Published:Updated:

``விஜய், மகேஷ் பாபு, கார்த்தி... இப்படித்தான் ஆரம்பிச்சார் மணி சார்!" - `பொன்னியின் செல்வன்' Exclusive

இயக்குநர் தனா
இயக்குநர் தனா

இயக்குநர் மணிரத்னத்துடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இருப்பவர் `படைவீரன்', `வானம் கொட்டட்டும்' படங்களின் இயக்குநர் தனா. இவரிடம் குரு மணிரத்னம் பற்றியும், அவரின் கனவுப்படமான `பொன்னியின் செல்வன்' பற்றியும் கேட்டோம்.

``பத்து வருஷமா மணி சார்கிட்ட இருக்கேன். எப்போதும் அவர் பார்வை படுற இடத்துலதான் இருப்பேன். இந்த லாக்டெளன் காலத்துலதான் அவரை விட்டு கொஞ்சம் பிரிஞ்சிருக்கேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி அவர்கிட்ட சேரணும்னு ஆசைப்பட்டேன். அப்போ அவரோட ஆபீஸ் அட்ரெஸ்கூட என்னால கண்டுபிடிக்க முடியல. அவர்கிட்ட வேலை பார்க்கணும்னு கனவோட இருந்தேன். எதுவும் கைகூடாததனால சாஃப்ட்வேர் வேலைக்குப் போயிட்டேன். கிட்டத்தட்ட பத்து வருஷம் அப்படியே போயிருச்சு. அப்புறம், ஜெயமோகன் சாரின் நட்பு கிடைச்சது. நாங்க நல்ல நண்பர்கள். புத்தங்கள்லாம் படிச்சிட்டு நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம். ஜெயமோகன் வட்டத்துல நானும் ஒருத்தனா இருந்தேன். இந்தச் சூழல்ல ஜெயமோகன் சார் மணி சாரின் சினிமா வட்டத்துக்குள்ள போனார். ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன் வேலைகள்ல கலந்துக்க ஆரம்பிச்சார். அப்படி 2010-ல ஜெயமோகன் சார் சென்னைக்கு வர்றப்போ அவரை மணி சார் ஆபீஸுக்கு டிராப் பண்ணப் போவேன்.

இந்த நேரத்துலதான் மணி சார்கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சது. மணி சார்கூட இலக்கியம், புத்தங்கள் பற்றி நிறையப் பேசுவேன். ஆனா, சினிமா பற்றிப் பேச மாட்டேன். `10 வருஷத்துக்கு முன்னாடி உங்ககூட சேர்ந்து வேலை பார்க்க ஆசைப்பட்டேன்'னு கூட மணி சார்கிட்ட சொல்லலை. அப்பதான், சரியா 2010-ல `பொன்னியின் செல்வன்' புராஜெக்ட் வேலையை மணி சார் ஆரம்பிச்சார். இதைப் பற்றி ஜெயமோகன் சார் மற்றும் மணி சார் அடிக்கடி பேசிட்டு இருப்பாங்க. இந்த புராஜெக்ட்ல வேலை பார்க்க நல்ல தமிழ் இலக்கியங்கள், மரபுக் கவிதைகள் படிச்சு தெரிஞ்சிருக்குற ஜூனியர் பையன் அவருக்குத் தேவைப்பட்டார். முழுக்க முழுக்க `பொன்னியின் செல்வன்' படத்துக்காக மட்டுமே ஜூனியர் உதவி இயக்குநரை மணி சார் தேடிட்டு இருந்தார்.

மணிரத்னம்
மணிரத்னம்

அப்பதான் இந்த வேலைக்கு நான் சரியாயிருப்பேன்னு ஜெயமோகன் சார்க்கு தோணியிருக்கு. என் பெயரை மணி சார்கிட்ட சொல்லியிருக்கார். ஏற்கெனவே, என்னையும் மணி சாருக்கு தெரியும்கிறதால அவரும் உடனே ஓகே சொல்லிட்டார். அதனால, இந்த `பொன்னியின் செல்வன்' புராஜெக்ட்காக பத்து வருஷமா மணி சார்கூட இருக்கேன். இந்தப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைக்காக நானும், ஜெயமோகன் சாரும் கோதாவரி போவோம். அங்கே உட்கார்ந்து ஸ்க்ரிப்ட் வேலை பார்த்துட்டு இருப்போம். ஒரு உதவி இயக்குநரா மணி சார் டீம்ல இருந்து எந்த மாதிரியான புக்ஸ், நோட்ஸ் தேவைப்படுதுனு எல்லாமே எடுத்துத் தருவேன்.

