Published:Updated:

"`மின்னலே' கதையை மாதவன் மாத்திட்டார்!" - கௌதம் மேனன்

கெளதம் மேனன்

ஆனந்த விகடனுக்காக இயக்குநர் கெளதம் மேனன் அளித்த ஸ்பெஷல் பேட்டி!

"`மின்னலே' கதையை மாதவன் மாத்திட்டார்!" - கௌதம் மேனன்

ஆனந்த விகடனுக்காக இயக்குநர் கெளதம் மேனன் அளித்த ஸ்பெஷல் பேட்டி!

Published:Updated:
கெளதம் மேனன்

எல்லா இயக்குநர்களுக்கும் அவங்களுடைய முதல் படத்தில் பர்சனல் டச் இருக்கும். கதையோ, காட்சியோ அல்லது கேரக்டரோ... அப்படி 'மின்னலே' படத்தில் உங்களுடைய பர்சனல் டச் எது?

மின்னலே
மின்னலே

"‘மின்னலே’ படத்தில் என்னோட பங்களிப்பு வெறும் 20 சதவிகிதம்தான் இருந்துச்சு. என்னோட கரியரில் என் முதல் படமாக நான் நினைக்கிறது ’காக்க காக்க’ படத்தைத்தான். ஏன்னா, அதுதான் நான் முதலில் எழுதினேன். அதை முதல் படமாக எடுக்கணும்னுதான் ஒவ்வொரு தயாரிப்பாளரையும் போய் பார்த்தேன். ஆனால், மாதவனை மீட் பண்ணதுக்கு அப்பறம்தான், ’மின்னலே’ படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். ’மின்னலே’ படத்தோட 80 சதவிகித வேலைகளை மாதவன்தான் பண்ணினார். அவர்தான் நிறைய தயாரிப்பாளர்கிட்ட அழைச்சிட்டுப் போனார்; ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்குள்ள வரதுக்கு முன்னாடியே சில இசையமைப்பாளர்களை வெச்சு கம்போஸிங் வரைக்கும் பண்ணினார்.

’மின்னலே’ கதையில் ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு ஃப்ரெண்ட்ஸ்னுதான் எழுதியிருந்தேன். மாதவன்தான், ’அந்த ரெண்டு பசங்களையும் காலேஜ்ல இருந்து எதிரியாக காட்டலாம்; அந்தப் பசங்களே ஒரு பொண்ணுக்காக கடைசியில் சண்டை போடுற மாதிரி பண்ணிக்கலாம்’னு சொன்னார். ஆனால், ஓர் இயக்குநரா அந்தப் படத்துக்காக என்னோட முழு உழைப்பையும் போட்டேன். குறிப்பா, நாகேஷ் சார் நடிக்கணும்; நடிகர் விவேக்தான் வசனம் எழுதணும்; ஹாரிஸ்தான் இசையமைப்பாளர். தாமரையைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியது எல்லாமே என்னோட ஐடியாதான். ’மின்னலே’ படத்தோட காதல் காட்சிகள் எல்லாத்திலேயும் என்னோட டச் இருக்கும்னு சொல்லலாம். இப்போ வரைக்கும் என்னோட படங்களில் அந்த டச்சை நீங்க பார்க்கலாம். ’மின்னலே’ மிகப்பெரிய ஹிட்; அது பல பேருக்கு பிடிச்ச படமாக இருந்தாலும், என்னோட முதல் படமா நான் நினைக்கிறது, ‘காக்க காக்க’தான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’கெளதம் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை’ - உங்களோட முதல் படத்தில் இருந்து தொடர்ந்துட்டு வர கூட்டணி இது... இதைப்பற்றி சொல்லுங்க?

