Published:Updated:

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

சித்தி இத்னானி - சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சித்தி இத்னானி - சிம்பு

சிம்பு ஸ்பெஷல் என்னென்னா, ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வைத்து ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். அவரிடம் எதையும் சாத்தியப்படுத்திக் கொண்டு வரலாம்.

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

சிம்பு ஸ்பெஷல் என்னென்னா, ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வைத்து ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். அவரிடம் எதையும் சாத்தியப்படுத்திக் கொண்டு வரலாம்.

Published:Updated:
சித்தி இத்னானி - சிம்பு
பிரீமியம் ஸ்டோரி
சித்தி இத்னானி - சிம்பு

``ரஹ்மான் ஸ்டுடியோவிலிருந்து கிளம்பிட்டே இருக்கேன். 12 மணி போல வீட்டில் சந்திக்கலாமா?’’ - சந்தோஷமாக வந்தார் இயக்குநர் கௌதம் மேனன். வீட்டின் இரண்டாவது மாடியில் இதமான குளிரில் கதகதப்பாக நடந்தது உரையாடல். ‘வெந்து தணிந்தது காடு' சிம்பு நடிப்பில் திரை தொடக் காத்திருக்கிறது.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

‘‘எப்பவுமே ஒரு கலைஞனை அவனோட வயசு, அனுபவம், பக்குவம்னு ஏதாவது ஒண்ணு அடுத்தடுத்து எடுத்துட்டுப் போயிட்டே இருக்கும். ‘வெந்து தணிந்தது காடு'க்கு முன்னாடி சிம்புவோட ஒரு படம் ரெடியாகி ஷூட்டிங் வரைக்கும் வந்து, ரஹ்மான் பாடல்களும் ரெடியாகி ஒரு லவ் ஸ்டோரியாக அது ஆரம்பிச்சது. ‘நதிகளில் நீராடும் சூரியன்'னு பெயர்கூட வெச்சோம். அப்பத்தான் ஜெயமோகன் சார்கிட்ட பேசினேன். கேங்ஸ்டர் பத்திப் பேசிட்டிருந்தோம். இது இல்லாமல் மும்பையில் இப்படிச் சில பேர் இருக்காங்கன்னு சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். ‘இதைக் கதையா ரெடி பண்ணுங்க சார்'னு சொன்னேன். மூன்றே நாள்களில் 100 பக்கத்திற்கு ஒரு ஸ்கிரீன்ப்ளே எழுதிக் கொடுத்தார். சிம்புவும், ஐசரி சாரும் சந்தோஷமா ஓகே சொன்னாங்க. படம் நல்லபடியாக வடிவெடுத்ததில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்குப் பெரும்பங்கு இருக்கு.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!
கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``படத்துடைய ஸ்டில்கள் ரொம்பவும் வித்தியாசமா இருக்கு. தீவிரத்தன்மையாக இருக்கும்போல..?

