Published:Updated:

``ரிலீஸுக்கு ரெடியா இருந்த என் படத்தைத் திருடிட்டாங்க!''- `பாலக்காட்டு மாதவன்' இயக்குநர் சந்திரமோகன்

இயக்குநர் சந்திரமோகன்
இயக்குநர் சந்திரமோகன்

நடிகர் விவேக் - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான `பாலக்காட்டு மாதவன்’ படத்தின் இயக்குநர் சந்திரமோகன்.

கேரளாவின் பாலக்காடு இவரது சொந்த ஊர். `பாலக்காட்டு மாதவன்' படத்துக்கு முன்பே 2012-ல் `சௌந்தர்யா’ என்றொரு படத்தை இயக்கியிருந்தார். தமிழில் தன்னுடைய மூன்றாவது படத்தை முடித்து வெளியிடத் தயாராக வைத்திருந்த வேளையில், கொரோனா வந்துவிட, லாக் டௌன் முடிந்ததும் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தார்.

இந்தநிலையில்தான் சென்சார் சர்டிஃபிகேட் நகலுடன் அந்தப் புதிய படம் மற்றும் அதன் ஸ்டில்ஸ், முதலானவை அடங்கியிருந்த தன்னுடைய லேப் டாப் திருடு போய்விட்டதாகப் புகார் கொடுத்திருக்கிறார் சந்திரமோகன்.

பாலக்காட்டு மாதவன்
பாலக்காட்டு மாதவன்

அவரிடம் பேசினோம்.

``ஏவிஎம் நிறுவனம் சீரியல்கள் தயாரிச்சபோது அங்க புரொடக்‌ஷன் மேனேஜரா அதியமான்னு ஒருத்தர் இருந்தார். நான் `சௌந்தர்யா’ படம் இயக்கியபோது எனக்கு அவர் அறிமுகமானார். அந்தப்படத்துக்கும் அவர்தான் புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தார். படம் முடிஞ்சதும் எங்கிட்ட இருந்து விலகிப் போயிட்டார். பிறகு அப்பப்ப பேசுவார். ஆனா எங்க இருந்தார்னுலாம் தெரியாது.

கொரோனா லாக்டெளன் தொடங்கின ஆரம்பத்துல திடீர்னு ஒருநாள் என்னை வந்து சந்திச்சார். `இப்ப எங்கேயுமே வேலையில் இல்லைனும், மேல்மருவத்தூர்ல ரயில்வே பிளாட்ஃபாரத்துல இருந்ததாகவும் சொன்னார். போலீஸ் வந்து அங்கேயும் இருக்க விடாம விரட்டறதாகவும் அழுதார். அவர் தங்கறதுக்கு ஒரு இடம் தேடித் தரலாம்னா கொரோனாவைக் காரணம் காட்டி எங்கேயும் கிடைக்கலை. கடைசியில வேளச்சேரில எனக்கு என்னுடைய தயாரிப்பாளர் தந்திருந்த வீட்டுலயே ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்னு அனுமதிச்சேன்.

ஒருவாரம் இருந்திருப்பார். என்னுடைய அடுத்த படம் பத்தின தகவல் எல்லாம் என்னுடைய லேப்டாப்ல இருக்குங்கிற விஷயம் அவருக்குத் தெரியும். கடந்த வாரத்துல ஒருநாள் எனக்கு வெளியில ஒரு அவசர வேலை வந்தது. கிளம்பிப் போயிட்டேன். சாயங்காலமா திரும்பி வந்து பார்த்தா ரூம்ல அதியமானையும் காணோம். என்னுடைய லேப்டாப்பையும் காணோம். அவருக்கு போன் பண்ணினா போனை எடுக்கவே மாட்டேங்கிறார். எத்தனையோ மெசேஜ் போட்டுப் பார்த்துட்டேன். பதிலே இல்லை. பணம் வேணும்னாலும் தர்றேன்னு சொன்னேன். அவர் பேசவே இல்லை.

இதற்கிடையில ஒரு அவசர வேலை காரணமா இ-பாஸ் வாங்கிட்டு பாலக்காட்டுக்கு வந்துட்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் அதியமான் போனை எடுக்கவே இல்லை.

தெரிஞ்சவர்னு நம்பி கொரோனா காலத்துல அடைக்கலம் தந்ததுக்கு எனக்கு நல்லாவே நன்றிக்கடன் செஞ்சுட்டார். `படம் சம்பந்தமா இனி என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு’ன்னுட்டார் என்னுடைய தயாரிப்பாளர்.

பாலக்காட்டு மாதவன்
பாலக்காட்டு மாதவன்

எடுத்துட்டுப்போன அந்தாளு டிவிடி போட்டு வித்துட்டாலோ அல்லது திருட்டுத்தனமா படத்தை வெளியிட்டாலோ, நான் என்னுடைய தயாரிப்பாளருக்கு என்ன பதில் சொல்வேன்னு தெரியல. சினிமாவுல ஒரு படம் எடுத்து வெளியிடறதுக்குள்ள எத்தனைப்பாடு படுறாங்கன்னு புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவருக்குத் தெரியாதா? ரோட்டுல நிற்கிறேன்னு அழுது எங்கிட்ட வந்தவரால இன்னைக்கு நான் நிர்கதியா நிற்கறேன்.

போலீஸ்ல புகார் தரணும்னா நான் சென்னைக்கு வரணும். லாக் டௌன் நேரத்துல நினைச்சபடி ட்ராவல் பண்றது முடியாத காரியமா இருக்கு. எனக்கு அடுத்து என்ன செய்யறதுன்னே தெரியல’’ என்கிறார் சந்திரமோகன்.

சந்திரமோகன் குறிப்பிட்ட அதியமான் என்பவரின் மொபைல் எண்ணுக்கு நாமும் தொடர்புகொண்டோம். நம்முடைய அழைப்புக்கும் பதிலே இல்லை. அவர் நம்மைத் தொடர்புகொண்டால் அவர் தரப்பு பதிலை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு