Published:Updated:

``சூர்யாவோடு `கமல் - காதம்பரி' செம காதல் படமா இருக்கும்... ஆனா?!'' - கெளதம் மேனன்

Gautham Vasudev Menon
Gautham Vasudev Menon

ஒருவார இடைவெளியில் திரும்ப கெளதமிடம் பேசினால்கூட அவர் சொல்வதற்கும் அவரிடம் கேட்பதற்கும் பல விஷயங்கள் இருக்கும். உரையாடினோம்!

`கார்த்திக் டயல் செய்த எண்' என சிம்பு - த்ரிஷாவோடு குறும்படம், சாந்தனு, கலையரசன், மேகா ஆகாஷோடு `ஒரு சான்ஸ் கொடு பெண்ணே' சிங்கிள் என லாக்டெளனிலும் தனது புதிய படைப்புகளை வெளியிடும் ஒரே இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். அடுத்து கெளதம் பைப்லைனில் இன்னும் பல புராஜெக்ட்கள். ஒருவார இடைவெளியில் திரும்ப கெளதமிடம் பேசினால்கூட அவர் சொல்வதற்கும் அவரிடம் கேட்பதற்கும் பல விஷயங்கள் இருக்கும். உரையாடினோம்!

``இந்த லாக் டெளன்ல எதுவும் நிச்சமியமல்லாத தன்மையில இருக்கு. என்ன பண்ணப்போறோம், இதெல்லாம் பண்ண முடியுமானு சில கேள்விகளும் உள்ள ஓடிட்டிருக்கு. சின்ன ஷூட்டிங் பிளான் பண்ணலாம்னாலும் எங்கேயும் அனுமதி கிடைக்க மாட்டேங்குது. `ஜோஷ்வா' படத்துக்கு இன்னும் 10 நாள் ஷூட்டிங் இருக்கு. அதுல நிறைய ஆக்‌ஷன் சீன், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சீன்லாம் எடுக்கணும்னு திட்டமிட்டிருந்தோம். ஆனா, அதையெல்லாம் இப்போ இருக்கிற சூழலுக்கு தகுந்த மாதிரி மாத்தணும்... லெட்ஸ் ஸீ" - தன் ட்ரேட்மார்க் புன்னகையுடன் பேசத்தொடங்குகிறார் கெளதம்.

``எல்லா பிரச்னைகளில் இருந்தும் கெளதம் வெளில வந்துட்ட மாதிரியிருக்கு... இந்த நாள்கள்ல நீங்க கத்துக்கிட்டது என்ன?''

``ஃபைனான்ஸ் பிரச்னை வர்றதும் அப்புறம், அதிலிருந்து வெளியே வர்றதும் நிறைய முறை எனக்கு நடந்திருக்கு. `எனை நோக்கி பாயும் தோட்டா' 60 நாள்ல முடிக்கணும்னு ஆரம்பிச்ச புராஜெக்ட். ஆனா, ரெண்டரை வருஷமா வெச்சுட்டு இருப்போம்னு யாரும் எதிர்பார்க்கலை. `துருவநட்சத்திரம்' இன்னும் வெளியாகவே இல்லை. ஆனா, `துருவநட்சத்திரம்' எப்படி வந்திருக்குனு எனக்கு தெரியும். அதனால, என்ன வேணாலும் நடக்கலாம். நம்ம அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிட்டு அடுத்த சவால் என்னனு போய்க்கிட்டே இருக்கணும். இதைத்தான் நான் கத்துக்கிட்டேன். எந்தச் சூழலையும் கையாள தயாரா இருக்கேன்."

``அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, கலையரசன்... இப்படி உங்க படங்கள்ல இல்லாத நடிகர்களை எல்லாம் `ஒன்றாக ஒரிஜினல்ஸ்'ல பயன்படுத்துறதுக்கு என்ன காரணம்?''

