Published:Updated:

``என்னாலதான் பாலுமகேந்திரா சார் அவரோட படத்தை எடுக்கலை!" - சிம்புதேவன் #12YearsOfAraiEn305ilKadavul

'அறை எண் 305ல் கடவுள்'

`அறை எண் 305ல் கடவுள்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன் பேட்டி!

``என்னாலதான் பாலுமகேந்திரா சார் அவரோட படத்தை எடுக்கலை!" - சிம்புதேவன் #12YearsOfAraiEn305ilKadavul

`அறை எண் 305ல் கடவுள்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன் பேட்டி!

Published:Updated:
'அறை எண் 305ல் கடவுள்'

`இம்சை அரசன் 23ம் புலிகேசி' எனும் கிளாஸிக் படத்திற்குப் பிரமாண்ட வெற்றி கிடைத்த பிறகு, இயக்குநர் சிம்புதேவனின் அடுத்த படம் என்ன என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த சமயத்தில் மீண்டும் ஷங்கர் தயாரிப்பில் 'அறை எண் 305ல் கடவுள்' எனும் ஃபேன்டஸி காமெடி படத்தை எழுதி இயக்கினார் சிம்புதேவன். இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அறை எண் 305ல் கடவுள்' படத்தின் ஆரம்பப்புள்ளி எது?

`` 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்துக்குப் பிறகுதான், இந்தக் கதையில வொர்க் பண்ணேன். எனக்கு காமிக்ஸ் கதைகள் மேல பெரிய ஆர்வமுண்டு. பீரியட் டிராமா ஜானர்ல நக்கல், நையாண்டி சேர்த்ததுதான் 23ம் புலிகேசி பண்ணேன். அடுத்த படமும் அதே மாதிரி கொடுங்கனு நிறைய பேர் சொன்னாங்க. எனக்குப் பண்ணதையே பண்ண உடன்பாடில்லை. போரடிச்சுடும். ஒவ்வொரு படத்துலயும் வொர்க் பண்ணும்போது நமக்கும் புதுப்புது அனுபவம் கிடைக்கணும், அந்தப் படத்தைப் பார்க்க வர்ற மக்களுக்கும் படம் புதுசா இருக்கணும்னு நினைப்பேன். நானும் மறுபடியும் ஒரு பீரியட் படம் வேண்டாம். இந்த முறை சமகாலத்துல நடக்கிற கதையா இருக்கட்டும்னு முடிவு பண்ணேன். கடவுள்ங்கிற கான்செப்டை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாளா என் மனசுல இருந்த விஷயம். கடவுள் பூமிக்கு வந்தா எப்படி இருக்கும், என்னவாகும்னு நாவல்கள், சிறுகதைகள், காமிக்ஸ், படங்கள்னு எல்லா தளத்திலயும் நிறைய வந்திருக்கு. அதை நம்ம பண்ணும்போது என்ன வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சு, அந்த ஸ்கிரிப்டல வொர்க் பண்ணேன். `ஆண்டவனைப் பற்றி முழுதும் அறியமுடியாத மெய்ஞானத்திற்கும், அண்டத்தைப் பற்றி முழுதும் அறியமுடியாத விஞ்ஞானத்திற்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம்'னு இந்தப் படத்தோட ஸ்கிர்ப்ட்டைப் புத்தகமா போடும்போது முதல் பக்கத்துல இப்படி எழுதியிருந்தேன். `அறை எண் 305ல் கடவுள்' படத்துடைய மொத்த கன்டன்ட்டும் இந்த ரெண்டு வரிதான். `காலத்தைப் பற்றிப் பேசுவதும், கடவுளைப் பற்றிப் பேசுவதும் ஒன்று'னு ஜார்ஜ் லூயிஸ் போர்கே சொன்னதை வெச்சுதான் படத்தை ஆரம்பிச்சேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கதைக்கான உங்களோட மெனக்கெடல் என்ன?

'அறை எண் 305ல் கடவுள்'
'அறை எண் 305ல் கடவுள்'

``முதல் படம் முழுக்க முழுக்க செட்டுக்குள்ள எடுத்தது. இது அப்படியே நேரெதிர். எல்லாமே முட்டுச்சந்துகள், சின்னச்சின்ன தெருக்கள்தான். நான் விகடன்ல வேலை பார்த்தப்ப திருவல்லிக்கேணி மேன்ஷன்லதான் தங்கியிருந்தேன். அதனால இந்த மேன்ஷன் வாழ்க்கையைப் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். அதுக்காக ஐந்நூறுக்கும் மேற்பட்ட மேன்ஷன்களைப் போய் பார்த்தேன். ரூம் ஒரு மேன்ஷன், மொட்டைமாடி ஒரு மேன்ஷன்னு நிறைய மேன்ஷன்கள்ல எடுத்தோம். நம்ம வளர்ந்த இடத்துலயே நம்ம கதை படமாகுதுனு நினைச்சப்ப ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. அதே சமயம், ரொம்ப சவாலாகவும் இருந்தது. ஃபேன்டஸி படமா இருந்தாலும் எதார்த்தமான திருவல்லிக்கேணியும் தெளிவா இருக்கும். அதுக்குப் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. அப்புறம், இந்தக் கதையை வொர்க் பண்றதுக்கு முன்னாடி ஆத்திகம் தொடர்பாகவும் நாத்திகம் தொடர்பாகவும் ஆழமான ஆராய்ச்சி பண்ணேன். அந்த மொத்த ஆராய்ச்சியையும் படத்துக்குள்ள கொண்டுவரலை. இந்த புராஜெக்ட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கணும்னு அதைப் பண்ணேன். கடவுளும் நாத்திகவாதி ருத்ரனும் பேசிக்கிற அந்த அஞ்சு நிமிஷ சீனுக்குள்ள கடவுள்னா என்ன, ஏன் ஒரு சாரர் சாமி கும்பிடுறாங்க, ஒரு சாரர் ஏன் சாமி கும்பிடுறதில்லை, அதோட நோக்கம், மனநிலைனு எல்லாமே இருக்கும். ஷங்கர் சாருக்கும் ரொம்பப் பிடிச்ச சீன் அது. படம் வெளியான பிறகு, பலராலும் பாராட்டப்பட்ட சீனும் அதுதான். ஆன்மிகம் பத்தி நாத்திகனும் நாத்திகம் பத்தி கடவுளும் பேசுறதுதான் அந்த சீனுடைய ஹைலைட். எந்தளவு வரை அது ஆன்மிகம், எந்த எல்லையில ஆன்மிகம் மூடநம்பிக்கையா மாறுதுங்கிற விஷயங்களை கடவுளை வெச்சே சொல்லியிருப்போம். ஆன்மிகம் புனிதமானது. அதுக்கு மூடநம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். ஆன்மிகம், நாத்திகம் பத்தி முழுமையா தெரிஞ்சிட்டு இறங்கும்போது நமக்கு வர்ற எல்லாக் கேள்விகளையும் காட்சிப்படுத்த முடிஞ்சது."

கடவுளா நடிக்க பிரகாஷ் ராஜை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? அவர் என்ன சொன்னார்?

``மத்த படங்கள்ல கடவுள் கடைசி வரை கடவுளாவேதான் இருப்பார். ஆனா, அவர் மனிதனா மாறி அவங்களோட கஷ்டத்தை எதிர்கொள்றதுதான் இதுல வித்தியாசம். கடவுள் கேரக்டர்ல யார் பண்ணலாம்னு டிஸ்கஷன் இருந்தது. மம்மூட்டி சார் பண்ணா எப்படி இருக்கும்னு யோசிச்சோம். பிரகாஷ் ராஜ் சார் பெயர் வந்ததும் எல்லோருக்கும் சரியா இருப்பார்னு தோணுச்சு. உடனே அவரை மீட் பண்ணி கதை சொன்னேன். கடவுள்னு சொன்னவுடன், `நான் வில்லன்பா. என்னை மறந்து மக்கள் எப்படி கடவுளா ஏத்துக்குவாங்க?'னு நிறைய கேள்விகள் இருந்தது. அதெல்லாம் ஈஸியா கனெக்ட் பண்ணுவாங்கன்னு சொல்லி அவரைக் கமிட் பண்ணோம். அவ்ளோ உறுதுணையா இருந்து நடிச்சுக்கொடுத்தார்."