இந்த ஸ்க்ரிப்ட் பற்றி எங்க மூணு பேருக்கு இடையில் டிஸ்கஷன் போகும். அதுக்காக கொடைக்கானல் போவோம். கொடைக்கானல்ல இருந்தப்போ வேற எதைப் பற்றியும் பேச மாட்டோம். இது சம்பந்தமில்லாத எந்த புக்கும் படிக்கவும் மாட்டோம். சிந்தனை, செயல் எல்லாமே முழுக்க முழுக்க `பொன்னியின் செல்வன்' பற்றி மட்டுமே இருக்கும். லெஜண்ட்ஸ் ரெண்டு பேரும் பேசிக்குவாங்க. இவங்க பேசிக்கிட்டு இருக்குறதை வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். திரும்பி என்னைப் பார்த்து, `நீ என்ன நினைக்குற'னு கேட்பாங்க. நேர்மையா மனசுல என்ன படுதோ அதைச் சொல்லிருவேன். இது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமா இருக்கும், இல்ல சில சமயம் சரியாவும் இருக்கும். ஆனா, உதவி இயக்குநரா சொல்ல வேண்டியது என் கடமைனு சொல்லிருவேன். ஸ்க்ரிப்ட்ல சார்கூட நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். இதுதான் எனக்கான பெரிய சந்தோஷம். ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன் போது பேசுறதுக்கும் ஒப்பீனியன் சொல்றதுக்கு சார் பெரிய இடம் கொடுப்பார். எனக்கு மட்டுமல்ல, எல்லா உதவி இயக்குநர்களுக்குமே அந்த இடம் கிடைக்கும். சீன்ஸ் எழுதிக்கொடுத்து எல்லாருடைய கமென்ட்ஸ் வாங்கிப் பார்ப்பார். நிறைய சொல்லிக் கொடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்ல சந்தேகம் வந்தாகூட சொல்லிக் கொடுப்பார். ஒரே வித்தியாசம் ஆபீஸ்ல சிரிச்சிக்கிட்டே சொல்லுவார். ஸ்பாட்ல கொஞ்சம் ரெண்டு திட்டு திட்டிட்டுச் சொல்லுவார். அதே மாதிரி எங்க எல்லார்கிட்டயும் நிறைய பேசிக்கிட்டே இருப்பார். குறைவா பேசவே மாட்டார். இவரை மாதிரி பொறுமையா, நிதானமா ஒரு விஷயத்தை ஹேண்டில் பண்ற மனிதரை இதுவரைக்கும் நான் என் வாழ்க்கைல பார்த்தது இல்ல. நேரத்தை சரியா கையாள்வார். அவரோட எனர்ஜி லெவல் பயங்கரமா இருக்கும். நாம அவர் பின்னாடி இளைக்க இளைக்க ஓடுற மாதிரியிருக்கும். அதிகமா ஆங்கிலத்தில் பேசுவார். ஆனா, தமிழ் மட்டுமே தெரிஞ்ச பசங்ககிட்ட தமிழ்லதான் பேசுவார்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

