Published:Updated:

"மதுப் பழக்கம்தான் சினிமாவின் சாபக்கேடு!" - கவிஞர் முத்து விஜயன் மரணம் குறித்து எழில்

பாடலாசிரியர் முத்து விஜயன்
பாடலாசிரியர் முத்து விஜயன்

மறைந்த பாடலாசிரியர் முத்து விஜயனிடம் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் எழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பாடல்கள்தான். அதிலும் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடலைப் பாடாதவர் யாரும் இருக்க முடியாது. இன்றைக்கும் அந்தப் பாடலுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தவிர, 'தென்னவன்', 'வல்லதேசம்', 'நெஞ்சினிலே', 'கள்வனின் காதலி' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் நேற்று காலமானார். அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எழில்.

பாடலாசிரியர் முத்து விஜயன்
பாடலாசிரியர் முத்து விஜயன்

"நான் உதவி இயக்குநரா இருக்கும்போதிலிருந்தே முத்து விஜயனைத் தெரியும். வையாபுரிதான் என் ரூமுக்கு அவரை கூட்டி வருவார். அப்போவே நிறைய கவிதைகள் எழுதுவார். ஏழ்மையா இருந்ததுனால கவிஞருக்கு உண்டான எந்த விஷயமும் அவர் தோற்றத்துல இருக்காது; ரொம்பவே சாதாரணமா இருப்பார். 'கவிஞர்னா கொஞ்சம் பந்தாவா இருக்கணும். அதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோ'னு சொல்லுவேன். ஆனா, அதைப் பண்ணமாட்டார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரையும் வைரமுத்து சாரையும் கமிட் பண்ணிட்டேன். உனக்கு இதுல வாய்ப்பு இருக்குமானு தெரியலை. இருந்தாலும் ஒரு டம்மி வரிகள் எழுதிக்கொடு'னு சொல்லியிருந்தேன். வைரமுத்து சார் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால ஒரு பாடலை அவரால் எழுத முடியலை. அப்போ முத்து விஜயன் எழுதின டம்மி வரிகளை ராஜ்குமார் சார்கிட்ட கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுதான் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடல். அந்தப் பாடல் இந்தளவுக்கு ஹிட்டாகும்னு யாரும் நினைக்கலை.

இதுக்குப் பிறகு, நம்மளால இதே மாதிரி பாடல்களைக் கொடுக்க முடியுமானு அவருக்குள்ள பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே குடிப்பழக்கமும் வந்திடுச்சு. நிறைய பேர், அவங்ககிட்ட ஒண்ணுமே இல்லன்னாலும் ரொம்ப பாசிட்டிவா இருப்பாங்க. ஆனா, இவர்கிட்ட எல்லாத் திறமையும் இருந்தும், நெகட்டிவா யோசிக்கிறதுனால இவருக்குள்ள தாழ்வு மனப்பான்மை அதிகமாகிடுச்சு. என்னுடைய 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்துல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' பாடல்ல 'நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே...'னு ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் பார்த்துட்டு கவிஞர் தாமரை என்கிட்ட இவரைப் பத்தி புகழ்ந்து பேசுனாங்க. இந்தப் படத்துக்கு கம்போஸிங் பண்ண மாமல்லபுரம் போயிருந்தோம். அந்த நேரத்துல என் அப்பா இறந்துட்டார். அப்போ என்கூடவே ஊருக்கு வந்து ஒரு வாரம் இருந்து என்னை அந்த சோகத்துல இருந்து மீட்டார் முத்து விஜயன்.

Director Ezhil
Director Ezhil
பா.காளிமுத்து

இவருக்கு அடுத்தடுத்து பாடல்கள் எழுத படங்கள் கமிட் பண்ண இந்த ரெண்டு ஹிட் பாடல்கள் போதும். ஆனா, இயக்குநர்களை அணுகுறதுல தயங்குவார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார். அந்தத் தயக்கம், பயம் எல்லாமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வெச்சது. அதுக்குப் பிறகு, என்கூட அவர் தொடர்புலயே இல்லை. நானும் கொஞ்ச வருடங்கள் படங்கள் பண்ணாமல் இருந்தேன். நா.முத்துக்குமாருக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். 'தீபாவளி' படம் பண்ணும்போது நா.முத்துக்குமார் என்கிட்ட, 'முத்து விஜயனுக்கு ஒரு பாட்டு கொடுங்க'னு சொன்னார். ஆனா, யுகபாரதியை கமிட் பண்ணி வெச்சிருந்ததுனல கொடுக்க முடியாம போயிடுச்சு. வெளியே போய் நிறைய பாடல்கள் எழுதிட்டுதான் இருந்தார்.

'சரவணன் இருக்க பயமேன்' பண்ணிட்டு இருந்தப்போ மறுபடியும் வந்தார். அவர் தோற்றம் மாறி இருந்தது. குடிப்பழக்கத்தை விட்டிருந்தார், ரொம்பவே தெளிவா இருந்தார். அவர் ரொம்ப நம்பிக்கையா பேசுனதைப் பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு, பிரசன்னானு ஒரு இசையமைப்பாளரை கூட்டிடுட்டு வந்தார். முத்து விஜயனுடைய ப்ளஸ்ஸே கிராமத்து படங்களுக்கு பாடல் எழுதுறதுதான். 'அதுக்கு தகுந்த மாதிரி ஒரு படம் அமையணும். நிச்சயமா மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்'னு பிளான் பண்ணிட்டு இருந்த சமயத்துல இப்படி ஆகிடுச்சு.

பாடலாசிரியர் முத்து விஜயன்
பாடலாசிரியர் முத்து விஜயன்

குடிப்பழக்கத்தை விட்டிருந்தவர் மறுபடியும் ஆரம்பிச்சதும் மஞ்சள் காமாலை வந்திருக்கு. அதைக் கவனிக்காமல் குடிச்சிக்கிட்டே இருந்ததுதான் அவர் இறப்புக்குக் காரணம். மதுவும் மஞ்சள் காமாலையும்தான் சினிமாவுடைய சாபக்கேடு. ஏகப்பட்ட பேர் இதனாலதான் இறந்திருக்காங்க. அவர் பாடலாசிரியர் சங்கத்துல தங்கியிருந்தார்னு இன்னைக்குதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசி ஆறு மாசத்துல அவருடைய வாழ்க்கையே மாறி, இப்போ எங்களை விட்டுப் போனது ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார் எழில்!

அடுத்த கட்டுரைக்கு