Published:Updated:

``சூர்யா - ஜோதிகாவுக்கு எல்லோரும் நன்றிதான் சொல்லணும்..!'' - `ராட்சசி' இயக்குநர்

இயக்குநர் கெளதம் ராஜ் மற்றும் ஜோதிகா
இயக்குநர் கெளதம் ராஜ் மற்றும் ஜோதிகா

̀̀ஜோதிகா மேடம் சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிஞ்சிக்காம இதுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. `நீ யார் நல்லது சொல்றதுக்கு'னு கேட்குற மாதிரியிருக்கு.''

கடந்த ஒருவாரமாகத் தமிழ்க்கூறும் நல்லுலகில் ஜோதிகாதான் சர்ச்சை நாயகி. தஞ்சை பெரிய கோயிலை இழிவுபடுத்தும்படியாகவும் கோயில்களைவிட மருத்துவமனைகளுக்கு பணம் கொடுங்கள் என்று பேசிவிட்டதாகவும் அவரை டார்கெட் செய்து வகைதொகையில்லாமல் வந்துவிழுகின்றன மீம்கள்.

``குருவுக்குப் பிறகுதான் தெய்வம்னு `ராட்சசி' படத்தில் சொன்னதைத்தான் மேடையில் பேசுறேன்'' என்றார் ஜோதிகா. இதுகுறித்து `ராட்சசி' படத்தின் இயக்குநர் சை.கெளதம்ராஜிடம் பேசினேன்.

``விழா மேடைல ஜோதிகா மேடம் பேசுனதை ஒருமுறை திரும்பக் கேட்டுப்பார்த்தா அவங்க சொன்னதுல எந்தத் தப்பும் இல்லைன்னு புரியும். யார் மனதையும் புண்படுத்துற மாதிரி அவங்க பேசவே இல்ல. ஏன்னா, அந்த நிகழ்ச்சில நானும் இருந்தேன். அதனால என்ன பேசுனாங்கனு எனக்கு நல்லாவே தெரியும். அவங்களோட நோக்கம் தப்பா பேசணும்கிறதும் கிடையாது. தஞ்சை பெரியகோயிலை அவங்க பெருமையாத்தான் சொன்னாங்க. எங்கேயும் தப்பா கோயில் பற்றி பேசவேயில்ல. தமிழருடைய பெரிய அடையாளம் தஞ்சை பெரிய கோயில். இதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கோயில்கள் எல்லா இடத்துலயும் ரொம்ப சிறப்பா இருக்கு. வறுமையில மக்கள் கஷ்டப்படுற ஊர்கள்லகூட கோயில்கள் பல நிறத்துல வண்ணமயமா இருக்கு. இந்த கோயில்களை சிறப்பா வெச்சிருக்கோம். இந்தச் சூழல்ல மனிதனுக்கு வாழ்க்கையில உடம்பும் சுகாதாரமும்தான் அவசியம். அதே மாதிரி கல்வியும் ரொம்ப முக்கியம். இதுதான் அவனுக்கு சிறந்த வாழ்க்கையைக் கொடுக்கும்குற நோக்கத்துலதான் ஜோதிகா மேடம் பேசினாங்க. சொல்லப் போனா `ராட்சசி' படத்துல `கோயில் நல்லாயிருந்தா மனுஷனுடைய மனசு சுத்தமா இருக்கும். ஆனா, பள்ளிக்கூடம் நல்லாயிருந்தா எல்லாருடைய வாழ்க்கையும் நல்லாயிருக்கும்'னு வசனம் எழுதிட்டு அப்புறம் இது வேண்டாம்னு படத்துல வைக்கமா விட்டுட்டுட்டேன்.

ராட்சசி படப்பிடிப்பில்...
ராட்சசி படப்பிடிப்பில்...