``இவங்க எல்லோரும் என் படங்கள்ல நடிக்கணும்னு நினைச்ச நபர்கள். கலையுடைய படங்கள் எனக்குப் பிடிக்கும். சாந்தனுவை நிறைய முறை சந்திச்சிருக்கேன். அவருடைய டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை சரியா பயன்படுத்தணும்னு நினைச்சேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப திறமையான நடிகை. `துருவநட்சத்திரம்' படத்துலயும் அவங்க நடிச்சிருக்காங்க. அதர்வா கூட வொர்க் பண்ணா நல்லாயிருக்கும்னு யோசிச்சிருக்கேன். அப்படித்தான் இவங்களை எல்லாம் `ஒன்றாக ஒரிஜினல்'ஸுக்காக பயன்படுத்துறேன்."

Gautham Menon
Gautham Menon

``சூர்யாவுக்கு நீங்க எழுதியிருக்கிற `கமல் - காதம்பரி' காதல் கதையை எப்போ எதிர்பார்க்கலாம்?''

``இப்போ சூர்யா கமிட் பண்ணியிருக்கிற படங்கள் எல்லாம் முடிச்சுட்டு அவர் பண்ற படமா இது இருக்கும்னு நினைக்கிறேன். ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். செம காதலும், இசையுமா இருக்கும். சீக்கிரமாவே அறிவிப்பு வரும்."

``சீக்வெல் படங்களை எப்படி பார்க்குறீங்க?''

``எனக்கு அந்த கேரக்டர்கள்தான் முக்கியம். அந்த கேரக்டர்களுடைய நீட்சியை எழுத முடியுமானு படம் முடியும்போதே எனக்கு தெரியும். அதனால, அந்த கேரக்டர்களை எடுத்து வொர்க் பண்றது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. அன்புசெல்வனை எழுதி முடிக்கும்போதே, இதை வேற பார்ட்டுக்கு எடுத்துட்டு போலாமானு பேசியிருக்கோம். `வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங்கின்போதே அடுத்து ராகவனுடைய பயணம் எங்க இருக்கும்னு பேசிருக்கோம். கார்த்திக்குடைய பயணம் ஜெஸ்ஸியோட அந்தத் தியேட்டர்ல முடியவேயில்லை. நிச்சயமா, கொஞ்ச வருஷங்கள் கழிச்சு கார்த்திக் என்ன பண்ணுவான்னு அப்போவே பேசுனோம். அப்படிதான் எல்லா சீக்வெலும் ஆரம்பிக்குது."

``நடிகர் கெளதம் மேனன் எப்படி இருக்கார்?''

``எனக்குள்ள எங்கேயோ இருக்கார்னு நினைக்கிறேன். ஒரு நடிகரா என் வாழ்க்கையும் என்னுடைய சிந்தனையும் இல்லை. அடுத்த படம் என்ன, அதுல இப்படி ஒரு ரோல் பண்ணணும், கைத்தட்டல் வாங்கணும் அப்படியெல்லாம் நான் நினைக்கலை. எல்லா நடிகர்களும் இப்படித்தான்னு நான் சொல்லலை. நான் அந்த மைண்ட்செட்ல இல்லை. நான் எழுதும்போதே இதுல யார் நடிப்பாங்கன்னு யோசிப்பேனே தவிர, இதுல நான் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சதேயில்லை. `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' டீம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதோட இயக்குநர் தேசிங் என்கிட்ட ஆறு மாசமா பேசிட்டு இருந்தார். `ட்ரான்ஸ்' படத்துடைய இயக்குநர் அன்வர் ரஷீத்துடைய படங்கள் பார்த்திருக்கேன். அப்புறம், நான் ஃபகத் பாசிலுடைய மிகப்பெரிய ரசிகன். அவர்கூட வொர்க் பண்ணணும்னு நினைச்சு அந்தப் படம் பண்ணேன். ரெண்டு படமுமே எனக்கு மிகப்பெரிய அனுபவமா இருந்தது. இப்போ நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க. நம்ம விரும்புற இயக்குநர்கள் யாராவது கேட்டால் அல்லது ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டர் இருக்குனு தெரிஞ்சா பண்ணலாம்னு இருக்கேன்."