‘‘சினிமான்னா நாம சில விஷயங்களை டியூன் பண்ணியிருக்கோம். ஒரு ஹீரோன்னா பத்துப் பேரை அடிக்கலாம். அவனால் எல்லாம் முடியும். இங்கே ரஜினி, விஜய், அஜித்னா அப்படித்தான் மக்கள் வர்றாங்க. கமல்னா எதுவும் நடக்கலாம்னு நம்புறாங்க. சிம்புவும் அப்படி கேட்பாரோன்னு நினைச்சுக்கிட்டே கதை சொன்னேன். ‘அந்த லவ் ஸ்டோரியை அப்புறம் பண்ணிக்கலாம். இப்ப இந்தக் கதையைச் செய்யலாம்'னு சொன்னார். கேங்ஸ்டர் கோஷ்டியில் இருக்கிற ஒருத்தனைப் பத்தின கதை. அவன் எப்படி அதுக்குள்ளே போறான். அவன் வாழ்க்கை எப்படி ஆரம்பிக்குதுன்னு போகும். நாம் ஒரு வாழ்க்கை வாழ்றோம். ஆனாலும் இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்குன்னு எல்லோருக்கும் தெரியணும். வன்முறையை மிகைப்படுத்தாம வச்சிருக்கேன். ‘நாளைக்கு நாம் உயிரோடு இருப்போமான்னு தெரியலையே, இதிலிருந்து வெளியே போயிடலாமா?'ன்னு ஒருத்தன் கேட்பான். ‘பெரிய விஷயம் பண்ணலைன்னா போயிடலாம். பெரிய விஷயம் பண்ணிட்டால் இங்கே இருக்கிறதுதான் பாதுகாப்பு'ன்னு இன்னொருத்தன் சொல்வான். இதுதான் இந்தக் கதை. இது ஒரு எமோஷனல் பயணம். வெளியே போயிடலாம் என்று நினைக்கிறபோது உள்ளே இழுக்கப்படுவது நடக்கும். வேண்டவே வேண்டாம்னு நினைக்கிற போது உள்ளேயே போய் ஆழ்ந்துவிட்டதை பார்ட் 2-ஆக வச்சிருக்கேன். படம் பார்த்துட்டு ‘பார்ட் 2 எப்போ பண்ணலாம்’னு கேட்டுட்டு இருக்காங்க. இது ஒரு நல்ல படமாக ஆடியன்ஸுக்குச் சேர்ந்துவிட்டால் பார்ட் 2-க்கு நிச்சயம் போகலாம்.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!
கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``சிம்பு இதில் சரியாக அமைஞ்சிட்டார்போல..?’’

‘‘சிம்பு ஸ்பெஷல் என்னென்னா, ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவரை வைத்து ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். அவரிடம் எதையும் சாத்தியப்படுத்திக் கொண்டு வரலாம். ‘3 இடியட்ஸ்' படத்தில் அமீர்கான் 19 வயது பையனாக வந்து நின்ற மாதிரி சிம்புவாலும் இதுல செய்ய முடிந்தது. சிம்பு இன்னமும் இளைஞன். அப்படியே கேரளாவுக்குப் போய் ஆளே மாறி, என்னோட 19 வயது முத்துவீரனாக வந்து நின்னார். எல்லோரும் அப்படி ரசிச்சோம். அவரை நல்ல நடிகனாக எல்லோருக்கும் தெரியும். எனக்கு இன்னும் நல்லா தெரியும். என்ன சீன் சொன்னாலும் உள்வாங்கிட்டு ஒரே டேக்கில் கொடுத்தார். ஒன்ஸ் மோர்னு கேட்டால் தப்பு பண்ணிட்டேனான்னு கேட்பார். அதையும் பார்த்தால் ஃபோக்கஸ், கேமரா தப்பாயிருக்கும். ஜெயமோகன் இதை ஒரு ஆழமான கதையா எழுதிக் கொடுத்தார். அவர் மனைவியே ‘ரொமான்டிக் டைரக்டர்கிட்ட லவ் ஸ்டோரியே இல்லாமல் கதை கொடுத்திருக்கீங்க'ன்னு கேட்டிருக்காங்க. ஆனால் காதலுக்கான இடத்தை வைத்திருந்தார். ‘அது உங்க டிபார்ட்மென்ட், பார்த்துக்கங்க'ன்னு ஜெயமோகன் சொன்னார். களத்தில் காதலைச் சேர்த்தோம். ஸ்கிரீன்ப்ளேயில் கொஞ்சம் சொந்தம் கொண்டாடிப் பார்த்தால்தான் நல்லா வரும். இதுவரைக்கும் பண்ணின படங்களில் இல்லாத ட்ரீட்மென்ட் வந்திருக்கு. ‘காக்க காக்க' வந்தபோது புதுசா பண்ணினாங்கன்னு ஒரு பேச்சு எழுந்ததில்லையா, இதுலயும் அப்படி வரும். படம் பார்த்துட்டு ‘இதுவரைக்கும் பண்ணின படங்களில் இல்லாத மெச்சூரிட்டியைப் பார்க்கிறேன்' என்று சிம்பு சொன்னார். அதை நான் பெருசா எடுத்துக்கிட்டேன். ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிற காட்சி எல்லாம் ஒரே ஷாட்டில் எடுத்து வித்தியாசம் காட்டியிருக்கோம்.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``ஹீரோயின் சித்தி இத்னானிக்கு எப்படியான கேரக்டர்?’’