சந்தானம், கஞ்சா கருப்பு காம்பினேஷன்?

'அறை எண் 305ல் கடவுள்'
'அறை எண் 305ல் கடவுள்'

``அந்த சமயத்துல ராசு, மொக்கை இந்த ரெண்டு கேரக்டருக்கு இவங்க ரெண்டு பேரும் ரொம்ப பொருத்தமானவர்களா இருந்தாங்க. அதை அவங்க சரியா பண்ணிக்கொடுத்தாங்க. இந்தப் படத்துல அவருக்கு `தென்றலுக்கு நீ'னு ஒரு டூயட் பாட்டு இருக்கும். அது எடுக்கும்போது அவர் என்கிட்ட, `சார் எனக்கு டூயட்டா சார்?'னு கேட்டார். `உங்களுக்கு டூயட் வைக்கணும்னு வைக்கல. இந்தக் கதைக்குத் தேவைப்படுது'னு சொன்னேன். நான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே `உங்களை ஹீரோவாக்கணும்னு இதையெல்லாம் பண்ணலை. இந்த கேரக்டருக்கு நீங்க ரொம்ப நல்லாயிருப்பீங்க. அதனாலதான் இவ்ளோ விஷயங்கள் பண்றோம்'னு சொன்னேன். தன் கேரக்டரை மிகச்சரியா பண்ணாலே சிறப்பான ஹீரோவாக முடியும். அதைத்தான் சந்தானம் இன்னிக்கும் பண்ணிட்டு இருக்கார்."

ஒரு ப்ரொஃபசர், ஒரு நாத்திகவாதி, ஒரு அரசாங்க ஊழியர், ஒரு முதியவர்... இந்த கேரக்டர்களை எப்படி தேர்ந்தெடுத்தீங்க?

``ஒரு மேன்ஷனுக்குள்ள இருந்தா இந்த மாதிரி பல கேரக்டர்களைப் பார்க்கலாம். நானும் மேன்ஷன்ல வாழ்ந்ததால இந்த கேரக்டர்களை எழுத உதவியா இருந்தது. இந்த கேரக்டர்களை எல்லாம் எழுதி முடிச்ச பிறகு, ஒவ்வொரு நடிகர்களையும் படத்துக்குள்ள கொண்டுவந்தேன். எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், மதன் பாப், இளவரசு, `தலைவாசல்' விஜய்னு எல்லோருமே சீனியர்ஸ். அவங்கவங்க கேரக்டரை கச்சிதமா பண்ணியிருப்பாங்க."

அறை எண் 305க்கு ஏதாவது காரணம் இருக்கா?

``காரணம் எல்லாம் பெருசா ஒண்ணுமில்லை. நான் தங்கியிருந்த மேன்ஷன்ல மூணாவது மாடியிலதான் என் ரூம். 301 - 315 வரை இருக்கும். அதுல 305னு சும்மா எடுத்துக்கிட்டேன். எனக்கு முணு டிஜிட் நம்பர் வரணும், அவ்வளவுதான்."

`கேலக்ஸி பாக்ஸ்' கான்செப்ட் பத்திச் சொல்லுங்க?

 கேலக்ஸி பாக்ஸ்
கேலக்ஸி பாக்ஸ்

``பல இடங்கள்ல இருந்து பல விஷயங்களை எடுத்துக்கிட்டதுதான். காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கோயில் இருக்கு. அந்தக் கோயிலை ஒருமுறை சுத்தி வந்தா ஒரு பிறவியைக் கடந்த மாதிரினு சொல்வாங்க. அதோட அமைப்பு, தாயோட தொப்புள் கொடி மாதிரி இருக்கும்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட அந்த வடிவத்துலதான் அந்த கேலக்ஸி பாக்ஸை வடிவமைச்சிருப்போம். மனுஷன் கண்டுபிடிச்சதுல அதிகபட்சமான விஷயம், பிக் பேங் தியரிதான்னு அதுல கடவுள் சொல்லுவார். கொஞ்சம் மெய்ஞானமும், விஞ்ஞானமும் சேர்ந்ததுதான் இந்த கேலக்ஸி பாக்ஸ்."

படம் பார்த்துட்டு ஷங்கர் என்ன சொன்னார்?

`` 'எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, கடவுளுக்கான தெளிவான விளக்கம் இந்தப் படத்தின் மூலமா கிடைச்சது. அதுவும் என்டர்டெயின்மென்டோட இருந்தது. அதுவும் இது நம்ம ப்ராடெக்டா இருக்கிறது ரொம்ப சந்தோஷம்'னு சொன்னார்."

இயக்குநர் சிம்புதேவன்
இயக்குநர் சிம்புதேவன்

ஜாவா சுந்தரேசன் கேரக்டர் இப்ப வரை பாப்புலரா இருக்கே?

``அந்த சமயத்துலதான் ஐடி துறை வளர ஆரம்பிச்ச சமயம். அப்போ ஐடியில இருக்கிறவன் ரொம்ப வேகமா சம்பாதிச்சான்ங்கிற மனப்பான்மை பெரும்பாலான பேருக்கு இருந்தது. ஐடியில இருந்தவங்களுக்கும் ஐடி பத்தி தெரியாதவங்களும் இந்த கேரக்டடரை ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. சாம்ஸ் அந்த கேரக்டரை சூப்பரா பண்ணியிருப்பார். `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படத்துலயும் நல்ல கேரக்டர் கொடுக்க முடிஞ்சது.. அவர் இன்னும் நிறைய பண்ணக்கூடிய நபர். ஆனா, அவருக்கு சரியான கேரக்டர்கள் அமையமாட்டிங்குது."

வி.எஸ்.ராகவன் உங்களுடைய எல்லா படத்துலயும் இருந்திருக்காரே?

``அவர் உயிருடன் இருக்கிற வரை என்னுடைய எல்லா படங்கள்லயும் அவரை நடிக்க வெச்சேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர் அவர். இந்தப் படத்துல அவருக்கு ரொம்ப சென்சிட்டிவான கேரக்டர். கடவுள்கிட்ட அந்த முதியவர் பேசுற காட்சி எடுக்கும்போது ரொம்ப நெகிழ்வா இருந்தது."

மறக்கமுடியாத பாராட்டு?

``மூணு முறை படம் பார்த்துட்டு பாலு மகேந்திரா சார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதுல படத்தைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு எழுதிட்டு, `கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் மிகச்சரியாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ்ப் படம் இதுதான்'னு சொல்லி வாழ்த்துகளோட முடிச்சிருப்பார். அப்போ அவர், கடவுள் பத்தி ஒரு படத்தை இயக்குறதா இருந்தது. `நீ இந்தப் படத்தை எடுத்துட்டதுனால நான் அந்தப் படத்தை எடுக்கலை'னு சொன்னார். வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத பாராட்டு அது. அப்புறம் இந்த ஸ்கிரிப்டை புத்தகமா போடலாம்னு நினைச்சப்ப அவர்கிட்டதான் முன்னுரை எழுதச் சொல்லி வாங்கினேன்"

உங்களுடைய எல்லா படங்களிலும் ஃபேன்டஸி - காமெடி இருக்கும். `கசட தபற' படத்துலயும் அதை எதிர்பார்க்கலாமா? எப்ப ரிலீஸ்?

`` 'கசட தபற' படத்துலயும் நீங்க எதிர்பார்க்குறது எல்லாம் இருக்கும். ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிஷங்கர், ரெஜினா, சந்தீப் கிஷன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. அதே மாதிரி, ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள்னு மல்டி டெக்னிஷீயன்கள் ப்ரொஜெக்ட்னு சொல்லலாம். கண்டிப்பா, மக்களை திருப்திபடுத்துற படமா நிச்சயம் அது இருக்கும். இந்த லாக் டௌன் முடிஞ்சபிறகு, வெளியாகும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism