Published:Updated:

`` ‘ராஜா’ ஷூட்டிங்ல அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் என்ன பிரச்னை?’’ - இயக்குநர் எழில் விளக்கம்

தாட்சாயணி
பா.காளிமுத்து

தனது 20 வருட சினிமா பயணத்தைப் பற்றி இயக்குநர் எழில் பேசுகிறார்...

இயக்குநர் எழில்
இயக்குநர் எழில்

’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான எழில், தற்போது சினிமா துறையில் தனது 20-வது வருடத்தில் இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.

எழில்
எழில்

‘குட்டி’,’ ருக்கு’, ‘சின்னா’, ‘செல்லா’, ‘பில்லு’ இப்படி உங்க படத்துல வர்ற கேரக்டரோட பெயர்கள்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கே..?

''படத்துல வர்ற கேரக்டர்கள் ரசிகர்களைக் கவர்றதுக்கு பெயர்களுக்கு பெரிய பங்கு இருக்கு. அதனால என் லைஃப்ல கடந்துபோன நல்ல நல்ல பெயர்களை ஞாபகப்படுத்தி, என் படத்துல வெச்சேன். ‘குட்டி’, ‘பில்லு’ இதெல்லாம் என் நண்பர்களோட பெயர்கள். ‘ருக்கு’ என் பாட்டியோட பேர். இப்படி போய்க்கிட்டிருந்தப்போ, இதனால ஒரு பிரச்னையும் உண்டாச்சு. இப்படி நான் எனக்குத் தெரிஞ்சவங்க பேரைத்தான் படத்துல வெச்சிக்கிட்டிருக்கேன்கிறது என் சொந்தத்துல எல்லோருக்குமே தெரியும். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துல அந்தப் பட ரைட்டர், ‘புஷ்பா புருசன்’னு ஒரு கேரக்டருக்கு பேர் வெச்சிருந்தார். படம் வந்து எங்கே பார்த்தாலும் அதை வெச்சு மீம்ஸ் போட ஆரம்பிச்சப்போ, எங்க சித்தப்பா ஒருத்தர் போன் பண்ணி, ‘என்னப்பா இந்தத் தடவை உங்க சித்தி புஷ்பா பேரை வெச்சிட்டியேன்'னு வருத்தப்பட்டார். அவரு சொன்னதுக்கப்புறம்தான் எனக்கும் ஞாபகம் வந்துச்சு. அப்புறம் பேசி ஒருவழியா அவங்களை சமாளிச்சேன்.''

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துல வர்ற வீடு செட் பரபரப்பா பேசப்பட்டதே..?

’’அந்தக் கதையில, வீட்டுக்கு ஒரு முக்கியமான ரோல் உண்டு. அந்த மாதிரி பக்கத்து பக்கத்துல ஒரே மாதிரி இருக்குற வீட்டை எங்கெங்கேயோ தேடுனோம். எங்கேயுமே கிடைக்கலை. இதைக் கேள்விப்பட்ட படத்தோட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘செலவைப் பத்தி யோசிக்காதீங்க... செட் போட்டுடுங்க’ன்னு சொன்னார். கலை இயக்குநர் பிரபாகரன் கைவண்ணத்துல பிரமாண்டமான ஒரு செட் உருவாச்சு. இண்டஸ்ட்ரியிலயே எக்ஸ்டீரியர்ல போடப்பட்ட முதல் மிகப் பெரிய செட் அதுதான். அதுக்கப்புறம் எங்க பாணியிலயே நிறைய பேர் செட் போட ஆரம்பிச்சாங்க.’’

பூவெல்லாம் உன் வாசம்
பூவெல்லாம் உன் வாசம்

உங்களோட ‘ராஜா’ படத்துலதான், அஜீத்துக்கும் வடிவேலுவுக்கும் உரசல் ஏற்பட்டதாகவும் அதுல இருந்துதான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறதைத் தவிர்த்துவருவதாகவும் பேசப்படுதே?

’’உண்மையிலயே ஷூட்டிங்ல அப்போ நான் இருந்த பரபரப்புல அங்கே அவங்களுக்குள்ளே என்ன நடந்துச்சுனு நோட் பண்ணலை. ஆனா, அவங்களுக்குள்ள சின்ன கருத்து வேறுபாடு இருந்திருக்குங்கிறதை ரொம்ப லேட்டா மத்தவங்கள்லாம் ஒவ்வொண்ணா சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிஜமாவே அது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம்தான்.’’

உங்க படங்கள் எல்லாத்துலயுமே பாடல்கள் பெரிய ஹிட் ஆகுறதுக்கு என்ன காரணம்..?

’’நான், இளையராஜாவோட மிகத் தீவிர ரசிகன். சின்ன வயசுல இருந்தே அவர் பாடல்கள்னா எனக்கு உயிர். அவற்றை கேட்டுக் கேட்டு நான் வளர்ந்ததால, இயல்பாகவே இசைமீது நிறைய ஆர்வம் வந்திடுச்சு. ஒவ்வொரு கம்போஸிங்லயும் என் சிச்சுவேஷனுக்கு ஏத்த ஒரு ராஜா சார் பாட்டை சொல்லித்தான் ‘அதுமாதிரி வேணும்’னு கேக்குறேன். ஒவ்வொரு டியூனையும் வாங்கிட்டு வந்து, அன்னைக்கு ராத்திரிக்குள்ள பல தடவை கேட்டுப் பார்த்திடுவேன். அதுக்கப்புறம், விடியற்காலையில 5 மணிக்கு ஒரு தடவை கேட்பேன். அப்போ, என்னை அந்த டியூன் திருப்திபடுத்திடுச்சுன்னா, அதுதான் எனக்கான டியூன். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ‘இன்னிசை பாடி வரும்’ பாட்டுக்காக வைரமுத்து சாரை பார்க்கப்போயிருந்தேன். அப்போ, அவர் என்கிட்ட ‘இந்தப் பாட்டு மூலமா நீங்க என்ன சொல்ல வர்றீங்க’ன்னு கேட்டார். நான் கொஞ்சம் தடுமாறி விளக்கிக்கிட்டிருந்தப்போ, கூட இருந்த கரு.பழனியப்பன், ‘தேடல்’னு ஒரே வார்த்தையில படார்னு அடிச்சார். வைரமுத்துவும் தேடலை அடிப்படையா வெச்சுதான் அந்த பாட்டு வரிகளை எழுதித்தந்தார். அன்னைக்கு அவர் கேட்ட கேள்வியை நான் இன்னைக்குவரைக்கும் மனசுல வெச்சிருக்கேன். இந்தப் பாட்டு மூலமா என்ன சொல்லப்போறோம்ங்கிறதை மிகச்சரியா இசையமைப்பாளருக்கு விளக்கிட்டாலே... அவங்க அதுக்கேத்த சரியான ஒரு டியூன் போட்டுடுவாங்க.

அதுமட்டுமில்ல, யாரையும் ரொம்ப வற்புறுத்தி வேலைவாங்க மாட்டேன். இளையராஜா சாரை எனக்கு இவ்வளவு பிடிச்சாலும் அவர்கூட சேர்ந்து வேலைபார்க்க ஒரு சின்ன பயம் உண்டு. ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துக்குக்கூட தயாரிப்பாளர், ராஜா சாரைக் கேக்கலாம்னுதான் சொன்னார். நான் பயத்துல வேணாம்னு சொல்லிட்டேன். இன்னைக்கும் எனக்கு அந்தப் பயம் உண்டு. ஆனாலும் சீக்கிரமே சரியான ஒரு படத்துல ராஜா சாரோட சேர்ந்து வேலைபார்க்கணும்னு விரும்புறேன். அதேமாதிரி, எனக்கு ரொம்பப் பிடிச்ச யுவன் கூடவும் வித்யாசாகர் கூடவும் திரும்ப சேர்ந்து வேலை செய்யணும்னு ஆசையா இருக்கு.’’

சமீபமாக இமானுடன் தொடர்ந்து பணியாற்றிவருகிறீர்களே..?

’’இமான்கிட்ட வேலைபார்க்குறது ரொம்ப ஈஸியா இருக்கும். அதேசமயம், அவரோட வேகம் என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்தும். எப்போதுமே அவரை எளிதா அணுக முடியும். ஒரு மெசேஜ்ல கம்போஸிங் எப்போ, ரெக்கார்டிங் எப்போன்னு முடிவு பண்ணிட முடியும். அவரோட கம்போஸிங்கே ரொம்ப ஜாலியா இருக்கும். எந்த ஊர்ல எந்தக் கடையில என்ன டிஷ்லாம் நல்லாயிருக்கும்கிற தகவல் அவருக்கு விரல் நுனியில தெரியும். பாம்பே ரெக்கார்டிங் போறப்போலாம், ஏதாவது ஒரு தாபால சாப்பிட்டுட்டுதான் போவோம். அங்கே, எங்களுக்காக ஸ்ரேயா கோஷல் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பாங்க. நாங்க இங்க விதவிதமான டிஷ்களை ஒரு கை பார்த்துக்கிட்டிருப்போம். அதெல்லாம் ஷ்ரேயா கோஷலுக்கும் புரியும். இப்போ என்னடான்னா, ஒரேயொரு ஜூஸை மட்டும் குடிச்சிட்டு கம்போஸிங்கை முடிச்சிடுறாரு. முன்னாடிலாம் நல்லா சாப்பிட்டு ஜம்முன்னு இருந்தாரு. இப்போ உடம்பைக் குறைச்சுட்டு வேற மாதிரி இருக்கார். எனக்கு பழைய குண்டு இமானைத்தான் ரொம்பப் பிடிக்கும்.’’

``ப்ச்... கொஞ்சம் முன்னாடியே அந்த முடிவை நான் எடுத்திருக்கணும்..!’’ - நடிகை  கௌசல்யா

ஃபேமிலி டிராமா படங்கள் எடுத்திட்டு இருந்த நீங்க, இப்போ வணிக ரீதியா சமரசம் ஆகி காமெடி படங்கள் பண்றோமேங்கிற வருத்தமோ, திரும்ப உங்க பழைய பாணியில படங்கள் பண்ணணும்ங்கிற எண்ணமோ இருக்கா..?

’’நிச்சயமா வருத்தம் இருக்கு. ஒரு வெற்றியாளன் என்பவன் தன்னோட குடும்பத்தையும் சேர்த்து வெற்றிப்பாதைக்குக் கொண்டுபோகணும். மத்த துறைகள் மாதிரியே சினிமா துறையைச் சேர்ந்தவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு தனிமனிதனா என்னோட தேவைகள் ரொம்பச் சின்னது. இன்னைக்கும் நான் பஸ்லயும் ஷேர் ஆட்டோவுலயும் போயிட்டுதான் இருக்கேன். அதேசமயம், ஒரு குடும்பத் தலைவனா என் பொறுப்புகள் பெருசு. இப்போ நான் என் குடும்பத்துக்குத் தேவையான சில விஷயங்களைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்புல இருக்கேன். இன்னும் ஓரிரூ ஆண்டுகள்ல அந்தப் பொறுப்புகளை நிறைவேத்திடுவேன். அதுக்கப்புறம், நான் இயக்கப்போற படங்கள் வேற ஒரு தளத்துல இருக்கும்.’’