” 'மின்னலே’ படத்தோட தயாரிப்பாளர் முரளி சாரோடு டிஸ்கஷனில் இருந்தப்போ, ‘நாங்க ’மஜ்னு’னு ஒரு புதுப்படம் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம்’னு சொல்லி ’மஜ்னு’ படத்தோட ’மெர்க்குரி மேலே’ பாட்டை ப்ளே பண்ணினார். ’பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு; யார் மியூசிக்’னு கேட்டதும் ஹாரிஸ் ஜெயராஜ்னு சொன்னார். நானும் அதுக்குமுன்னாடி ஹாரிஸோடு ஒரு விளம்பரத்தில் வொர்க் பண்ணேன். அதுனால, ’மின்னலே’ படத்துக்கும் அவரையே மியூசிக் பண்ண வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்கப்பறம் ஹாரிஸோடு பல மீட்டிங் போச்சு. படத்தோட பாடல் வரிகளை வாலி சாரை வெச்சு எழுதலாம்னு முடிவு பண்ணோம். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சிட்டோம். அந்த சமயத்தில்தான் தாமரையோடு நட்பும் எனக்கு கிடைச்சது. நாங்க ரெண்டு பேருமே இன்ஜினீயரிங் படிச்சிருக்கோம்; அவங்க படிச்ச காலேஜுக்கு நான் கல்சுரல்ஸுக்காக போயிருக்கேன்னு அவங்கக்கூட பேசும்போதுதான் தெரிஞ்சது.

பாடல்களைத் தாண்டியும் படத்தோட ஸ்கிரிப்ட்டைப் பற்றியும் நிறைய விஷயங்கள் அவங்களோடு பேசினேன். அப்படித்தான், ’மின்னலே’ படத்தோட சில பாடல்களையும் தாமரை எழுதினாங்க. ஒரு பாட்டுக்காக 8 பல்லவி, 8 சரணம் கொடுப்பாங்க. அதை அப்படியே ஹாரிஸ்கிட்ட கொடுத்தா சவுண்டிங்குக்கு சரியா இருக்கிற வார்த்தைகளை எடுத்து ஒரு மேஜிக் பண்ணுவார். இப்படித்தான் எங்க காம்போ உருவாச்சு. அடுத்தடுத்த படங்களுக்கு இன்னும் அதிகமாக வேலை பார்த்தோம். இதெல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள 20 வருஷம் ஆகிடுச்சு. சமீபத்தில்கூட ஹாரிஸ் எனக்கு, ‘20 வருஷத்துக்கு முன்னாடி நம்மளை தாக்குன அந்த மின்னல்தான், இன்னைக்கும் நம்மளை இணைச்சிட்டு இருக்கு’னு மெசேஜ் அனுப்பினார். எங்க மூணு பேருக்குமே இதே உணர்வுதான். எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகளும் வரும்; அதையும் நாங்களே உட்கார்ந்து பேசி சரி பண்ணிப்போம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே மாதிரி உங்களோட இன்னொரு வெற்றிகரமான கூட்டணிதான் எடிட்டர் ஆண்டனி... உங்களோட நட்பு பற்றிச் சொல்லுங்க..?

கெளதம் மேனன்
கெளதம் மேனன்

“ராஜீவ் மேனன் சார்கிட்ட நான் உதவி இயக்குநரா இருந்தப்போ, அவர் பண்ணின விளம்பரத்துக்கு ஆண்டனிதான் எடிட்டிங். அப்போதுல இருந்து நாங்க நல்ல நண்பர்களாகிட்டோம். ’மின்னலே’ பண்ணும்போது ஆண்டனி ஃபிலிம் எடிட்டராகலை. அதுனால ’மின்னலே’ படத்துக்கு சுரேஷ் அர்ஸ் சார்தான் எடிட்டிங். ’காக்க காக்க’ படத்தோட ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சதுமே, இந்தப் படத்தை ஆண்டனி பண்ணுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, ’காக்க காக்க’ ஸ்கிரிப்ட் எழுதும் போதே, எடிட்டிங்ல என்னென்ன பண்ணணும்ங்கிறதையும் சேர்த்தே எழுதியிருப்பேன். அதை எழுதும் போதே எனக்கு ஆண்டனிதான் மைண்ட்டுக்கு வந்தார். ’காக்க காக்க’ படத்தை எடுத்து முடிச்சுட்டு ஆண்டனிக்கிட்ட கொடுத்தேன். அவர் அதை சூப்பரா எடிட் பண்ணிக்கொடுத்திட்டார். டெக்னீஷியன்ஸுக்கு நான் எப்போதுமே அந்த சுதந்திரத்தை கொடுத்திடுவேன். அதுனாலதான், ’காக்க காக்க’ படத்தோட எடிட்டிங் ஸ்டைல் இப்போவரைக்கும் பல படங்களுக்கு ரெஃபரன்ஸா இருக்கு.