மணி சார் மனசுல நினைச்சது சரியில்லைனு யாராவது சொன்னா, `ஏன்'னு கேட்பார். நாம சரியா பதில் சொல்லிட்டோம்னா உடனே மாத்திக்குவார். இதைத்தாண்டி அவர் நினைச்சது சரியா வொர்க் ஆகும்னு நினைச்சா நமக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவார். உதவி இயக்குநர்களுக்கும் திருப்தியா இருந்தாதான் ஸ்க்ரிப்ட் வேலைகளை முடிப்பார். அதேமாதிரி மணி சார் முதல்ல `பொன்னியின் செல்வன்' புராஜெக்ட்டை கமல் சார் நடிக்குறதுக்காகப் பேசினார். `நாயகன்' படத்துக்குப் பிறகு இந்தப் படம்தான் பண்ண நினைச்சார். எல்லா வேலைகளும் நடந்தது. ஆனா, அப்போ இருந்த காலகட்டத்துல மிகப் பெரிய பட்ஜெட்ல இதை உருவாக்குறது மணி மற்றும் கமல் சார் ரெண்டு பேருக்கும் சரியா படல. அதனால பின்னாடி பண்ணிக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா, அப்படியே கடந்து போயிருச்சு. அப்புறம் 2011-ல விஜய் சார், மகேஷ்பாபு, கார்த்தி சார்னு இவங்க கூட்டணில இந்தப் படத்தைப் பண்ண வேலைகள் நடந்துச்சு. அவங்க எல்லாருமே இந்தப் படம் பண்ணணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. ஆனா, இதெல்லாம் அப்போ பேச்சுவார்த்தையில மட்டும்தான் இருந்தது. ஒரு ஸ்க்ரிப்ட் படமா மாறுறதுக்கு நாம மட்டுமே உழைச்சா போதாது. பொருளாதார ரீதியாவும் நிறைய விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் ஒண்ணா சேர்ந்து வர்றப்போதான் படமா மாறும். இப்போ இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு.

மணி சார் சினிமாவுக்கு வந்தபோதே `பொன்னியின் செல்வன்' கதையைப் படமா பண்ணணும்னு நினைச்சிதான் வந்தார். இது மணி சாரின் கனவுப் படம். இந்த புரொஜக்ட்டை 2010-ல ஆரம்பிக்கும்போது `ஐரா' டைரக்டர் சர்ஜூனும் வந்து சேர்ந்தார். அப்புறம் `கடல்' படம் வரைக்கும் சார்கூட வேலை பார்த்துட்டுப் போயிட்டார். மணி சாரோட உதவி இயக்குநர்கள் எல்லோரும் அவரோட ஏதாவதொரு படத்தின்போது அவர்கிட்ட தொடர்புல இருப்போம். நான் `ஓகே கண்மணி', `காற்று வெளியிடை', `செக்கச் சிவந்த வானம்' படங்கள்ல வேலை பார்த்தேன். எப்போ திரும்ப வந்தாலும் எங்களுக்கான ஸ்பேஸ் கொடுத்தார். என்னோட `வானம் கொட்டட்டும்' படத்தின்போதுதான் `பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் போயிட்டிருந்தது. அதனால, அப்போ என்னால வேலை பார்க்க முடியல. திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிக்குறப்போ நிச்சயமா வேலை பார்ப்பேன். மணி சார் எப்பவும் உதவி இயக்குநர்கள் கூடத்தான் இருப்பார். அவரோட பையன் நந்தாகூட இவ்வளவு நேரம் இருந்திருக்க மாட்டார். சினிமா தவிர வேற எதையும் யோசிக்க மாட்டார். இப்பவும் பிஸியாதான் இருப்பார். லாக்டெளன் நேரத்துலகூட ஆன்லைன் மீட்டிங் மூலமா எங்ககூட பேசிட்டுதான் இருக்கார்.

தனா
தனா

கவர்மென்ட் ரூல்ஸையெல்லாம் சரியா ஃபாலோ பண்ணுவார். கொஞ்சமும் மீற மாட்டார். அதே மாதிரி மணி சாரின் படங்களின்போது சில இடையூறுகள் வந்தாலும் கொஞ்சமும் மனம் தளர மாட்டார். அவரோட புன்னகை அப்படியேதான் இருக்கும். இந்த லாக்டெளன் நேரத்துல ப்ரீ புரொடக்‌ஷனா எந்த வேலைகளையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பண்ணிட்டுதான் இருக்கார். அரசு அனுமதி கொடுத்ததும் ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவார்'' என்றார் இயக்குநர் தனா.

அடுத்த கட்டுரைக்கு