கோயில்கள் நிச்சயம் நல்லாயிருக்கணும். இதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா, எல்லாருடைய கவனமும் கோயிலோட மட்டும் நின்னுறக்கூடாது. பள்ளிக்கூடத்து மேலயும் வரணும். மருத்துவமனைகள் ரொம்ப முக்கியமான, அவசியமான ஒண்ணு. எல்லா மதமும்கூட ஈகையை பெருசா சொல்லுவாங்க. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதம் என எல்லா மதமும் தானம் கொடுங்கனு சொல்லுவாங்க. இந்த ஈகையை மதம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் கொடுக்குறதைவிட மக்களுக்கும் பயன்படுற மருத்துவமனை மற்றும் கல்விக்கு கொடுங்கன்ற அர்த்தத்துலதான் ஜோதிகா மேடம் சொன்னாங்க. எல்லா ஊர்லயும் தனியார் மருத்துவமனைகள் வசதி படைத்தவர்களுக்கானதா இருக்கு. எளிய மக்கள் அரசு மருத்துவமனையைத் தேடித்தான் போறாங்க. ஆனால், இந்த மருத்துவமனைகள் தூய்மையா இல்லைங்கிற ஆதங்கம் அவங்களுக்கு இருந்திருக்கு. சமீபத்தில் அவங்க நடிச்சிட்டு இருக்குற படத்தின் ஷூட்டிங்காக அரசு மருத்துவமனை போயிருக்காங்க. அங்கே பார்த்த சில விஷயங்கள் அவங்களை பாதிச்சதால அதை மேடைல சொன்னாங்க. கண்ணால பார்த்ததைத்தான் பேசியிருக்காங்க.

ஆனா, அவங்க சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிஞ்சிக்காம, இதுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. `நீ யார் நல்லது சொல்றதுக்கு'னு கேட்குற மாதிரியிருக்கு. ஜோதிகா மேடத்தைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப க்ளியரா இருக்காங்க. அவங்க கதை செலக்ட் பண்ற விஷயத்துலகூட `பொண்ணுங்களுக்கு எந்த மாதிரியான நல்ல விஷயத்தை படத்துல இருந்து சொல்ல முடியும்'னு பார்த்துட்டுத்தான் நடிக்கிறாங்க. திருமணத்துக்குப்பிறகு அவங்க நடிக்குற எந்தப் படத்தை எடுத்து பார்த்தாலும் ஏதாவதொரு செய்தி இருந்துக்கிட்டுதான் இருக்கும். மேடையில `சில்லுகருப்பட்டி' படத்தைப் பற்றி சொல்லியிருப்பாங்க. ஜோதிகா மேடம் சொன்னதாலதான் 2டி நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணாங்க. ஒரு பெண்ணோட பார்வையில இருந்து அவங்க சொன்னதாலதான் இந்தப் படம் எல்லோர் பார்வைக்கும் வந்தது.

`நமக்கு இருக்குறது ரெண்டு கைதான். இது மூலமா எவ்வளவு தூரம் நீட்டி கொடுக்க முடியுமோ கொடுக்கணும். நம்ம உதவி செஞ்ச ஒருவர் மேல வர்றப்போ அதனால இன்னும் பலரும் பயன்பெறுவாங்க'னு சூர்யா சார் அடிக்கடி சொல்லுவார். அகரம் அறக்கட்டளை மூலமா படிச்சிட்டு வெளியே வந்தவங்க இன்னும் நல்ல உதவிகள் பண்ணிட்டு இருக்காங்க. பலபேர் டாக்டர்களா இருக்காங்க. இவங்களைப் பார்க்குறப்போ இன்னும் பலரைப் படிக்க வைக்கணும்னு தோணிட்டே இருக்குனு சூர்யா சார் சொல்லுவார். சொல்லப்போனா சூர்யா சார்க்கு பத்மஶ்ரீ விருது கொடுக்கணும். நிறைய மக்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கார். இதுல ஜோதிகா மேடமுடைய உதவியும் நிறைய இருக்கு. இவங்க ரெண்டு பேருக்கும் நன்றியைத்தான் சொல்லணும் நியாயமா. இவங்க ரெண்டு பேருக்கான புரிதலும் பெருசு. ஒரு படத்தோட கதையைக் கூட சூர்யா சார் கேட்டதுக்கு பிறகுதான் அவங்க ஓகே சொல்லுவாங்க'' என ஜோதிகா விவகாரத்தில் தன் கருத்தை முன் வைக்கிறார் கெளதம் ராஜ்.

ராட்சசி படப்பிடிப்பில்...
ராட்சசி படப்பிடிப்பில்...

``ஓகே... ரொம்ப சீரியஸா பேசிட்டோம்... சினிமா பற்றி ஒரே ஒரு கேள்வி... உங்களோட அடுத்த படம் என்ன?''

``அருண்விஜய் சாரை ஹீரோவா வெச்சு படம் பண்ணலாம்னு கதை ரெடி பண்ணிட்டேன். லாக்டௌன் முடிஞ்சவுடனே ஷூட்டிங் போக வேண்டியதுதான்.''

அடுத்த கட்டுரைக்கு