’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தோட க்ளைமேக்ஸ் ஐடியாவையும் ஆண்டனிதான் கொடுத்தார். கதைப்படி அவங்க சேரக்கூடாதுனு மட்டும்தான் முடிவு பன்ணியிருந்தேன். அதை எப்படி எடுக்குறதுனு க்ளைமேக்ஸ் ஷூட்டுக்கு முன்னாடிதான் முடிவு பண்ணினோம். அப்போதான் ஆண்டனி, ’ஹீரோ எடுக்குற படத்துல அவங்க சேருற மாதிரி காட்டிட்டு; ரியல்ல அதை மாத்திக் காட்டலாம்’னு ஒரு ஐடியா கொடுத்தார்; அந்த ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இப்படித்தான் எங்களோட பல படங்களுக்கு நாங்க வொர்க் பண்ணியிருக்கோம்.”

'மின்னலே' படத்துல காதல், காமெடி, ஆக்‌ஷன்னு கலந்து எடுத்திருப்பீங்க. அடுத்து, 'காக்க காக்க' முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதை. அந்த சமயத்துல உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி படத்தை எதிர்பார்த்தாங்களானு தெரியலை. அப்போ ரிஸ்க் எடுக்கிறோம்னு தோணுச்சா?

 'காக்க காக்க'
'காக்க காக்க'

“நான் அப்படி யோசிச்சதே இல்லை. ஏன்னா, அதைத்தான் நான் முதல் படமா எடுக்கணும்னு நினைச்சேன். அதுனால, ஜானர் மாறி படம் பண்றோம்னு நான் யோசிக்கவே இல்லை. அதுக்கு எனக்கு பக்கபலமா இருந்தது, ஜோதிகாதான். ’மின்னலே’ படம் பார்த்துட்டு நக்மாவும் ஜோதிகாவும் என் படத்தை தயாரிக்கிறதுக்கு முன்வந்தாங்க. நானும் ’காக்க காக்க’ படத்தோட கதையை விஜய், அஜித், விக்ரம்னு பல பேருக்கு சொன்னேன். ஆனால், அவங்க எல்லாரும் சில காரணங்களால் இந்தப் படத்தை பண்ண முடியாமல் போச்சு. அப்போ ’நந்தா’ படம் ரிலீஸாச்சு. ஜோதிகா என்னை அந்தப் படத்தை பார்க்கச் சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், சூர்யாவை வெச்சே போகலாம்னு முடிவு பண்ணினோம். அப்பறம், ஜோதிகாதான் எனக்கு கலைப்புலி தாணு சாரை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. ’காக்க காக்க’ படம் உருவானதுக்கு ஜோதிகா மிகப்பெரிய காரணமா இருந்தாங்க.

சூர்யாவும் ஜோதிகாவும் இந்தப் படத்துக்குள்ள வரும்போது, நண்பர்களாகத்தான் எங்களுக்குத் தெரிஞ்சாங்க. அதுக்கப்பறம், ஷூட்டிங் போக, போக அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரியைப் பார்த்தோம். அதை நாங்க அழகா கேமராவில் பதிவு பண்ணிக்கணும்னு நினைச்சோம். ஒரு கட்டத்தில், சில கஷ்டமான ஆக்‌ஷன் ஷாட்ஸ் வரும்போது, ‘இதெல்லாம் நீ பண்ணாத சூர்யா’னு சொல்லிட்டாங்க. எனக்கு அதை சூர்யா பண்ணினாதான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதுக்காக நான் ஒரு ஐடியா பண்ணினேன். வெறும் பனியனோடு மேல இருந்து தண்ணியில குதிக்கிற ஷாட்டை டூப் போட்டு எடுத்துட்டேன். அதை சூர்யாகிட்ட காட்டினப்போ, டூப்போட ஸ்கின் டோனும் சூர்யாவோட ஸ்கின் டோனும் மேட்ச் ஆகாத மாதிரி இருந்துச்சு. ‘இதை நான் யூஸ் பண்ணுனா, டூப்தான்னு நிச்சயமா தெரிஞ்சிடும். உங்களுக்கு ஓகேனா நான் யூஸ் பண்றேன்’னு சொன்னேன். உடனே சூர்யா, ‘இல்ல, இல்ல... நானே பண்றேன்’னு சொல்லி பண்ணிட்டார்.”