``நீங்கள் ரசிக்கும் ஃபகத் பாசிலை உங்க இயக்கத்துல எப்போ பார்க்கலாம்?''

``எனக்கு ரொம்ப ஆசைதான். `ஒருநாள் ரெடினு சொல்லுவேன் கெளதம். நம்ம உடனே ஆரம்பிச்சுடலாம்'னு சொல்லியிருக்கார், பார்ப்போம்."

உங்கப் படங்கள்ல வாய்ஸ் ஓவரை ட்ரோல் பண்றாங்களே... அதை எப்படி பார்க்குறீங்க?

"எனக்கு இப்படித்தான் கதை எழுதத் தெரியும்னு நினைக்கிறேன். வேற வழியில்லை. வாய்ஸ் ஓவர்ல ஈஸியா நான் சொல்ல நினைக்கிறதை சொல்லிட்டு போயிடலாம்னு நினைக்கிறேன். இதை நான் 'இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் ஆஃப் ஃபிலிம் மேக்கிங்'னு நினைச்சிட்டு இருக்கேன். 'The shawshank redemption' மாதிரியான படங்கள்ல அந்த ஆர்டிஸ்டுடைய குரல் பேசிக்கிட்டே இருக்கும். இதைப் பார்த்ததிலிருந்து இந்த மாதிரி படம் பண்ணணும்னு தோணுச்சு. என்னுடைய எல்லா படங்கள்லயும் வாய்ஸ் ஓவர் இருக்கு. ஆனா, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல மட்டும் ஏன் அந்த வாய்ஸ் ஓவர் வொர்க் ஆகலைனா, அந்த வாய்ஸ் ஓவருக்காக நாங்க நேரம் செலவழிச்சு மெனக்கெடலை. அதை எமோஷனலா சொல்றதுக்கான நேரம் கிடைக்கலை. அதனால, அது படத்தோட ஒட்டாமல் இருந்ததுனு நினைக்கிறேன். தவிர, யாராவது இந்த மாதிரி சொன்னால்தான் எனக்குத் தோணும். எங்க விஷயத்துனால அவங்க வாழ்றாங்கன்னா வாழட்டுமே. அதுல என்ன தப்பு?!"

ஸ்டார்பக்ஸ் போனா கெளதம் மேனனை பார்க்கலாம்னு சொல்றாங்களே! அங்கதான் எல்லா கதைகளும் உருவாகுதா?

"இப்போ ஸ்டார்பக்ஸ் போனா வருத்தப்படுவீங்க. 'மின்னலே' எழுதும்போதெல்லாம் ஸ்டார்பக்ஸ்லாம் இல்லை. காலேஜ் படிக்கும்போது எங்க ஹாஸ்டல்ல இருக்கவே முடியாத ஒரு ரூம்ல உட்கார்ந்து என் அப்பாவுக்கும், கேர்ள் ஃப்ரண்டுக்கும் நிறைய லெட்டர் எழுதிருக்கேன். அதுல கிரியேட்டிவா நிறைய விஷயங்கள் இருக்கும். அந்த இடத்துலதான் எனக்கு எழுத்து மேல நிறைய ஆர்வம் வந்தது. டிரெயின், ஃப்ளைட்னு நிறைய டிராவல் பண்ணும்போது எழுதியிருக்கேன். என் அப்பா இறந்த செய்தியை கேள்விப்பட்டு லண்டன்ல இருந்து சென்னை வர 13 மணி நேர பயணத்துல ஃப்ளைட்ல எழுதினதுதான் 'வாரணம் ஆயிரம்'. 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஹைதராபாத்ல ஒரு வீட்ல 5 வருஷம் இருக்கும்போது எழுதினது. இப்போ எங்க வீட்டு மாடியில உட்கார்ந்து எழுதிட்டு இருக்கேன். எங்க வேணாலும் எனக்கு ஐடியா உதிக்கும்."

அடுத்த கட்டுரைக்கு