சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

‘உங்க கரியரில் உங்களுக்குப் பிடிச்ச வழக்கு என்ன’ன்னு கேட்டதற்கு இந்தப் பழங்குடிப் பெண்ணின் வழக்கைச் சொன்னார்.

முதல் பார்வை போஸ்டரில், வழக்கறிஞர் உடையில் சூர்யா... கீழே, அடித்தட்டு மக்களின் அணிவரிசை. ’ஜெய்பீம்’ என்ற தலைப்பில் சூர்யா எடுத்திருக்கும் அவதாரமே ஆச்சர்யம். இயக்குநர் த.செ.ஞானவேல் ஷூட்டிங்கின் நெரிசலிலிருந்து விடுபட்ட அலுவலக நிம்மதியில் இருந்து பேசினார். பத்திரிகையாளராக இருந்து இயக்குநராகப் பரிணமித்தவர் என்பது அவர் வார்த்தைகளில் தெரிகிறது.

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

``தலைப்பே பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறதே?’’

“இது உணர்வோடு வந்தது. ‘ஜெய் பீம்’ என்பது எல்லாச் செயல்பாட்டிற்குமான முழக்கம். இதைப் பட்டியலினத்தின் அடையாளமா மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அம்பேத்கர் பொதுத் தளத்திற்கான தலைவர். காந்தி, நேருவைப் பார்க்கிற மாதிரி எல்லோருக்குமான தலைவராக அவர் பார்க்கப்படலை என்பது நம்முடைய பிரச்னை. தன்னுடைய வெற்றி என்பது சமூகத்திற்கான வெற்றி என்று நினைத்தவர் அம்பேத்கர். படத்தில் சட்டப் போராட்டம்தான் கதை. அரசியலமைப்புச் சட்டம் நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தந்த உரிமை, நடைமுறையில் எப்படி இருக்கு என்பது பற்றியது. 1993-ல் வழக்கறிஞர் சந்துரு நடத்திய ஒரு வழக்குதான் இந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன். அதுக்குள்ளே பெரிய ஹீரோயிசம் இருந்தது.

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு போலீசால் ஒரு பிரச்னை வருது. அதை எங்கே போய்ச் சொல்றதுன்னு அந்தப் பெண்ணுக்குத் தெரியலை. ஒரு கூட்டத்திற்கு நெய்வேலிக்கு வந்த சந்துருவைச் சந்தித்துச் சொல்றாங்க. அந்த வழக்கை சந்துரு சார் ஒன்றரை வருடங்கள் ஹைகோர்ட்டில் நடத்துகிறார். பழங்குடிப்பெண்ணுக்குஇழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும்தான் கதை. உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக, அம்பேத்கரின் சிந்தனைகளே எனக்கு ஞாபகம் வருது. அதனால் இந்தத் தலைப்பு தோணுச்சு. முழக்கங்களே அரசியலில் முக்கியமான இடத்திற்கு வந்து நிக்குது. நான் தயக்கத்தோட தலைப்பைச் சொன்னபோது, உடனே சரின்னு சொன்னார் சூர்யா. ‘கதைக்குப் பொருத்தமான வைப்ரேஷன் இருக்கு. நாம் ஏன் அதை சாதி அடையாளமா சுருக்கிப் பார்க்கணும்’னு சொன்னார். ’ஜெய் பீம்’ பொதுத் தளத்திற்கான முழக்கமா மாறணுங்கிறது என் விருப்பம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த முழக்கம் உதவியா இருக்கும்.

விகடனில் நான் பணிபுரிந்தபோது ‘தமிழ் மண்ணே வணக்கம்’ தொடர் எழுதினேன். அப்போது வழக்கறிஞர் சந்துருவைச் சந்தித்துப் பேசினேன். ‘உங்க கரியரில் உங்களுக்குப் பிடிச்ச வழக்கு என்ன’ன்னு கேட்டதற்கு இந்தப் பழங்குடிப் பெண்ணின் வழக்கைச் சொன்னார். அவர்கிட்டே ஜட்ஜ்மென்ட் உட்பட அனைத்துத் தரவுகளும் இருந்தன. இதில் சந்துரு சார்தான் ரியல் ஹீரோ.

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

நம்ம எல்லோர்கிட்டேயும் ஒரு திறமை இருக்கு. அதை எதுக்காகப் பயன்படுத்துகிறோம் என்பது ரொம்ப முக்கியம். எதுக்காகப் பயன்படுத்துவது என்ற கேள்விக்கான நல்ல விடைதான் சந்துரு சாரோட வாழ்க்கை. சமூக மாற்றத்தை விரும்பும் மனசு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையா நிக்கணும்ங்கற உறுதி... இதிலெல்லாம் சூர்யா ஈர்க்கப்பட்டார். ‘ஜெய் பீம்’ பார்க்கும்போது உங்கள் திறமை எதற்குப் பயன்படணுங்கிற கேள்வியை எழுப்பும். என்ன பதிலைக் கண்டடைவார்கள் என்பது அவரவர் இயல்பு சார்ந்தது.’’

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்
“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

``சூர்யா எப்படி உள்ளே வந்தார்?’’

“அவர் தயாரிப்பாளராகவே முதலில் வந்தார். சந்துரு சார் பற்றிய கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்தேன். அவரைச் சந்தித்துப் பேசினார். ‘இவர்தான் சந்துரு’ன்னு நாங்க வெளியிட்ட புத்தகமும் அவர் பார்வைக்கு வந்தது. அந்த வாழ்க்கையை வரிக்கு வரி கோடு போட்டுப் படிச்சிருந்தார். இந்த மாதிரி கொண்டாடப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பேசப்படாத ஹீரோக்கள் பேசப்பட வேண்டும். நம்மாழ்வார், நல்லகண்ணு, மருத்துவர் ஜீவானந்தம் போன்றவர்கள் இன்னும் வெகு ஜனத்திற்கு எவ்வளவு அருகில் வந்திருக்கவேண்டும்? அர்ப்பணிப்பான மனிதர்களின் வாழ்வு பற்றிய பதிவுகள் நம்மிடம் புத்தகங்களில் இருக்கிறது. கலைப்படைப்பாக இல்லை. அதைக் கலைப்படைப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆவலுடன் சூர்யா இதில் இறங்கினார். இதுவரை சினிமாவில் மெட்ராஸ் ஹைகோர்ட்டின் நடைமுறைகள் முழுமையாக வந்ததில்லை. முதன்முறையாக அது வந்திருக்கு. கோர்ட் ஹாலை பிரமாண்ட செட் போட்டு கண்முன்னே கொண்டு வந்துள்ளோம்.

இருளர்களின் வாழ்க்கையும் இதில் வந்திருக்கு. பழங்குடிச்சமூகமாக இருப்பதால் அவங்க மேலே போலீஸ் போட்ட பொய் வழக்குகள் நிறைய இருக்கு. சிறுபான்மை என்பதால் அவங்ககிட்டே அணிதிரட்டல் இல்லை. பசிச்சா எலி, அணில், முயல்னு வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு, அரிசி ஆலைக்குக் கூலி வேலைக்குப் போயிடுறாங்க. ‘சொல்லில் சிறந்த சொல் செயல்’னு சொல்வாங்க. சொல்லா இருக்கிற சட்டம் செயலாக மாறும்போதுதான் எல்லாமே பலன் அளிக்குது.’’

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்
“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

``சூர்யா எப்படி சந்துருவாக உருமாறியிருக்கார்?’’

‘‘சூர்யா மாதிரி ஒரு ஹீரோ இதில் உட்கார்ந்ததுதான் பெரிய மேஜிக். தயாரிப்பாளராக வந்தவர், கேரக்டரில் இன்வால்வ் ஆகிட்டார். போதனைகள் எதுவும் நடந்திடக்கூடாதுன்னு எச்சரிக்கையாக இருந்தோம். அனுபவத்தைக் கடத்தியிருக்கோம். அங்கேதான் இது கலையாக மாறுது. பல பாத்திரங்களில் இருளர்களே நடிச்சிருக்காங்க. மணிகண்டன், லிஜோ மோள் அங்கேயே இரண்டு மாதம் தங்கியிருந்து, அவங்க வாழ்க்கையைப் பக்கத்துல இருந்து பார்த்து நடிச்சிருக்காங்க. ரஜிஷா விஜயனுக்கு முக்கியமான ரோல். கௌரவ வேடத்தில் சூர்யா நடிக்கிறார்னு செய்தி பரவியிருக்கு. அது உண்மையில்லை. இது சூர்யா சார் படம்தான். இந்த வழக்கை நிஜத்தில் ஒரு போலீஸ் அதிகாரிகிட்டே விசாரிக்கக் கொடுத்தாங்க. அவர் நியாயமா விசாரித்து, தன் துறையினர் மீதே குற்றம்னு கண்டுபிடிச்சார். அந்த அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ்னு முக்கிய நடிகர்களும் இருக்காங்க. ஷான் ரோல்டனின் இசையின் பங்கு நல்லாருக்கு. `சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு தன் விஸ்வரூபத்தை இதில் எடுத்திருக்கார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.’’

“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்
“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்!” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்

``நீட் மாதிரியான விஷயங்களில் சூர்யாவின் கருத்துகள் சர்ச்சையாகின்றனவே?’’

‘` ‘சுதந்திரம் பெற்றோம்’னு ஒரு வார்த்தையில் சொல்லிடலாம். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு விஷயங்கள் இருக்கு. நாம் அனுபவிக்கிற எல்லா உரிமைகளுக்கும் பின்னாடி ஒரு பெரிய போராட்டம் நிகழ்ந்திருக்கு. அகரம் பவுண்டேஷனில் உயர்கல்வி படிக்க உதவி கேட்டு வர்ற பத்தாயிரம் விண்ணப்பங்களை ஒவ்வொரு வருஷமும் பரிசீலிக்கிறோம். கல்வி சார்ந்த விஷயத்தில் சூர்யா பேசுவதை ஒரு நடிகரா மட்டும் பேசுவதாக நான் புரிந்து கொள்ளவில்லை. அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசுவதை சரியான பின்புலத்தில் நின்னு பேசலைன்னா ஈஸியாக வீழ்த்திடுவாங்க. ஆனால் அதைத்தாண்டி, கல்விமீதும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலம் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறையில் இருந்துதான் இந்த விமர்சனங்கள் வருது. சூர்யா சாருக்கும், சந்துரு சாருக்கும் இருக்கிற அடிப்படையான ஒற்றுமைகூட இதிலிருந்தே தொடங்குகிறது. இன்றைய வாழ்வில், நம்பிக்கையூட்டுபவர்களாக இவர்களைப்போன்ற மனிதர்களையே நான் பார்க்கிறேன்.’’