ரஜினி 'காக்க காக்க' பார்த்துட்டு உங்கக்கூட படம் பண்ணணும்னு கூப்பிட்டு பேசியிருக்கார். இப்போ வரை அந்தப் பேச்சு போகுதே; அவருக்கு என்ன கதை வெச்சிருந்தீங்க?

“அவருக்காக நிறைய கதைகள் பண்ணி வெச்சிருக்கேன். என்னைக்காவது ஒரு நாள் அது நடக்கும்னு நான் நம்புறேன். ’காக்க காக்க’ சமயத்தில் நடக்காமல் போனமாதிரி, ’கபாலி’ சமயத்திலும் ரஜினி சாரைப் பார்த்து ’துருவ நட்சத்திரம்’ படத்தோட கதையைச் சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தது; காலையில கதை சொல்லி மதியம் படம் பண்றது உறுதினு சொன்னாங்க. எங்க அம்மாக்கு மட்டும் போன் பண்ணி, ’ரஜினி சார் படம் பண்ணப்போறேன்; பாசிட்டிவ்வான பதில்தான் வந்திருக்கு’னு சொன்னேன். ஆனால், சாயங்காலம் அது மாறிடுச்சு. தாணு சார் போன் பண்ணி, ’அடுத்த படத்தில் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாருப்பா’னு சொன்னார். நான் ஏன், எதுக்குனு காரணம் கேட்டுக்கலை. இப்போவரைக்கும் அந்த முயற்சி போயிட்டு இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் படம் பண்றதைப் பற்றிய உரையாடலைத் தாண்டி, படங்களைப் பற்றிய உரையாடல் அதிகமாக இருக்கும். என்னோட படங்களைப் பார்த்துட்டு போன் பண்ணி பேசுவார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை அவருக்குத் தனியாக ஸ்க்ரீன் பண்ணினோம். அதைப் பார்த்துட்டு ப்ரீவியூ தியேட்டரிலேயே ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். சீக்கிரமே அவருக்கு படம் பண்ணுவேன்னு நம்புறேன்.”

'வாரணம் ஆயிரம்’ படத்துல அப்பா கேரக்டருக்கு சரிசமமா அம்மா, ஃப்ரண்ட்ஸ் கேரக்டருக்கும் ஆழம் இருக்கும். உங்க அம்மா, நண்பர்களைப் பற்றி சொல்லுங்க..?

வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம்

“ ‘வாரணம் ஆயிரம்’ படம் கிட்டத்தட்ட எங்களோட பயோகிராபி படம்தான். ’நாம பெருசா என்ன பண்ணிட்டோம்; நமக்கு எதுக்கு பயோகிராபி படம்’னு நினைச்சாலும், அப்பா - மகன் ரிலேஷன்ஷிப்பை எல்லாரும் புரிஞ்சுப்பாங்கனுதான் இதை படமாக எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். சூர்யாகிட்ட இந்தக் கதையை சொன்னப்போ அவரும் அந்தக் கதைக்குள்ள இருந்த மேஜிக்கை புரிஞ்சுக்கிட்டு, நடிக்கிறதுக்கு ஓகே சொன்னார். ஆனால், ’ரெண்டு கேரக்டர்களிலும் நானே நடிக்கிறேன்’னு சொன்னார். எனக்கு டபுள் ஆக்‌ஷன் படங்கள் பண்றது பிடிக்காது. ஏன்னா, ரெண்டு கேரக்டர்களோட தோற்றத்தையும் நாம எவ்வளவுதான் வித்தியாசப்படுத்தி காட்டினாலும், ஆடியன்ஸுக்கு அது ஒரே நடிகர்னு தெரியும். அதுனால, அந்தக் கேரக்டர்களை பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. அதுனால, அப்பா கேரக்டருக்கு லால் சாரையோ, நானா படேகர் சாரையோ நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனால், சூர்யா அதில் உறுதியா இருந்தனால அவரே என் வீட்டுக்குப் போய், என் அப்பாவோட பழைய போட்டோஸைப் பார்த்து, அந்தத் தோற்றத்துக்காக ஒரு மெனக்கெடல் எடுத்தார். அதுனால, நானும் ஓகே சொல்லிட்டேன்.

இந்தப் படம் முழுக்க எனக்கு ஒரு எமோஷனலான ஒரு பயணமா இருந்தது. ஏன்னா, எங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவரோட நினைவுகளை ரீ கிரியேட் பண்ணும்போது, ரொம்பவே எமோஷனலாகிட்டேன். என் அம்மா கேரக்டர் எப்படியோ அதே மாதிரிதான், சிம்ரம் மேடமோட கேரக்டரையும் எழுதினேன். இந்தப் படம் ரிலீஸாகுற வரைக்கும் என் அப்பாவோட கதையைத்தான் படமா எடுக்குறேன்னு என் அம்மாவுக்கு தெரியாது. அப்படித்தான் முழு படத்தையும் எடுத்து முடிச்சேன். என் ரெண்டு தங்கச்சிகளோட கேரக்டரை ஒண்ணா சேர்ந்து, ஒரே கேரக்டரா படத்தில் வெச்சேன். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் எனக்கு ரொம்பவே முக்கியமானவங்க. ஏன்னா, நான் வெளிநாட்டில் இருந்தப்போதான் என் அப்பா சென்னையில் இறந்தார். என்னால உடனே வர முடியலை. என் நண்பர்கள்தான் என்னோட இடத்தில் இருந்து நான் வரவரைக்கும் எல்லா வேலைகளையும் பார்த்தாங்க. அப்பா இறந்ததும் முதலில் சூர்யாவுக்குத்தான் போன் பண்ணினேன். அவர்தான் முதல் ஆளாய் வீட்டுக்குப் போய், அப்பாவோட ரத்தத்தையெல்லாம் துடைச்சுவிட்டு, அவருக்கு ட்ரஸ் மாத்திவிட்டார். என் நண்பர்களின் குணங்களை எல்லாம் அப்படியே படத்தில் கொண்டுவந்தனாலதான், எல்லா கேரக்டர்களும் ரொம்பவே முக்கியமானதாக இருந்துச்சு.”

பாடலாசிரியர் தாமரை தாண்டி நா.முத்துக்குமாரோடு வேலைபார்த்த அனுபவம்..?

'' 'வாரணம் ஆயிரம்' படத்துல 'ஏத்தி ஏத்தி பாட்டு தாமரையுடைய ஜோன்ல இல்ல. ’முத்துகுமார் எழுதுனா நல்லாயிருக்கும்னு' ஹாரிஸ் சொன்னார். அதனால, முத்துக்குமார்கிட்ட போனேன். அவர்கிட்ட நிறைய பேச வாய்ப்புகள் கிடைச்சது. அப்புறம் 'தங்கமீன்கள்' படத்தைத் தயாரிக்கும் போதும் அவருடன் பழக நேரம் கிடைச்சது. 'நீதானே என் பொன் வசந்தம்' படத்துக்கான பாடல்களை முத்துக்குமார் எழுதட்டும்னு இளையராஜா சார் விருப்பப்பட்டார். நானும் சரினு சொன்னேன். பாடல்களுக்கான வாய்ஸ் ரெக்கார்ட்டிங் எல்லாத்தையும் மும்பையில எடுத்தோம். இதுக்காக நானும், முத்துக்குமாரும் ஒண்ணா டிராவல் பண்ணுனோம். ஹோட்டல்ல ஒண்ணா இருந்தப்போ நிறைய கதைகள் டிஸ்கஷன் பண்ணியிருக்கார். அப்போதெல்லாம் தாமரை வொர்க் பற்றி நிறைய விஷயங்களை முத்துக்குமார் சொல்லியிருந்தார்.''

முதல்முறை ஏ.ஆர்.ரஹ்மானோடு 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இணைந்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?

ஏ.ஆர்.ரஹ்மா
ஏ.ஆர்.ரஹ்மா

'' 'மின்னலே' படத்துக்காகவே ரஹ்மான் சார்கிட்டதான் போனேன். 'மின்சார கனவு' படத்துல உதவி இயக்குநரா இருந்தப்போ ரஹ்மான் சார் பழக்கமில்ல. ஆனா, அவர்கிட்ட இருந்து பாட்டு வர்றதுக்காக காத்துட்டு இருப்போம். ராஜீவ் சார் பாட்டை வாங்கிட்டு வந்து ஸ்டூடியோல போட்டு காட்டுவார். அப்பறம், ஷூட்டிங்குக்கு ரெடியாவோம். அதுமட்டுமில்லாம ரஹ்மான் சாரோட பாட்டை கேட்டு வளர்ந்திருக்கோம். அவருடைய பாட்டுக்கு காலேஜ்ல டான்ஸ் ஆடியிருக்கோம். அப்படித்தான் வாழ்க்கையை கடந்து வந்திருக்கோம். அதனால, ரஹ்மான் சார்கூட வேலை பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.