‘‘படத்தில் எல்லோருமே மிடில் கிளாஸுக்கும் கீழேதான். ‘பாவை' கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடிட்டோம். ஒருத்தரை வச்சு ஒரு நாள் ஷூட்டிங்கூட எடுத்தாச்சு. அப்புறம்தான் சித்தி இத்னானி வந்தாங்க. 11 மணிக்கு அவங்களைப் பார்த்தோம். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவங்களோட ஷூட்டிங் போயிட்டோம். அவங்க மும்பைதான். அழகா தமிழ் வருகிறது.’’

``மியூசிக் உங்களுக்கென்று ரஹ்மான் ஸ்பெஷலா கொடுப்பாரே...’’

‘‘ ‘நதிகளில் நீராடும் சூரியன்' படத்திற்கு மூன்று பாடல்கள் போட்டு வச்சு டியூன் இருந்தது. அதே ட்ராக்கை வெச்சு வரிகளை மாத்திக்கலாம்னு அவர்கிட்டே சொன்னேன். அது அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டு, இதில் நான்கு இடங்களில் பாடல்களைத் தந்தார். ஒரு இடத்தை அவரே உண்டு பண்ணினார். ஒரு நாள் திடீரென்று ராத்திரி இரண்டு மணிக்கு ‘ஏ.ஆர்'னு போன் வருது. அவருக்கு அமெரிக்காவில் இருந்ததால் நேரம் மறந்திருக்கலாம். ‘தாமரை லைனில் இருக்காங்க. பாடல் பத்திப் பேசலாமா?'ன்னு கேட்கிறார். அப்போ ஆரம்பிச்சு, ராத்திரி நாலு மணி வரைக்கும் டிஸ்கஷன் போச்சு. ‘மறக்குமா நெஞ்சம்'னு ஆரம்பிச்சு, ‘நெஞ்சுக்குள்ளே நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேனைத் தந்தால் என்னவாகும்'னு வார்த்தைகள் விழுந்ததும் அவருக்குப் பிடித்தது. அந்த ராத்திரி ஏ.ஆர் லைனில் வந்தது, தாமரை வரிகள் சொன்னது எல்லாமே அற்புத நினைவுகளா இருக்கு.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!
கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``நடிகராகவும் பயங்கர பிஸியாகிட்டீங்களே?’’

‘‘நடிக்கிறதில் ஆர்வமே இருந்ததில்லை. சும்மா என் படங்களில் ஒரு காட்சியில் தலையைக் காட்டிட்டுப் போவேன். அப்படி எனக்கு ஒரு முகமும் பாவனைகளும் இருக்கிறதா நினைச்சதேயில்லை. நடிப்பு சொல்லித்தரும்போது நூறு பேருக்கு மத்தியிலும் தயங்காமல் சொல்லிக் கொடுப்பேன். முதலில் தங்கர் பச்சான் ‘பள்ளிக்கூடம்' படத்திற்கு நடிக்கக் கூப்பிட்டார். கையெடுத்துக் கும்பிட்டுட்டு வந்துட்டேன். விஜய் மில்டன் அவருடைய ‘கோலி சோடா 2' படத்துல ‘பத்து நிமிஷம் வருகிற மாதிரி ஒரு இடம் இருக்கு. நீங்க நடிக்கணும்'னு பிடிவாதமாக இருந்தார். நடிச்சேன். பகத் பாசில் நடித்த ‘ட்ரான்ஸ்' படத்தில் பெரிய ரோல். வற்புறுத்திக் கேட்டாங்க, நடிச்சேன். இப்போவும் காலையில் எழுந்தால் ‘என்ன சீன் டைரக்ட் பண்ணப் போறோம்'னுதான் எழுந்திருக்கிறேன். ஒரு மேனேஜர் வெச்சு அதில் ஒழுங்கைக் கொண்டு வந்து முறைப்படுத்தி நடிகன் ஆகியிருக்கேன். இதில் சம்பாதித்ததை ‘துருவ நட்சத்திரம்' படத்தில் போட்டு டிசம்பர் ரிலீஸுக்கு ரெடி பண்ணியிருக்கேன். நடிக்க வந்த பிறகு, லக்னோவில்கூட கண்டுபிடிச்சு செல்ஃபி எடுக்கிறாங்க. ரீச் அதிகமாகிவிட்டது. எங்கேயும் போய் தலைமறைவா இருக்க முடியாது. அது மட்டும் தெரியுது.’’

`` ‘வேட்டையாடு விளையாடு 2' எப்போ?’’

‘‘ஸ்கிரிப்ட் ரெடி ஆகிட்டேயிருக்கு. கமல் சார்கிட்ட லாக்டௌனுக்கு முன்பே இதைப் பத்தி 45 நிமிஷம் பேசினேன். அதை டெவலப் பண்ணச் சொன்னார். இப்ப கதை சொல்றதுக்காக ஒரு டைம் கொடுத்திருக்காங்க. முழு நீளமாக ஒரு சரியான கதையச் சொல்லிட முடியும்னு நம்பிக்கை இருக்கு. ரொம்ப ஆசையா, அடுத்த வருஷம் மத்தியில் நான் செய்யணும்னு நினைச்சுட்டு இருக்கிற படம்.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``சிம்புவை டைரக்ட் பண்ணிட்டு அவரோட வில்லனாவே வர்றீங்க?’’

‘‘ ‘பத்து தல' படத்தைச் சொல்றீங்க. டைரக்டர் கிருஷ்ணா என்னோட வேலை பார்த்தான். சில பேர்கிட்ட இல்லைன்னு சொல்லவே முடியாது. ‘நீங்கதான் நடிக்கணும்'னு சொன்னான். ‘சிம்பு வேற மாதிரி நடிப்பார்டா, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைடா'ன்னு சொல்லிப் பார்த்தேன். சிம்புகிட்ட கிருஷ்ணா கேட்டதற்கு, அவரும் சிரிச்சுக்கிட்டே ஓகே சொல்லிட்டாராம். எட்டு நாள் நடிச்சிட்டு வந்தேன். அடுத்து ஆக்‌ஷன்கூட இருக்கு. ‘ரிகர்சல் கொடுடா தம்பி'ன்னு கிருஷ்ணாகிட்ட சொல்லியிருக்கேன்.’’

``மியூசிக் கம்போசிங் பண்றீங்கன்னு சொல்றாங்களே...’’

‘‘நிறைய பாடல்கள் மியூசிக் கம்போஸ் போய் ரெக்கார்டும் பண்ணி வெச்சிருக்கேன். ராஜா, ரஹ்மான், ஹாரிஸ், தர்புகா, கார்த்திக்னு இருக்கும்போது அவங்க நடுவில் நம்ம மியூசிக்கை ஏன் இறக்கணும்னு நினைக்கிறேன். எப்பவும் மியூசிக்கைப் பத்திப் படிப்பேன். இசைதான் கடவுள் மொழின்னு சொல்வாங்க. ஒவ்வொரு மனசும் உணர முடியாத ஒரு ரகசியம். நல்ல இசை கேட்கும்போதும், படைக்கும்போதும் மனதில் சந்தோஷமும் மனநிறைவும் இருக்கும். அதனாலதான், மியூசிக் அறிஞ்சவங்களை கடவுளின் பக்கத்தில் இருக்காங்கன்னு சொல்லுவாங்க. மியூசிக் பண்றதைப் பின்னாடி வெச்சுக்கலாம்.’’

கேங்ஸ்டர் கோஷ்டியின் முத்துவீரன் சிம்பு!

``நீங்களும் விஜய்யும் சேர வாய்ப்பிருக்கா?’’

‘‘நிச்சயமாக செய்வோம். சூப்பர் ஸ்டார் குவாலிட்டியோடு இருக்கிற அவரோட படம் பண்ணினால் பயங்கரமாக இருக்கும். இப்போ விஜய்க்கு ஒரு அழகான லவ் ஸ்டோரி பண்ணலாம்னு தோணுது. ஆக்‌ஷன், க்ரைம், த்ரில்லர்னு போயிட்டிருக்கும்போது இப்ப காதல் கதையை விஜய் கையில் எடுத்தால் அது வேறு விதத்தில் இருக்கும்.’’

``நீங்களும் விஜய் சேதுபதியும் அடிக்கடி சந்திச்சுக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோமே!’’

‘‘யார் இல்லைன்னு சொன்னது? நிறைய தடவை மீட் பண்ணிப் பேசியிருக்கேன். ‘நான் எதிர்பார்க்கிற கௌதம் மேனன் படத்துக்குள்ள நான் வரணும்'னு சொன்னார். ‘நீங்களா ஒரு கதை சொல்லுங்க. பண்ணிடலாம்... இல்லைன்னா, என்னை நம்பி வாங்க பண்ணிடலாம்'னு சொல்லியிருக்கேன். பார்க்கலாம்.’’

``சமீபத்தில் பார்த்த படம், பிடித்த இயக்குநர் யார்?’’

‘‘ ‘கார்கி' இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் கதையைக் கையாண்டது பிடிச்சது. நல்ல இடத்திற்கு வந்து சேர்வார்னு தோணுது. அப்புறம் வெற்றிமாறன். அவருடைய ‘விடுதலை' படத்திற்கு மூன்று நாள் நடிக்கக் கூப்பிட்டார். மறுபடியும் அதை எட்டு நாளாக்கிவிட்டார். பிடிச்சதால டெவலப் பண்ணினார்போல. வழக்கமா பண்ற மாதிரி அவர் ஷூட் பண்ணலை. ஒன் மேன் ஷோ மாதிரி மொத்தப் படத்தையும் கையில் ஏந்துறார். சேதுபதி, சூரி, நான், சேத்தன் எல்லோரும் நடிச்சோம். அவர் ஏன் வெற்றிமாறனாக இருக்கிறார் என்று தெரியுது. அவர் திடமாக முடிவு எடுக்கிறார். விஜய் சேதுபதியும் அவரும் ஒரு ஷாட்டை வெச்சுக்கிட்டு, அது பத்தி இரண்டு மணி நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசியில் வெற்றிமாறன் எடுக்கிற முடிவு சரியாக இருக்கு. ஐ லவ் வெற்றிமாறன்!’’

``உங்க பையன் யோஹன் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வமா இருக்காரே?’’

‘‘ஆமா. சினிமாவுல அவங்களுக்கு அவ்வளவா ஆர்வமில்லை. என் பையன் யோஹன் முதல் பந்தில் விக்கெட் எடுத்ததும் பரபரப்பாகிவிட்டது. பையனைப் பத்தி எழுதும்போது, கெளதமின் மகன்னு எழுதிட்டாங்க. அவன் சொந்த முயற்சியில் கிரிக்கெட் விளையாட்டில் மேல வந்துக்கிட்டிருக்கான். அதில் என் பெயர் வந்திருக்க வேண்டாம். என் மத்த ரெண்டு பசங்க துருவா, அத்தியாவுக்கும் கிரிக்கெட்தான் மூச்சு. தமிழ்நாடு அணிக்கும், அடுத்தடுத்தும் போகணும்னு ரொம்ப ஆர்வமா இருக்காங்க.’’