinker இதழின் ஆசிரியர் எம்மா பார்க் எடுத்தார். லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் Convey hall. மிகமுக்கியமான நாடக அரங்கேற்றங்கள், கருத்தரங்கங்கள், திரையிடல்கள் நடக்கும் அந்த அரங்கத்தில் National Secular Society உறுப்பினர்கள் முன்னிலையில் ‘விவேசினி'யைத் திரையிட்டோம். காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர்கள், திரைப்பட விமர்சகர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் சிலரும் வந்திருந்தார்கள். திரைப்படம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அத்திப்பாக்கம் வெங்கடாசலம் - சார்லஸ் பிராட்லா தொடர்பு அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.’’

“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”
“தமிழ்ப் பகுத்தறிவு மரபைப் பேசும் படம்!”

``தமிழகத்தில் எப்போது ‘விவேசினி'யைப் பார்க்கலாம்?’’

‘‘விரைவில். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். பழைமைவாதக் கருத்துகளை பிரமாண்ட சினிமாக்களாக உருவாக்க வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அவலம் ஒருபுறம், மதவாதம், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை விமர்சிப்பவர்கள் கொலை முயற்சிகளுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளாகும் துயரம் இன்னொருபுறம். இப்படிப்பட்ட சூழலில் சர்வதேசப்பின்னணியில் தமிழ்ப்பகுத்தறிவு மரபை வலியுறுத்தும் சமகாலத் தேவையாக ‘விவேசினி' இருக்கும்.’’

பவன் குரலில் பகுத்தறிவின் தெளிவும் உறுதியும் இழையோடுகின்றன.