அப்படியிருந்தப்போ முதல் படத்துக்காக அவர்கிட்ட போனேன்.  'நிறைய வேலைகள் போயிட்டு இருக்கு. ஒரு எட்டு மாசம் ஆகும்'னு பதில் சொன்னார். அப்பறம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்துக்காகவும் சந்திச்சோம். ஆனால், அந்தப் படம் நடக்கல. 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சிட்டு ரஹ்மான் சார் பண்ணுனா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். அவர்கிட்ட போனப்போ ஓகே சொன்னார். சொல்லப்போனா ஆஸ்கர் அறிவிப்பு வந்தப்போதான் படத்தோட அறிவிப்பும் வெளியிட்டோம். 'ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் ’விண்ணைத்தாண்டி வருவாயா'னு போஸ்டர் வெளிவந்தது.

அவருடைய ஸ்டூடியோவுல மியூசிக் பத்தி நிறைய பேசுவோம். இந்தப் படத்துகாக கேட்டப்போகூட 'படத்துல நிறைய ட்ராக் ரெக்கார்ட் இருக்கு. நான் உள்ளே வந்து கெடுத்துற போறேன்’னுதான் ஆரம்பிச்சார். அப்பறம், 'தாமரைக்கும் உங்களுக்கும் நல்ல பாடல்கள் கொடுத்த கனெக்ட் இருக்கு. அவங்களை மிஸ் பண்ணிற கூடாது’னு சொன்னார். பாட்டு கம்போஸிங் போது நானும், தாமரையும்கூட இருந்திருக்கோம். எல்லா பாட்டுமே நாலு மணி நேரம் வரைக்கும் டிஸ்கஷன் பண்ணிதான் தொடங்குவோம். நாலு பாடல்கள் முடிச்சதுக்குப் பிறகு, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறதுக்காக தாமரையை வரச் சொல்லி 'மன்னிப்பாயா' பாட்டு ரெடி பண்ணியிருக்காங்க. அது நடந்து நாலு நாளைக்கு பிறகு ஸ்டூடியோவுக்கு என்னை வரச் சொல்லி ஸ்ரேயா கோஷல் வாய்ஸ்ல பாட்டை ப்ளே பண்ணி காட்டினார்.

எங்களுக்குள்ள நல்ல கனெக்ட் இருக்கு. தேவையில்லாமல் அவரை எப்போவும் தொந்தரவு பண்ண மாட்டேன். ரஹ்மான் சாருக்கு சின்னதா மெயில் அனுப்புவேன். இதுக்கு 'எஸ்’ அல்லது ’நோ'னு பதில் வரும். எப்போவும் அவர் 'நோ' சொன்ன படத்துக்கு 'நீங்கதான் பண்ணணும்னு' நின்னது இல்ல. 'ஓகே சார்' சொல்லிட்டு வந்திருவேன். இப்படிதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படம் அவர்தான் பண்ணுவார்னு ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டேன். அப்பறம் பாட்டுக்காக அவர்கிட்ட போனேன். விஷயத்தை சொன்னேன். 'இரண்டு நாள் கொடுங்க’னு சொன்னார். ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணி 'இல்ல கெளதம் இந்தப் படம் நான் பண்ணலை'னு சொன்னார். 'சரிங்க சார், ஓகே’னு சொன்னேன். மறுபடியும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துல ரெஃபரன்ஸ் பாட்டு வெச்சிட்டு லிப்சிங் இல்லாம நிறைய பாட்டு எடுத்துட்டேன். 'ரஹ்மான் சார் ட்யூன் கொடுத்ததுக்குப் பிறகு முழு பாட்டும் ஷூட் பண்ணலாம்’னு தனுஷ்கிட்ட சொல்லிட்டேன். ரஹ்மான் சார் ’நோ’ சொன்னவுடனே 'ஓகே' னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பறம்தான் தர்புகா சிவா உள்ள வந்தார். ரஹ்மான் சார் நோ சொன்னதுக்கு பிறகு 'கதை யாரை கேட்குது’னு யோசிச்சு வொர்க் பண்ணுவேன்."

- நாளை தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism