Published:Updated:

“முதல்வரைச் சந்திக்கச் சொன்னார் அஜித்!”

அஜித்

ஹீரோ மக்களோட இருக்குற மாதிரி ஷாட்ல, அவர் பக்கத்துல நம்ம ஊர் ஆளுங்க நின்னாதான், அது தமிழ்ப் படம் மாதிரி தெரியும்.

“முதல்வரைச் சந்திக்கச் சொன்னார் அஜித்!”

ஹீரோ மக்களோட இருக்குற மாதிரி ஷாட்ல, அவர் பக்கத்துல நம்ம ஊர் ஆளுங்க நின்னாதான், அது தமிழ்ப் படம் மாதிரி தெரியும்.

Published:Updated:
அஜித்
‘வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி இந்த வாரமும் தொடர்கிறது.
ஹெச்.வினோத்
ஹெச்.வினோத்

நீங்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஒரு இயக்குநர். ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் பண்ணும்போது கதையில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்வீங்க..?’’

‘‘அஜித் சாரைப் பொறுத்தவரைக்கும் கதையை முழுசா கேட்க மாட்டார். இயக்குநர்கிட்ட லைன் கேட்டுட்டு, ‘கதையில் நான் என்ன பண்றேன், கூட இருக்குறவங்க என்ன பண்றாங்க?’ன்னு கேட்பார். அவ்வளவுதான். கதை பண்ண ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொன்னார். ‘எப்போ பார்த்தாலும் யோசிச்சுக்கிட்டே இருக்குற நாம, யோசிக்கவே டைம் இல்லாம ஓடிட்டு இருக்குற மக்களுக்குப் படம் பண்றோம். அதை மைண்ட்ல வெச்சு பண்ணுங்க!’ன்னார். அதை நானும் மனசுல ஏத்திக்கிட்டேன். மத்தபடி முழுசா அவர் தன்னை ஒப்படைச்சிருவார். என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல முழு ஸ்கிரிப்ட்டை அவர் கேட்டதே இல்லை. சில சீன்ல நடிக்கும்போது, `ஓ இதுதான் கதையா?'ன்னு ஜாலியா கேட்பார். நாம என்ன சொல்றோமோ, அதைப் பண்ணிடுவார்.’’

``அப்படின்னா இது அஜித் படமா, வினோத் படமா?’’

‘‘அது என்ன வினோத் படம்? நான் பண்ணினதே ரெண்டு படங்கள்தான். அதுலயும் சில குறைகள் இருக்கு. ஆனா ஜனங்க மன்னிச்சு ஜெயிக்க வெச்சாங்க. இது முழுக்க முழுக்க அஜித் சார் படம்தான். அதில் என்னுடைய ஸ்டைலும் இருக்கும். சாரோட ரசிகர்கள் ரெண்டு வருஷமா அஜித் சாரை ஸ்கீரின்ல பார்க்கலை. அவங்க எதிர்பார்க்குற மாதிரி, ரசிக்கிற மாதிரி, கொண்டாடுற மாதிரி, நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. அதே சமயம் குடும்பத்தோட பார்க்குற மாதிரியான விஷயங்களும் படத்துல உண்டு.''

``இந்தப் படத்துல வில்லனாகக் கார்த்திகேயா வந்தது எப்படி? தமிழில் யாரும் செட் ஆகலையா?’’

‘‘இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது ‘இதுல வில்லனா யார் பண்ணப் போறாங்க’ன்னு ஒரு கேள்வி எழுந்துச்சு. நான், அஜித் சார்கிட்ட கதையோட வில்லன் கேரக்டருக்கான லுக்குகளை விவரித்து ‘அதுக்கு ரொம்பப் பொருத்தமான ஒருத்தரைத் தேடிட்டு இருக்கேன்’னேன். உடனே அஜித் சார், ‘அர்ஜுன் தாஸ், பிரசன்னா... ரெண்டு பேரும் நீங்க சொல்ற கேரக்டருக்கு கரெக்டா இருப்பாங்க’ன்னு சொன்னார். நான் சில காரணங்கள் சொல்லி, அவங்க வில்லன் கேரக்டருக்கு செட் ஆக மாட்டாங்கன்னு சொல்லிட்டு, ‘டொவீனோ தாமஸ் கரெக்டா இருப்பார்’னு சொன்னேன்.

அவர் உடனே, ‘உங்களுக்கு எது கரெக்ட்டோ, அதைப் பண்ணுங்க'ன்னார். அப்ப டொவீனோ தாமஸோட தேதிகள் எங்களுக்குக் கிடைக்கல. இந்தச் சமயத்துலதான் தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ்.100' பார்க்க நேர்ந்தது. அதோட ஹீரோ கார்த்திகேயாவைப் பிடிச்சோம். அவரை அணுகும்போது ‘நான் ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். ஆனா, அஜித் சாருக்காக வில்லனா பண்றேன்!’னு சம்மதிச்சார். அவரை வரவச்சு, டெஸ்ட் ஷூட் பண்ணினோம். அதுக்கு அடுத்த நாள் அஜித் சாரோட ஷூட்டிங். நான் அஜித் சார்ட்ட போய், ‘கார்த்திகேயா நல்லா நடிக்கறார். ஆனா அவர் முகத்துல சின்னதா தெலுங்கு ஜாடை இருக்கு. அவரை மாத்திட்டு, நீங்க சொன்ன அர்ஜுன் தாஸ், இல்லைன்னா பிரசன்னான்னு போயிரலாமா?’ன்னு கேட்டேன். அதுக்கு அஜித் சார், ‘தயவு செஞ்சு கார்த்திகேயாவை மாத்தாதீங்க’ன்னு சொன்னார். ஆச்சர்யத்துடன் ‘ஏன் சார்?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் தன்னோட கரியர்ல நடந்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். ‘இதே மாதிரி என்னோட ஆரம்பக் காலத்தில ஒரு படத்துல ரெண்டு நாள் நடிச்ச பிறகு, என்னைத் தூக்கிட்டாங்க. அதுக்கப்புறம் போற எல்லா இடத்திலயும், இதைப் பத்தியே கேள்வி கேட்டாங்க. யாரையும் சந்திக்கறதுக்கே ரொம்ப அவமானமாவும் கூச்சமாவும் இருந்துச்சு, அதுல இருந்து வெளியே வர எனக்கு ஒன்றரை வருஷம் ஆச்சு. ஒரு படத்துல இருந்து ஒரு நடிகர் நீக்கப்பட்டா, அவரைப் பத்தி நிறைய தவறான விஷயங்கள் பரப்பப்படும். அது அவரோட கரியரையே பாதிக்கும். ஒரு படம் சக்சஸ் ஆனா நமக்கு சந்தோஷம் கிடைக்கும். நம்மள சுத்தி இருக்குற எல்லாரையும் ஹர்ட் பண்ணிட்டு, அந்த சந்தோஷத்தை யார்கூட ஷேர் பண்ணப் போறோம்'னு கேட்டார். அந்த மனசுதான் அஜித்.”

“முதல்வரைச் சந்திக்கச் சொன்னார் அஜித்!”

``என்ன சொல்றார் கார்த்திகேயா..?’’

‘‘கார்த்திகேயாவோட ஷெட்யூல் முடிஞ்சு கடைசி நாள். அஜித் சார் கார்த்திகேயாவுக்காக தெலுங்கு ஸ்டைல்ல காரமான பிரியாணி சமைச்சிருந்தார். அன்னிக்கு அஜித் சார், நான், கார்த்திகேயா, ஃபைட் மாஸ்டர்னு எல்லாரும் அஜித் சாரோட கேரவன்ல உட்கார்ந்து சாப்டுட்டே பேசிட்டிருந்தோம்.

அப்போ கார்த்திகேயா அஜித் சார்ட்ட, ‘யார்கூட சார் உங்க அடுத்த படம்’னு கேட்டார். அதுக்கு அஜித் சார், ‘வினோத் கூடதான் பண்றேன்’னு சொன்னார். ‘தொடர்ந்து ஒரே இயக்குநரோட மூணாவது படம் பண்ணினா, ஆடியன்ஸுக்கு போர் அடிச்சிடாதா?’ன்னு கார்த்திகேயா கேட்டார். கேட்டுட்டு என்னைப் பார்த்து, ‘சார், தப்பா எடுத்துக்காதீங்க. தோணுச்சு கேட்டேன்!’னு சொன்னார். அப்போ நான் கார்த்திகேயாகிட்ட, ‘நானும் இதேமாதிரி உங்களை மாத்தலாம்னு சொன்னேன். அதுக்கு சார் வேண்டாம்’னு சொன்னார். இதுக்கு என்ன சொல்றார்னு பார்ப்போம்?’ன்னு சொல்லிட்டு அஜித் சாரைப் பார்த்தோம்.

அஜித் சார் சத்தமா சிரிச்சிட்டு, ‘எனக்கு அவரோட வொர்க் பண்ணப் பிடிச்சிருக்கு. அதனால தொடர்ந்து வொர்க் பண்றேன்!’னு சொன்னார். அஜித் சாரைப் பொறுத்தவரைக்கும் மனிதர்கள்தான் முக்கியம். தன்னைச் சுத்தி உள்ளவங்களை சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைக்குறார். இதெல்லாம் அவர் ஒரு ஜென்டில்மேன்னு உணரவச்ச தருணங்கள்.''

“முதல்வரைச் சந்திக்கச் சொன்னார் அஜித்!”

``அஜித்தோட பெரும்பாலான படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்லதான் நடக்குது. அதைச் சென்னையில் நடத்தினா, தமிழ் சினிமாத் தொழிலாளர்களுக்கு, நடிகர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமே? ஏன் பண்றதில்லை?’’

‘‘சென்னைல ரோடு பர்மிஷன் வாங்குறது பெரிய சிக்கலான வேலை. அப்படியே வாங்கினாலும், அஜித் சார் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை வெச்சு ரோட்ல படப்பிடிப்பு நடத்தவே முடியாது. கும்பல் கூடி, அதுல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, அஜித் ஷூட்டிங்கால் விபத்துன்னுதான் நியூஸ் வரும். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பர்மிஷன் இஷ்யூக்காகவும்தான் ஹைதராபாத் போறோம். ஹைதராபாத்ல ஷூட் பண்ணும்போது, மொத்தமா அங்கே உள்ள தொழிலாளர்களையோ, துணை நடிகர்களையோ வெச்சுப் பண்றதில்லை. கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் தமிழ் நாட்டில் இருந்துதான் கூட்டிட்டுப் போறோம்.

ஹீரோ மக்களோட இருக்குற மாதிரி ஷாட்ல, அவர் பக்கத்துல நம்ம ஊர் ஆளுங்க நின்னாதான், அது தமிழ்ப் படம் மாதிரி தெரியும். அதனால பெரும்பாலான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களை இங்க இருந்துதான் கூட்டிட்டுப் போறோம். அதனால வேலை இழப்புங்கிறது எனக்குத் தெரிஞ்சு 75 சதவிகிதம் இல்லை. `வலிமை'யைப் பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் 60 நாள் ஷூட்டிங் சென்னைலதான் நடந்துச்சு. மீதிதான் ஹைதராபாத், வெளிநாட்டுல நடந்துச்சு.

எப்பவும் அவர் தொழிலாளர்கள் நலன் பத்திச் சிந்திக்கறவர் என்பதற்கு ரெண்டு சம்பவங்கள் சொல்றேன். கொரோனா முதல் அலை காலகட்டத்துல லாக்டௌன் முடிஞ்சு, ஒவ்வொரு நிறுவனமா திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா சினிமாப் படப்பிடிப்புக்கு மட்டும் அரசு அனுமதியளிக்கல. ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அவர் பணம் கொடுத்தப்ப, நான் அவரைப் பாராட்டி மெசேஜ் அனுப்பினேன். ‘சார், நான் இல்ல, யார் எத்தனை கோடி கொடுத்தாலும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டாது. ஒரு தொழிலாளி தான் வரிசைல நின்னு இலவசமா அரிசி வாங்கிச் சாப்பிடுறதைவிட, தான் உழைச்சு சம்பாதிக்கிற காசுல அரிசி வாங்கிச் சாப்பிடதான் ஆசைப்படுவாரு. அதனால இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி அவங்களுக்கு வேலை கொடுக்குறதுதான்.

எல்லா இடங்களும் திறந்துட்டாங்க. சினிமா மட்டும் என்ன தப்பு பண்ணுச்சு. ஐந்தாயிரம் பேரு, பத்தாயிரம் பேருன்னு வேலை செய்ற தொழிற்சாலைகளெல்லாம் இயங்கிட்டு இருக்கு. ஐம்பது, நூறு பேர்னு வேலை செய்ற சினிமா மட்டும் ஏன் தொடங்கப்படாமல் இருக்கு? ஏன் நம்மாளுங்க போய்க் கேட்க மாட்றாங்க’ன்னு கவலையா பேசினார். ஏதோ யோசிச்சவர், ‘நீங்க போய் முதல்வரைப் பார்த்து லெட்டர் கொடுங்க!’ன்னு சீரியஸா சொன்னார்.

‘சார், நான் போய் எப்படி சி.எம்மைப் பார்க்குறது. இதுலாம் நடக்குற காரியமா?’ன்னு ஜெர்க் ஆனேன். நான் தயங்குறதைப் பார்த்துட்டு, ‘நானே முதல்வர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன், நீங்க போய் `வலிமை' ஷூட்டிங் நடத்த பர்மிஷன் கேளுங்க. நாம ஆரம்பிச்சா, அதை பாலோ பண்ணி எல்லாருக்கும் அனுமதி கிடைக்கும்!’ன்னு சொன்னார். அப்போ மீடியால ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார்’னு நியூஸ் வந்துட்டிருந்தது. உண்மையில் அவரைப் பத்தி வர்ற செய்திகள் வேற... அவர் வேற..!

அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த உடனே ஷூட்டிங் வந்த முதல் பெரிய ஹீரோ அஜித் சார்தான். போன வருஷம் தீபாவளி நைட் பத்து மணிக்கு ஹைதராபாத்ல ஒரு பிரிட்ஜ்ல ஷூட் பண்ணிட்டிருந்தோம். தூரத்துல வானத்துல நிறைய வெடி வெடிச்சிட்டு இருந்ததை, அவர் பார்த்துட்டிருந்தார். நான் அவர்கிட்ட ‘கொரோனா இல்லைன்னா, இன்னைக்கு ‘வலிமை' ரிலீஸ் ஆகியிருக்கும் சார்’னு சொன்னேன். அவர் ரியாக்ட் பண்ணாம ஏதோ யோசிட்டிருந்தார். திடீர்னு ‘சார், யூனிட்ல வேலை பார்க்குற எல்லாருக்கும் பணம் ஒழுங்கா போயிருக்கும்ல. அவங்க வீட்டுல தீபாவளியை ஹேப்பியா கொண்டாடியிருப்பாங்கில்ல?’ன்னு கேட்டார். தொழிலாளர் தினத்தில் பொறந்து, எப்பவுமே தொழிலாளர் நலனுக்காக யோசிக்கிறவர்தான் அஜித் சார்.''

“முதல்வரைச் சந்திக்கச் சொன்னார் அஜித்!”

``சிறுத்தை சிவாவோட அஜித் நாலு படம் பண்ணினார்... அஜித் - வினோத் காம்போவில் ‘வலிமை’ ரெண்டாவது படம். அவரோட அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்கப் போறீங்க. இப்படி தொடர்ச்சியா ஒரே இயக்குநரோட அவர் படங்கள் பண்றது, அவரை இயக்கணும்னு நினைக்குற, காத்திருக்கிற மற்ற இயக்குநர்களோட வாய்ப்பை நிராகரிக்கிற மாதிரி இல்லையா?’’

“இது தொடர்பாவும் நான் அவர்ட்ட பேசியிருக்கேன். ‘சார்... நீங்க ‘நேர்கொண்ட பார்வை’ன்னு ஒரு படம் கொடுத்தீங்க. அது கமர்ஷியல் படம் இல்லைன்றதால, இன்னொரு பட வாய்ப்பு கொடுக்குறீங்க. எனக்கு வாழ்க்கையில மாற்றம் வந்திருச்சு. அந்த மாதிரி நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தா, அவங்க வாழ்க்கையிலும் மாற்றங்கள் வருமே’ன்னு அவர்கிட்ட கேட்டேன். ‘சார், எனக்கு கம்ஃபர்ட்டா வேலை செய்றது முக்கியம். யாரோட கம்ஃபர்ட்டா இருக்குன்னு ஃபீல் பண்றேனோ, அவங்களோட தொடர்ந்து வேலை செய்றேன்’னு சொன்னார்!’’

``ஏன் போலீஸ் கதைகளை இயக்குறதுல அதிக ஆர்வம் காட்டுறீங்க?’’

‘‘எனக்கு அதுதான் இயல்பா வருது!’’ (சிரிக்கிறார்)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேட்டியின் முதல் பகுதியை படிக்க கீழே க்ளிக் செய்யவும்

“அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்