சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வாழ்க்கையைப் பேசுவேன்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

அப்பா - மகள், அம்மா - மகள் உறவிருக்கே... அதுல அவ்வளவு அழகு, அர்த்தம் இருக்கு.

'காயல்’ திரைப்படம் ஒரு ரொமாண்டிக், ஃபேமிலி, டிராவல் ஸ்டோரி. நல்ல தருணங்களை ஒரு சினிமாவில் கொண்டு வருவது சாதாரண காரியமல்ல. அதற்கான முயற்சியைச் செய்திருக்கேன். இந்தச் சமூகம் பெண்களின் எந்தத் தேர்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை. உள்ளுக்குள்ளே ஒரு தனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அப்படி எந்த முக்கியத்துவமும் அவர்களுக்குத் தராதபோது என்ன ஆகிறது? நம் குடும்பங்களின் உள்ளேயே ஆழமான மௌனம் இருக்கும். அந்த உறைந்த மௌனங்களைக் கீறும்போது என்ன ஆகும் என்பதையும் ‘காயல்’ சொல்லும்.

தமயந்தி
தமயந்தி

அப்பா - மகள், அம்மா - மகள் உறவிருக்கே... அதுல அவ்வளவு அழகு, அர்த்தம் இருக்கு. இந்தியாவுக்கு 1947-லேயே பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் கொடுத்துட்டுப் போய்ட்டான். ஆனால், இன்னும் பல வீடுகள்ல அப்பா - மகள், அம்மா - மகளுக்கு நடுவிலே சுதந்திரப் போராட்டம் நடந்துட்டே இருக்கு. ‘ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேன்தான். ஆனா, இருபது வயசுலயும் என் கையை விடாமல் பிடிச்சு வச்சிருக்கியே நியாயமா’ங்கிற கேள்வி பெண்கள் கிட்ட இருக்கு. அந்த இடைவெளியையும் ‘காயல்’ பேசும்...’’ எளிமையாகப் பேசுகிறார் இயக்குநர் தமயந்தி. கதாசிரியராகவும் முக்கிய இடத்தைப் பிடித்துத் தடம் பதித்து அனுபவங்களின் ஏணிப்படியில் ஏறி வந்தவர்.

வாழ்க்கையைப் பேசுவேன்!
வாழ்க்கையைப் பேசுவேன்!

``அதிகமும் வாழ்க்கை குறித்தான பார்வை இருக்கும் போலிருக்கே..?’’

``தற்கொலை வேண்டாம்னு எல்லோருக்கும் சொல்ற பொண்ணு, அவளே தற்கொலை செய்து கொண்டபோது மனமுடைந்து போயிடுறாங்க. அஸ்தியைக் கரைக்க பாண்டிச்சேரியிலிருந்து ராமேஸ்வரம் வரை போகிற பயணத்தில் நினைவுகளும் கனவுகளும் காட்சிகளாய் விரிகிறது கதை. அந்தப் பொண்ணு ஏன் இறந்ததுன்னு இந்தப்படம் பேசவே பேசாது. அதை யாரும் யோசித்தால், அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா நினைப்பேன்.

ஒட்டுமொத்தமாக ஆண் வர்க்கம் மோசம்னு சொல்றதை உடைக்க விரும்பினேன். ஆண் பெண் உறவு எப்படிப்பட்டதாக இருக்கணும்னு இந்தப் படம் பேசும். ஆண், பெண் என யாருக்காகவும் நான் பரிந்து பேசவேயில்லை. நான் எதிர்க்கும் அதிகாரத்தைக் கேள்வி கேட்டிருக்கேன். எங்க ஊர்ல இன்னமும் கேட்கப்படுகிற இரண்டாவது கேள்வி ‘நீங்க என்ன ஆளுங்க’ என்பதுதான். அந்தக் கேள்வி தவறு என்பதுகூட எங்க ஊர்ல யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட ஆழ்மன சாதிய உணர்வையும் ‘காயல்’ சுட்டிக்காட்டும்.’’

வாழ்க்கையைப் பேசுவேன்!
வாழ்க்கையைப் பேசுவேன்!
வாழ்க்கையைப் பேசுவேன்!

``நடிகர்கள் எப்படி அமைஞ்சாங்க..?’’

“லிங்கேஷ்னு ஒரு நடிகர். ‘கபாலி’யில் பார்த்த அவர் ஒரு தமிழ் முகமாக மனதில் தோன்றிக்கிட்டே இருந்தார். இந்த ஸ்கிரிப்ட் மனதில் ஓடும்போதே அவரை நினைச்சுட்டேன். சவாலை ஏத்துக்கிறவர். அருமையா செய்திருக்கிறார். அப்புறம் காயத்ரி. எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலுமே, கண்ணில் ஒரு மெல்லிய சோகம் இனம் புரியாமல் உட்கார்ந்திருக்கும். அவங்களும் நடிச்சிருக்காங்க. அப்புறம் மலையாளத்தில் நடிப்பு ராட்சசியாக இருக்கிற அனுமோள், ‘நீ எப்ப கேட்டாலும் வருவேன் தமயந்தி’ன்னு ஒரு வார்த்தை சொன்னதை மறக்காமல், உடனே வந்து நடிச்சாங்க. அப்புறம் பாடகி சுவாகதாவை பார்த்து நடிக்கிறீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அப்பாவா ஐசக் வர்கீஸ் அருமையா நடிச்சிருக்கார். தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் பெரிய பலமாக இருந்தார்.

என்னோடு வேலை பார்த்த ஜஸ்டின் கெனன்யாதான் மியூசிக். பாடல்களை நானும் ரமேஷ் வைத்யாவும் எழுதியிருக்கோம். கார்த்திக் சுப்பிரமணியன்தான் கேமரா. இந்த மாதிரி பயணக் கதையில், குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறது கஷ்டமான வேலை. அதை உறுத்தல் இல்லாமல் கொடுத்திருக்கிறார். நீதி சொல்றது என்னோட வேலை கிடையாது. அதற்கு அப்பழுக்கில்லாத மனசும் தனிமையான சிந்தனையும் வேணும். அப்படியெல்லாம் இல்லாமல் ‘இப்படியிருக்கு... பார்த்துக்கங்க’ன்னு சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன். அப்படித்தான் இருக்கும் என் படம்.’’