Published:Updated:

``ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக் கொடுத்தவங்க `பரவை' முனியம்மா!'' - இயக்குநர் தரணி

`பரவை' முனியம்மாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் தரணி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பரவை' முனியம்மா என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது 'தூள்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல நடந்து வர்றான்' என்ற பாடல்தான். அதன் பின் பல திரைப்படங்களில் நடிக்கவும் பாடல்கள் பாடவும் செய்திருந்தார் முனியம்மா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சமைத்தும் வந்தார். நாட்டுப்புற பாடல்களில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதில் கில்லாடியாக இருந்தவர் பரவை முனியம்மா. சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தவர், இன்று காலை காலமானார். அவரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலப்படுத்திய இயக்குநர் தரணியிடம் பேசினோம்.

'தூள்' படத்தில் ஜோதிகா - பரவை முனியம்மா
'தூள்' படத்தில் ஜோதிகா - பரவை முனியம்மா
`பரவையை  உலகறியச் செய்த இசைப்பறவை!' - மக்கள் இசைக் கலைஞர் பரவை முனியம்மா மறைந்தார்

" 'தூள்' கதையில தங்களுடைய ஊருக்காக ஹீரோ, ஹீரோயின் சென்னைக்குப் புறப்பட்டு வர்றதா இருந்தது. தனியா அவங்க ரெண்டு பேர் மட்டும் வர முடியாததுனால ஹீரோயினுடைய பாட்டி அவங்கக்கூட வர்றாங்கன்னு முடிவு பண்ணோம். அந்தப் பாட்டி கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு தேடும்போதுதான் பரவை முனியம்மா கிடைச்சாங்க. நான் ஆரம்பத்துல கச்சேரியில கீ போர்ட் வாசிச்சுக்கிட்டு இருந்தேன். அதனால கிராமிய பாடல்கள் பாடுறவங்க நிறைய பேரைத் தெரியும். எனக்கும் அதுல ஆர்வமுண்டு. என்னுடைய 'எதிரும் புதிரும்' படத்துலதான் புஷ்பவனம் குப்புசாமியை ('தொட்டுத்தொட்டு பேசும் சுல்தானா') அறிமுகப்படுத்தினேன். 'தில்' படத்துல மாணிக்க விநாயகத்தை அறிமுகப்படுத்தினேன். அது மாதிரி, 'தூள்' படத்துல அறிமுகப்படுத்துற மாதிரி நபர்களைத் தேடிக்கிட்டு இருந்தேன். அப்போதான் பரவை முனியம்மா பத்தி கேள்விப்பட்டேன். அவங்களை அந்தக் கேரக்டர்ல நடிக்க வெச்சு பாடலும் பாட வெச்சிடலாம்னு நினைச்சு அவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சேன்.

'தூள்' படத்தில் பரவை முனியம்மா
'தூள்' படத்தில் பரவை முனியம்மா

அவங்களை ஆடிஷன் பண்ணபோதே அவங்க ஒரு ஸ்டார்னு தெரிஞ்சுடுச்சு. செம டைமிங் சென்ஸ் உள்ளவங்க. முதல் நாள் ஷூட்டிங் அன்னைக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தாங்க. அடுத்த நாள்ல இருந்து ரொம்ப சகஜமாகிட்டாங்க. நல்லா ஞாபகம் இருக்கு ஜோதிகாகிட்ட, `ஏம்மா... டைரக்டர் இங்க வந்து நிக்க சொல்றாரும்மா... நீ ஏன் அங்க நிக்குற... இங்க வா அப்போதான் படம் பிடிக்க சரியா இருக்கும்'னு சொன்னாங்க. அப்படி ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக்கொடுத்தவங்க அவங்க. மனுஷன் ஜெயிக்க முடியலையேனு ஒரு கட்டத்துல மனசை தளர்த்திடுறான். ஆனா, அவங்க அத்தனை வயசு வரைக்கும் இந்தப் புகழுக்காகக் காத்திருந்தாங்க. அந்தப் பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியம். நம்ம செய்யுற வேலையை எதுக்காகவும் நிறுத்தாமல் அதுக்கு உண்மையா இருந்தால், ஒருநாள் அதுக்கான பலன் கிடைக்கும்னு அவங்களைப் பார்த்து கத்துக்கிட்டேன்" என்றவர் தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அவங்க பல மேடைகள்ல நாட்டுப்புற பாடல்கள் பாடியிருக்கிறதால நடிக்கக் கூப்பிட்டதும் அவங்க தயங்கலை. அந்தத் தொழிலைத் தவிர, வேற எதுக்குள்ளேயும் போகாததுனால உடனே நடிக்கிற சூழலுக்கு தன்னை மாத்திக்கிட்டாங்க. `நான் இப்போ என்ன பண்ணணும் தம்பி?'னு கேட்பாங்க. நாம சொல்றதை அழகா அவங்களுக்கான குழந்தைத்தனத்தோட சூப்பரா பண்ணி அசத்திடுவாங்க. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடம் செஞ்சு மனசுல வெச்சு பாடுறதுனால எவ்வளவு பெரிய வசனமா இருந்தாலும் அசால்ட்டா பேசிடுவாங்க. `தூள்' படத்துடைய பூஜை ஒரு கோயில்ல நடந்தது. அப்போ `ஒரு சாமி பாட்டு பாடுங்கம்மா'னு சொன்னேன். உடனே முருகன் பாட்டு பாடி அங்கிருந்த எல்லோருக்குள்ளும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உண்டாக்கிட்டாங்க.

பரவை முனியம்மா
பரவை முனியம்மா

இவங்க படத்துக்குள்ள வந்த பிறகுதான், அந்தக் க்ளைமாக்ஸ் ஃபைட்டை யோசிச்சேன். இவங்களை வெச்சுதான் ஹீரோவை பிடிக்க வருவாங்க. அப்போ இந்தப் பாட்டி என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சுதான் அந்த ஃபைட்ல ஒரு பாட்டு வெச்சோம். அறிவுமதி அண்ணன்தான் அந்தப் பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடலை ரெக்கார்ட் பண்ணும்போது அவ்ளோ உற்சாகமா பாடினாங்க" என்றவரிடம் "க்ளைமாக்ஸில் இந்தப் பாடலை வைக்கலாமா வேணாமானு உங்களுக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகருக்கும் பெரிய வாக்குவாதம் இருந்ததாமே?" என்றோம்.

"அது என்னன்னா, இந்தப் பாட்டை நான் பன்னிரண்டாவது ரீல்ல வெச்சிருந்தேன். ஆனா, இதை எந்த இடத்துல வைக்கலாம்னு குழப்பம் இருந்துக்கிட்டே இருந்தது. ஆடியோ கேஸட்ல ஏ, பினு ரெண்டு சைட் இருக்கும். ஏ சைட்ல மூணு பாடலும் பி சைட்ல மூணு பாடலும் இருக்கும். நம்ம படங்கள்ல அஞ்சு பாடல்கள்தான் மேக்ஸிமம் இருக்கிறதுனால ஏதாவது ஒரு பாடலை மறுபடியும் ஆறாவது பாடலா பி சைட்ல வெப்பாங்க. ஆடியோ ரிலீஸுக்காக பாடல்களை மிக்ஸ் பண்ணிகிட்டு இருக்கும்போது அஞ்சு பாடல்களைத்தான் கொடுத்திருந்தேன். 'ஆறாவது பாட்டு எங்க?'னு வித்யாசாகர் சார் கேட்டார். 'அதுதான் அந்த மதுரைவீரன் பாட்டு சார். அது வைக்கலாமா வேணாமானு தெரியலை'னு சொன்னேன். அவர் என்கிட்ட, `யோவ்... நீ சொன்ன அந்த சூழல், பரவை முனியம்மாவை பாட வெச்சது, பாட்டுல ஃபைட் பண்றது செம மேட்டர், புதுசா இருக்கும். நீங்க சொன்னதுனாலதான் அந்தப் பாட்டை நான் கம்போஸ் பண்ணேன். அதுதான் என்னை இம்ப்ரஸ் பண்ணுச்சு. அந்தப் பாடலை படத்துல வைங்க'னு சொன்னார்.

இயக்குநர் தரணி
இயக்குநர் தரணி
`சூப்பர் டீலக்ஸ்' படத்தின் சுவர்களில் இருக்கு அவ்ளோ டீடெயில்ஸ்! #1YearOfSuperDeluxe

ஆனா, 12-வது ரீல்ல பாட்டை வைக்க முடியாது. அதனால அந்தப் பாட்டை க்ளைமாக்ஸுக்கு மாத்தினோம். விக்ரம் என்கிட்ட ஷாக்காகி 'என்ன க்ளைமாக்ஸ்ல பாட்டு வெச்சிருக்கீங்க?'னு கேட்டார். அவருக்கு இது வொர்க் அவுட் ஆகுமானு சின்ன டவுட் இருந்துகிட்டே இருந்தது. அதைப் புரிய வெச்சு சூப்பர் சுப்பராயன் மாஸ்டர்கிட்ட சொல்லி அந்தப் பாடலுக்கான ஃபைட்டை மட்டும் ஆடியோ ரிலீஸுக்கு 10 நாளுக்கு முன்னாடி தனியா எடுத்தோம். விக்ரம், ஜோதிகா, பரவை முனியம்மா இவங்களை வெச்சு 'தூள் 2' கூட பண்ணலாம்னு இருந்தேன். அந்த வயசுல அவங்க அவ்ளோ உற்சாகமா இருப்பாங்க. பாடும்போது அவங்களுக்கு எங்கிருந்து எனர்ஜி வருதுனு தெரியாது. அவங்களோட வொர்க் பண்ணது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாவும் இருக்கு. அதே சமயம், அவங்க இப்ப இல்லாதது ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு" என்றார் தரணி வருத்தத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு